2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

புத்தக வியாபாரியாக எழுத்தாளர்கள் மாறி வருகிறார்கள்: ரிஷான் ஷெரீப்

Kogilavani   / 2012 மார்ச் 23 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}




'ஓர் எழுத்தாளன், புத்தக வியாபாரியாக மாறும் பரிதாப நிலைமை இன்று இலங்கையில் இருக்கிறது. இதனால் எழுத்தையே வெறுத்து ஒதுங்கிச் சென்ற பல எழுத்தாளர்களை நான் பார்த்திருக்கிறேன். இந்நிலைமை எனக்கு வரக் கூடாதென நினைக்கிறேன்' என்கிறார் எழுத்தாளர் ரிஷான் ஷெரீப்.

கவிஞர், சிறுகதை எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஊடகவியலாளர் என பல பரிமாணங்களில் தமது ஆற்றல்களை வெளிப்படுத்தி வரும்  இவர், கேகாலை மாவட்டம் - மாவனெல்லையை பிறப்பிடமாகக் கொண்டவர். பதுரியா மத்திய கல்லூரியில் தமது இளமை கால கல்வியை தொடர்ந்த இவர், மொறட்டுவ பல்கலைக்கழகம், இலங்கை தொலைக்காட்சி பயிற்சிக் கல்லூரி ஆகியவற்றில் படித்துப் பட்டம் பெற்றுள்ளார்.

'வீழ்தலின் நிழல்' (2010), என்ற  கவிதை தொகுதியை இவர் வெளியிட்டுள்ளதுடன் இவரது படைப்புகள் இலங்கையின் வீரகேசரி, விடிவெள்ளி ஆகிய பத்திரிகைகளிலும் காலச்சுவடு, உயிர்மை, நவீன விருட்சம், காற்றுவெளி, திண்ணை,
வடக்குவாசல் போன்ற இந்திய சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன.

இதைத்தவிர இவர், யூத் விகடன் இணைய இதழில் 'உனக்கென மட்டும்' எனும் தலைப்பில் 50 வாரங்கள் ஒரு கவிதைத் தொடரையும்;, 'இருப்புக்கு மீள்தல்' எனும் தொடரையும் எழுதியுள்ளார். கீற்று வார இதழில் 'நேசத்துக்குரிய ஒரே காதலுக்கு' எனும் தலைப்பில் 30 வாரங்கள் ஒரு கவிதை தொடரை எழுதியுள்ளார்.

இவர் தமிழ்மிரரின் கலைஞர்களுக்கான நேர்காணல் பகுதியில் வாசகர்களுக்காக பகிர்ந்துகொண்டவை...



கேள்வி:- உங்களது எழுத்துக்களில் பின்நவீனத்துவ போக்கை காண முடிகின்றது. இதைப்பற்றி கூறுங்கள்.


பதில்:- பின் நவீனத்துவப் போக்கென்று நீங்கள் எதனைக் குறிப்பிடுகிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை. சமீப காலமாக ஆபாசமாக எழுதுவதும், பெண்ணியத்தை முதன்மைப்படுத்தி ஆண்களைச் சாடுவதுமே பின்நவீனத்துவ எழுத்தாக இலங்கையில் கருதப்பட்டு வருகிறது. அவ்வாறாயின் இவையிரண்டையும் ஒருபோதும் எனது எழுத்துக்களில் நீங்கள் காண முடியாது.

உண்மையில் பின்நவீனத்துவம் எனப்படுவது இலக்கியம் மட்டுமன்றி அரசியலும் சார்ந்து எழுதப்படும் எழுத்து எனக் குறிப்பிடலாம். புனைவுகளை அதீதமாகச் சித்திரித்து எழுதுவதும், மாய யதார்த்தவாதம், மனப் பிறழ்வு மற்றும் ஒன்றுக்கொன்று சம்பந்தமற்ற எழுத்துக்களுக்கு முன்னுரிமை கொடுத்தலும், ஆபாசத்தன்மையை வலிந்து புகுத்தி எழுதுவதுமே பின்நவீனத்துவ எழுத்துக்களின் அடிப்படையாக விளங்குகிறது.

1950களின் பிற்பாடு லத்தீன் அமெரிக்க நாடுகளில் பெருமளவு வளர்ச்சியைக் கொண்டிருந்த இப் பின் நவீனத்துவமானது, அந் நாடுகளில் பெருமளவு செல்வாக்கைச் செலுத்தித் தன்னை நிலைநிறுத்தியிருந்தது. சமீப காலமாக ஆசிய நாடுகளிலும் பல எழுத்தாளர்களினால் கைக்கொள்ளப்பட்டு வருகிறது. அதிலும் முக்கியமாக அநேக தமிழ் எழுத்தாளர்கள், வாசகர்களால் எளிதில் புரிந்துகொள்ள முடியாத விதத்தில், மிகவும் சிக்கலான சொற்றொடர்களைக் கொண்டு, எளிய விடயத்தையும் சிக்கலாக்கிப் புரிய வைக்க முனையும் எழுத்துகளை எழுதி, தம்மை பின் நவீனத்துவ எழுத்தாளர்கள் எனக் காட்டிக்கொள்ள முயல்கிறார்கள்.

அவ்வாறான போக்கை எனது எழுத்துக்களில் நீங்கள் காண்பது மிகவும் ஆச்சரியம் தருகிறது. எனது எழுத்துக்களில் சிக்கலானவை எவையும் இல்லையென்றே நான் கருதுகிறேன். அதேபோல ஆபாசமானவை கூட எவையும் இல்லை. பின்நவீனத்துவம் சார்ந்தும் நான் எதையும் எழுதவில்லை.

கேள்வி:- இந்த கூற்றினூடாக எழுத்துக்கள் புதிய சிந்தனைகளை அல்லது கொள்கைகளை நோக்கிப் பயணிப்பது தவறு என கூறவருகின்றீர்களா?

பதில்:- நிச்சயமாக இல்லை. இங்கு எனது எழுத்து பற்றி மட்டுமே நான் குறிப்பிட்டிருக்கிறேன். புதிய சிந்தனைகளை, புதிய கொள்கைகளை நோக்கிப் பயணிப்பதை வரவேற்கலாம். முந்தைய காலத்தில் மரபுக் கவிதைகளும் சங்க இலக்கியங்களும்தான் பெரும் வரவேற்பினைப் பெற்றிருந்தன என்பதனை நீங்கள் கவனித்திருப்பீர்கள். அதனிடையே இருந்து புதுக் கவிதையும், நவீன இலக்கியமும் தோற்றம் பெற்று வளர்ந்ததால்தான் இன்றைய இலக்கியம் எமக்குக் கிடைத்தது. மரபோடும் சங்க கால இலக்கியங்களோடு மட்டுமே நாம் நின்றுவிட்டிருந்தால் தேங்கிப் போயிருப்போம். அத்தோடு சோர்ந்தும் போயிருப்போம்.

கேள்வி:- ஆபாசமான எழுத்துக்கள் என்பதனூடாக எதனைக் கூற முன்வருகின்றீர்கள்?

பதில்:- மலினமான எழுத்துக்கள். வாசகர்களிடையே ஒரு பரபரப்பையும், ஈர்ப்பையும் ஏற்படுத்தி தன்னைப் பிரபல்யப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் எழுதப்படும் எழுத்துக்கள். அவை இன்று மலிந்து விட்டன. பெண் உடலைப் பற்றி, பாலியல் உறவு முறைகளைப் பற்றி பகிரங்கமாக எழுதுவதும், வெளிப்படையாக எழுதுவதும் இன்று சர்வ சாதாரணமான ஒன்றாகி விட்டது. ஒருவர் இன்று அவ்வாறு எழுதி விட்டால், சர்ச்சைகள் மூலமும் விவாதங்கள் மூலமும் நாளையே அவர் பிரபலமாகி விடுவார். அந்தப் பிரபலத்துக்காக வேண்டி எழுதப்படும் எழுத்துக்கள்தான் ஆபாசமான எழுத்துக்களென நான் கூறவிழைகிறேன்.
அந்தக் காலத்தில் இவை இருக்கவில்லையா? என நீங்கள் கேட்பீர்கள். நிச்சயமாக இருந்தன. சங்க இலக்கியங்களில் இல்லாத காமம் குறித்த எழுத்துக்களா? ஆனால் அவை எவற்றிலும் தனி மனிதனைக் கிளர்ச்சிக்குள்ளாக்கிப் பிரபல்யம் தேடும் முயற்சி இல்லை.



கேள்வி:- அப்படியாயின் எந்த மட்டத்திலிருந்து நீங்கள் உங்கள் படைப்புகளை படைக்க விரும்புகின்றீர்கள்?


பதில்:- அப்படி எனக்கு எந்த அளவுகோலுமில்லை. எனது அனுபவத்தை, நான் சொல்ல விரும்புவதை எப் படைப்பினூடாக
என்னால் சிறப்பாக வெளிக்கொண்டு வர முடியுமென நான் எண்ணுகிறேனோ அதைத் தீர்மானிக்கும் உரிமை எனக்குத்தான் இருக்கிறது. நான் எழுத விரும்புவதை இன்னுமொருவர் தீர்மானிக்க முடியாது. எனது 'ஆரோக்கியமேரி என்றழைக்கப்பட்ட மேரி ஃபிலோமினா' கவிதையை வாசித்திருப்பீர்கள்.

அது எனக்கு நடந்த உண்மையான ஓர் அனுபவம். காலச்சுவடு இதழில் அது வெளிவந்த பிறகு, நிறைய நல்ல கருத்துக்களை அது எதிர்கொண்டது. நல்லதொரு சிறுகதைக்கான கரு அது. ஆனால் அதனைக் கவிதையில்தான் கொண்டு வரவேண்டுமென நான் தீர்மானித்தேன். இவ்வாறாக, எப்படி எனது வாழ்க்கையை நான்தான் வாழ வேண்டுமோ, அதேபோல எனது எழுத்துக்களை நான்தான் எழுத வேண்டும். அவற்றை எந்த வடிவத்தில் கொண்டு வரவேண்டுமென நான்தான் தீர்மானிக்க வேண்டும். மீண்டும் மீண்டும் நான் சொல்ல விரும்பும் ஒன்று. நான் எனக்காக மட்டுமேதான் எழுதுகிறேன். வாசகர்களுக்காக அல்ல.

கேள்வி:- உங்களது படைப்புகளில் பல்வேறு உத்திகள் அல்லது வாசகனுக்குக் கொடுக்கும் முறைகளில் மாற்றங்கள்
காணப்படுகின்றன. இவ்வாறான முயற்சிகளை உங்களது படைப்புகளில் உள்வாங்கியதற்கு பிரதான காரணமென்ன?


பதில்:- நல்ல அவதானிப்புடனான நல்லதொரு கேள்வி. எழுத ஆரம்பித்த காலத்தில் எனது எழுத்துக்களும் எந்தவித மாற்றங்களுமற்று எனக்கே சலிப்பூட்டுபவையாக இருப்பதை நான் கண்டேன். ஒருவருடைய சமையலை நாம் எடுத்துக் கொள்வோம். தினந்தோறும் ஒரே உணவை, ஒரேவிதமாக எந்த மாற்றங்களுமற்றுத் தந்து கொண்டிருந்தால் எவருக்குமே சலிப்பூட்டி விடும். அந்த உணவை தூரத்தில் கண்டாலே எட்டியோடக் கூடும். அதுபோன்றதுதான் ஒருவருடைய எழுத்தும், படைப்பும். அதில் மாற்றங்கள் வேண்டும். அம் மாற்றங்கள் எழுத்துக்களில் மிளிர வேண்டும். அதனைக் கண்டுகொண்ட பின்னர் எனக்கு எழுதுவது இலகுவாக இருந்தது. வாசகர்களும் புதிதுபுதிதாக என்னிடம் எதிர்பார்ப்பதை உணர்ந்தேன்.

அந்த உணர்வும் பாராட்டுக்களும் மேலும் மேலும் என்னை எழுதத் தூண்டியது. வித்தியாசமான புதிய நடைகளுக்கு மக்களிடையே கிடைக்கும் அங்கீகாரம் பெரும் மாற்றங்களுக்கு வித்திடும். இதுவே எனது எழுத்துக்களில் புதிய புதிய பல்வேறு உத்திகள் காணப்படுவதற்குக் காரணம் எனலாம்.

கேள்வி:- வெறுமனே வாசகனைத் திருப்திப்படுத்துவதற்கு மட்டுமாக படைப்புகளை படைத்தால் போதுமானது என நினைக்கின்றீர்களா? 

பதில்:- நிச்சயமாக இல்லை. ஒரு படைப்பாளி, வாசகனைத் திருப்திப்படுத்த ஏன் எழுத வேண்டும்? எப்போதுமே ஒரு படைப்பாளியால் வாசகனை முழுமையாகத் திருப்திப்படுத்த முடியாது. அவன் உங்கள் படைப்புக்களை மட்டுமே வாசித்துக் கொண்டிருக்கப் போவதில்லை. இன்று உங்கள் எழுத்துக்களைப் பிடித்திருக்கிறது என்பான். நாளை உங்களை விடவும் இன்னுமொருவர் அருமையாக எழுதும்போது அதன்பக்கம் ஈர்க்கப்பட்டு, உங்களை விட்டுச் சென்று விடுவான். அவனைத் திருப்திப்படுத்த வேண்டி, அவனுக்குப் பிடித்தமானதாக எழுதுவதாகச் சொல்லிக் கொண்டு நீங்கள் ஒரே இடத்தில் இருந்துகொண்டிருந்தால் தேங்கிவிடுவீர்கள். தினந்தோறும் புதிதுபுதிதாகத் தோன்றிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களிடையே உங்களது படைப்புக்கள் மறைந்து அல்லது சலித்துப் போய்விடும்.

ஆகவே வாசகர்களுக்காக எழுதுவது எனது வேலையல்ல. எல்லா வாசகர்களையும் என்னால் ஒருபோதும் திருப்திப்படுத்தவே முடியாது. நான் எனக்காகவே எழுதுகிறேன். எனது சுய திருப்திக்காக மட்டுமே நான் எழுதுகிறேன். எனது எழுத்தை நான்தான் எழுத முடியும். ஒரு வாசகனுக்குப் பிடித்த எழுத்து, இன்னுமொரு வாசகனுக்குப் பிடித்திருக்குமென ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது. உண்மையைச் சொல்லப் போனால் நான் எழுதும்போது வாசகர்களைப் பற்றிச் சிந்திப்பதேயில்லை. எனக்கு திருப்தியளிக்கும்படி மட்டுமேதான் நான் பார்த்துக் கொள்கிறேன்.

எனக்கு விருதுகளைப் பெற்றுத் தந்த எனது படைப்புக்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவை எதுவும் ஒரு நாளில் எழுதப்பட்டவையல்ல. ஒரு சில சிறுகதைகள் எழுத எனக்கு மூன்று, நான்கு வருடங்கள் கூட எடுத்திருக்கின்றன. ஒரே தடவையில் எழுதி முடிக்கப்பட்ட போதும், எனக்குத் திருப்தி வரும்வரை அவற்றைச் செதுக்கிக் கொண்டேயிருப்பேன். ஓர் ஆக்கத்தை எழுத எனக்கு எவ்வளவு காலம் எடுத்தாலும், எனக்குப் பிரச்சினையில்லை. எனது திருப்திதான் எனக்கு முக்கியம். ஓர் எழுத்தாளன், அவனது வாசகனைத் திருப்திப்படுத்த வேண்டி அரையும் குறையுமாக எழுதுவது கூடாது. அதை என்னால் செய்ய முடியாது.

ஒரு சிற்பி, தனக்குள் தோன்றும் உருவத்தை கல்லில் கொண்டு வர எவ்வளவு பாடுபடுவானோ, எவ்வளவு காலம் எடுப்பானோ, அதேபோன்றுதான் எழுத்தாளனும் தான் எழுத நினைத்ததை முழுமையாக எழுத்தில் கொண்டு வருவதுதான் அவனது முழுமையான உழைப்பாக இருத்தல் வேண்டும்.

உதாரணத்துக்கு, எழுத்தாளர் ஜெயமோகனின் 'ஏழாம் உலகம்' நாவலை எடுத்துக் கொள்ளுங்கள். மிகவும் அருமையான நாவல் அது. நாம் பார்த்திராத, சமூகத்தில் பார்த்திருந்தாலும் யாராலும் கண்டுகொள்ளப்படாத மனிதர்களின் அவல வாழ்க்கையை அதில் மிகவும் அருமையாகச் சித்திரித்திருக்கிறார்.

கதை நடக்கும் களத்துக்கேற்ப அக் கதை மாந்தர்களிடையே இடம்பெறும் பேச்சுமொழி எளிதாக எல்லா மக்களாலும் புரிந்துகொள்ளப்பட முடியாதவை. வாசகனைத் திருப்திப்படுத்த வேண்டி, எல்லோராலும் புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்பதற்காக அவர் அம் மொழியினை எளிமையாக, தமிழ் சினிமா பேச்சு நடையில் தந்திருந்தால் நாவலின் காத்திரத்தன்மையும் செறிவும் போய்விட்டிருக்கும். நாவல் இவ்வளவு கொண்டாடப்பட வாய்ப்பு இருந்திருக்காது.

ஒரு படைப்பை நாம் வாசிக்கும்போது, அப் படைப்பின் மூலம் நாம் அக் கதை மாந்தர்களோடு வாழ்கிறோம். அவர்களது மொழியைப் பேசுகிறோம். அவர்களோடு களத்தில் ஒன்றாக நிற்கிறோம், பயணிக்கிறோம். இவ்வாறாக எழுத்துத்தான் ஓர் எழுத்தாளரை அடையாளம் காட்டவேண்டும். வாசகனும் அதைத்தான் உணர வேண்டும். ஓர் எழுத்தை வாசிக்கும்போது இந்த எழுத்தாளர் சொல்லும் அனுபவம் எனக்கும் இருக்கிறது என வாசகன் எண்ண வேண்டுமே தவிர, எனது அனுபவத்தை எழுத்தாளன் எழுத வேண்டுமென வாசகன் எண்ணுவது தவறு.



கேள்வி:- ஒரு படைப்பு விளங்கவில்லையென்று கூறுவது அந்த படைப்பை உருவாக்கியவர் மீதுள்ள பிழையா அல்லது, வாசிக்கும் வாசகனின் மீதுள்ள பிழையா?

பதில்:- எழுத்து மூலப் படைப்புக்களை மட்டும் குறிப்பிடுகையில், அதில் படைப்பாளியை ஒருபோதும் குற்றம் சொல்ல முடியாது. வாசகர்களில் பலவிதமானவர்கள் இருப்பார்கள். ஓர் எழுத்தாளனுடைய ஒரு படைப்பை கடைநிலை வாசகனோடு, தீவிர வாசகனும் வாசிப்பான். அவர்களுக்கேற்ற மாதிரி படைப்பாளி எப்படி எழுத முடியும்? கடைநிலை வாசகனுக்கென எளிமையாக எழுதினால், தீவிர வாசகன் சலித்துக் கொள்வான். 'என்னடா இது? சின்னக் குழந்தைகளுக்குச் சொல்றது போல எழுதி வச்சிருக்கானே' என்பான்.

தீவிர வாசகனுக்காக செறிவாக மட்டும் எழுதினால் கடைநிலை வாசகன் 'ஒன்றும் புரியற மாதிரி இல்லையே' என்பான். ஆகவே இங்கு பிழை படைப்பாளியின் மேல் இல்லை. அவன் தன்னுடைய எழுத்தை எழுதட்டும். வாசகர்களுக்கு தனக்கான தெரிவைச் செய்ய பூரண சுதந்திரம் உண்டு. அவன் தனக்குத் தேவையானதை எடுத்து வாசிப்பான். யாரும் அவனை இதைத்தான் வாசிக்க வேண்டுமென கட்டாயப்படுத்த முடியாது. அதேபோல ஒரு படைப்பாளியையும் நீ இவ்வாறுதான் எழுத வேண்டுமெனக் கட்டாயப்படுத்த முடியாது.

கேள்வி:- இந்தியப் பதிப்பகங்களில் உங்களது நூல்களை வெளியிடவேண்டும் என்று நினைத்ததற்கு ஏதேனும் விசேட காரணமுண்டா?

பதில்:- முக்கியமான இரண்டு காரணங்கள் இருக்கின்றன. பிரதானமானது எனில், எனது எழுத்துக்களின் வாசகர்களில் அனேகமானவர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பதைச் சொல்லலாம். எனது அனேகமான படைப்புக்கள் இந்திய இதழ்களில் வெளியாகிக் கொண்டிருக்கின்றமை இதற்குக் காரணமெனக் கருதலாம். 'எந்தவொரு வியாபாரியும் தனது விற்பனைப் பண்டங்கள் எங்கு அதிகம் விற்பனையாகுமோ அங்குதான் கடை விரிப்பான்' என்ற ஆபிரிக்கப் பழமொழியைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதற்கு ஒத்ததே இதுவும்.

இலங்கையில் பெரும்பான்மையினருக்கு என்னை ஒரு தொலைக்காட்சி ஊடகவியலாளனாகத்தான் தெரிந்திருக்கும். நான் எழுதுவது தெரிந்திருக்காது. ஆனால் இந்தியாவில் அப்படியல்ல. அவர்களுக்கு எனது எழுத்து மட்டும்தான் தெரியும். எனது முகம் கூடத் தெரிந்திருக்காது. அவ்வாறான நிலையில் எனது உருவத்தை விடவும் எழுத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் இடத்தில் எனது எழுத்துக்கள் தொகுப்பாக்கப்படுவதை நான் விரும்பினேன்.

இரண்டாவது காரணம், புத்தகங்களை வெளியிட்ட இன்றைய இலங்கை எழுத்தாளர்களின் நிலைமை. ஒவ்வொருவரும், புத்தகங்களை அச்சிட்டு வெளியிடுவதற்காக, தான் செலவழித்த தொகையைப் பெற்றுக் கொள்ளப் படும்பாட்டினை நீங்கள் அறிந்திருப்பீர்கள். முதுகுகளில் சுமந்துசென்று கூவிக் கூவி விற்காத குறை. ஓர் எழுத்தாளன், புத்தக வியாபாரியாக மாறும் பரிதாப நிலைமை இன்று இலங்கையில் இருக்கிறது. இதனால் எழுத்தையே வெறுத்து ஒதுங்கிச் சென்ற பல எழுத்தாளர்களை நான் பார்த்திருக்கிறேன். இந் நிலைமை எனக்கு வரக் கூடாதென நினைத்தேன்.

இந்தியப் பதிப்பகங்களில் எனது தொகுப்பினை வெளியிடுவது என்னைப் படைப்பாளியாகத் தொடர்ந்தும் நிலைக்க வைத்திருக்கிறது. எனது தொகுப்புக்களை விற்க அலைந்து திரிய வேண்டிய அவசியமிருக்கவில்லை. ஒரு தொகுப்பை வெளியிட்டவுடனேயே, அத் தொகுப்புக்களின் விற்பனை பற்றிய கவலையேதுமின்றி அடுத்த படைப்பு குறித்து சிந்திக்கும் மனநிலையுடனான ஆரோக்கியமான சூழ்நிலையை நான் விரும்பினேன். அச் சூழ்நிலை வாய்த்தது. பற்றிப் பிடித்துக் கொண்டேன்.

கேள்வி:- நீங்கள் ஒரு வளர்ந்து வரும் எழுத்தாளன் என்றரீதியில் இலங்கையில் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதற்கு அல்லது வெளிக்கொணர்வதற்கு எவ்வாறான செயற்றிட்டங்களை முன்னெடுத்தால் சிறப்பானதாக அமையுமென நினைக்கின்றீர்கள்?

பதில்:- இலங்கை எழுத்தாளர்கள் எவ்வளவுதான் தொகுப்புக்களை வெளியிட்டாலும், வாசிப்பதற்கு ஆளில்லையெனில், எழுத்தாளர்களின் ஆத்ம திருப்தியை விடவும் விரக்தியே மிகைத்து நிற்கும். அது அவர்களது எழுத்துக்களில் பின்னடைவை ஏற்படுத்தும். இந் நிலைமை மாற வேண்டுமெனில், வாசிப்பவர்களை உருவாக்க வேண்டும். இன்றைய இலங்கையின் தமிழ் மொழி மூல சமுதாயத்தினரிடையே வாசிக்கும் பழக்கம் மிகவும் அரிதாகி வருகிறது. இங்கு தமிழ் மொழி மூலம் என்பதை அழுத்திச் சொல்ல வேண்டியிருக்கிறது.

ஏனெனில் சிங்கள மொழியில் மூன்று வயதுக் குழந்தைகளுக்குக் கூட பத்திரிகைகள் வெளியாகின்றன. சிங்கள மொழி இலக்கியத்துக்காக இலங்கையில் ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர் மாதத்தை 'இலக்கியங்களை வாசிக்கும் மாதம்' என ஒதுக்கி அம் மாதத்தை புத்தகக் கண்காட்சிகளுக்காகவும், புத்தகங்களை வெளியிடுவதற்காகவும், புத்தகக் கொள்வனவுகளுக்காகவும் ஒதுக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள்.

ஒரு சிறந்த நாவலுக்கு 'ஐந்து இலட்சத்து ஐம்பதாயிரம்' இலங்கை ரூபாய்களைக் கொடுத்து கௌரவிக்கிறது இலங்கை அரசு. இவ்வாறான நிலையில் அம் மொழி எழுத்தாளர்கள், எழுத்தை மட்டுமே தமது தொழிலாகக் கொண்டு வாழ்நாளைக் கொண்டு செல்லும் வழியிருக்கிறது.

ஆனால் தமிழ் மொழி மூல எழுத்தாளர்களுக்கு இலங்கையில் என்ன இருக்கிறது? வாசிக்க ஆர்வமுள்ள எழுத்தாளர்களுக்கு என்ன இருக்கிறது? பிரதேசங்களிலிருக்கும் பொது நூலகங்களில் வாசகர்களுக்காக தமிழ்ப் புத்தகங்கள் இல்லை. புதிது புதிதாக வெளியாகிய தமிழ்ப் புத்தகங்களோடு எத்தனை பாடசாலைகளில் வாசிகசாலைகள் இருக்கக் கூடும்? எதுவுமே இல்லாமல், வளர்ந்து வரும் சமுதாயத்தினரை வாசிப்பில் ஆர்வமுள்ளவர்களாக எப்படி மாற்றுவது? அநேகமான தமிழ், முஸ்லிம் பெற்றோர்கள் கூட தமது பிள்ளைகளுக்கு புத்தகங்களையும், பத்திரிகைகளையும் வாங்கிக் கொடுப்பதை வீண்செலவு என்றே கருதுகிறார்கள். இவ்வாறான சூழ்நிலையில், வாசிக்கும் ஆர்வமின்றி வளரும் பிள்ளைகள் எவ்வாறாக நல்ல படைப்பாளிகளாகவோ, எழுத்தாளர்களாகவோ உருவாக முடியும்?

எனவே, இலங்கையில் ஏனைய மொழி எழுத்தாளர்களுக்குக் கொடுக்கப்படும் கௌரவமும், அங்கீகாரமும் தமிழ் எழுத்தாளர்களுக்கும் வழங்கப்பட்டாலே அது பெரும் ஊக்குவிப்பாக அமையும். அதைப் போலவே நல்ல பல தமிழ்ச் சஞ்சிகைகளும், இலக்கிய இதழ்களும் இலங்கையில் வெளிவர வேண்டும். வாசிகசாலைகளில் தமிழ்ப் படைப்புக்களுக்காக இடம் ஒதுக்கப்பட வேண்டும். இவ்வாறான செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதே சிறப்பாக அமையுமென நான் கருதுகிறேன்.



கேள்வி: இலங்கையில் தினம் தினம் புதிய எழுத்தாளர்கள் உருவாகிக் கொண்டிருந்தாலும் அவர்களில் சடுதியான வளர்ச்சியைக் காணமுடிவதில்லை. இதைப் பற்றிய உங்களது கருத்துக்கள் என்ன?

பதில்:- இலங்கையில் தமிழில் சஞ்சிகைகளும், இலக்கிய இதழ்களும் குறைவாக இருப்பதால் ஏற்படும் தேக்க நிலையிது. புதிய எழுத்தாளர்கள் எத்தனை பேரால் இணையத்தில் வந்து எழுத முடியும்? பரிதாபகரமான நிலை அவர்களுடையது. எழுதி, எழுதி வைத்துக் கொண்டு ஒரு கட்டத்தில் பிரசுரிக்க இதழ்கள் இல்லாததால் எழுதுவதின் மேலே வெறுப்பு வந்து ஒதுங்கி விடுகிறார்கள்.

இதில் எப்படி ஒரு வளர்ச்சியைக் கண்டுகொள்ள முடியும்? இணையத்தில் எழுதாமல் விட்டிருந்தால் என்னைக் கூட உங்களுக்குத் தெரிந்திருக்காது. இணையத்தில் எழுதாமல், இந்திய சஞ்சிகைகள், இலக்கிய இதழ்களில் எழுதாமல் நானும் இலங்கை தமிழ்ப் பத்திரிகைகளை மாத்திரமே நம்பியிருந்திருந்திருந்தால் எனது தொகுப்புக்களை வெளியிடும் சாத்தியம் வந்திருக்காது. நானும்  எழுத்தை விட்டு ஒதுங்கிச் சென்றிருக்கக் கூடும்.

கேள்வி:- தொகுப்புகளை வெளியிட்டால்தான் எழுத்தாளன் என்ற சூழலில் நாம் இன்று நிற்பதால் அநேகமானவர்கள் காத்திரமான படைப்புகள் இல்லையானாலும் கூட தொகுப்புகளை வெளியிடுவதை நோக்கமாக் கொண்டுள்ளனர். இது எவ்வளவு தூரம் ஆரோக்கியமானது?

பதில்:- நீங்கள் குறிப்பிடும் நிலை இன்று இருப்பதைப் பரவலாகக் காண்கிறேன். நிச்சயமாக இது ஆரோக்கியமற்ற ஒரு நிலை. தன்னை மலடியில்லை என்று மக்கள் சொல்ல வேண்டும் என்பதற்காக எந்தத் தாய் ஐந்து மாதங்களில் குழந்தையைப் பெற்றெடுக்க விரும்புவாள்? எழுத்தாளன் எனும் பெயரைப் பெற்றுக் கொள்வதற்காக அரைகுறைப் படைப்புக்களையும் தொகுப்பாக்கி விற்கும் அவல நிலைமை ஒரு குறுகிய காலச் சந்தோஷம்.

நல்லதை மட்டும் தேர்ந்தெடுத்து வாசிக்கும் வாசகர்கள் அவற்றை ஒதுக்கி விடுவார்கள். எதிர்காலத்தில் அந்தப் படைப்பாளி, உண்மையிலேயே நல்லதொரு தொகுப்பை வெளியிட்டாலும் கூட, முதல் தொகுப்பின் அரைகுறையைக் கண்டு அரண்ட வாசகர்கள், அவரது நல்ல தொகுப்பையும் எடுத்து வாசிக்கத் தயங்குவார்கள். எனவே அதனைத் தவிர்ந்து கொள்வது ஆரம்ப கால எழுத்தாளர்களின் வளர்ச்சிக்கு நல்லது.

புதிய எழுத்தாளர்கள்; நிறைய வாசிக்க வேண்டும். வாசிப்பு மட்டுமே எழுத்துக்களை பூரணப்படுத்தும். அதேபோல் எதையும் எழுதிய உடனேயே பதிப்புக்குக் கொடுத்து விடாதீர்கள். ஓர் ஆக்கத்தை எழுதியவுடன் அதனை ஓரமாக்கி விடுங்கள். சிறிது காலம் கழித்து, அப் படைப்பு குறித்து நீங்கள் முழுமையாக மறந்ததன் பின்னர் ஒருநாள் எடுத்து ஒரு வாசகனாக வாசித்துப் பாருங்கள். அதிலுள்ள குறைகள் உங்களுக்குப் புலப்படும். பிறகு உங்களுக்கு முழுமையான திருப்தி ஏற்படும்வரை அதனைச் செதுக்குங்கள். செதுக்கிய பின்னர் பதிப்புக்குக் கொடுங்கள். அது உங்களது சிறந்த படைப்பாக அமையும்.

கேள்வி:- எழுத்துத் துறையின் வளர்ச்சிக்கு சமூக வலைத்தளங்களின் அறிமுகம் எவ்வளவு தூரம் ஆரோக்கியமானது?

பதில்:- சமூக வலைத்தளங்களின் பங்களிப்பு, எழுத்துத்துறையின் வளர்ச்சிக்கு பெரிதும் பங்களிப்பைச் செலுத்துகிறது. பொதுவாக எல்லாத் தரப்பு மக்களும் சமூக வலைத்தளங்களில் பரவிக் கிடக்கிறார்கள். உங்களது ஒரு படைப்பின் பிரசுரம், தொகுப்பு வெளியீடு குறித்த செய்தி, எழுத்தாளர்களுடனான நேர்காணல்கள், வாசித்தவற்றில் பிடித்த எழுத்துக்கள், விமர்சனங்கள் போன்றவற்றை உடனுக்குடனே சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்வதன் மூலம் எல்லாத் தரப்பு மக்களிடமும் அதனைப் பகிர்ந்துகொள்ள முடியுமாக இருக்கிறது. உண்மையிலே இது ஆரோக்கியமானது.



கேள்வி:- உங்கள் வாசிப்புப் பசிக்கு ஆகாரமாய் அமைந்தவர்கள் குறித்து கூறுங்கள்?


பதில்:- முதலில் எனது தாயாரையும் சகோதரர்களையும் குறிப்பிடவேண்டும். சிறு வயது முதல் புத்தகங்களை வாசிப்பதற்கு எனக்கு வீட்டில் எந்தத் தடையுமிருக்கவில்லை. என்னை, நானாக வளர விட வேண்டுமென்பதில் எனது குடும்பத்தவர்க்கு ஆர்வம் இருந்தது. வீட்டில் ஒரு சிறு நூலகமே இருக்கிறது. நல்ல பல புத்தகங்களை அண்ணா வாங்கி வருவார். நாங்கள் சேர்ந்து வாசிப்போம். இப்பொழுதும் அந் நிலைமை காணப்படுகிறது என்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

வீட்டை விட்டுப் பிரிந்து பணி நிமிர்த்தம் வெளிநாட்டுக்குப் போன பிற்பாடு அங்கு வாசிக்க எந்தவிதத் தமிழ்ப் புத்தகங்களும் கிடைக்காத சூழ்நிலை. எனது சகோதரி கவிஞர் ஃபஹீமா ஜஹான், தனது சொந்த செலவில் வெளிநாட்டில் எனது முகவரிக்கு அனுப்பிய பல புத்தகங்கள் எனது வாசிப்புப் பசிக்கு ஆகாரமாக அமைந்தன.

அத்தோடு இந்திய நண்பர்கள் கார்த்திக், ஸ்ரீ.சரவணக்குமார், கவிஞர் உமா ஷக்தி ஆகியோரும் புத்தகங்களை எனக்காக வாங்கி அனுப்பி உதவினர். இன்னும் சில பதிப்பகங்களும் தாம் வெளியிட்ட தொகுப்புக்களை அனுப்பியிருந்தன. அவ் வாசிப்புக்களே என்னை எழுதத் தூண்டின. இவர்கள் அனைவரையும் நான் இக் கணத்தில் மிகவும் நன்றியோடு நினைவு கூருகிறேன்.

நேர்காணல்:- க.கோகிலவாணி


You May Also Like

  Comments - 0

  • கார்த்திக் Friday, 30 March 2012 04:59 PM

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள் தம்பி :-))))
    // எந்தவொரு வியாபாரியும் தனது விற்பனைப் பண்டங்கள் எங்கு அதிகம் விற்பனையாகுமோ அங்குதான் கடை விரிப்பான்' //
    படைப்பது மட்டும் முக்கியமில்லை அது அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதும் நமது கடமை தான் :-)))

    Reply : 0       0

    Mohamed Ali Jinnah Sunday, 31 March 2013 04:03 PM

    எனது அருமை நண்பர் ரிசான் செரீப் அவர்கள் இந்த இள வயதில் பலரையும் கவர்ந்த சிறந்த எழுத்தாளர் மட்டுமல்ல அவர் பல துறைகளில் சிறந்து விளங்குபவர். அனைத்தையும் விட அவருக்குள்ள சிறப்பு நல்ல உள்ளம் கொண்ட மற்றவர் நலம் நாடும் மனித நேயமிக்கவர் அவரது கவிதைகளையும் மற்றும் கட்டுரைகளையும் தொடர்ந்து அவர் அனுமதி பெற்று எனது வலைதளத்தில், வலைப்பூவில் நெடுங்காலமாக வெளியிட்டு வருகின்றேன். மனதில் பட்டதை நேர்மையாக உண்மையாக துணிவோடு எழுதக் கூடியவர். அவரது ஆழமான சிந்தனையுடன் அமைந்துள்ள இந்த நேர்காணலே அதற்கு ஒரு சாட்சி.

    இதனை தாங்கள் அனுமதித்தால் நானும் வெளியிட மிகவும் விருப்பம். அவருக்கு இறைவன் அழகிய ஆரோக்கியமான உடலைத் தந்ததோடு சிறந்த அறிவையும் தந்துள்ளான். அவர் நீடித்து வாழ்ந்து மக்களுக்கு சேவை செய்ய இறைவனை இறைஞ்சுகின்றேன். எனது வாழ்த்துகளை அவருக்கு தெரிவித்துக் கொள்வதில் பெருமிதமடைகின்றேன்.

    அன்புடன்,
    அ.முகம்மது அலி ஜின்னா

    Reply : 0       0

    Rajsuga Monday, 04 March 2013 04:36 PM

    உங்களது எழுத்துக்களை நான் பிரமிப்போடு வாசிப்பதுண்டு. வாழ்த்துக்கள் சகோதரரே, இன்னும் உங்கள் வளர்ச்சி சிறப்படையவும் வளமடையவும்...
    -ராஜ்சுகா-

    Reply : 0       0

    Rimza Mohamed Wednesday, 07 November 2012 05:22 PM

    நல்வாழ்த்துக்கள்...

    Reply : 0       0

    mahira sameen Monday, 14 May 2012 05:32 PM

    assalamu alaikum. wish u all the best for future .

    Reply : 0       0

    Ranja Monday, 14 May 2012 11:15 AM

    வாழ்த்துக்கள் நன்பரே.

    Reply : 0       0

    Buhary Thursday, 19 April 2012 05:18 AM

    நல்வாழ்த்துக்கள்!

    Reply : 0       0

    கலைமகன் பைரூஸ் Sunday, 01 April 2012 01:34 AM

    எனது நண்பன் ரிசான் செரீப் உண்மையில் பன்முக ஆற்றல்மிக்கவர். அவரை இணையவழி அறிந்திருக்கிறேன். அவரது பதில்கள் அனைத்தும் சிலாகித்துப் பேசப்படவேண்டியன. தமிழ் பேசும் நம்மவருக்கு இலக்கியப் புத்தகங்கள் என்று என்னதான் இலங்கையிலிருந்து வெளிவருகின்றது. அண்மைக்காலமாக சில புத்தகங்கள் ஆங்காங்கே வெளிவந்துகொண்டிருக்கின்றன. நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் 'யாத்ரா 20' முளைத்திருக்கிறது. அதன் வேர் ஆழமாய் பற்றிப் பிடிக்கஇ குறைந்தளவு பள்ளி மாணாக்கர் மத்தியிலாவது அது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இல்லையேல் இலங்கையில் தமிழ் எழுத்தாளர்கள் இன்னும் ஒரு தசாப்தத்தின் பின்னர் காணாமற் போய்விடுவார்கள். ரிசானின் புத்தகங்களை இலங்கைப் பதிப்பகங்கள் வெளியிட முன்வரவேண்டும். அவரது எழுத்துக்கள் அலாதியானவை. நெஞ்சையள்ளுவன. அவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

    Reply : 0       0

    Ramya Friday, 30 March 2012 05:24 PM

    வாழ்த்துக்கள் ரிஷான், உங்களின் நேர்காணல் அருமை.
    நல்ல கருத்துக்களை சரளமான நடையில் கொடுத்திருக்கிறீர்கள். பதில்கள் அனைத்துமே மிகவும் யதார்த்தமாகவும், அபாரமாகவும் இருந்தது. மறுபடியும் வாழ்த்துக்கள்!!!

    Reply : 0       0

    Dhanaraj Saturday, 24 March 2012 05:44 AM

    நல்ல கருத்துக்கள் ரிசான் வாழ்த்துக்கள் .

    Reply : 0       0

    ismath Tuesday, 27 March 2012 09:07 PM

    நல்வாழ்த்துக்கள்

    Reply : 0       0

    Mohamed Ali Jinnah Tuesday, 27 March 2012 08:40 PM

    இனிமையான, குணமான, அழகான நண்பர் தந்த அருமையான கருத்துகள் அடங்கிய பேட்டி மிகவும் பயனுள்ளவையாக இருப்பது கண்டு பெரு மகிழ்வடைகின்றேன் . வாழ்த்துகள்

    Reply : 0       0

    Muhammed Naalir Tuesday, 27 March 2012 06:43 PM

    assalamu alaikum!!! wish u all the best for you a future. excellent & worthful words of you!!! write more & more articales, books,paper magazines.....etc for tamil readers.

    Reply : 0       0

    vaighundan Monday, 26 March 2012 08:46 PM

    உண்மையான கருத்துக்கள் ... வாழ்த்துக்கள் ... ரிஷான்...

    Reply : 0       0

    எஸ்.பாயிஸா அலி Monday, 26 March 2012 04:26 AM

    தமிழ் மொழி மூல எழுத்தாளர்களுக்கு இலங்கையில் என்ன இருக்கிறது? வாசிக்க ஆர்வமுள்ள எழுத்தாளர்களுக்கு என்ன இருக்கிறது? பிரதேசங்களிலிருக்கும் பொது நூலகங்களில் வாசகர்களுக்காக தமிழ்ப் புத்தகங்கள் இல்லை. புதிது புதிதாக வெளியாகிய தமிழ்ப் புத்தகங்களோடு எத்தனை பாடசாலைகளில் வாசிகசாலைகள் இருக்கக் கூடும்? எதுவுமே இல்லாமல், வளர்ந்து வரும் சமுதாயத்தினரை வாசிப்பில் ஆர்வமுள்ளவர்களாக எப்படி மாற்றுவது? அநேகமான தமிழ், முஸ்லிம் பெற்றோர்கள் கூட தமது பிள்ளைகளுக்கு புத்தகங்களையும், பத்திரிகைகளையும் வாங்கிக் கொடுப்பதை வீண்செலவு என்றே கருதுகிறார்கள். இவ்வாறான சூழ்நிலையில், வாசிக்கும் ஆர்வமின்றி வளரும் பிள்ளைகள் எவ்வாறாக நல்ல படைப்பாளிகளாகவோ, எழுத்தாளர்களாகவோ உருவாக முடியும்?தெளிவான
    யதார்த்தமானகருத்துகள்.. வாழ்த்துக்கள் ரிஷான்..

    Reply : 0       0

    Diron Fernando Sunday, 25 March 2012 05:47 AM

    யதார்த்தமான கருத்துகள்.. வாழ்த்துக்கள் ரிஷான்....

    Reply : 0       0

    Asmin Saturday, 24 March 2012 11:40 PM

    நல்லதொரு நேர்காணல். வலிமையான கருத்துக்கள் வாழ்த்துக்கள் ரிஸான்.

    Reply : 0       0

    Pradeep Saturday, 24 March 2012 11:26 PM

    இவரது படைப்புக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். இங்கும் தெளிவானதும் நேர்மையானதுமான பதில்கள். இலங்கை எழுத்தாளர்களின் நிலைமையை மிகவும் அப்பட்டமாகப் பதிவு செய்திருக்கிறீர்கள். சேமிக்கப்பட வேண்டிய நேர்காணல்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X