Menaka Mookandi / 2015 ஜூன் 09 , பி.ப. 02:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

சேற்றில் சிக்கிய கால்களை மீண்டும்
சிறை மீட்பது முற்றுமே சிரமம்.
ஆற்றிலே அடித்துச் சென்ற அனைத்தும்
அலை கடலுக்குள் அடைக்கல மாகும்.
ஊற்றின் உச்சியில் உருண்டு விழுந்தால்
உருத் தெரியாமல் அழிந்து போகும்.
மாற்றான் மனைவியை மனது தொட்டால்
மரணப் பொறியில் உயிரும் மாட்டும்.
இனிமை நிறைந்த இன்சொல் இருக்க
இழிவினைப் பேசினால் இன்னலே விழையும்.
கனிந்த புன்னகை காட்டிடும் இதழ்களில்
கடுமை காட்டினால் கலகமே தொடரும்.
தனிமை இருளில் தவித்திடும் பெண்ணிற்கு
தவறு இழைத்தால் தண்டனை கிடைக்கும்.
மனித நேயத்தின் மகத்துவம் மறந்தால்
மரணப் பொறியில் உயிரும் மாட்டும்.
மீறிடும் ஆசைகள் மனதினை அலைத்து
மதுவுண்டு நித்தம் மயக்கத்தில் உழலும்.
வேரோடு சாய்த்தாலும் விடாது துரத்தியே
வித்தான பேராசை மரமாக வளரும்.
போராளி யானாலும் புகையும் ஆசையால்
புகழிற்கும் பணத்திற்கும் எட்டப்ப னாகி
மாறாத கொள்கையை மனது மறந்திட
மரணப் பொறியில் உயிரும் மாட்டும்.
தகித்திடும் உணர்வு தப்பெனத் தெரிந்தும்
தவறினைச் செய்ய மனதினைத் தூண்டும்.
சுகத்தினில் மிதக்க முகஸ்துதி கூறி
சுகித்திடச் சொல்லி சர்ப்பமாய்த் தீண்டும்.
சகித்திட முடியாத சித்தம் குலைந்து
சிந்தனை சிதறி இரண்டாய் உடையும்.
மகத்துவம் இழந்து மனநோயுள் விழுந்து
மரணப் பொறியில் உயிரும் மாட்டும்.
பிறவிகள் எத்தனை பிறந்திட்ட போதும்
பிறப்பின் இரகசியம் புரியாத போது.
இறக்கும் வரையும் நீயே உனக்கு
எதிரியாய்ப் போன இரட்டைப் பிறவி.
பறக்கும் மனதை பக்குவப் படுத்தி
பாதையை சீராய்ப் பதனிடா விட்டால்
மறதிச் சுழலில் மனதும் மாட்டும்
மரணப் பொறியில் உயிரும் மாட்டும்.
ஜெயசீலன்
கண்டி.
23 minute ago
33 minute ago
34 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
33 minute ago
34 minute ago
37 minute ago