2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

பொத்துவிலில் போராட்டம்

R.Tharaniya   / 2025 ஏப்ரல் 07 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொத்துவில் அறுகம்பை பிரதேசத்தில் வெளி மாவட்டத்திலிருந்து வாடகை அடிப்படையில் முச்சக்கரவண்டிகள் கொண்டுவரப்பட்டு சேவையில் ஈடுபட உள்ளதை கண்டித்து திங்கட்கிழமை (07) அறுகம்பை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அறுகம்பை பிரதான வீதியிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இப் பேரணி பிரதான வீதியூடாக பொத்துவில் பிரதேச செயலகம் வரை சென்றது.

அரசே எங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாகவும், எங்களது வாழ்வாதாரத்தை இல்லாமல் செய்யும் இந்த வாடகை முச்சக்கரவண்டி அறுகம்பையில் வேண்டாம், ஏழைகளின் வாழ்வாதாரத்தை பாதுகா போன்ற பதாகைகளை ஏந்திய வண்ணம் மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இக் கவனயீர்ப்பு போராட்டத்தில் அறுகம்பை,பொத்துவில், லகுகல, கோமாரி, பாணாம ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் ஈடுபட்டனர்.

சுற்றுலாப் பயணிகளை நம்பி முச்சக்கர வண்டி ஓட்டும் நாங்கள் சுமார் 25 வருட காலமாக அறுகம்பை பிரதேசத்தில் தமது வாழ்வாதாரத்திற்காக முச்சக்கரவண்டிகளை செலுத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.

வெளிமாவட்டத்தில் இருந்து தனியார் ஒருவரால் குத்தகை அடிப்படையில் அறுகம்பை பிரதேசத்திற்கு முச்சக்கரவண்டிகள் கொண்டுவரப்பட்டு அதனை சுற்றுலாப் பயணிகளின் போக்குவரத்திற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு சேவையின் ஈடுபடுத்தப்பட்டுள்ள முச்சக்கரவண்டிகளினால் பல ஆண்டு காலமாக எமது உள்ளூர் முச்சக்கர வண்டி சாரதிகள் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பான சேவைகளை வழங்கி வருவதோடு சுற்றுலா துறையின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருகின்ற நிலையில் வெளி மாவட்டத்திலிருந்து அறுகம்பை பிரதேசத்திற்கு கொண்டுவரப்படவுள்ள முச்சக்கரவண்டி சேவையினால் இப் பிரதேசத்தில் வாழ்கின்ற சுமார் 1000 மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படவுள்ளதோடு பொருளாதார ரீதியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துமென அறுகம்பை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் நலன்புரி அமைப்பின் தலைவர் ஏ. முஸம்மில் தெரிவித்தார்.

இச்சேவையினை கண்டித்தும் இதனை இரத்துச் செய்யுமாறு கோரியும் இக் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்த தாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய மகஜர்களை பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.ஏ.எம். நஸீலிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபருடன் கலந்துரையாடி சுமூகமான தீர்வை பெற்றுத் தருவதாகவும் பிரதேச செயலாளர் எம்.ஏ.எம். நஸீல் வாக்குறுதி அளித்துள்ளதாக தெரிவித்தார்.

எம்.எஸ்.எம். ஹனீபா


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .