2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

மாணவர்களை வீடுவீடாகத் தேடிச் சென்று விழிப்புணர்வூட்டும் செயற்பாடு

R.Tharaniya   / 2025 மே 29 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்தில் உள்ள களுவன்கேணி கிராமங்களில் பாடசாலைக்குச் செல்வதை நிறுத்திக் கொண்ட, சீரற்ற வரவுள்ள மாணவர்களை வீடுவீடாக தேடிச் சென்று பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் விழிப்புணர்வூட்டும்  செயற்பாடு செவ்வாய்க்கிழமை (27) அன்று இடம்பெற்றது.

இவ்விதம் சீரற்ற, பின்னடைவான பாடசாலை வரவுகளைக் கொண்ட மாணவர்களும் பாடசாலைக் கல்வியை இடை நிறுத்திக் கொண்ட மாணவர்களுமாக சுமார் 40 சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களது வீடுகளுக்குச் சென்று பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் பிள்ளைகளின் பாதுகாவலர்களுக்கு  விழிப்புணர்வூட்டப்பட்டதாகவும் அவர்களை மீண்டும் பாடசாலைக் கல்வியில் இணைத்துக் கொள்ள முடிந்ததாகவும் களுவன்கேணி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ரீ. பிராத்தனன் தெரிவித்தார்.

சேர்க்கிள் (CIRCLE) எனப்படும் இளம் பெண்கள் அமைப்பினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள பாடசாலைக்குத் தொடர்ச்சியான வரவைப் பதிவு செய்வதில் பின் தங்கியுள்ள மாணவர்களை சீரான பாடசாலை வரவுக்குச் சேர்ப்பிக்கும் இந்த வேலைத் திட்டத்திற்கு பொன் நிறுவனம் நிதி அனுசரணை வழங்குகிறது.

விழிப்புணர்வூட்டும் கள விஜயத்தின் போது ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு   பிரிவு, கிராம அலுவலர்கள், சேர்க்கிள் நிறுவனத்தின் களுவன்கேணி பரிந்துரை வலையமைப்பில் உள்ள உறுப்பினர்கள், பாடசாலை ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்

இவ்வாறு மாணவர்கள் பாடசாலை வரவில் பின்னடைவதற்கும் இடை விலகுவதற்கும் மாணவர்களின் குடும்பங்கள் எதிர்கொள்ளும் வறுமை, பொருளாதார நெருக்கடி இவற்றின் காரணமாக பிள்ளைகளைக் கைவிட்டுச் தாய்மார் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணிப் பெண்களாக செல்வது, பெற்றோரின் பிரிவு, பதிவு செய்யப்படாத திருமண உறவுகள்., கல்வி பற்றிய போதிய விழிப்புணர்வின்மை ஆகியவை தகவல் திரட்டு ஆய்வின்போது காரணங்களாகக் கண்டறியப்பட்டுள்ளதாக சேர்க்கிள் இளம் பெண்கள் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஜானி காசிநாதர் தெரிவித்தார்.

வறுமை காரணமாக கல்வி பாதிக்கப்பட்டுள்ள சில மாணவர்களின் குடும்பங்களுக்கு உதவி ஊக்குவிப்புக்கள் வழங்க சேர்க்கிள் நிறுவனம் கரிசனை கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் பாடசாலைக் கல்வியில் பின்தங்கிய கிராமப்புற மாணவர்களும் அவர்களது குடும்பங்களும் எதிர்கொள்ளும்  வறுமை பொருளாதார நெருக்கடி, சவால் நிறைந்த சமூக சூழ்நிலைகளுக்குத் தீர்வாக தெளிவான பொறிமுறை கண்டாகப்பட வேண்டியதன் அவசியத்தை இந்த விடயத்தோடு தொடர்புடைய அலுவலர்கள் உணர்ந்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வூட்டும் கள விஜயத்தின்போது ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஏ.ஆர் முஹம்மத் றுசைத் தலைமையிலான பணிக் குழுவினர், கல்குடா கல்வி வலய முறைசாராக் கல்விக்கும் பொறுப்பான ஆசிரிய ஆலோசகர் எம். விஜிலியஸ்,  கிராம அலுவலர்களான எம். மயூரிக்கா, எம். கமலரூபன், பாடசாலை உளநல ஆலோசகர் எம். மலர்மதி முரளீதரன்,  சேர்க்கிள் இளம் பெண்கள் அமைப்பின் வெளிக்கள இணைப்பாளர் கே. ஜெயவாணி  உட்பட இன்னும் பல அதிகாரிகளும் செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர்.

ஏ.எச்.ஏ. ஹுஸைன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .