2026 மே 02, சனிக்கிழமை

வியூகம் வகுத்த உள்துறை அமைச்சர் சிதம்பரம்: "இமேஜை" வளர்த்த தமிழக காங்கிரஸ் கட்சி!

A.P.Mathan   / 2012 மார்ச் 27 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தமிழர் பிரச்சினை தமிழக அரசியலில் முக்கிய திருப்பமாக அமைந்திருக்கிறது. ஐ.நா.சபையில் கொண்டுவரப்பட்ட மனித உரிமைகள் மீறல் குறித்த தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களித்தது, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளை மனம் குளிர வைத்துள்ளது. மத்திய அரசுக்கு எதிராக ஏறக்குறைய நான்கு வருடங்களாக பேசி வந்த கட்சிகள் இப்போது வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளன. குறிப்பாக சென்ற நாடாளுமன்ற தேர்தல், மற்றும் நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தல் போன்றவற்றில் மத்திய அரசையும், அதை வழிநடத்தும் காங்கிரஸ் கட்சியையும் கடுமையாக விமர்ச்சித்து வந்தார் முதல்வர் ஜெயலலிதா. இலங்கை தமிழர் பிரச்சினையில் காங்கிரஸுக்கு அக்கறை இல்லை என்பதையே அவரது அறிக்கைகளும், சட்டமன்ற பேச்சுகளும் எடுத்துக்காட்டின. தமிழக அரசியலில் இலங்கை தமிழர் பிரச்சினையில் அ.தி.மு.க.வில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் - தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளை திணறவே வைத்தது.

நாடாளுமன்ற தேர்தல் நடந்தபோது தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி காங்கிரஸின் தயவுடன் இருந்தது. அதே நேரத்தில் தி.மு.க.வின் எம்.பி.க்கள் மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றால் ஆட்சி கவிழும் என்ற ஆபத்தும் இருந்தது. ஆனாலும் இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி கட்ட போரில் மத்திய அரசை தி.மு.க. நிர்ப்பந்தப்படுத்த முடியவில்லை என்ற குற்றச்சாட்டு பெரிதாக தமிழகத்தில் கிளம்பியது. அதை சமாளிக்கவோ என்னவோ சீமான், பாரதிராஜா போன்றவர்கள் "காங்கிரஸுக்கு வாக்களிக்காதீர்கள்" என்று பிரசாரம் செய்தார்கள். இதன் மூலம் இலங்கை தமிழர் பிரச்சினையில் தி.மு.க. ஆர்வமாக இருக்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி கவனம் செலுத்தவில்லை என்பது போன்ற தோற்றம் தமிழகத்தில் உருவாக்கப்பட்டது. 16 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி எட்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. இந்த தோல்வி காங்கிரஸின் மனதை காயப்படுத்தியிருக்க வேண்டும். அதன் தொடர்ச்சியாகத்தான் 2009இல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்சி அமைந்த போது தி.மு.க.வின் அதிகாரத்தை குறைக்க காங்கிரஸ் கட்சி விரும்பியது. அதன் ஓர் அங்கமாகவே தி.மு.க விற்கு மத்தியில் கேட்ட இலாகாக்களை கொடுப்பது, தொலை தொடர்பு துறை அமைச்சர் ராஜாவிற்கு எதிரான 2-ஜி அலைக்கற்றை புகார்கள், கனிமொழி எம்.பி.க்கு எதிரான குற்றச்சாட்டுகள் எல்லாம் வரிந்து கட்டிக் கிளம்பின. இந்த நிலையில் 2011 சட்டமன்ற தேர்தலை காங்கிரஸும், தி.மு.க.வும் கைகோர்த்து சந்தித்தன. ஆனால் இலங்கை தமிழர் பிரச்சினையில் இருவருமே அக்கறையில்லாதவர்கள் என்று மக்கள் மத்தியில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி பிரசாரம் செய்தது. 2-ஜி ஊழல், இலங்கை தமிழர் பிரச்சினையில் தோல்வி உள்ளிட்ட பிரச்சினைகளினால் தி.மு.க. ஆட்சி பொறுப்பை இழந்தது. தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. - இலங்கை தமிழர் பிரச்சினையில் தொய்வு வராமல் பார்த்துக் கொண்டது. ராஜீவ் கொலையாளிகளுக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை ஆயுள்தண்டனையாக மாற்ற வேண்டும் என்று சட்டமன்றத்திலேயே தீர்மானம் கொண்டு வந்தது. இதனால் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மீது அ.தி.மு.க.வுக்குத்தான் அக்கறை இருக்கிறது என்ற பிரசாரம் மேலோங்கியது. இது தி.மு.க.விற்கு பெரும் பிரச்சினையாகவே மாறியது. தமிழர் பிரச்சினை பற்றி பேச வேண்டுமானால், காங்கிரஸுடன் உறவு வைத்துக்கொள்ள முடியாது என்ற சூழ்நிலையை நோக்கி தி.மு.க. நகர்ந்தது. அதனால் சமீபத்தில் தி.மு.க. பொதுக்குழு கூடிய போது கூட "காங்கிரஸுடன் உறவு வேண்டாம் என்றால் மாற்று வழி என்ன" என்று கேள்வி எழுப்பி, அது பற்றி தி.மு.க. தலைவர் கருணாநிதி நீண்ட உரையாற்றினார். "காலத்தின் கட்டாயத்தால் உங்களுடன் கூட்டணி வைத்திருக்கிறேன். மற்றபடி எங்கள் கட்சிக்காரர்கள் யாரும் காங்கிரஸுடன் கூட்டணியை விரும்பவில்லை" என்பதை அறிவிக்கவே அந்த தி.மு.க. பொதுக்குழு பயன்பட்டது. இப்படிப்பட்ட நேரத்தில் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வந்தது. தி.மு.க. கேட்காமலேயே காங்கிரஸ் வலிய வந்து ஆதரித்தது. அந்த நேரத்தில்தான் இலங்கைக்கு எதிரான மனித உரிமைகள் தீர்மானத்தை அமெரிக்கா - ஐ.நா. மணித உரிமை மன்றத்தில் தாக்கல் செய்தது. அப்போதே இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, "அண்டை நாட்டுடன் உள்ள நீண்ட நெடிய உறவை மனதில் வைத்தே இதில் இந்தியா முடிவு எடுக்கும்" என்று அறிவித்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத தி.மு.க. தலைவர் கருணாநிதி, "ஐ.நா.வில் வரும் தீர்மானத்தை ஆதரிக்க மறுப்பது தமிழர்களுக்கு செய்யும் துரோகம்" என்று மத்திய அரசின் மீது பாய்ந்தார். அதே நேரத்தில் முதல்வர் ஜெயலலிதாவும் ஐ.நா.தீர்மானம் விவகாரத்தில் பிரதமர் மன்மோகன்சிங்கின் பதில் திருப்திகரமாக இல்லை என்று அறிவித்தார். இருவருமே சங்கரன்கோவில் தேர்தலில் இலங்கை தமிழர் பிரச்சினையையும் மையமாக வைத்து பிரசாரத்திற்கு போகும் முன்பே பேசினார்கள். அப்படிப்பட்ட நேரத்தில்தான் "தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும்" என்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார் பிரதமர் மன்மோகன்சிங்.

இது மாதிரி சூழ்நிலையில் இந்தியா - ஐ.நா. தீர்மானத்தை ஆதரித்துள்ளது பற்றி தமிழக காங்கிரஸார் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார்கள். எதிர்காலத்தில் காங்கிரஸ் கட்சியை தமிழக கட்சிகள் புறக்கணிக்கும் ஆபத்து இருப்பதை உணர்ந்த மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், "தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும்" என்றே உறுதிப்பட பேசினார். அதே சமயத்தில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் - அரசு மட்டத்தில் இந்த தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்பதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்தார் என மூத்த காங்கிரஸ் தலைவர்களே கூறுகிறார்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் செல்வாக்கு இழந்து வரும் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் "கூட்டணி சிக்கலும்" வந்து விடக்கூடாது என்பது உள்துறை அமைச்சர் சிதம்பரம் போன்றோரின் எண்ணம். அதை மனதில் வைத்து வகுத்த வியூகம், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மவுஸை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. அது மட்டுமின்றி, ராஜீவ் கொலை செய்யப்பட்ட பிறகு காங்கிரஸின் நிலைப்பாட்டில் ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இலங்கை தமிழர் விவகாரத்தில் காங்கிரஸுக்கு அக்கறை இருக்கிறது என்பதை இதுவரை அக்கட்சி தலைவர்கள் சொல்லி வந்தாலும், இப்போது தீர்மானத்தை ஆதரித்ததுதான் நிரூபணமாக மாறியிருக்கிறது என்றே அக்கட்சியின் முன்னோடித் தலைவர்கள் கருதுகிறார்கள்.

அதை விட தமிழர் பிரச்சினையை மையப்படுத்தி கூட்டணி அமைக்கும் முக்கிய கட்சிகளான அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் அடுத்து வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸை "தீண்டத்தகாத கட்சியாகவே" கருதும் என்ற எண்ணம் காங்கிரஸ் தலைவர்கள் மத்தியிலேயே இருந்தது. காங்கிரஸுடன் கூட்டணி வைப்பது தோல்வியையே ஏற்படுத்தும் என்றே இரு கட்சிகளும் நினைத்தன. அது மட்டுமின்றி வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் காங்கிரஸ் இருக்கும் கூட்டணியில் எப்படி இடம்பெற முடியும் என்று மனதிற்குள் கேள்விகளை எழுப்பி பதில் தேடும் வேட்டையில் இறங்கியிருந்தார்கள். இந்நிலையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு ஆதரித்ததன் மூலம், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கதவுகள் எல்லாப் பக்கமும் திறந்து வைக்கப்பட்டிருக்கும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது. காங்கிரஸ் இருக்கும் கூட்டணியில் இடம்பெறுவதில் சிக்கல் இல்லை என்று வைகோ, திருமாவளவன் போன்றோர் கருத வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க, அ.தி.மு.க. கூட்டணியில் இல்லை. புதிய கூட்டணி உருவாக்க வேண்டும் என்ன எண்ணம் அ.தி.மு.க. தலைமைக்கு இருந்தால், இப்போது தீர்மானத்தை ஆதரித்த நிகழ்வால் காங்கிரஸ் கட்சியை சேர்த்துக் கொள்வதில் தவறு இல்லை என்ற எண்ணம் உருவாகலாம். காங்கிரஸை அ.தி.மு.க. சேர்த்துக் கொள்ளவே மாட்டாது என்ற நோக்கில் தி.மு.க. இனிமேல் எதிர்வரும் கூட்டணி பேச்சுவார்த்தைகளை காங்கிரஸுடன் நடத்த முடியாது. மொத்தத்தில் தமிழக காங்கிரஸுக்கு இந்த சூழ்நிலை ஒரு "ஜாக்பாட்" போலவே அமைந்திருக்கிறது.

ஐ.நா.வில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது அகில இந்திய அளவில் காங்கிரஸுக்கு இமேஜை கூட்டுகிறதோ இல்லையோ, தமிழகத்தில் அக்கட்சிக்கு அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒரு பொஸிட்டிவ் இமேஜை ஏற்படுத்தும். ராஜீவ் கொலை செய்யப்பட்ட 1991இற்குப் பிறகு, சுமார் 21 வருடம் கழித்து இலங்கை தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் இந்த இமேஜ் வந்திருக்கிறது. அதுவே, அக்கட்சியை விலக்கி வைத்து விட்டு, கூட்டணி அமைக்கலாம் என்று வியூகம் வகுத்துக் கொண்டிருந்த அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. போன்ற முக்கிய கட்சி தலைவர்களின் மனதில் அதிரடி மனமாற்றத்திற்கு வித்திட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .