2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மனித உரிமைகள் - 365

Menaka Mookandi   / 2014 டிசெம்பர் 09 , பி.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-பொ.சோபிகா

இந்த ஆண்டுக்கான சர்வதேச மனித உரிமைகள் தினமானது 'மனித உரிமைகள் - 365' எனும் தொனிப்பொருளில், இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. அதாவது, மனித உரிமைகள் தினத்தில் மட்டும் அதைப்பற்றி சிந்திக்காமல் ஒவ்வொரு நாளும் மனித உரிமைகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும் என்ற நோக்கோடு செயற்படுத்தப்படவுள்ளது.

மனிதன் இயல்பாகவே சில பழக்க வழக்கங்களை கொண்டிருக்கின்றான். மனித உரிமைகள் இயல்பாகவே இருந்திருக்கின்றன. எனவேதான், யாராவது ஒரு நபர் இறந்துவிட்டாலோ அல்லது ஏதாவதொரு சிக்கலில் மாட்டிக்கொண்டாலோ ஏனையவர்கள் அவ்வாறான துக்க நிகழ்வுகளில் பங்குகொண்டு அவர்களது துன்பங்களை தானும் பகிர்ந்து கொள்கின்றார்கள்.

அவ்வாறே இன்பகரமான நிகழ்வுகளின் போதும் அவர்கள் செயற்படுகின்றார்கள். இவைகள் எவ்விடத்திலும் சட்டமாக வரையறுக்கப்படவில்லை. மற்றையவர்களின் இன்ப - துன்பங்களில் பங்குகொள்ளவில்லை என்பதற்காக, சட்டநடவடிக்கைகளை மேற்கொண்டு சட்ட ரீதியான நிவாரணங்களை பெற்றுக்கொள்ள முடியாது. எனவே, இவ்வாறான நடைமுறைகளை ஒழுங்குபடுத்தி கொள்வதற்காகவும் ஞாபகப்படுத்தி கொள்வதற்காகவும் பல உடன்படிக்கைகள், சட்டமூலங்கள் ஆவணங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

அறிமுகம்

1945ஆம் ஆண்டுக்கு பின் நடைபெற்ற யுத்தத்தில் அணு ஆயுதங்கள் பாவனைக்கு கொண்டுவரப்பட்டதால் உலகுக்கு ஏற்பட்ட அழிவு மதிப்பிடப்பட முடியாத அளவு பாரியதாக அமைந்திருந்தது. இந்நிலைமையினால், எதிர்கால உலகின் நிலைபாட்டை தீர்மானிப்பதுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவென மூன்று துறைகள் இனங்காணப்பட்டன.

அதாவது, உலக சமாதானத்தை நிலைநாட்டுதல் (மூன்றாம் உலக யுத்தம் ஒன்று ஏற்படுவதை தடுத்தல்), உலகப் பொருளாதார அபிவிருத்திக்காக சிறந்த செயற்திட்டமொன்றை ஏற்படுத்தல், மனித உரிமைகளை பாதுகாக்கும் கட்டமைப்பொன்றை இனங்காணல் போன்ற குறிக்கோள்கள் அனைத்தையும் நிறைவேற்றுவதற்கு சக்திவாய்ந்த சர்வதேச அமைப்பொன்று உருவாக்கப்படுவது அவசியம் என உலகத் தலைவர்கள் உணர்ந்தார்கள். அதன் பயனாக 'ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம்' என்ற பெயரில் 1945ஆம் ஆண்டு புதிய அமைப்பொன்று உருவாக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் யாப்பின் 55 (சி) உறுப்புரையில் மனித உரிமைகளை பாதுகாக்கும் பொறுப்பு சகல நாட்டு அரசினாலும் அதன் ஆட்சிக்குட்பட்ட எல்லையில்; நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென கொள்கையளவிலான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

மேற்கூறப்பட்ட உறுப்புரையில் விதந்துரைக்கப்பட்ட மனித உரிமைகளை பாதுகாக்கும் அரசாங்கம், விடய பொருளுக்குட்பட்ட 'மனித உரிமைகள்' என்னவென்று வௌ;வேறு அரசுகளால் வௌ;வேறு சந்தர்ப்பங்களில் பிரகடனங்களின் மூலம் அல்லது தேசிய சட்டங்களின் மூலம் ஓரளவு இனங்காணப்பட்ட போதிலும் முழுமையாக உலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரே அமைப்பின் கீழ் ஒன்றிணைக்கப்பட்ட 'மனித உரிமைகள்' பரிகாரம் ஒன்று அப்பொழுது காணப்படவில்லை.

எனவே மனித உரிமையை பாதுகாப்பதில்  பெரும் இடைவெளி காணப்பட்டது. இந்த இடைவெளி 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் திகதி ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தால் அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் பொதுச்சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் பெறப்பட்டபோதே நிரப்பப்பட்டது. அப்பொழுதிருந்தே மனித உரிமைகளை பாதுகாப்பது உலக மட்டத்தில் ஒரு கலாச்சாரமாக உருவெடுக்கும் பாரிய முயற்சியாக ஆரம்பமானது எனலாம்.

மனித உரிமைகள் விஸ்வமளாவியவை. அதாவது மனித உரிமைகள் மனிதர்கள் அனைவருக்கும் பொது என்பதே இதன் அர்த்தம். இது சாதாரணமான ஒரு பதப்பிரயோகம். விஸ்வம் என்பது அகில முழுமையையும் குறிக்கும். 'விஸ்வமளாவிய' என்னும் பதப்பிரயோகத்தின் கருத்து என்னவென்றால் மனித உரிமைகளை இன்று வாழும் சகல மனிதர்களும் புரிந்து கொண்டிருக்கிறார்கள். அவற்றை அவர்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதாகும்.

மனித உரிமைகள் சர்வதேச பிரகடனம் 1948ஆம் ஆண்டில் வெளியாகியபோது இதன் விஸ்வமளாவிய தன்மை எதிர்கால இலட்சியமாக மட்டுமே இருந்தது. ஆனால் இன்றோ இது யதார்த்தமாகிவிட்டது. 1948 ஆம் ஆண்டில் 52 நாடுகள் மட்டுமே ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் வகித்தன. இருந்தும் இன்று 193 நாடுகள் அதில் உறுப்பினர்களாக இருக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவத்தின் ஒரு நிபந்தனையாவது, ஒருவருக்கு இருக்க வேண்டிய இனம், பால், மொழி, சமயம் ஆகியவை சம்பந்தமான, உள்ளாந்த கௌரவத்தை உறுதிப்படுத்துவதாகும்.

எது எவ்வாறெனினும் ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்தவர்கள் அனைவரும் மனித உரிமைகள் சம்பந்தமாக ஒரே வகையான இணக்கப்பாட்டை கொண்டிருக்கிறார்கள் என்று இதற்கு அர்த்தம் கொள்ள முடியாது.

மனித உரிமைகள் பற்றிய முதலாவது அகில உலக மகாநாடு 1968ஆம் ஆண்டு டெஹரானில் நடைபெற்றது. அப்போது மூலக்கோட்பாடு பற்றி அபிப்பிராய பேதங்கள் இருக்கவில்லை. எனினும் அது சம்பந்தமான விடயங்களிலேயே கருத்து முரண்பாடுகள் காணப்பட்டன. கடந்த இரு தசாப்தங்களாக உலகெங்கும் மனித உரிமைகளுக்கு மாபெரும் வரவேற்பு காணப்படுகின்றது.
மனித உரிமைகள் சர்வதேச மட்டத்தில் பாதுகாக்கப்பட வேண்டும், மேம்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கில் அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் உருவாக்கப்பட்டாலும் அதில் கூறப்பட்டுள்ள உரிமைகளில் ஒன்றோ பலவோ மீறப்படும் சந்தர்ப்பங்களில் அச்செயற்பாட்டுக்கு எதிராக சட்டத்தை நாடி நிவாரணங்களை பெற்றுக்கொள்ள வாய்ப்புகள் இல்லை.

ஏனெனில் அது ஒரு பிரகடனம் என்ற வகையிலேயே இதுவரையில் இருக்கின்றது. சட்டத்தின் மூலம் நிவாரணங்களை பெற வேண்டுமானால் மேற்படி சமவாயத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள உரிமைகளை அந்தந்த நாடுகளின் அரசியல் யாப்புக்குள் கொண்டுவரப்பட வேண்டும். அரசியல் யாப்பு என்பது ஒரு நாட்டின் மிக உயர்ந்த சட்டமாக கருதப்படுகின்றது. எனவே அவ்வாறு கருதப்படுகின்ற சட்டத்துக்குள் மனித உரிமைகள் கொண்டுவரப்படுமானால், அச்சட்டங்களை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு சட்ட ரீதியான நிவாரணங்களை பெற்றுக்கொள்ள முடியும்.

அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனத்தில் மனிதனுக்கு தேவையான அனைத்து உரிமைகளும் சுட்டிக்காட்டப்பட்டிருந்த போதிலும் அவை அனைத்தையும் நடைமுறைப்படுத்தும் ஆற்றல் அதன் அங்கத்துவ நாடுகளுக்கு இல்லாத காரணத்தால் சில முக்கிய உறுப்புரைகளை மட்டும் தெரிந்தெடுத்து அந்தந்த நாடுகளின் இயலுமைக்கு ஏற்றாற்போல் அரசியல் யாப்புக்குள் உட்படுத்தியிருக்கின்றன.

மனித உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பாக ஜ.நாவின் சர்வதேச பிரகடனங்கள் மற்றும் சமவாயங்கள்


ஐக்கிய நாடுகள் சபை ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து அதன் அங்கத்துவங்களால் பல சமவாயங்களும் பிரகடனங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. அதேபோன்று அவற்றை அதன் அங்கத்துவ நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் (ருனுர்சு)  1948ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் திகதி அதன் பொதுச்சபையால் பிரகடனப்படுத்தப்பட்டது. இப்பிரகடனம் 30 உறுப்புரைகளை கொண்டுள்ளது. இப்பிரகடனத்தில் இலங்கை அரசும்  கைச்சாத்திட்டுள்ளது.

அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் 1948ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனமானது தன்னளவிலான ஒரு உடன்படிக்கை மட்டுமேயாகும். அதில் குறிப்பிடப்படும் உரிமைகளை மேலும் உறுதிப்படுத்தி நிறைவேற்றி கொள்வதற்காக அதனுடன் இணைந்த சில சர்வதேச உடன்படிக்கைகளையும் பிறகு ஏற்படுத்தியுள்ளன.

அவற்றில் பெண்கள் உரிமைகள் பற்றிய சமவாயம் மற்றும் சிறுவர் உரிமைகள் பற்றிய சமவாயம் என்பன மிகவும் முக்கியமாகக் கருதப்படுகின்றன. இவற்றின் மூலம் உலகவாழ் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தி பாதுகாத்துக் கொடுப்பதே இதன் நோக்கமாகும்.

யு.டி.எச்.ஆர்விலுள்ள (ருனுர்சு) உரிமைகளை குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள், பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள் ஆகிய இரண்டு பிரதான பிரிவுகள் காணப்படுகின்றன.

குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் தனி மனித வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்துள்ள காரணத்தால் பின்வரும் உரிமைகள் மிகவும் முக்கியமாக கருதப்படுகின்றன.

•         உயிர் வாழ்வதற்கான உரிமை
•         அடிமைத்தனத்தில் இருந்து விடுபடுவதற்கான உரிமை
•         சட்டத்தின் முன் சமம்
•         பேச்சு சுதந்திரம் மற்றும் மொழிச் சுதந்திரம்
•         தொழில் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்கான உரிமை
•         கல்வி கற்பதற்கான உரிமை மற்றும் சுகாதாரம் தொடர்பான உரிமை


ஆனால் இலங்கையில் இவ்வாறான உரிமைகள் இல்லை என்றே கூறலாம். வாழ்வாதார பிரச்சினை இலங்கையின் அனைத்து பிரதேசங்களிலும் அதிகரித்துள்ளது. அதை இன்று வரை ஈடுசெய்வதற்கு யாரும் முன்வரவில்லை.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கை கடைப்பிடிக்கப்படுவதில்லை. சட்டத்தை சிறந்த முறையில் கடைப்பிடிப்பதில் பொலிஸாரின் பங்களிப்பு கூடுதலாக காணப்படுகின்றது. ஆனால் பொலிஸாருக்கு எதிரான முறைப்பாடுகள் இலங்கையில் அதிகரித்து செல்கின்றன.

குற்றங்களை மூடி மறைத்தல், குற்றத்துக்கு துணைபோதல் போன்ற விடயங்கள் அதிகரித்துக்கொண்டு செல்கின்றன. பேச்சு சுதந்திரம் மற்றும் மொழிச் சுதந்திரம் ஆகியவற்றில் கொள்கையளவில் மேலும் முன்னேற்றம் தேவை. எமது நாட்டில் சகல துறைகளிலும் மொழி சுதந்திரத்தை கடைப்பிடிப்பது மிகக்குறைவாகவுள்ளது.

தொழில் ஒன்றை பெற்றுக்கொள்வதற்கான உரிமையில் அரசியல் தலையீடுகள் அதிகம் காணப்படுகின்றன. அதாவது தகுதிகளுக்கு அப்பால் தொழில் வழங்கப்படுகின்றது. அத்துடன் நிறுவனங்களுக்கு எதிராக முறையிடும் பொழுதும் அவர்கள் பாராமுகமாக செயற்படுவது, உரிமைகளை மீறும் செயற்பாடொன்றாகவே காணப்படுகின்றது.

ஏற்கனவே சுட்டிக்காட்டியது போல ஐக்கிய நாடுகள் சபையால் காலத்துக்கு காலம் பல்வேறு சமவாயங்கள் மற்றும் உடன்படிக்கைகளை உருவாக்கலாம். அவை அனைத்தையும் ஏற்றுக்கொண்டு தத்தமது நாடுகளில் அமுல்படுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடு அதன் உறுப்பு நாடுகளுக்கு இல்லை.

ஐ.நா அங்கத்துவ நாடுகள் விரும்பினால் அந்த உடன்படிக்கைகளை ஏற்றுக்கொண்டு கைச்சாத்திட்டு தங்களது நாட்டில் அவற்றை அமுல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். அவ்வாறு ஏற்றுக்கொண்ட நாடுகளும் கூட தங்களது நாட்டின் வளங்கள், சூழ்நிலைகளுக்கு ஏற்பவே நடைமுறைப்படுத்துகின்றன.

ஐ.நா சபையால் முன்வைக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் அனைத்தும் இப்படித்தான் அமுல்படுத்த வேண்டும் என்று அதன் அங்கத்துவ நாடுகளுக்கு கட்டளையிடும் அதிகாரம் ஐ.நா சபைக்கு இல்லை. அப்படி தலையிடுவதாக இருந்தால், அது அந்தநாட்டின் இறைமையை பாதிப்பதாக கருத்து வெளிப்படுத்தப்படுகின்றது.

ஒரு நாடு சர்வதேச மனித உரிமைகளில் பிரகடனத்தில் சொல்லப்பட்ட சில விடயங்களை தனது அரசியல் யாப்பினுள் உள்ளடக்கி அமுல்படுத்தினாலும் நாட்டின் பாதுகாப்பு, சட்ட ஒழுங்குகள், குற்றவியல் செயற்பாடுகள் தொடர்பாக கவனம் செலுத்தவேண்டிய பொறுப்பும் கடமையும் அந்நாட்டுக்கு இருக்கின்றது.

இவைகளை தடுக்கும் முகமாக செயற்படும் போது பல்வேறு மனித உரிமைகள் மீறல்கள் இடம்பெறுகின்றமை உலகறிந்த உண்மையாக இருக்கின்றது. ஆனால் அவற்றை சுட்டிக்காட்டி கேள்விகளை கேட்பதற்கு ஐ.நா.சபையால் முடிகின்றதேயொழிய அச்செயற்பாடுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அதற்கு அதிகாரம் இல்லை. எனவே ஐ.நா சபையின் அழுத்தம் ஒரு செல்லாக்காசாகவே இருக்கின்றமையை காணக்கூடியதாக உள்ளது.

மனித உரிமைகளை பாதுகாத்தலும் மேம்படுத்தலும் சர்வதேச ரீதியாக உறுதிப்படுத்தல்.
எந்தவொரு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைவதற்கும் கிரமமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவது மிகவும் முக்கியமாகும். அச்செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தப்படும் போது தொடர்ச்சியான கண்காணிப்பும் கட்டுப்பாடும் அவசியம். இதுபோன்றே இலங்கையில் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதும் மேம்படுத்தப்படுவதும் அரசின் கரங்களிலேயே தங்கியுள்ளன.

மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதா? இல்லையா? என்பதனை கண்டறிய ஒரு சுயாதீன கண்காணிப்பு முறை இருத்தல் அவசியம். அவ்வாறான ஒரு பொறிமுறை உருவாக்கப்பட்டால் அது நேரடியாக மனித உரிமை மீறல் இடம்பெறும் சந்தர்ப்பங்களில் தலையிடும் அதிகாரம் இருக்குமாக இருந்தால் மனித உரிமைகளை பாதுகாப்பதில் முன்னேற்றம் காணக்கூடியதாக இருக்கும்.

ஐக்கிய நாடுகள் சபை அண்மைக்காலத்தில் காணாமற்போனோர் தொடர்பான சமவாயம் ஒன்று உருவாக்குவது தொடர்பில் பிரேரணையொன்று கொண்டுவந்தது. அதில் முதற்கட்ட அமர்வுக்கு கிட்டதட்ட 65 நாடுகள் பங்குபற்றின. அதில் இலங்கை கலந்து கொள்ளவில்லை. ஒரு சமவாயம் நடைமுறைக்கு வருவதற்கு குறைந்தது 20 அங்கத்துவ நாடுகள் கையொப்பமிட்டு உறுதிப்படுத்த வேண்டும். ஆனால், துரதிஸ்டவசமாக 5 நாடுகள் மாத்திரமே கையொப்பமிட்டன. அதிலும் இலங்கை பங்குகொள்ளவில்லை.

அந்த சமவாயத்தில் சுட்டிக்காட்டப்பட்;டிருந்த விசேட அம்சம் யாதெனில், எந்தவொரு நாட்டிலும் காணாமற்போவோர் தொடர்பாக கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 10 பேர்களை கொண்ட ஒரு கண்காணிப்பு குழு உருவாக்கப்படும். அக்குழு எந்தவொரு நாட்டுக்கும் விஜயத்தை மேற்கொண்டு தனது கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதிகாரம் அதனூடாக அளிக்கப்பட்டிருந்தது.

விஜயம் செய்யப்படவிருக்கின்ற நாட்டின் அனுமதியை பெறவேண்டிய அவசியம் இல்லை. ஆனால், காணாமற்போனோரின் எண்ணிக்கையை அதிகமாக கொண்ட நாடுகளில் எமது நாடும் ஒன்றாக இருந்தும் அச்சமவாயத்துக்கு ஆதரவு தெரிவித்து கைச்சாத்திடவில்லை என்பது வேதனைக்குரிய விடயமாகும்.

மனித உரிமைகளின் பாதுகாப்பையும், மேம்படுத்தலையும் சிறப்பான முறையில் உறுதிப்படுத்த வேண்டுமானால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு போதிய அதிகாரங்கள் வழங்கப்படுவதோடு, ஆணைக்குழுவால் செய்யப்படுகின்ற சிபார்சுகளை அமுல்படுத்தாத நிறுவனங்களுக்கு எதிராக தகுந்த சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதற்கான பொறிமுறை இருப்பது கட்டாயமாகும்.

அரச நிர்வாக சேவைகளில் உள்ளவர்கள் அக்கறையுடனும், கடமையுணர்ச்சியுடனும் தமது சேவைகளை வழங்குவார்களாக இருந்தால் பயனாளிகளின் உரிமை தானாகவே காப்பாற்றப்படும். எனவே சேவை வழங்குநர்கள் தமது கடமைகளையும் பொறுப்புக்களையும் செவ்வனே நிறைவேற்ற வேண்டும்.

'ஏனையவர்கள் எமக்கு வார்த்தைகளாலும் செயல்களாலும் எதை செய்யக்கூடாது என நாம் எண்ணுகின்றோமோ அவற்றை மற்றவர்களுக்கு நாம் செய்யாது இருக்கும் போது மட்டுமே நமது உரிமைகள் எமக்கு உரித்துடையனவாகும்'.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .