2025 மே 14, புதன்கிழமை

1978ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு யாப்பின் குறிப்பிடத்தக்க சில அம்சங்கள்

Thipaan   / 2016 ஒக்டோபர் 17 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.கே.அஷோக்பரன்
 LLB (Hons)

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி-62)

 

‘இலங்கைப்பிரஜை’

1978​ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு யாப்பு அறிமுகப்படுத்திய மாற்றங்களில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க இன்னொரு விடயம், குடியுரிமை சம்பந்தப்பட்டதாகும். இந்திய வம்சாவளி மக்களின் குடியுரிமைப் பிரச்சினை நீண்டகால இழுபறிக்குட்பட்டிருந்தது. சிறிமா-சாஸ்த்ரி ஒப்பந்தம் எனும் “குதிரைப் பேரத்தில்” சிக்கி இழுபறிப்பட்ட இந்திய வம்சாவளி மக்களில், இந்தியாவுக்குத் திரும்பிச்செல்லத் தீர்மானிக்காது, இலங்கையில் இருக்கத் தீர்மானித்தவர்களில், இலங்கை அரசாங்கத்தால் பதிவுசெய்யப்பட்டவர்கள் “பதிவுசெய்யப்பட்ட பிரஜைகள்” என்று வகைப்படுத்தலின் கீழ் கொண்டு வரப்பட்டனர். இந்த நடைமுறை, “பரம்பரைக் குடிமக்கள்”, “பதிவுசெய்யப்பட்ட குடிமக்கள்” என்ற இருவகைப்பட்ட செயற்கைப் பிரிவினையை இலங்கையில் உண்டாக்கியிருந்தது. 1978ஆம் ஆண்டின் இரண்டாம் குடியரசு யாப்பின் 26ஆம் சரத்து இந்த செயற்கைப் பிரிவினைக்கு ஒரு தீர்வைக் கொண்டுவந்தது. 26ஆம் சரத்தின் முதலாம் உபபிரிவு இலங்கையின் “இலங்கைப் பிரஜை” என்ற ஒரு பிரஜாவுரிமை அந்தஸ்து மட்டுமே காணப்படும் என்று கூறியதுடன், இரண்டாம் உபபிரிவு, ஓர் இலங்கைக் குடிமகனானவர், அவர், பரம்பரைக் குடிமகனாக இருப்பினும் அல்லது பதிவுசெய்யப்பட்ட குடிமகனாக இருப்பினும், இலங்கைக் குடிமகன் என்றே விவரிக்கப்படுவார் என்று கூறியது. மூன்றாம் உபபிரிவானது, பிரஜாவுரிமை பெற்றுக்கொண்ட முறையினடிப்படையில் எந்தப் பிரிவினையும் இலங்கைக் குடிமக்களிடையே எக்காரணம் நிமித்தமும் காணப்படாது என்றது.

இந்த 26ஆம் சரத்து, இலங்கையில், ஏற்​கெனவே “பதிவுப் பிரஜைகளாக” வேறுபடுத்தப்பட்ட இலங்கைக் குடியுரிமையைப் பதிவு மூலம் பெற்றிருந்த இந்திய வம்சாவளி மக்களை அந்த வேறுபாட்டைக் களைந்து இலங்கைக் குடிமக்களாக அடையாளப்படுத்த உதவியது. ஆனால், இன்னமும் இலங்கைக் குடியுரிமையில்லாது நாடற்றவர்களாக இருந்த கணிசமானளவு இந்திய வம்சாவளி மக்களுக்கு இந்தச் சரத்து எந்தத் தீர்வையும் தரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இங்கு இந்திய வம்சாவளி மக்கள் என்று விழித்தல் கூட முறையானதோர் அடையாளப்படுத்தல் அல்ல; ஏனென்றால், 1978களில் வாழ்ந்து வந்த இம்மக்கள், இரண்டு, மூன்று தலைமுறைகளுக்கு முன்பு இங்கு வந்தவர்கள். இரண்டாம் மூன்றாம் தலைமுறைகளானவை இலங்கை மண்ணிலே பிறந்து, இலங்கை மண்ணிலே வளர்ந்தவர்களைக் கொண்ட தலைமுறை. அவர்களை இலங்கையர்கள் என்று அடையாளப்படுத்துதலே முறையாகும்.

இந்தப் பிரஜாவுரிமை முரண்பாடுகள் முழுமையாகத் தீர்க்கப்பட 2003ஆம் ஆண்டுவரை இந்த மக்கள் காத்திருக்க வேண்டியதாக இருந்தது. இந்த நாட்டில் சிறுபான்மையினங்கள் சந்திக்கும் மிகப்பெரிய சவால் இதுதான். சில அடிப்படையுரிமைகளை வென்றெடுக்கவே, பல தசாப்தகாலங்கள் தொடர்ந்து ஏதாவதொரு வகையில் போராட வேண்டிய நிர்ப்பந்தம் சிறுபான்மையினங்களுக்கு தொடர்ந்திருக்கிறது. 

நீதித்துறை 

அரசியலமைப்பு ஒன்று, தனது குடிமக்களுக்கு வழங்கும் உரிமைகளானவை, அதனை உறுதிப்படுத்த ஒரு சுதந்திர நீதித்துறை இல்லாதவரை, எப்பயனுமற்ற ஒரு காற்று நிரம்பிய நீர்க்குமிழியைப் போன்றது என்று அமெரிக்காவின் ஏழாவது ஜனாதிபதியாக இருந்த அன்ட்ரூ ஜக்ஸன் கூறியிருந்தார். அரசாங்கமொன்றின் இயக்கத்துக்கு அவசியமான மூன்று முக்கிய இயந்திரங்களில் நீதித்துறையும் ஒன்று. மற்றைய இரு இயந்திரங்களான சட்டவாக்கத்துறையையும் நிர்வாகத்துறையையும் அரசியலமைப்பு எனும் மீயுயர் சட்டத்தின்படி இயங்கச் செய்யும் கடிவாளம் நீதித்துறையிடம்தான் இருக்கிறது. ஆனால், சுதந்திர நீதித்துறையை அரசியல் தலைமைகள் தமக்கெதிரான ஒரு சவாலாகவே பார்த்தனர். அதனால் நீதித்துறையின் சுதந்திரத்தை மட்டுப்படுத்தத்தக்க, நீதித்துறையை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கத்தக்க ஏற்பாடுகளை அரசியலமைப்பினூடாகக் கொண்டு வருவதில் அக்கறை காட்டினர்.

சிறிமாவோவின் ஆட்சியின் கீழ், முதலாம் குடியரசு யாப்பு அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பதாகவே, இங்கிலாந்தின் சட்டப் பிரபுக்களைக் கொண்ட பிரிவிக் கவுன்ஸிலுக்கு மேன்முறையீடு செய்யும் உரிமையை இல்லாதொழித்தார். இலங்கையின் இறைமை உட்பட சில விடயங்கள் இதற்கு பிரசித்த காரணமாகச் சொல்லப்பட்டாலும், நீதித்துறையை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பும் உள்நோக்கம் அரசாகத்தில் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு காணப்படுவது வௌ்ளிடைமலை. சிறிமாவோவின் ஆட்சியில், அவரின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட உயர்நீதிமன்ற மற்றும் மேல்நீதிமன்ற நீதிபதிகளை அப்படியே ஏற்றுக்கொள்ள ஜே.ஆர் அரசாங்கம் விரும்பியிருக்கவில்லை போலும்; அதனால் அதனை மாற்றியமைக்கும் நோக்கில் 1978ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு யாப்பின் 163ஆம் சரத்து அமைந்தது. அச்சரத்தானது புதிய அரசியலமைப்பு நடைமுறைக்கு வர முன்பு, இலங்கையின் உயர்நீதிமன்றம் மற்றும் மேல்நீதிமன்றங்கள் ஆகியவற்றில் நீதிபதிகளாக இருந்தவர்களின் பதவிக்காலம் முடிவுக்கு வரும் என்று கூறியது. அதாவது, புதிய அரசியலமைப்பு நடைமுறைக்கு வரும்போது, ஏலவே பதவியிலிருந்த உயர்நீதிமன்ற மற்றும் மேல்நீதிமன்ற நீதிபதிகள் தமது பதவிகளை இழப்பார்கள், இதன் மூலம் தாம் விரும்பியவர்களை அத்தகைய பதவிகளுக்கு நியமிக்கும் வாய்ப்பு ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவுக்கும் அவரது அரசாங்கத்துக்கும் கிடைக்கும். 163ஆம் சரத்தின் படி, சிறிமாவின் ஆட்சியில் நீதிபதிகளாக இருந்தவர்கள் பதவியிழந்தார்கள். அவர்கள் அனைவரையும் மீள நியமிப்பதற்கு ஜே.ஆர்.ஜெயவர்த்தன தயாராக இருக்கவில்லை.

அத்தோடு, புதிய பிரதம நீதியரசராக அன்று சிறந்ததொரு சிவில் வழக்கறிஞராக செயற்பட்டுக்கொண்டிருந்த நெவில் சமரக்கோனை நியமிக்க ஜே.ஆர். முடிவெடுத்தார். அத்துடன், புதிதாக நியமிக்கப்பட்ட சகல நீதிபதிகளும் புதிய அரசியலமைப்பின் கீழ் அவ்வரசியலமைப்பை பாதுகாக்கச் சத்தியப்பிரமாணம் செய்ததனூடாக, தனது புதிய அரசியலமைப்புக்கு எதிராக எந்த சட்டச்சவால்களும் நீதித்துறையினூடாக உருவாக முடியாதவாறு ஜே.ஆர். பார்த்துக்கொண்டார். ஜே.ஆரினால் நியமிக்கப்பட்டாலும் பிரதம நீதியரசர் நெவில் சமரக்கோன், ஆரம்பம் முதலே அரசாங்கத்திலிருந்து தன்னை விலத்தியே வைத்திருந்ததுடன், அரசாங்கத்தின் பல செயற்பாடுகளை பகிரங்கமாக விமர்சிக்கவும் செய்தார். சில சந்தர்ப்பங்களில் ஜே.ஆருக்கு சிம்ம சொப்பனமாகக் கூட இருந்தார் என்று சொன்னால் மிகையில்லை. இதன் விளைவாகத் தான் நியமித்த பிரதம நீதியரசரையே பதவிநீக்க நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு ஜே.ஆர் செல்ல வேண்டிய சூழல் உருவானது. 1984இல் நடந்த இந்தத் துரதிஷ்டவசமான சம்பவம் பற்றி நாம் பின்னர் விரிவாகப் பார்ப்போம். ஜே.ஆர் ஆரம்பித்து வைத்த நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிடும் இந்தக் கலாசாரம், மஹிந்த ராஜபக்ஷவரை தொடர்ந்தது இந்த நாட்டின் சாபக்கேடுகளில் ஒன்று.  

அரசியல் பழிவாங்கல் 

1970 முதல் 1977 வரையான சிறிமாவோவின் ஆட்சி, ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு இருண்டகாலம்தான். சிறிமாவினதும் அவரது தோழர்களினதும் கொள்கைகளும் நடவடிக்கைகளும், ஐக்கிய தேசியக் கட்சியினரையும் அவர்களது ஆதரவாளர்களையும் கடுமையாகப் பாதித்திருந்தது. 1977இல் வரலாறு காணாத வெற்றியை ஐக்கிய தேசியக் கட்சி பெற்றிருந்தது. ஆனால், சிறிமாவோவின் ஏழு வருடகால ஆட்சியில் அனுபவித்த துன்பங்களுக்குப் பழிவாங்கும் எண்ணம், ஐக்கிய தேசியக் கட்சியினரிடையே இருந்திருக்கலாம். 1978ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு யாப்பின் 81ஆம் சரத்தானது, நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பதவி நீக்குதல் மற்றும் அவர்களது சிவில் உரிமைகளைக் களைதல் பற்றிக் கூறியது. நீதிபதிகளைக் கொண்டமைந்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்று, எவரேனுமொருவர் இந்த அரசியலமைப்பு நடைமுறைக்கு வர முன்பு அல்லது வந்த பின்பு செய்த அல்லது செய்யாது விட்ட விடயங்களுக்காக சிவில் உரிமைகளை இழக்க வேண்டும் என்று சிபாரிசு செய்யுமாயின், நாடாளுமன்றத்தின் மூன்றிலிரண்டு அங்கிகாரத்துடன் அவரது சிவில் உரிமைகள் பறிக்கப்படலாம்.

அத்துடன், அத்தகையவர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராயின், நாடாளுமன்றத்தின் மூன்றிலிரண்டு அங்கிகாரத்துடன் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்படலாம் என்று 81ஆம் சரத்து வழங்கியது. ஜே.ஆரின் புதிய அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டிருந்த இந்தச் சரத்தானது ஒரு “றிமோட் கொன்ட்ரோல் பொம்” போன்றது. மூன்றிலிரண்டு பெரும்பான்மையையும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரத்தையும் பயன்படுத்தி, அரசியல் எதிரிகளைப் பழிவாங்கத்தக்க ஆயுதமாக இது வடிவமைக்கப்பட்டிருந்தது. ஏற்கெனவே, 1978ஆம் ஆண்டு மார்ச் மாதம், சிறிமாவுக்கெதிராக முறைகேடுகள் தொடர்பான விசாரணையை முன்னெடுக்க நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில், இந்தச் சரத்தின் அறிமுகமானது சிறிமாவோ பண்டரநாயக்கவை குறிவைத்தமைந்தது என்பது ஊகிப்பதற்கு கடினமானதொன்றல்ல.  

தமிழர்களுக்கு என்ன?

தமிழர்களுக்கு இந்த அரசியலமைப்பு நிறைய விடயங்களைத் தந்திருக்க வாய்ப்பு இருந்தது. ஆனால், ஜே.ஆர் அரசாங்கம் அதனை உதாசீனம் செய்துவிட்டது. இது பெரும்பான்மையோரின் அரசியலமைப்பாகவே அமைந்தது; ஜே.ஆரின் அரசியலமைப்பாகவே இருந்தது; ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியலமைப்பாகவே இருந்தது. தமிழர்களின் பிரதான பிரதிநிதியாக இருந்த தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி அரசியலமைப்பு உருவாக்கத்தில் பங்குபற்றுவதைப் புறக்கணித்திருந்தது. ஆனால், புதிய அரசியலமைப்பு மசோதா மீதான நாடாளுமன்ற விவாதத்தில் 1978 ஓகஸ்ட் மூன்றாம் திகதி தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவரும், இலங்கை நாடாளுமன்றத்தின் அன்றைய எதிர்க்கட்சித் தலைவருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் ஆற்றிய உரை முக்கியத்துவம் வாய்ந்தது. அறிமுகப்படுத்தப்படவிருந்த குறித்த அரசியலமைப்பு பற்றிய தமிழர்களின் நிலைப்பாட்டை அமிர்தலிங்கம் தனது நீண்ட உரையில் நாடாளுமன்றத்திற்கு எடுத்துரைத்தார்.

அவ்வுரையில், “நாடாளுமன்றம் தனது அரசியலமைப்பொன்றை உருவாக்கும் அதிகாரத்தை எந்தநாளும் பயன்படுத்துவதில்லை. அது நீண்ட காலத்துக்கொருமுறை செய்யப்படுவது. ஆனால், துரதிஷ்டவசமாக எமது நாட்டில் ஒவ்வோர் அரசாங்கமும் தமக்கென ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்குகின்றன” என்று குறிப்பிட்ட அமிர்தலிங்கம், இலங்கையின் அரசியலமைப்பு வரலாற்றையும் அதில் தமிழர் தரப்பு திருத்தங்களூடாக தமக்கான உரிமைகளைப் பெற எடுத்துக்கொண்ட முயற்சிகளின் வரலாற்றையும், இவை தொடர்பில் சா.ஜே.வே.செல்வநாயகம் முன்னராற்றிய உரைகளையும் மேற்கோள்காட்டிப் பேசியதுடன், அந்த முயற்சிகளின் தோல்வி எவ்வாறு தமிழ் மக்களை, தனிநாடு என்பதை நோக்கி நகர்த்திச் சென்றது என்பதையும், அதன் விளைவாக உருவான வட்டுக்கோட்டைத் தீர்மானத்தையும் முழுமையாக சபையில் விளக்கிப் பேசினார்.

அதனைத் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்ட அவசரகாலச்சட்டத்தையும் தானும் ஏனைய தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர்களும் கைது செய்யப்பட்டமையையும் அதன் பின்னர் நடந்த “ட்ரயல்-அட்-பார்” வழக்கையும் பற்றி அமிர்தலிங்கம் விரிவாக விளக்கினார். இந்த உரையின் போது இடைமறித்த பிரதமர் பிரேமதாஸ, “நாங்கள் உங்கள் கருத்தினை அறிய விரும்புகிறோம். அதனால் தான் உங்களை விவாதத்தில் பங்குகொள்ள அழைக்கிறோம்” என்றார். அத்துடன், மீண்டும் குறுக்கிட்ட பிரதமர் பிரேமதாஸ, “நீங்கள் உங்கள் கருத்தினை குறித்த மசோதாவுக்குத் திருத்தமாக முன்வைக்கிறீர்களா?” என்று கேள்வியெழுப்பினார். இதற்குப் பதிலளித்த அமிர்தலிங்கம், “நாங்கள் திருத்தங்களை மேற்கொள்ள இங்கு வரவில்லை; நாங்கள் எங்கள் கருத்துக்களைப் பதிவுசெய்துவிட்டுச் செல்லவே இங்கு வந்தோம்” என்றார். இதற்குப் பதிலளித்த பிரேமதாஸ, “திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமானால், நீங்கள் செல்லாது சபையில் இருக்க வேண்டும்” என்றார். இதற்குப் பதிலளித்த அமிர்தலிங்கம், “பிரதமரவர்கள் ஒரு ஜனநாயகவாதி; இதற்கு முன்பு எதிர்க்கட்சிகளின் கருத்தினைக் கேட்டு, அதற்கேற்பதானே திருத்தங்களை முன்மொழிந்திருக்கிறார். ஆகவே, அவரே இந்தத் திருத்தங்களையும் முன்மொழியலாம்” என்று கூறினார்.

தொடர்ந்து அவர் ஆற்றிய நீண்ட உரையின்போது, அடிப்படை உரிமைகள் மீதான மட்டுப்பாடுகள் பற்றிய அதிருப்தியையும் பதிவு செய்தார். இவையனைத்தின் போதும் அரச தரப்பின் குரல், அவ்வாறானால் நீங்கள் திருத்தங்களை முன்வையுங்கள், குழுநிலைவாதங்களில் பங்குபற்றுங்கள் என்பதாக அமைந்தது. எப்படியாவது தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியை அரசியலமைப்பை உருவாக்கும் செயற்பாட்டில் இணைத்துவிட வேண்டும் என்பது ஆளுங்கட்சியின் நோக்கமாக இருந்தது. ஆனால், “அதற்காக நாம் இங்கு வரவில்லை; நான் எமது பார்வையைப் பதிவு செய்யவே இங்கு வந்திருக்கிறேன். எதைச் செய்வது என்பது உங்கள் அரசாங்கத்தின் பாற்பட்டது” என்பதே அமிர்தலிங்கத்தின் பதிலாக இருந்தது. அதனைத் தொடர்ந்து தமிழ் மொழியின் பயன்பாடு பற்றி பேசும் போது, அமிர்தலிங்கம் “எமது மொரட்டுவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டிரோன் பெர்னாண்டோ தயாரித்த ஓர் அழகான திரைப்படத்தை நேற்றுக் காணும் வாய்ப்பு எனக்குக்கிடைத்தது. 1848 மாத்தளைப் புரட்சியின் போதான ஒரு வீரனின் கதை” என்று அவர் கூற, சபாநாயகர் “புரன் அப்பு” என்று அந்த வீரனின் பெயரை ஞாபகப்படுத்தினார். தொடர்ந்து பேசிய அமிர்தலிங்கம், “ஆனால் ஒரு விடயம் உறுத்தலாக இருந்தது. அந்தப் படத்தில் முழுநாடும் சிங்கள தேசம் என்று விளிக்கப்பட்டது.

அங்கே இலங்கைத் தேசியவாதி யாரும் இல்லை. யாராலும் அதை மறுக்க முடியாது. நான் பிழை பிடிக்கவில்லை” என்று பேசும்போதே குறுக்கிட்ட ஓர் உறுப்பினர் “இது நடந்த போது தமிழர்கள், இலங்கைக்காகப் போராடவில்லை” என்று குறிப்பிட்டார். உடனே இதனை மறுதலிக்க குறுக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேற்பிள்ளை “நாங்கள் (தமிழர்கள்) போராடிய போது நீங்கள், மலைகளுக்குள் ஒழிந்துகொண்டிருந்தீர்கள்” என்று கூறினார். தொடர்ந்து பேசிய அமிர்தலிங்கம் “நான் பிழை காணவில்லை; குற்றம் சொல்லவில்லை. அவ்வாறுதான் அது இருக்கவேண்டும். புரன் அப்பு சிங்கள தேசத்துக்காகப் போராடிய ஒரு வீரன்; அதற்காக நாம் அவரை கௌரவிக்கிறோம். அந்த கௌரவத்தை நாம் அவருக்கு மறுக்கவில்லை. ஆனால், நீங்கள் சிங்கள தேசம் என்பது போல, நாங்கள் தனியான தமிழ்த் தேசம் என்று சொன்னால் நீங்கள் கத்துகிறீர்கள். உங்களைப் போலவே நாங்களும், தமிழ்த் தேசத்தின் விடுதலைக்காகப் போராடிய யாழ்ப்பாண இராச்சிய அரசானான சங்கிலி மன்னனைப் பற்றிப் பெருமை கொள்கிறோம், வன்னி இராச்சியத்தின் அரசனான பண்டாரவன்னியனைப் பற்றி பெருமை கொள்கிறோம். இதில் என்ன தவறு?” என்று கேட்டார். உடனடியாக சபாநாயகர் “ஒரு தவறுமில்லை” என்று பதிலளித்தார். அமிர்தலிங்கம் தொடர்ந்தும் பேசினார். 

(அடுத்த வாரம் தொடரும்)   

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .