2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

'தை பிறந்தால் வழி பிறக்கும்' சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம்

Thipaan   / 2016 ஜனவரி 18 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

'தை பிறந்தால் வழி பிறக்கும்'- என்ற பழமொழிக்கு ஏற்றவாறு இந்த முறை தை பொங்கல் கொண்டாடப்படுகிறது. இன்றிலிருந்து நான்கு மாதத்தில் தமிழகத்தில் புதிய அரசு அமைந்திருக்கும். அது, தற்போது இருக்கின்ற அண்ணா திராவிட முன்னேற்றக் கழக (அ.தி.மு.க) அரசாகவே இருக்குமா அல்லது அதற்கு போட்டியாக களத்தில் நிற்கும் திராவிட முன்னேற்றக் கழக (தி.மு.க.) அரசாக இருக்குமா என்பதே 'பொங்கல் பட்டிமன்றமாக' தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆம், தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று, மே மாதத்தில் புதிய அரசு அமைய வேண்டும். அந்த ஜனநாயக திருவிழாவில் எந்தெந்தக் கட்சிகள் யார் யாரோடு உறவாடும் அல்லது பகையாடும் என்பது இன்னும் சில வாரங்களில் வெளிச்சத்துக்கு வந்து விடும்.

அதன் முதல்கட்டமாக, தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் (தே.மு.தி.க) பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்று முடிந்திருக்கிறது. அதில் பேசிய விஜயகாந்த் அ.தி.மு.கவை கடுமையாகவும், தி.மு.க.வை மென்மையாகவும் விமர்சித்து 'தே.மு.தி.க., தி.மு.க.வின் பக்கம் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன' என்ற கருத்துக்கு உரம் போட்டுள்ளார். ஆனால், தி.மு.க.வுடன் தே.மு.தி.க. சேர்ந்தால், அது தமிழக தேர்தல் முடிவுகளில் அதிரடி மாற்றத்தை உருவாக்கி விடும் என்பது முதலமைச்சராக இருக்கும் ஜெயலலிதாவுக்கும் தெரியும், தி.மு.கவுக்கு எதிரணியில் நிற்க விரும்பும் கட்சிகளுக்கும் புரியும்.

ஆனாலும் 'யார் எந்த அணியில்' என்பது இறுதி செய்யப்படும் வரை இப்போதைக்கு ஆறு அணிகளாக தமிழக தேர்தல் களத்தில் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றன. ஒன்று தி.மு.க. அணி. இன்னொன்று, அ.தி.மு.க அணி. மூன்றாவது, தே.மு.தி.க. அணி. நான்காவது, மக்கள் நலக்கூட்டணி. ஐந்தாவது, பாட்டாளி மக்கள் கட்சி அணி. ஆறாவது, பா.ஜ.க. அணி. இதில் உறுதியான அணிகள் என்றால் இது நாள் வரை நான்கு அணிகள் உள்ளன.

அவற்றுள் அ.தி.மு.க, தி.மு.க., மக்கள் நலக்கூட்டணி, பா.ம.க. என்று எடுத்துக் கொள்ளலாம். இன்னும் நாள் நகர நகர இந்த ஆறு அணியா அல்லது நான்கு அணியா அல்லது இந்த அணிகளுக்குள் சங்கமம் ஆகி இரண்டே அணியாக தேர்தல் களத்தில் நிற்பார்களா என்பது தெரிய வரும்.

அந்த வரிசையில், இப்போது இந்த ஆறு அணி கட்சிகளையும் ஒரே வரிசையில் சேர்த்துள்ள ஒரு விவகாரம் தமிழகத்தில் நடைபெற இருந்த ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. 'மாடுகளுக்கும் சுதந்திரம் இருக்கிறது' என்ற கோட்பாட்டின் அடிப்படையிலும், அரசியல் சட்டத்தின் அடிப்படையில் 'மாடுகளுக்கும் வாழ்வுரிமை இருக்கிறது' என்ற உன்னத கொள்கை அடிப்படையிலும் இந்த ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

'மாடுகள் உள்ளிட்ட விலங்கினங்களுக்கு ஐந்து வகை சுதந்திரம் ஐ.நா. மன்றம் அளித்துள்ளது. அந்த சுதந்திரத்தை காப்பாற்ற வேண்டியது இந்திய அரசு, அதன் கீழ் உள்ள மாநில அரசு ஆகியவற்றின் பொறுப்பு' என்பதை அழுத்தம் திருத்தமாக சென்ற 7.5.2014 அன்று வழங்கிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு தெளிவாகக் குறிப்பிடுகிறது. அது மட்டுமின்றி 'தமிழர்கள் சிவனை வழிபடுகிறவர்கள். அவர்கள் ஏன், சிவனின் வாகனமான காளைகளைத் துன்புறுத்த வேண்டும்' என்று கேள்வி எழுப்பிய அந்த தீர்ப்பின் அடிப்படையில்தான் இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி  தீபக் மிஷ்ரா தலைமையிலான பெஞ்ச் 'ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை' விதித்துள்ளது.

இந்த தீர்ப்புக்குப் பின்னர்? பரபரப்பாக நடத்தப்படும் என்று எதிர்பார்த்த ஜல்லிக்கட்டு இப்போது 'மொட்டை போடும் போராட்டம்' 'உண்ணாவிரதப் போராட்டம்' ' சாலை மறியல்' என்றெல்லாம் தென் மாவட்டங்களில் களை கட்டியிருக்கிறது. பால் பொங்கி மகிழ்ச்சியடைய வேண்டிய நேரத்தில் தென் மாவட்ட மக்கள் மனதில் இப்போது 'ஜல்லிக்கட்டு கோபம்' பொங்கி வடிந்து கொண்டிருக்கிறது.

இந்த ஜல்லிக்கட்டு அரசியல், அ.தி.மு.கவுக்கு சிம்மசொப்பனமாக இருக்கப் போகிறது. ஏனென்றால், அந்த தென் மாவட்டங்களில் வலுவுள்ள கட்சி அ.தி.மு.க. அதுவும் ஜல்லிக்கட்டு இரசிகர்கள் மத்தியில் ஆதரவு பெற்ற கட்சியும் கூட. கடைசி நேரத்திலாவது 'அவசரச் சட்டம்' கொண்டு வந்து மத்திய அரசு ஜல்லிக்கட்டை நடத்தி விடும் என்று நினைத்து இருந்தவர்களுக்கு மத்திய இணை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பேட்டி பேரிடியாக வந்து இறங்கியது. 'உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது.

அதனால் மத்திய அரசு சட்டம் கொண்டு வர முடியாது. வேண்டுமென்றால் மாநில அரசு அவசரச் சட்டம் கொண்டு வரலாம்' என்று கூறிவிட்டார். மத்திய அரசு ஜல்லிக்கட்டு விஷயத்தில் அவசரச் சட்டம் கொண்டு வர தயாராக இல்லை என்பதை இந்த பேட்டி உறுதி செய்கிறது. அதே நேரத்தில் மாநில அரசு அவசரச் சட்டம் கொண்டு வர முடியுமா என்ற கேள்வி எழுகிறது.

'விலங்கினங்கள் வதை தடுப்புச் சட்டம்' ஒரு 'Welfare legislation' என்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், அந்த சட்டத்தில் திருத்தம் செய்ய மாநில அரசுக்கு உரிமையில்லை. இந்த சட்டத்தில் என்ன திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றாலும் மத்திய அரசுக்கே அதிகாரம் இருக்கிறது என்று ஏற்கெனவே தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில் மத்திய அமைச்சர் சொல்வது போல், மாநில அரசு இதில் அவசரச் சட்டம் கொண்டு வந்தால், அதையும் உச்சநீதிமன்றம் தடை செய்யாது என்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.

இந்த சூழ்நிலையில், தி.மு.க. உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளுமே, 'மக்களின் கோபத்தை' மாநில அரசு பக்கம் திருப்பவே முயற்சி செய்யும். ஏற்கெனவே, மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதத்தில், அ.தி.மு.க அரசுக்கு அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது. அந்த அதிருப்தியை நீக்கவே வருகிற 20ஆம் திகதி தமிழக சட்டமன்றக் கூட்டத்தை கூட்டியுள்ள முதலமைச்சர் ஜெயலலிதா, அன்றைய தினம் 'அ.தி.மு.க அரசு எடுத்த நடவடிக்கைகளை விளக்கிப் பேசுவார்' என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், இப்போது புதிய தலைவலியாக 'ஜல்லிக்கட்டு' விவகாரமும் வந்து விட்டது.

ஆகவே, வருகின்ற சட்டமன்றக் கூட்டத் தொடரில் 'அவசரச் சட்டம் கொண்டு வர மாநில அரசுக்கு அதிகாரம் ஜல்லிக்கட்டு விடயத்தில் இருக்கிறதா' என்பதை முதலமைச்சர் விளக்குவார். ஆனால், அதற்குள் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான திகதிகள் முடிந்து விடும். பொங்கல் பண்டிகையும் ஓய்ந்து விடும். ஆகவே 'பொங்கல் களத்தை' தாண்டி, இந்த ஜல்லிக்கட்டு விடயம், தேர்தல் களத்தில் பிரசாரமாக மாறப் போகிறது.

இப்படி விவகாரங்கள் மேல் விவகாரங்கள், அ.தி.மு.க அரசுக்கு எதிராக திடீரென்று உருவாகி வருகின்றன. இரு மாதங்களுக்கு முன்பு வரை அ.தி.மு.க அரசுக்கு 'அதிருப்தி இல்லை' என்ற நிலை மாறி, இன்றைக்கு 'முந்தைய ஆதரவு'- அதாவது நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற போது கிடைத்த ஆதரவு அக்கட்சிக்கு இல்லை என்ற நிலை தோன்றியுள்ளது.

அதேபோல் 'தி.மு.க.வுக்கு வாக்களிப்பதா' என்று முன்பிருந்த தேக்க நிலை இப்போது மாறி, 'அ.தி.மு.கவை தோற்கடிக்க தி.மு.க.வை விட்டால் வேறு வழி இல்லை' என்ற எண்ணம் பரவலாக மக்கள் மனதில் தோன்றியிருக்கிறது. 'ஜல்லிக்கட்டு விவகாரத்தில் ஏதும் செய்யவில்லை. உச்சநீதிமன்ற தடைக்குப் பின்னர், மத்திய அரசு அமைதி காத்து விட்டது' என்ற வருத்தம் பாரதிய ஜனதா கட்சி மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த சூழலில், பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துக் கொள்ள எந்தக் கட்சி முன் வரும் என்ற கேள்வியும்; எழுந்திருக்கிறது. தே.மு.தி.க. இன்னும் மதில் மேல் பூனையாக இருக்கிறது. அது தி.மு.க.வுடனா அல்லது பா.ஜ.க.வுடனா என்ற கேள்விக்கு இன்னும் தெளிவான விடை கிடைக்கவில்லை. தி.மு.க. பக்கம் போவது போன்ற தோற்றத்தை விஜயகாந்த் கடைசியாக ஏற்படுத்தியிருந்தாலும், இன்னும் பா.ஜ.க.வுடனோ, மக்கள் நலக்கூட்டணியுடனோ கூட்டணியே கிடையாது என்று வெளிப்படையாக எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. இப்படி குழப்பங்களின் மொத்த வடிவமாக 'தமிழக தேர்தல் கூட்டணி' தத்தளித்துக் கொண்டு நிற்கிறது.

ஆனால் தேர்தல் ஆணையம் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. முதல் ரவுண்டிலில் புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக வந்த ராஜேஷ் லகானி 'மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் மாவட்டப் பொலிஸ் அதிகாரிகளை சந்தித்து' ஆலோசனை நடத்தி விட்டார். வருகின்ற 20ஆம் திகதி திருத்தப்பட்ட தமிழக வாக்காளர் பட்டியலை வெளியிடுகிறார்.  தேர்தல் ஆணையம் 'தேர்தலை நடத்த தயார்' என்று சமிக்ஞை காட்டிக் கொண்டிருக்கிறது. அதற்கு ஆதாரமாக இருக்கும் அரசியல் கூட்டணி அமைய 'இன்னும் எங்களுக்கு கால அவகாசம் இருக்கிறது' என்று அரசியல் கட்சிகள் அமைதி காக்கின்றன.

ஆனால் 'மழை வெள்ள பாதிப்பு' 'ஜல்லிக்கட்டு விளையாட்டு தடுத்து நிறுத்தம்' என்று தேர்தல் பிரசாரத்துக்கு தேவையான காரணிகள் மட்டும் புதிது புதிதாக தோன்றிக் கொண்டிருக்கின்றன. 'இது பொங்கலோ பொங்கல்' என்பதை விட 'தேர்தலோ தேர்தல்' என்ற பாதையை நோக்கி தமிழக அரசியல் மட்டும் நகர்ந்து கொண்டிருக்கிறது- தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கையோடு.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X