Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 பெப்ரவரி 28 , மு.ப. 02:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலையக தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை, 1,000 ரூபாயாக்க வலியுறுத்தி நடைபெற்றுவரும் போராட்டங்கள், புதிய கட்டத்தை எட்டியுள்ளன.
காட்டிக்கொடுப்புகள், துரோகங்கள், குழிபறிப்புகள் என்பன தோட்டத்தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் ஆண்டாண்டு காலமாக நடந்து வருகின்றன. ஆனால், காலங்கள் மாறியுள்ளன; மலையக அரசியற் கட்சிகளும் அதன் தொழிற்சங்கங்களும் கைவிரித்த பிறகும், மக்கள் தொடர்ந்து போராடுகிறார்கள்.
இன, மத அடையாள பேதங்களைக் கடந்து, இந்தப் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதில் முக்கிய பங்கு, 1,000 ரூபாய் இயக்கத்தினரைச் சேரும். பல்வேறு வெகுஜன இயக்கங்களின் ஒன்றிணைவான, ‘1,000 ரூபாய் இயக்கம்’ தனது பரந்த தளத்திலான மக்கள் போராட்டங்களின் விளைவால், மலையகத் தோட்டத் தொழிலாளரின் 1,000 ரூபாய் அடிப்படைச் சம்பளமாக வழங்க வேண்டும் என்பதை, கோரிக்கையிலிருந்து உரிமைக் குரலாக, வளர்த்தெடுத்திருக்கிறார்கள்.
கடந்த சனிக்கிழமை, பொகவந்தலாவ நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போராட்டத்துக்குத் தடை விதித்து, போராட்டக்காரர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட வன்முறையானது, மலையக அரசியல் தலைமைகளின் வங்குரோத்து அரசியலைக் காட்டி நிற்கின்றது.
1,000 ரூபாய் கோரிக்கையென்பது, வெறுமனே சம்பளச் பிரச்சினையல்ல; ஆண்டாண்டு காலமாய் ஒடுக்கப்பட்ட மக்கள் கூட்டமொன்றின் இருப்புக்கான பிரச்சினையும் கூட. 1,000 ரூபாய் அடிப்படைச் சம்பளக் கோரிக்கையானது, கடந்த மூன்று வருடங்களாகத் தோட்டத் தொழிலாளர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
மலையகத் தமிழர்களிடையே அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை, அடிப்படைச் சம்பளக் கோரிக்கையும் அதனுடன் இணைந்த போராட்டங்களும் ஏற்படுத்தியுள்ளன. மலையகத் தமிழரின் அடிப்படை உரிமைகளான வீடு, காணி, தொழில், தொழிற் பாதுகாப்பு, உடல்நலம், கல்வி, சமூகசேவைகள் ஆகியன அவர்களுக்கு மறுக்கப்பட்ட சூழலையும் மறுப்பின் சமூக விளைவுகளையும் அந்த உரிமைகளை அடையும் வழிகளையும் நோக்க வேண்டும். இந்தப் போராட்டங்கள் இதற்கான தொடக்கமாக இருக்க வேண்டும்.
தொழிற்சங்கங்களின் பெயரால் அரசியல் செய்து, நாடாளுமன்றம் சென்று, அமைச்சுப் பதவிகளையும் இன்னபிற சலுகைகளையும் பெறும் அரசியலாக, மலையகத் தமிழர் அரசியல் சீரழிந்தது. அதன் துர்விளைவுகளைத் தோட்டத் தொழிலாளர்களே அனுபவிக்கிறார்கள்.
மலையகத் தமிழரை, ஒரு தேசிய இனமாக அங்கிகரியாமையே, அவர்கள் தமது முழுமையான உரிமைகளைப் பெற, அடிப்படைத் தடையாகும். எனவே, மலையக மக்கள் ஒரு தேசிய இனமாகத் தமது இருப்பை உறுதிப்படுத்துவதும் அதன் அடிப்படையில், தேசிய இன உரிமைகளுக்காகப் போராடுவதும் அவசியமாகிறது.
மலையகத் தமிழ் மக்களுடைய வீட்டுரிமை, காணியுரிமை, முகவரிக்கான உரிமை என்பன, அவை பற்றித் தனித்து ஒவ்வொன்றாகக் கோரிக்கைகளை எழுப்பிப் போராடக் கூடியன என்ற போதிலும், அவை அவர்களுடைய மொழியுரிமை, பண்பாட்டுரிமை, பிரதேச உரிமை என்பவற்றுடன் இணைந்து, அவர்களுடைய தேசிய இன உரிமையின் ஒரு பகுதியாகின்றன.
எனவே தான், மலையக மக்களை ஒரு தேசிய இனமாக அங்கிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை மிகவும் அடிப்படையானது. இந்த அங்கிகாரம் அத்துடன் நின்றுவிடாது. இறுதி ஆராய்வில், தமது தேசிய இன அடையாளத்தையும் உரிமைகளையும் வற்புறுத்துகின்ற தமிழ், முஸ்லிம் தேசிய இனங்களுக்குச் சமமான ஒரு தேசிய இனமாக, மலையக மக்களை ஏற்பதாக அமைய வேண்டும்.
அந்த அங்கிகாரத்துக்கான போராட்டத்தைப் புறக்கணித்துத் தனித்தனியே வெவ்வேறு பிரச்சினைகளைப் பற்றி மட்டும் போராடுவது, மலையக மக்களைப் பலவீனப்படுத்தும். மலையக மக்களின் ஒவ்வொரு உரிமைப் போராட்டத்தினதும் காரணம் உரிமை மறுப்பு; அந்த மறுப்புக்கு அடிப்படையாக அமைவது, ஒரு தேசிய இனமாக, ஒரு தனித்துவமான சமூகமாக, அவர்களது அடையாளம் மறுக்கப்படுவதாகும்.
அந்த அங்கிகாரத்துக்கான போராட்டம், மக்கள் போராட்டமாக, மக்கள் மத்தியில் முன்னெடுக்கப்படுவது அவசியம். அப்போராட்டம் ஒரு புறம், சமத்துவ அடிப்படையில், பிற தேசிய இனங்களினதும் அரசினதும் அங்கிகாரத்துகாக அமைகிற அதேவேளை, மலையக மக்களின் தேசிய இன அடையாளத்தை வலியுறுத்துகிற விதமான செயற்பாடுகள், பல்வேறு தளங்களில் முன்னெடுக்கப்பட வேண்டும்.
இப்போது முன்னெடுக்கப்படும் 1,000 ரூபாயை அடிப்படைச் சம்பளமாகக் கோரும் போராட்டம், இதற்கான நல்ல தொடக்கமே. வாக்குவங்கி அரசியலின் வங்குரோத்து நிலையை, தோட்டத்தொழிலாளர்கள் உணர்கிறார்கள்.
மலையகத்தின் மாற்றுச் சக்தியாகத் தம்மைக் காட்டி நின்றவர்கள், இன்று பதவிகளைப் பெற்று மக்களின் பிரச்சினையின் முன்னே, அம்பலப்பட்டு நிற்கிறார்கள். ‘அம்பலத்தில் ஆடி, ஆடை கழன்ற’ கதையிது.
28 minute ago
31 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
31 minute ago
1 hours ago
1 hours ago