A.P.Mathan / 2011 டிசெம்பர் 12 , பி.ப. 05:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக மனித உரிமைகள் தினத்தன்று யாழ்ப்பாணத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசிய கூட்டணியின் முன்னணி தலைவர்களில் ஒருவரான மாவை சேனாதிராஜா, மனித உரிமை மீறல்களுக்காக இலங்கை அரசை எதிர்த்து ஐக்கிய நாடுகள் சபை விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தி உள்ளார். ஐநா சபை செயலாளர் நாயகம் பான் கீ மூனின் அறிவுரை குழு தனது அறிக்கையை சமர்ப்பித்த நேரத்திலேயே கூட்டணி இத்தகைய நிலையையே எடுத்தது. இந்தமுறை, விசாரணை பகிரங்கமாக இருக்க வேண்டும் என்றும் சேனாதிராஜா கூறியுள்ளார்.
இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் எண்ணத்தோடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் அதே சமயத்தில், போர்க் குற்றங்கள் குறித்த கூட்டணியின் இத்தகைய நிலைமை முன்னுக்குப் பின் முரணாகத் தோன்றுகிறது. என்றாலும் ஐநா குழு அறிக்கை வெளியான நேரத்திலும் கூட்டணி தலைமை - அரசை எதிர்த்து அறிக்கை வெளியிட்டது. அதேசமயம் அரசுடனான பேச்சுவார்த்தையில் இருந்தும் வெளிநடப்பு செய்யவில்லை. பேச்சுவார்த்தை சூடு பிடிக்காத நேரத்தில் இது சாத்தியமாக இருந்தது. தற்போது, போர்க்கால அடிப்படையில் பேச்சுவார்த்தைகள் நடப்பதாக தோற்றம் அளிக்கும்போது, கூட்டணி தனது இரட்டை போக்கை ஆய்வு செய்யும் சூழ்நிலை உருவாகலாம். பேச்சுவார்த்தைகள் வெற்றி பெற்றால் மட்டும் அல்ல, பேச்சுவார்த்தை வெற்றி பெறுவதற்குக் கூட கூட்டணி தனது தற்போதைய நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யும் சூழ்நிலை உருவாகலாம்.
.jpg)
பத்திரிகை செய்திகளையும் பிற அளவுகோல்களையும் வைத்துப் பார்க்கும் போது, பேச்சுவார்த்தையில் பெரியதொரு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கருத இடம் இல்லை. அவ்வப்போது போர்க் குற்றங்கள் குறித்த கூட்டணியின் அறிக்கைகளும் இந்த அளவுகோல்களில் ஒன்று என்று கருத இடம் இருக்கிறது. இதனை திருப்பிப் போட்டுப் பார்த்தால், போர்க் குற்றங்களை கூட்டணி கூட அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தையில் ஒரு துருப்புச் சீட்டாக மட்டுமே கருதுவதாக தோன்றுகிறது. வெளித்தோற்றத்திற்கு எப்படியோ, சர்வதேச சமூகம் பிரச்சினையை இவ்வாறகத் தான் பார்க்கிறது. தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளும் ஓர் அரசியல் தீர்வை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான அரசு வழங்குமேயானால், போர்க் குற்றங்கள் குறித்த தங்களது தற்போதைய முன்னெடுப்புகளை உலக நாடுகள் இடைக்காலத்தில் மட்டுமாவது புறந்தள்ளி வைக்கும். இந்தநிலை இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு ஏற்புடையானது தானா என்ற கேள்வி எழுகிறது. இல்லை என்றால், எதிர்வரும் சூழ்நிலையை கூட்டணி தலைமை எவ்வாறு எதிர்கொள்ளும் என்ற கேள்வி எழுகிறது.
தற்போதைய காலகட்டத்தில் இந்த கேள்வியை எழுப்புவதற்கு காரணம் இருக்கிறது. கடந்த காலங்களில் இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் மூலம் ஏதோ ஒருவிதத்தில் உடன்படிக்கை எட்டப்பட்ட போதெல்லாம், தமிழ் மக்களின் அரசியல் தலைமை, முழுமையாக தமது மக்களின் மனநிலையை எடை போடாமலேயே அகல கால் வைத்து அளந்துவிட்டு, பின்னர் தமிழ் சமூகத்தை காரணம் காட்டி - கொடுத்த வாக்கை காப்பாற்றாமலேயே கைவிட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட நிர்ப்பந்தங்கள் அதிகம். கடந்த 1987ஆம் ஆண்டின் இந்திய - இலங்கை ஒப்பந்தம் ஆகட்டும், பிற்காலத்தில் அதிபர் சந்திரிகா குமாரதுங்க முன்வைத்த முடிவுகள் ஆகட்டும், அல்லது நோர்வே அரசின் முயற்சிகள் ஆகட்டும், இலங்கை அரசை போலவே, தமிழ் தலைமையும் கொடுத்த வாக்கையும் எடுத்த முடிவையும் செயல்படுத்த திராணி இல்லாமலே இருந்தது. அல்லது வலது கை கொடுத்த வாக்குறுதி இடது கைக்கு தெரியாமலே இருந்துள்ளது.
இத்தகைய 'நெறிமுறைக்கு' இலங்கை மற்றும் இடைப்பட்ட வெளிநாட்டு அரசுகளோ மட்டும் கூட காரணம் இல்லை. கட்டுக்கோப்பான விடுதலைப் புலிகள் இயக்கமும் இவ்வாறே இயங்கி வந்துள்ளது. குறிப்பாக, அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் கடந்த 2006ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்திய தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் - ராஜீவ் காந்தி கொலை வழக்கு குறித்த கருத்துகளுக்குப் பின்னர், விடுதலை புலிகள் இயக்கம் அவரை செயல்படாத அறிவுரையாளராக ஓரம் கட்டியது. நோய்வாய்ப்பட்டிருந்த பாலசிங்கத்தின் மரணத்திற்கு அப்பாற்பட்டு, விடுதலை புலிகள் இயக்கம், போர்முனையில் தொடர்ந்து அடி வாங்கி வந்தபோதும் சர்வதேச சமூகம் அவர்களுக்காகவும் அப்பாவி தமிழ் மக்களுக்காகவும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டவர்களை நம்பாமல் போனதற்கு இத்தகைய அணுகுமுறையும் முக்கிய காரணமாகும். இதுபோன்ற காரணங்களை தமிழ் தலைமைகள் அதற்குரிய முக்கியத்தோடு அணுகி வந்தது இல்லை.
.jpg)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இந்த அரசு என்றல்ல, இலங்கையில் எதிர்வரும் காலங்களில் ஆட்சி செய்யும் எந்த அரசும் இந்த பின்புலத்தை மனதின் ஒரத்தில் நிறுத்தியே தமிழ் தலைமையுடனான பேச்சுவார்த்தைகளை அணுகும். எப்படி தமிழ் சமூகம் கடந்த பல தாசாப்தங்களாக, இலங்கையின் ஆளும் வர்க்கம் தங்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை செயல்படுத்தவில்லை என்று கருதுகிறார்களோ, அதுபோன்றே இலங்கை அரசும் ஆட்சியாளர்களும் நினைப்பதற்கு காரணம் உள்ளது. அது மட்டுமல்ல... எப்போது சர்வதேச சமூகத்திடம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தமது பிரச்சினையை தமிழ் தலைமை கொண்டு சென்று விட்டதோ அப்போதே அதனை முடிவிற்கு கொண்டுவரும் அளவுகோலை, தமிழ் சமூகம் தாரைவார்த்து விட்டது என்றே கொள்ள வேண்டும். அல்லது, தனது பிரச்சினைக்கு தான் மட்டுமே ஏற்றுக்கொள்ளும் தீர்வை சர்வதேச சமூகம் தனக்கு பெற்றுத் தர வேண்டும் என்று தமிழ் தலைமை கருதுமேயானால், அப்போதே அந்த முயற்சி தோல்வி அடைவதற்கான விதை விதைக்கப்பட்டு விட்டது என்றே அர்த்தம். பேச்சுவார்த்தையில் ஒரு முடிவை எட்டிவிட்டு, பின்னர் தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு அந்த முடிவு ஏற்புடையது அல்ல என்று அவர்களது தலைமை கருதுமேயானால், மீண்டும் ஓருமுறை சர்வதேசத்தின் ஆதரவை அவர்கள் இழக்க வேண்டி வரலாம். விடுதலைப் புலிகள் இல்லாத சமகாலத்தில், இதுவே அத்தகைய கடைசி முயற்சியாகவும் அமையலாம்.
இந்த பின்னணியில் தமிழ் தலைமை சொல்வதையும் செய்ய முடிவதையும் எடை போட்டு செயல்பட வேண்டும். இந்த இரண்டிற்கும் இணைப்பு இல்லை என்ற காரணத்தினால் மட்டுமே பல தாசாப்த காலமாக இலங்கை அரசின் நம்பகத்தன்மை சர்வதேச சமூகத்தினால் சந்தேகக் கண்களுடனேயே பார்;க்கப்பட்டு வந்திருக்கிறது. அன்றெல்லாம் இந்தியா உட்பட்ட உலக நாடுகள் இலங்கை இனப் பிரச்சினையில் அக்கறை காட்டாத நிலையில் அடிபட்ட சமூகம் என்ற வகையில் தமிழ் இனத்தின் கவலைகளுக்கும் கருத்துகளுக்கும் அதீதமாக செவிமடுத்து வந்துள்ளன. கடந்த 1983ஆம் ஆண்டு இனப் படுகொலைகளுக்குப் பின்னர் உலக நாடுகள் இலங்கை தமிழ் சமூகத்திற்கு ஆதரவாக திரண்டதற்கு இது முதல் காரணம். அதே சமயம், வெளிநாடுகளில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் மற்றும் பிரசார யுக்திகளும் மற்றொரு காரணம்.
இன்று. எவ்வளவு தூரம் சர்வதேச சமூகம் தமிழர்களின் நலனில் அக்கறை காட்டுகிறதோ, அதே அளவிற்கு அதன் தலைமைக்கு தனது மக்கள் மீது உள்ள செல்வாக்கையும் தொடர்ந்து எடைபோட்ட வண்ணமாகவே உள்ளன. அந்த வகையில், தொடர்ந்து தமிழர் பகுதிகளில் தேர்தல்களில் வெற்றி பெற்று வருவதாலும், அரசு சார்ந்த தமிழ் கட்சிகளின் தேர்தல் செயல்பாடுகளையும் வெற்றிகளையும் சந்தேகக் கண்களுடனேயே பார்த்து வருவதனாலும் மட்டுமே, உலக நாடுகள் தமிழ்த் தேசிய கூட்டணியோடு இணைந்து செயல்படுகிறது. எப்போது, கூட்டணியை தமிழ் மக்கள் வேறு வழி இல்லாமல் மட்டுமே ஆதரிக்கிறார்கள் என்றும் கூட்டணி தலைமை எடுக்கும் எல்லாவிதமான அரசியல் முடிவுகளையும் கண்மூடி தனமாக ஆதரிப்பார்கள் என்ற எண்ணத்தில் மண் விழும் சூழ்நிலை உருவாகி விடுகிறதோ, அன்றே சர்வதேசம், வேறு கோணங்களில் சிந்திக்க தொடங்கிவிடும்.
இதுதான் கடந்த காலம் வழங்கும் படிப்பினை. இந்த பின்னணியில், தமிழ்த் தேசிய கூட்டணி தன்னால் செயல்படுத்த முடியும் உறுதிமொழிகளையே அரசுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் வழங்க வேண்டும். அதுபோன்றே, தன்னால் பெற்று தர முடியும் அரசியல் தீர்வையும் அதிகார பகிர்வையும் பற்றி மட்டுமே தமிழ் மக்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும். விடுதலைப் புலிகளின் உதாரணத்தில் இருந்து படிப்பினை பெற்ற அவர்கள் இல்லாத ஊருக்கு வழி செய்யும் முறைமையை அறவே விட்டு ஒழிக்க வேண்டும். அவ்வாறு செய்ய தவறியதால் மட்டுமே, தனி நாடு கேட்டு போராடிய தமிழ் மக்கள் இன்று சொந்த வீடும் தமது வாழ்வும் வாழ்வாதரமும் இல்லாமல் தவிக்க வேண்டியுள்ளது.
இந்த நிலைமை இனியும் தொடர வேண்டுமா?
4 hours ago
4 hours ago
Chandra Tuesday, 13 December 2011 03:25 PM
டியர் சத்தியமூர்த்தி, தயவு செய்து எங்கள் விஷயங்களில் தலையிடார்தீர்கள். உங்களது வார்த்தைகளில் விஷமும் விஷமமும் கலந்திருகின்றன. முல்லை பெரியாரில் நீங்கள் கவனம் செலுத்தினால் நல்லது.
Reply : 0 0
UMMPA Tuesday, 13 December 2011 08:02 PM
நீங்கள் சொல்லுவது இவர்களுக்கு விளங்காது. விளங்கி இருந்தால் அந்த பெருமாள் கொடியேத்தியபோதே இந்திய படையும் இருந்தது அப்பவே எல்லாம் நல்லபடியாக நடந்தேறி இருக்கும். மாணவர் சமூகம் மிகவும் சிந்தித்து இந்த பழங்கால வார்த்தைகளை வேறுவடிவில் கொண்டுவர ஒன்றுபடுவோம். நிச்சயம் வெற்றி நம் பக்கம். எனவே எந்தவொரு நாடும் நமக்கு உதவாது பக்கத்தில் இருந்த தொப்புள்கொடி உறவு நம்மை இந்த நிலைமைக்கு காரணம் எனவே நாம் நமது மூளைப்பலம்தான் நமக்கு உதவி. புறப்படுவோம் ......!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago