2026 மே 02, சனிக்கிழமை

கூடங்குளம் அணுமின் நிலையம்: அதிரடி நடவடிக்கையில் இறங்குகிறார் முதல்வர் ஜெயலலிதா

A.P.Mathan   / 2012 மார்ச் 12 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

"கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனே திறக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார். "கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்களை கட்டுப்படுத்தி வையுங்கள்" என்று மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார். முக்கிய கட்சிகள் மட்டுமன்றி, முக்கிய தொழிலாளர் அமைப்புகள், பொதுநல அமைப்புகள் எல்லாமே கூடங்குளம் அணுமின்நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கே வந்திருக்கிறார்கள். குறிப்பாக ப்ளஸ் டூ மாணவர்கள் பரீட்சை நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நேரத்தில் மாணவர்கள் மின்வெட்டால் அவஸ்தைபடுவதால், பொதுமக்கள் மத்தியில் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்களுக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் கூட மின்வெட்டு பிரச்சினையை பிரதானமாக வைத்தே பிரசாரம் செய்கிறார்கள். தி.மு.க.வினர் கூட, "பத்துமாதமாக கரன்ட் இல்லாமல் ஆட்சி செய்யும் அ.தி.மு.க.விற்கு இந்த தேர்தலில் கரன்ட் ஷாக் கொடுங்கள்" என்று வாக்காளர்கள் மத்தியில் பிரசாரம் செய்கிறார்கள். முன்னனித் தலைவர்கள் தேர்தல் களத்தில் இறங்கி விட்ட நிலையில் மின்வெட்டும், கூடங்குளமுமே தேர்தல் பிரசாரத்தின் முக்கிய அம்சங்களாக மாறப் போகின்றன. கடுமையான மின்வெட்டை சந்தித்துக் கொண்டிருக்கும் விவசாயிகள், தொழிலாளர்கள், தொழிலதிபர்கள், தாய்மார்கள் எல்லாம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள். குறிப்பிட்ட மக்களை திரட்டி வைத்துக் கொண்டு தினமும் ஒரு போராட்டம், பால்குடம் எடுத்தல், மொட்டை போடுதல் என்று கூறி கூடங்குளம் அணுமின் நிலையம் இருக்கும் பகுதிகளில் ஒரு பதற்றத்தை உருவாக்கி வருகிறார்கள் கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள். இவர்கள் மீது எல்லாம் மாநில காவல்துறை தங்கள் பங்கிற்கு தேசத்துரோக வழக்கை போட்டு வைத்திருக்கிறது. இவ்வாறு வழக்குப் போட்டிருந்தும் ஏன் கூடங்குளம் போராட்டக்குழுவின் தலைவர் உதயகுமாரை கைது செய்யவில்லை என்று கேட்டு தமிழக உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த இந்திய அணுமின் கழக இயக்குநர் பரத்வாஜ், "அணுமின் நிலையத்தை திறக்க விடாததால் கடந்த ஆறு மாதங்களாக தினமும் ஐந்து கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது" என்று அறிவித்தார். தமிழகம் கடும் மின்வெட்டை சந்தித்துக் கொண்டிருக்கின்ற வேளையில், கூடங்குளம் அணுமின்நிலையப் பணிகள் கடந்த ஆறு மாதங்களாக முடங்கிப் போய் கிடக்கின்றன. இதனால் சென்ற வருட இறுதி கட்டத்தில் தமிழகத்திற்கு கிடைத்திருக்க வேண்டிய மின்சாரம் இன்னும் கிடைக்கவில்லை. அது மட்டுமின்றி இனி பணிகள் தொடங்கினாலும், சுமார் ஆறு மாதங்கள் கழித்தே மின்சாரம் கிடைக்கும் என்று தெரிய வருகிறது. இந்த நிலையில் போனால் கோடை காலத்தில் மின் வெட்டு இன்னும் கடுமையாகப் போவதற்கே வாய்ப்பு இருக்கிறது. அதை மனதில் வைத்துத்தான் 1000 மெகாவோட் மின்சாரத்தை மத்திய தொகுப்பில் இருந்து வழங்குங்கள் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா - பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு அடிக்கடி கடிதம் எழுதி வருகிறார். இப்போது கூட வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்குவதற்கு உள்ள தடையை நீக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

இதற்கிடையில் மத்திய அரசு நியமித்த நிபுணர் குழுக்கள் தவிர, மாநில அரசே முன்னாள் அணுமின் கழகத் தலைவர் சீனிவாசன் தலைமையில் ஒரு நிபுணர் குழுவை அமைத்து கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு அம்சங்களை ஆராய்ந்து விட்டது. அதன் அறிக்கை முதலமைச்சரிடம் கொடுக்கப்பட்டு விட்டது. இதைத்தொடர்ந்து அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டக்குழுவின் தலைவர் உதயகுமார் உள்ளிட்டோரை தமிழக முதல்வர் சந்தித்து விட்டார். இந்த சந்திப்பிற்கு பிறகு தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. ஜார்ஜ் - கூடங்குளம் பகுதிக்குச் சென்று தென் மாவட்ட பொலிஸ் அதிகாரிகள் கூட்டத்தை கூட்டினார். கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பு பற்றி அவர்களுடன் விவாதித்தார். கடலோர கிராமங்களில் இருந்துதான் இந்த போராட்டத்திற்கு அதிக மக்கள் வருகிறார்கள். அதை சமாளிப்பது எப்படி என்பது பற்றியும் மதுரை மண்டல ஐ.ஜி. ராஷேஸ் தாஸ் அந்த கிராமங்களுக்கு சென்று பார்வையிட்டு திரும்பியிருக்கிறார். இதற்கு முன்பு கூடங்குளம் தவிர மற்ற பகுதிகளில் நடந்த அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டங்களை பெரிய அளவில் மாநில அரசு கண்டு கொள்ளாமல் இருந்தது. ஆனால் மாநில அரசு அமைத்த குழு கொடுத்த அறிக்கை, கூடுதல் டி.ஜி.பி. ஆய்வு, கூடங்குளம் அறிக்கை பற்றி தமிழக அமைச்சரவையில் ஆலோசனை போன்ற சம்பவங்களுக்குப் பிறகு ஈரோடு பகுதியில் நடைபெறுவதாக இருந்த அணுமின் நிலைய எதிர்ப்பு கூட்டத்திற்கு மாநில அரசு அனுமதி மறுத்துள்ளது. "இனி போராட்டங்களை அனுமதிக்க முடியாது" என்று ஒரு முன்னறிவிப்பை போராட்டக்காரர்களுக்கு கொடுத்திருக்கிறது மாநில அரசு. கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என்று கொள்கை அளவில் மாநில அரசு முடிவு எடுத்துள்ளது போலவே தொடர்ந்து நடைபெறும் சம்பவங்கள் காட்டுகின்றன.

கொள்கை முடிவை அமல்படுத்தும் நேரத்தை மட்டுமே முடிவு பண்ணாமல் வைத்திருக்கிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. அதற்கு முக்கிய காரணம் சங்கரன்கோவில் இடை தேர்தல். அந்த இடைத் தேர்தல் மார்ச் 18ஆம் திகதி நடைபெறுகிறது. அதன் பிறகு எந்த நேரத்திலும் கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு வெளியிடப்படும். உடனே பொலிஸ் துறையும், அரசு அதிகாரிகளும் கூடங்குளம் அணுமின் நிலையைப் பணிகள் தங்குதடையின்றி நடைபெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது. இதையெல்லாம் மனதில் வைத்தே, "கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரத்தில் மத்திய அரசின் முயற்சிகளுக்கு மாநில அரசு துணை நிற்க வேண்டும்" என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனும், "உடனே திறக்க வழி செய்ய வேண்டும்" என்று தி.மு.க. தலைவர் கருணாநிதியும் பரபரப்பு அறிக்கைகள் மற்றும் பேட்டிகளை அளித்துள்ளார்கள். இதற்கிடையில் மத்திய அரசும் "இந்தியாவில் உள்ள என்.ஜி.ஓ.க்களுக்கு 10,000 கோடி ரூபாய்க்கு மேல் வெளிநாட்டுப் பணம் வந்திருக்கிறது. குறிப்பாக தமிழகத்தில் உள்ள என்.ஜி. ஓ. அமைப்புகளுக்கு 1600 கோடி ரூபாய்க்கு மேல் நிதி வந்திருக்கிறது" என்று அறிவித்து கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்களுக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்களுக்கு ஒரு புறம் மத்திய அரசின் நெருக்கடி. இன்னொரு புறம் கடும் மின்வெட்டால் மக்களே அவர்களுக்கு எதிராக திரும்பியது. எல்லாவற்றிற்கும் மேலாக இதுவரை "அவர்கள் பக்கமும் நியாயம் இருக்கிறது. அணு மின் நிலைய பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்து அம்மக்களின் அச்சத்தை போக்க வேண்டும்" என்று கூறிவந்த மாநில அரசு இப்போது போராட்டக்காரர்களின் வாதத்தை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை. அந்த அளவிற்கு மின்வெட்டால் மக்களும், தொழிற்சாலைகளும், சிறு தொழில்களும் தமிழகத்தில் பாதிக்கப்பட்டுள்ளன. ஆகவே சங்கரன்கோவில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினையில் தன் முடிவை அறிவிப்பார் முதல்வர் ஜெயலலிதா என்பதே இப்போது தமிழக அரசின் அதிகார மையத்தில் இருக்கும் அதிகாரிகளின் கருத்தாக இருக்கிறது. சங்கரன்கோவில் தேர்தல் முடிந்ததும், கூடங்குளம் அணுமின் நிலைய பணிகள் மீண்டும் தொடங்கும் என்று மத்திய அரசும் பெரும் நம்பிக்கையில் இருக்கிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .