2026 மே 02, சனிக்கிழமை

தாக்கலாகிறது தமிழக பட்ஜெட்: கருணாநிதி, விஜயகாந்த் சந்திப்பார்களா?

A.P.Mathan   / 2012 மார்ச் 19 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசின் இரண்டாவது நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) வருகின்ற 26ஆம் திகதி தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் பட்ஜெட் போடும் மாநிலமாக சென்றமுறை தமிழகம் மாறியது. இந்த ஆட்சியின் முதல் பட்ஜெட்டை (2011-2012) தாக்கல் செய்த நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், 1,01,388 கோடி ரூபாய்க்கான வரவு செலவு திட்டத்தை அறிவித்தார். இந்த இரண்டாவது பட்ஜெட்டின் (2012-2013) முக்கிய அம்சம் என்னவென்றால், இதுவரை பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு அந்தந்தத்துறை அமைச்சர்கள்தான் தங்கள் துறையின் அதிகாரிகளுடன் பட்ஜெட்டில் சேர்க்கப்பட வேண்டிய முக்கியத் திட்டங்கள் குறித்து விவாதிப்பார்கள். அதை பிறகு முதல்வரிடம் கொடுத்து ஒப்புதல் பெறுவார்கள். ஆனால் இந்த முறை முதல்வர் ஜெயலலிதாவே அந்த பணியை எடுத்துக் கொண்டு, துறை அதிகாரிகளுடன் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டார். அரசு விடுமுறை நாட்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட அரசு அதிகாரிகளை அழைத்து விவாதித்து பட்ஜெட்டில் சேர்க்க வேண்டிய திட்டங்கள் குறித்து முடிவு எடுத்துள்ளார். சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர்கள் எல்லாம் இருந்தது ஒரு காரணம் என்றாலும், நிதிநெருக்கடி, மின்வெட்டு போன்ற பல பிரச்சினைகளில் சிக்கியிருக்கும் மாநிலத்தில் முதல்வரே முன்னின்று நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய திட்டங்கள் பற்றி விவாதித்தது அரசின் உயர்மட்ட அதிகாரிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழகம் முழுவதும் மின்வெட்டுப் பிரச்சினை பெரும் தலைவலியாக அரசுக்கு நாள்தோறும் மாறி வருகிறது. தொழில் கூட்டமைப்புகள், சிறு தொழில் நடத்துவோர் எல்லாம் மின்வெட்டிலிருந்து மீண்டும் தங்கள் உற்பத்தியை எப்படிப் பெருக்குவது என்ற வழி தெரியாமல் திகைக்கிறார்கள். இன்னும் சில மாதங்களில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருப்பது போல் மின்வெட்டு பிரச்சினை படிப்படியாக குறையும் என்றாலும், அடுத்தடுத்து வரப் போகின்ற புதிய தொழிற்சாலைகள், கோடை காலம் போன்றவற்றால் மின்வெட்டு பிரச்சினை நீடிக்கவும் வாய்ப்பு உண்டு. மின் திட்டங்கள் நீண்ட காலத்திட்டங்கள் என்பதால், ஏற்கனவே தி.மு.க. ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களே இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை. முதல் ரவுண்டில் அந்த திட்டங்களும், கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டமும் செயல்பாட்டிற்கு வந்து விட்டால் பிரச்சினை ஓரளவு தீருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அது மட்டும் போதாது. இப்போதே அடுத்த புதிய மின்திட்டங்களை அறிவித்தால்தான் மின்வெட்டு பிரச்சினையில் இருந்து தமிழகம் எதிர்காலத்தில் காப்பாற்றப்படும். அதே நேரத்தில் மின்சார வாரியத்தில் உள்ள கடன்சுமையும் புதிய மின்திட்டங்களுக்கும், வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்குவதற்கும் இடைஞ்சலாக இருக்கிறது. அந்த கடன்சுமையும் நீக்கப்பட வேண்டிய கட்டாயத்தில் தமிழக அரசு இருக்கிறது. ஏனென்றால் மின்சார வாரியத்தின் அன்றாட தேவைக்குரிய மெட்டீரியல்ஸ்களைக் கூட வாங்க முடியாத அளவிற்கு கடன்சுமையில் தடுமாறுகிறது மின்சார வாரியம் என்பதே உண்மை நிலைவரம்.

அ.தி.மு.க. ஆட்சி அமைந்து ஏறக்குறைய ஒருவருடத்தைத் தொடப்போகின்ற நிலையில், இதுவரை அதிக அளவில் ஏழை எளியவர்களுக்கான நலத்திட்டங்களை (இலவச மிக்ஸி, கிரைண்டர், பேன், தாலிக்கு தங்கம்) அறவிப்பதில் அதிக கவனம் செலுத்தினார் முதலமைச்சர் ஜெயலலிதா. அப்படியொரு தேர்தல் அறிக்கையே சென்ற சட்டமன்ற தேர்தலில் அக்கட்சிக்கு வெற்றியைப் பெற்றுத்தந்தது. அதற்கு முன்பு இருந்த தி.மு.க. ஆட்சியில் எல்லாம் இலவசம் என்ற நிலைப்பாட்டை எடுத்ததால், அந்த நிர்வாக கட்டமைப்பில் இருந்து திடீரென்று விலகிச் செல்ல முடியாத சூழ்நிலையில் புதிதாக ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. சிக்கியது. ஆனால் அடுத்த ஆண்டில் கால்எடுத்து வைக்கும் அ.தி.மு.க. அரசு, இந்த முறை புதிய தொலை நோக்குத் திட்டங்களை அறிவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ஆனாலும் கூட, சென்ற பட்ஜெட்டிற்கு முன்பு வணிகவரி விதிப்பின் மூலம் 4000 கோடி ரூபாய்க்கு மேல் நிதி திரட்டியது போன்றதொரு எந்தவிதமான முயற்சியையும் இந்த முறை மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏழை, எளியவர்களுக்கான நலத்திட்டங்களை தொடரும் அதே பட்சத்தில் புதிய தொழிற்சாலைகள், வெளிநாட்டு முதலீடுகள், உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்குவது போன்ற தொலை நோக்குத் திட்டங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா முன்னுரிமை கொடுக்க விரும்புவதாக சீனியர் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். "பட்ஜெட்டில் சேர்க்க வேண்டிய ஒவ்வொரு விடயத்தையும் முதல்வரே ஆர்வத்துடன் தேர்வு செய்கிறார். விரைவாக பட்ஜெட் அறிவிப்புகளை பட்ஜெட் உரையில் இடம்பெறச் செய்வதற்கு இது ரொம்பவும் உதவியாக இருக்கிறது" என்கிறார் முதல்வருடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற சீனியர் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர்.

நிர்வாக ரீதியாக பட்ஜெட்டின் முக்கியத்துவம் இப்படியிருக்கும் பட்சத்தில் எதிர்கால தேர்தல் அரசியலும் வருகின்ற பட்ஜெட்டில் எதிரொலிக்க வாய்ப்பு இருக்கிறது. உத்தரபிரதேச தேர்தலுக்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் நாடாளுமன்றத்திற்கும் தேர்தல் வரலாம் என்று செய்திகள் பரவிக்கொண்டிருக்கிறது. அதை வலியுறுத்தும் விதத்தில் மத்திய ரயில்வே பட்ஜெட்டில் பயணிகள் கட்டணத்தை உயர்த்தியதற்காக தன் கட்சியைச் சார்ந்த மத்திய ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதியையே ராஜினாமா செய்ய வைத்துள்ளார் மம்தா பானர்ஜி. அதேபோல் மேற்குவங்கத்தில் நடைபெறவிருக்கும் ராஜ்ய சபை தேர்தலிலும் காங்கிரஸுக்கும், மம்தா பானர்ஜிக்கும் கடும் மோதல் வெடித்துள்ளது. இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று வற்புறுத்தி இன்னொரு கூட்டணிக் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் போர்க்கொடி தூக்கியுள்ளது. இந்த இரு கட்சிகளையும் சமாளிக்க முலயாம் சிங் யாதவ், மாயாவதி போன்றோரின் உதவியை நாட காங்கிரஸ் விரும்பினாலும், அது தங்களுக்கு எதிர்காலத்தில் "பளு" வாக மாறி விடுமோ என்ற முலயாம், மாயாவதி போன்றோர் நினைக்கிறார்கள். அதனால் அவர்களிடமிருந்து உறுதியாக எந்தவிதமான தகவலும் இல்லாமல் தவிக்கிறது மத்தியில் உள்ள காங்கிரஸ் கட்சி. அதனால்தான் வேறு வழியின்றி ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி ராஜினாமா செய்யச் சொல்லி, மீண்டும் மம்தா பானர்ஜியிடமே கடைசி நிமிட சமரசத்திற்காக காங்கிரஸ் கட்சி போராடிக் கொண்டிருக்கிறது. ஆகவே, நாடாளுமன்றத்திற்கு விரைவில் தேர்தல் வரும் என்ற செய்தி மேலும் வலுப்பெறுகிறது. மத்தியில் பிரதமர் மன்மோகன்சிங் அரசு கவிழ்ந்து, நாடாளுமன்றத்திற்கு தேர்தல் வரலாம் என்ற எதிர்பார்ப்புகளுக்கும் பதிலளிக்கும் விதத்தில் தமிழக பட்ஜெட் இருக்கும் என்பதே தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், மற்றும் தொழில் கூட்டமைப்பு தலைவர்களின் எண்ணமாக இருக்கிறது. ஆகவே தொலை நோக்குத் திட்டங்கள் மட்டுமின்றி, வழக்கம் போல் அமல்படுத்தப்படும் நலத்திட்டங்களிலும் புதிய அறிவிப்புகள் இடம்பெறலாம் என்பதே தமிழக தலைமைச் செயலக வட்டாரத்தில் பேச்சாக இருக்கிறது.

கடந்த ஒரு வருடத்தில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத் தொடரில் அவைக்குள் செல்போன் பயன்படுத்தியதற்காக தி.மு.கழகத்தின் எம்.எல்.ஏ. வாகிய டி.ஆர்.பி.ராஜா சஸ்பென்ட் செய்யப்பட்டார். பிறகு ஒரு கூட்டத்தொடரில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்திற்கும், முதல்வர் ஜெயலலிதாவிற்குமே சட்டமன்றத்தில் காரசாரமான வாக்குவாதம் தொடங்கி, அதைத் தொடர்ந்து விஜயகாந்த் ஆவேசமாகப் பேசினார். இறுதியில் விஜயகாந்த் பத்து நாட்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டார். தன் சஸ்பென்ஷனை எதிர்த்து விஜயகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த சஸ்பென்ட் விவகாரத்தில் தி.மு.க. மற்றும் கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் விஜயகாந்திற்கு ஆதரவாக அப்போது கருத்து தெரிவித்தார்கள். அது மட்டுமின்றி, அதுவே பிறகு மதுரை விமான நிலையத்தில் ஸ்டாலினும், விஜயகாந்ந்தும் சந்திப்பதற்கு வாய்ப்பாக மாறியது. அதைத்தொடர்ந்து தி.மு.க., தே.மு.தி.க. கூட்டணி உருவாகிறது என்று ஹேஸ்யங்கள் ரெக்கை கட்டி பறக்கத் தொடங்கின. தற்போது சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் எதிரும் புதிருமாக களத்தில் நின்று பிரசாரம் செய்து விட்டு, வருகின்ற 26ஆம் திகதி அனைத்து கட்சியினரும் சட்டமன்றத்தில் வந்து அமரப்போகிறார்கள். மீண்டும் விஜயகாந்த் எதிர்கட்சி தலைவராக அவையில் அமருவார். குறிப்பாக கூட்டணிக் கட்சிகளாக இருந்த தே.மு.தி.க., மார்க்ஸ்ஸிட் கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் அ.தி.மு.க.வை எதிராக வரிந்து கட்டிக் கொண்டு நிற்கும். இந்த முறை அதற்கு பதிலளிக்கும் பொறுப்பு சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்த டாக்டர் கிருஷ்ணசாமி, நடிகர் சரத்குமார் போன்றோர் வசம் விடப்படலாம். தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளுக்கு ஆதரவாக சட்டமன்றத்தில் தி.மு.க. துணை போகலாம். தி.மு.க. தலைவர் கருணாநிதி, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஆகியோர் சந்திப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதற்கு இந்த பட்ஜெட் கூட்டத்தொடரை பயன்படுத்தலாம் என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்து. ஏனென்றால் எல்லாமே எதிர்வரும் கூட்டணி அரசியலை மனதில் வைத்துத்தானே "அரசியல் மூவ்கள்" நடக்கின்றன. அதே பாணியில்தான் பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்கட்சிகளின் நடவடிக்கைகளும் அமையும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பு.

பட்ஜெட் அறிவிப்புகளை தமிழக மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், பட்ஜெட் கூட்டத் தொடரில் ஆளும் அ.தி.மு.க.வுடன், சங்கரன்கோவில் இடைத்தேர்தல் விவகாரங்கள் எதிரொலிக்கும் என்றே தெரிகிறது. மொத்தத்தில் அடுத்து வருகின்ற தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் பரபரப்பு மிகுந்ததாக இருக்கும். நாடாளுமன்றத் தேர்தலுக்கு தமிழகத்தில் புதிய கூட்டணிகள் அமைவது தி.மு.க. இன்னும் காங்கிரஸுடன் கூட்டணியாக இருப்பதால்தான் தாமதமாகிக் கொண்டிருக்கிறது. இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மான விவகாரத்தில் காங்கிரஸை விட்டு தி.மு.க. வெளியேற நேர்ந்தால், அதன்பிறகு "புதிய கூட்டணி" அமையும் முயற்சியில் சூடுபிடிக்கும். அதற்கும் இப்போதைய பட்ஜெட் கூட்டத்தொடர் அரசியல் கட்சிகளுக்கு உதவும். ஆகவே, எந்தவிதத்தில் பார்த்தாலும் 26ஆம் திகதியிலிருந்து தொடங்கப்போகும் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தமிழக அரசியலில் பல அதிரடித் திருப்பங்களை ஏற்படுத்தும்! 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .