2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

வட மாகாண சபைத் தேர்தலை நடத்துவதே அரசாங்கத்திற்கு சாதகமானதாகும்

Super User   / 2012 ஜூலை 01 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கம் கட்டம் கட்டமாக மாகாண சபை தேர்தல்களை நடத்துவதன் நோக்கம் எல்லோருக்கும் தெரிந்ததே. இதற்கு முன்னர் நடந்ததைப் போலவே அரச அதிகாரங்களையும் அரச வளங்களையும் பாவித்து ஒரு கட்டத் தேர்தல்களை வெற்றி பெற்று அதனூடாக ஏற்படும் மானசீக தாக்கத்தை உபயோகித்து ஏனைய கட்டஙகளிலும் தேர்தல்களை மிக இலகுவில் வெற்றி பெறுவதே அரசாங்கத்தின் நோக்கமாக இருக்கிறது.

ஆயினும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைத் தவிர ஏனைய மாகாணங்களில் தேர்தல் ஒன்றை எதிர்நோக்கக் கூடிய தயார் நிலையில் இருப்பது ஆளும் கட்சி மட்டுமே. ஏனைய கட்சிகள் தனித்து போட்டியிடுவதா அல்லது ஏனைய கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து போட்டியிடுவதா என்பதைப் பற்றி கூட இனிமேல்தான் சிந்திக்க வேண்டியுள்ளது.

சில கட்சிகளுக்குள் இருக்கும் முரண்பாடுகள் காரணமாக இம் மாகாண சபை தேர்தல்களுக்காக வேட்பாளர்களை தெரிவு செய்வதும் அக் கட்சிகளுக்கு பொரும் பிரச்சினையாகலாம். எனவே கட்டம் கட்டமாக அரசாங்கம் மாகாண சபைத் தேர்தல்களை நடத்தத் தேவையில்லை.

உத்தியோகபூர்வமாக நோக்குவதாயின் மாகாண சபையொன்றின் பதவிக் காலம் முடிவடையுமுன் அதனை கலைப்பதாயின் அதற்காக  ஆளுநருக்கு அம் மாகாண சபையின் முதலமைச்சர் ஆலோசனை வழங்க வேண்டும். ஆனால், நடைமுறையில் நடப்பதென்னவென்றால் ஜனாதிபதியே மாகாண சபைகளை கலைப்பதற்கான முடிவை எடுப்பார். பின்னர் முதலமைச்சரின் ஆலோசனைப் படி ஆளுநர் மாகாண சபையை கலைத்ததாக பகிரங்கப்படுத்தப்படும்.

இதே நடைமுறையை பின்பற்றியே கடந்த புதன்கிழமை சப்ரகமுவ, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாண சபைகள் கலைக்கப்பட்டன. இதற்கு முன்னர் ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியின் கீழும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டரசாங்கங்களின் கீழும் இவ்வாறு பல முறை மாகாண சபைகள் அவற்றின் பதவிக் காலம் முடிவடையுமுன்னரே கலைக்கப்பட்டுள்ளன.

கட்டம் கட்டமாக மாகாண சபை தேர்தல்களை நடத்துவது அரசியல் நாகரிகமற்றச் செயலென ஐ.தே.க. எழுப்பும் குற்றச்சாட்டு உண்மையாயினும் அக்கட்சியின் ஆட்சிக் காலத்தில் 1987 மற்றும் 1988 ஆகிய ஆண்டுகளில் இலங்கையின் முதலாவது மாகாண சபைத் தேர்தல்களும் இவ்வாறு கட்டம் கட்டமாகவே நடைபெற்றன.

இதனை நினைவூட்டி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி இன்று தாம் செய்வதை நியாயப்படுத்தக் கூடும். ஆனால், ஒருவரது தவறை மற்றொருவரது தவறினால் நியாயப்படுத்த முடியாது. ஏனெனில் இரண்டும் தவறுகளே.

தற்போது கலைக்கப்பட்டுள்ள மூன்று மாகாண சபைகளிலும் கிழக்கு மாகாண சபை தேர்தலுக்கே கூடுதலான கவனம் ஈர்க்கப்படும் என்பதில் சந்தேகமே இல்லை. குறிப்பாக, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் கிழக்கு மாகாண சபைத் தேர்தலைப் பற்றியே முழுக் கவனத்தையும் செலுத்துவார்கள்.

ஏனைய இரண்டு மாகாண சபைகளுக்குமான தேர்தல்களின் முடிவுகளை ஓரளவுக்கு முன்கூட்டியே அனுமானிக்கலாம். ஆனால் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவுகளை அவ்வளவு இலகுவாக எதிர்வு கூற முடியாத அளவிற்கு அம் மாகாணத்தின் அரசியல் நிலைமை சிக்கலாக இருப்பது அம்மாகாணம்  இவ்வாறு கூடுதல் கவனத்தை ஈர்ப்பதற்கு பிரதான காரணமாகும்.

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் இரண்டு முக்கிய தலைவர்கள்- அதாவது கிழக்கு மாகாணத்தின் முதலாவது முதலமைச்சரான சிவநேசதுரை சந்திரகாந்தனும் மீள்குடியேற்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனும் தமது பலத்தை உரசிப் பார்க்கும் ஒரு போட்டியாகவும் இத்தேர்தல் அமையப் போகிறது. அதுவும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் ஏனைய இரண்டு மாகாண சபைகளை பார்க்கிலும் முக்கியத்துவம் பெறக் காரணமாயுள்ளது.

முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை தரக் கூடிய ஒரே மாகாணம் கிழக்கு மாகாணமே. முதலாவது முஸ்லிம் முதலமைச்சராகும் ஆசையில் பல முஸ்லிம் தலைவர்கள் இப்போது துடித்துக் கொண்டுள்ளனர். இதுவும் இந்த மாகாணம் கூடுதல் கவனத்தைப் பெறக் காரணமாகவுள்ளது.

இதேவேளை, இந்த மூன்று மாகான சபைகளுக்கும் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதை அடுத்து வட மாகாண சபைத் தேர்தலைப் பற்றியும் அரசியல் துறையில் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது. அரசாங்கம் ஏன் வட மாகாண சபைக்கான தேர்தலை நடத்த முன் வருவதில்லை என்பதே பலர் இன்று எழுப்பும் கேள்வியாக உள்ளது.

கடந்த வியாழக்கிழமை ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய ஐ.தே.க. தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் வட மாகாண சபைத் தேர்தலை நடத்தாததையிட்டு அரசாங்கத்தை விமர்சித்தார். அரசாங்கம் வட மாகாண சபைத் தேர்தலை நடத்த பயப்படுகிறது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனும் கூறியிருந்தார்.

கடந்த வியாழக்கிழமை இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல, வட பகுதியில் சில இடங்களில் இன்னமும் நிலக் கண்ணிவெடிகள் அகற்றப்படவில்லை என்றும் அதன் காரணமாக அந்த மாகாணத்தில் இப்போது மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது என்றும் கூறியிருந்தார்.

இதற்கும் ஐ.தே.க. தலைவர் பதிலளித்திருந்தார். இது வடக்கில் தேர்தலை நடத்தாமல் இருக்க அரசாங்கம் முன்வைக்கும் போலிக் காரணமென அவர் கூறினார். இப்போது வடக்கில் தேர்தல் நடத்த முடியாதென்றால் இரணடரை ஆண்டுகளுக்கு முன்னர், 2010 ஆம் ஆண்டு அரசாங்கம் வடக்கில் ஜனாதிபதித் தேர்தலையும் பொதுத் தேர்தலையும் எவ்வாறு நடத்த முடிந்தது என்று அவர் கேள்வியெழுப்பியிருந்தார்.

உண்மையிலேயே 2010ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலும் பொதுத் தேர்தலும் நடைபெற்றபோது எவரும் நிலக் கண்ணிவெடிப் பிரச்சினையை எழுப்பவில்லை. அதேவேளை, உண்மையிலேயே நிலக் கண்ணிவெடிகள் இருந்தாலும் அவை தேர்தல்களுக்கு தடையாக இருக்கன்றனவா என்பதும் சந்தேகமான விடயமாகும்.

ஏனெனில், இப்போது போரினால் இடம்பெயர்ந்தோர் மிகச் சிலரே முகாம்களில் வாழ்கின்றனர். ஏனையோர் வசதிகள் வழங்கப்படாவிட்டாலும் தத்தமது சொந்தப் பகுதிகளுக்கே சென்றுவிட்டனர். அவ்வாறு மீள்குடியேற்றப்பட்ட மக்கள் அந்தந்தப் பகுதிகளில் வாழ்வதற்காக பல தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அப் பகுதிகளில் பாடசாலைகள் திறக்கப்பட்டிருந்தால் மாணவர்கள் பாடசாலை செல்கிறார்கள். சுருக்கமாக கூறின் அப்பகுதிகளில் நிலக் கண்ணிவெடிப் பிரச்சினை இருப்பதாக தெரியவில்லை.

மக்கள் வாழும் இடங்களிலேயே தேர்தல்கள் நடைபெறுகின்றன. மக்கள் நிலக்கண்ணி வெடி அபாயமுள்ள இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. மக்கள் தாம் வாழும் பகுதிகளில் ஏனைய பணிகளில் ஈடுபட முடியுமாக இருந்தால் அவர்களுக்கு வாக்களிக்க மட்டும் ஏன் முடியாது என்ற கேள்வி எழுகிறது.

நிலக்கண்ணி வெடி அபாயம் இருந்தால் வடக்கில் தேர்தல் வேண்டாம் என்று தமிழ் தலைவர்களே முதலில் கூறுவர். ஆனால், இதுவரை தமிழ் தலைவர்கள அவ்வாறான கோரிக்கை எதனையும் விடுக்கவில்லை. அவ்வாறு அவர்கள் நினைப்பாக இருந்தால் அரசாங்கம் வடக்கில் தேர்தலை நடத்த பயப்படுகிறது என சுமந்திரன் கூறியிருக்க மாட்டார்.

மாகாண சபைகள் எதற்காக உருவாக்கப்பட்டன என்று ஆராய்வதாயின், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை தவிர்ந்த ஏனைய மாகாணங்களுக்கு மாகாண சபைகளே தேவையில்லை என்ற முடிவுக்கே வர வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கான பொறிமுறையாகவே 1987 ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் கீழ் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன. ஆவற்றிலும் வட மாகாணத்திலேயே தமிழ் மக்கள் மிகவும் செறிவாக வாழ்கிறார்கள்.

ஆனால், இப்போது நடைமுறையில் அந்த மாகாணத்திலேயே மாகாணசபை முறையாக செயற்படாமல் இருக்கிறது. 1987 ஆம் ஆண்டு அப்போது இணைக்கப்பட்டிருந்த வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்காக தேர்தல் நடைபெற்ற போதிலும் வட மாகாணத்தில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்.) மற்றும் ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எவ்.) ஆகிய அமைப்புகள் மாத்திரமே வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டன. அதனால் அக்கட்சிகளின் உறுப்பினர்கள் போட்டியின்றி தெரிவுசெய்யப்பட்டனர்.  எனவே, அத்தேர்தலில் வடமாகாணத்தில் வாக்களிப்பு எதுவும் நடைபெறவில்லை, கிழக்கில் மாத்திரமே வாக்களிப்பு இடம்பெற்றது. இணைந்த வடக்குகிழக்கு மாகாணசபை 1990 ஆம் ஆண்டு  கலைக்கப்பட்டது. ஆக, இதுவரை வட மாகாணத்தில் பல்கட்சி மாகாண சபை தேர்தல் நடைபெறவேயில்லை.

ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களிலும் சிலர் வட மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று வாதிடுகின்றனர். அதிலும் ஜாதிக்க ஹெல உருமயவின் தலைவர்களும் அ;வாறு வாதிடுகிறார்கள் என்றால் வட மாகாண தேர்தலின் நியாயம் தெளிவாகிறது.

வட மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அதனை நியாயமாக நடத்த வேண்டும் என்றும் அதனூடாக தமிழ் தேசிய கூட்டமைப்பு வட பகுதியில் அதிகாரத்திற்கு வரச் செய்வதன் மூலம் அவர்களது கோரிக்கைகளின் நடைமுறை சாத்தியமற்றத் தன்மையை அவர்களுக்கே புரிய வைக்க வேண்டும் என்றும் ஜாதிக ஹெல உருமயவின் தலைவர்களில் ஒருவரும் மேல் மாகாண சபையின் அமைச்சருமான உதய கம்மன்பில 'லங்காதீப' பத்திரிகைக்கு வாராந்தம் எழுதி வரும் தமது பத்தியொன்றில் அண்மையில் கூறியிருந்தார்.

வட மாகாணத்தில் நியாயமாக தேர்தல் நடைபெற்றால் தமிழ் தேசிய கூட்டமைப்பு தான் பதவிக்கு வரும் என்பதை இதன் மூலம் அவர் ஏற்றுக் கொள்கிறார் போலும். எனவே அரசாங்கம் ஏன் வட மாகாண சபைக்கான தேர்தலை நடத்தத் தயங்குகிறது என்பது தெளிவாகிறது.

ஆனால் கம்மன்பில கூறும் இந்த தேர்தல் முடிவை குறுகிய காலத்தில் அரசாங்கத்தினால் மாற்ற முடியாது. எனவே இந்தியாவும் வற்புறுத்தி வரும் ஒரு விடயமான வட மாகாண சபை தேர்தலை நடத்துவது அதனை நடத்தாமல் இருப்பதை விட அரசாங்கத்திற்கு சாதகமானதாகும். இல்லையேல் இது தொடர்பிலான இந்திய நெருக்குதல் மேலும் அதிகரிக்கலாம்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .