2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

இந்திய குடியரசுத் தலைவராகும் பிரணாப் முகர்ஜியின் முன்னுள்ள சவால்கள்

A.P.Mathan   / 2012 ஜூலை 23 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் 13ஆவது குடியரசுத் தலைவராகியிருக்கிறார் பிரணாப் முகர்ஜி. நிதி அமைச்சராக இருந்த இவர் பழுத்த அரசியல்வாதி என்றால் மிகையாகாது. 7,13,763 வாக்குகளைப் பெற்று தனக்கு அடுத்தபடியாக வந்த தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் பி.ஏ.சங்மாவை சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். பி.ஏ.சங்மா பெற்ற வாக்குகள் வெறும் 3,15,987 மட்டுமே. இந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒரு விநோதம் நடைபெற்றது. நாட்டின் மிகப் பெரும் மாநிலமான உத்தரபிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலயாம் சிங் - பிரணாப் முகர்ஜிக்கு போட்ட வாக்கே செல்லாது என்று இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்தது. அது மட்டுமின்றி கேரள மாநிலத்தில் நூற்றுக்கு நூறு சதவீத வாக்குகளை பிரணாப் முகர்ஜி பெற்றார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வடகிழக்கு மாநிலங்களில் பி.ஏ.சங்மாவிற்கு பெருமளவான வாக்குகள் கிடைக்காதது "மண்ணின் மைந்தர்" என்று பிரசாரம் செய்த அவருக்கு பின்னடைவாகியது. இதுவரை நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தல்களில் பதிவான மொத்த வாக்குகளில் ஏழு லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற குடியரசுத் தலைவர்களான பக்ருதீன் அலி அஹமது, கியானி ஜெயில் சிங், ஆர்.வெங்கட்ராமன் போன்றோர் வரிசையில் பிரணாப் முகர்ஜியும் இப்போது சேர்ந்திருக்கிறார். இவர்கள் அனைவருமே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த குடியரசுத் தலைவர்கள் தவிர கே.ஆர்.நாராயணன், டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் ஆகிய இருவரும் ஒன்பது லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று இந்திய குடியரசுத் தலைவரானவர்கள். அதிலும் குறிப்பாக கே.ஆர் நாராயணன்தான் இதுவரை வெற்றி பெற்றவர்களில் அதிக வாக்குகள் அதாவது 9,56,290 வாக்குகளைப் பெற்று ராஷ்டிரபதி பவனுக்குச் சென்றவர். அதிக வாக்குகள் பெற்று நாட்டின் குடியரசுத் தலைவரானவர் என்ற பெருமை இன்னும் கே.ஆர் நாராயணன் வசமே இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் 9,22,884 வாக்குகளைப் பெற்று குடியரசுத்தலைவரானவர். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு முதன் முதலில் காங்கிரஸ் அல்லாத அரசாக மொரார்ஜி தேசாய் தலைமையில் 1977இல் ஜனதா அரசு மத்தியில் அமைந்தது. அப்போதுதான் நீலம் சஞ்சீவரெட்டி போட்டியின்றி ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். நாட்டின் உயர்ந்த பதவிக்கு போட்டியின்றி ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டதும் அதுதான் முதல் தடவை. அதில் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால் நீலம் சஞ்சீவ ரெட்டி உள்ளிட்ட 37 பேர் குடியரசுத் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களில் நீலம் சஞ்சீவ ரெட்டி தவிர மற்ற 36 பேரின் வேட்பு மனுக்களையும் தேர்தல் அதிகாரி தகுந்த காரணங்களுக்காக நிராகரித்தார். அதனால் நீலம் சஞ்சீவரெட்டி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.

ஆனால் அதற்கு முன்பு 1969இல் நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் "மனச்சாட்சி படி வாக்களியுங்கள்" என்ற பிரசாரமும் முதன் முதலில் மேற்கொள்ளப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் அதிகார பூர்வ வேட்பாளராக நீலம் சஞ்சீவரெட்டி போட்டியிட்டார். அவரை எதிர்த்து இந்திரா காந்தியின் ஆதரவுடன் சுயேட்சையாக வி.வி.கிரி களத்தில் குதித்தார். குடியரசுத் தலைவருக்கு அப்போதிருந்த வாக்குகள் அடிப்படையில் ஒருவர் வெற்றியடைய 4,18,169 வாக்குகள் பெற வேண்டும். இதை "கோட்டா வாக்கு" என்பதுண்டு. அதாவது வெற்றி பெறத் தேவையான இலக்கு. ஆனால் இந்திரா காந்தி "மனச்சாட்சிப்படி வாக்களிக்கலாம்" என்று அறிவிக்க, அந்த குழப்பத்தால் நீலம் சஞ்சீவ ரெட்டி வெற்றி பெற முடியவில்லை. சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட வி.வி.கிரியும் முதல் வாக்கு எண்ணிக்கையிலேயே அந்த "கோட்டா வாக்கை" வாங்க முடியவில்லை. அதனால் இரண்டாவது நிலையிலுள்ள வாக்கு அடிப்படையில், போட்டியிட்ட ஒவ்வொரு வேட்பாளராக விலக்கிக் கொண்டே வந்த போது வி.வி.கிரி வெற்றி பெறுவதற்கான அந்த "கோட்டா" வாக்குகளைப் பெற்றார். அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. வி.வி.கிரிக்கும், நீலம் சஞ்சீவ ரெட்டிக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் வெறும் 14,650 மட்டுமே!

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு மாபெரும் அரசியல் புரட்சியை ஏற்படுத்திய குடியரசுத் தேர்தல் இது என்றே சொல்லலாம். இதன் பிறகு குடியரசு தலைவர் தேர்தல் வேட்பாளர்களுக்கு இடையே நெருங்கிய மோதல் வந்ததில்லை. பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்திலேயே குடியரசுத் தலைவர் வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அந்த வகையில், 5 லட்சம் முதல் 6.75 லட்சம் வரை வாக்குகளை வாங்கி வெற்றி பெற்ற குடியரசுத் தலைவர்கள் வரிசையில் முதல் குடியரசுத் தலைவரான டாக்டர் ராஜேந்திர பிரசாத், அடுத்து வந்த டாக்டர் ராதாகிருஷ்ணன், ஜாகீர் உசேன், டாக்டர் சங்கர் தயாள் சர்மா, ப்ரதீபா தேவி சிங் பட்டேல் ஆகியோரை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இதுவரை ஒரேயொரு குடியரசுத் தலைவர்தான் இருமுறை தேர்வு செய்யப்பட்டுள்ளார். அது இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக வந்த டாக்டர் ராஜேந்திரபிரசாத். இந்திய அரசியல் நிர்ணய சபை தலைவராகவும் இருந்தவர் ராஜேந்திரபிரசாத். அதேபோல் முதல் பெண் குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டவர் இப்போது விடைபெற்றுச் செல்லும் பிரதீபா பட்டேல்தான்!

இந்திய சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருந்த முஹமது இதயதுல்லாவே ஒருமுறை "ஆக்டிங்" குடியரசுத் தலைவராக இருந்திருக்கிறார். அது 1969இல் டாக்டர் ஷாக்கீர் ஹுஸைன் இறந்த காலத்தில்- அப்போது முதலில் துணை குடியரசுத் தலைவராக இருந்த வி.வி.கிரி குடியரசுத் தலைவராக உடனடியாக பொறுப்பேற்றார். பிறகு அவர் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டதால், இதயதுல்லாவே குடியரசுத் தலைவர் பொறுப்பையும் ஏற்றார்- அதுவும் 35 நாட்களுக்கு மட்டும்! இதன் பிறகு பக்ருதீன் அலி அஹமது குடியரசுத் தலைவர் பதவியில் இருக்கும் போது இறந்தார். அதனால் அப்போது பி.டி.ஜாட்டி ஐந்தரை மாதங்கள் இந்திய குடியரசுத் தலைவர் பொறுப்பில் இருந்தார். இவர்கள்தான் இந்திய குடியரசுத் தலைவர்கள் வரலாற்றில் "ஆக்டிங்" குடியரசுத் தலைவர்களாக இருந்தவர்கள்.

இதுவரை இந்தியாவின் குடியரசுத் தலைவர்களில் ஒரேயொரு மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேர் குடியரசுத் தலைவராக ஆகியிருக்கிறார்கள். அது தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். டாக்டர் ராதாகிருஷ்ணன், ஆர்.வெங்கட்ராமன், டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் ஆகியோர்தான் அந்த மூவர். அதேபோல் மாஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து இருமுறை குடியரசுத் தலைவர்கள் வந்திருக்கிறார்கள். ஒருமுறை தேர்தல் மூலம் பிரதீபா பட்டேல். இன்னொரு முறை "ஆக்டிங்" பொறுப்பில் இதயதுல்லா ஆனார். மற்றபடி, ஆந்திரா, பஞ்சாப், மத்திய பிரதேசம், ஒரிஸ்ஸா, டெல்லி, பீஹார் ஆகிய மாநிலங்களில் இருந்து தலா ஒருவர் மட்டுமே குடியரசுத் தலைவர்களாக வந்திருக்கிறார்கள். ஆனால், நாட்டின் நாடாளுமன்றத்திற்கு 80 எம்.பி.க்களை அனுப்பும் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் இருந்து இதுவரை யாரும் குடியரசுத் தலைவராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் மேற்கு வங்க மாநிலத்திலிருந்து முதன் முதலில் குடியரசுத் தலைவராகியிருக்கிறார் பிரணாப் முகர்ஜி. அதுவும் அவரது மாநிலத்தில் அதிக வாக்குகளை வைத்திருக்கும் மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பாணர்ஜி - கடைசி நிமிடத்தில் பிரணாப் முகர்ஜிக்கு வாக்களித்ததால் தன் மாநிலத்திலிருந்து அமோக வாக்குப் பெறும் அதிர்ஷ்டம் பிரணாப்பிற்கு கிடைத்தது. இல்லையென்றால் சொந்த மாநிலத்திலேயே குறைந்த வாக்குகள் வாங்கினார் என்ற அவப்பெயரை அவர் எடுக்க வேண்டிய நிர்பந்தம் உருவாகியிருக்கும்.

பிரணாப் முகர்ஜி - இந்திய அரசியல் நிர்ணய சபை விவாதங்களை கரைத்துக் குடித்தவர். ஆகவே அரசியல் சட்டத்தில் அவர் அத்துப்படி என்றே சொல்ல வேண்டும். பொதுவாக, குடியரசுத் தலைவர்கள் அனைவரும் இந்திய அரசியல் சட்டப்படி அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில் நடப்பவர்கள். ஆனால் சில நேரங்களில் பிரதமருடன் இந்திய குடியரசுத் தலைவர்கள் மோதல் போக்கை கடைப்பிடித்தது உண்டு. முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திரபிரசாத்திற்கும், பிரதமராக இருந்த நேருவிற்கும் இடையிலேயே "பீஹார் ஜமின்தாரி ஒழிப்பு மசோதா" கொண்டு வந்த போது கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அவருக்குப் பிறகு வந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் - பிரதமரை தட்டிக் கேட்தத் தயங்கியதில்லை. சீனா ஆக்கிரமிப்பின் போது பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேருவையே கடிந்து கொண்டார். வெளிநாட்டுச் சுற்றுப் பயணங்களின் போது பொதுவாக அரசு தரப்பில் எழுதிக் கொடுக்கப்படும் உரையை வாசிப்பதே குடியரசுத் தலைவர் கடைப்பிடிக்கும் மரபாக இருந்தது. அதை முதலில் மாற்றிக் காட்டியவர் டாக்டர் ராதாகிருஷ்ணன். குடியரசுத் தலைவர் பதவியில் முதன் முதலில் அரசியல் சட்டப்படி ஆட்சியமைக்க கோரும் அதிகாரத்தை சுதந்திரமாக பயன்படுத்தியவர் நீலம் சஞ்சீவ ரெட்டி என்ற பெயர் உண்டு. குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள், 1977இல் வந்த ஜனதா ஆட்சியின் பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய் ராஜினாமா செய்த போதும், புதிய பிரதமராக சரன்சிங்கை நியமித்த போதும், பிறகு அந்த நாடாளுமன்றத்தை கலைத்த போதும் நீலம் சஞ்சீவ ரெட்டிக்கு சவாலாக இருந்ததுண்டு. அதேநேரத்தில் பிரதமருக்கும், குடியரசுத் தலைவருக்கும் இடையேயான அதிகாரங்கள் பற்றிய சர்ச்சை எழுந்த போது, "குடியரசுத் தலைவருக்கு தகவல் பெறும் உரிமை இருக்கிறது" என்ற ஆணித்தரமான வாதத்தை எடுத்து வைத்தவர் நீலம் சஞ்சீவ ரெட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது கியானி ஜெயில் சிங் குடியரசுத் தலைவராக இருந்தார். தன் சொந்த பாதுகாவலர்களாலே இந்திரா காந்தி கொல்லப்பட்ட போது உடனடியாக அவரது மகன் ராஜீவ் காந்தியை பிரதமராக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஆனால் அதே ராஜீவ் காந்தி தபால்களை ரகசியமாக பிரித்துப் பார்க்கும் கெடுபிடியான ஷரத்துகள் அடங்கிய புதிய "தபால் தந்தி மசோதா" கொண்டு வந்த போது அதை கையெழுத்துப் போட மறுத்து திருப்பி அனுப்பி வைத்தார். ஜெயில்சிங்கின் இந்த நடவடிக்கை காங்கிரஸ்காரர்களை அப்போது திணற வைத்தது. தமிழகத்தைச் சேர்ந்த குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் காலத்தில்தான் கூட்டணி ஆட்சி முறை மத்தியில் தொடங்கியது. தொங்கு நாடாளுமன்றம் அமைந்தால் (யாருக்கும் பெரும்பான்மை இல்லாமல்), யாரை பிரதமராக அழைப்பது என்ற முடிவை எடுக்க வேண்டிய நிலையில் இருந்த முதல் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன்தான். அதேபோல் ஆட்சியில் இருந்த கட்சி அதன் பிறகு சந்தித்த தேர்தலில் தனிப்பெரும் பெரும்பான்மையுடன் (ஆட்சி அமைக்க தேவையான எம்.பி.க்கள்) வெற்றி பெறாமல், தனிப்பெரும் கட்சியாக மட்டும் வெற்றி பெற்று வந்தால் அந்த கட்சியை ஆட்சியமைக்க அழைக்க வேண்டுமா என்ற தர்மசங்கடம் ஏற்பட்டதும் இவர் காலத்தில்தான். அதுபோன்ற சூழ்நிலை, 1989 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஏற்பட்ட போது, தனிப்பெரும் கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராஜீவ் காந்திக்கு "நீங்கள் ஆட்சி அமைக்க உரிமை கோராதீர்கள்" என்று மறைமுகமாக ஆலோசனைகளை வழங்கினார் வெங்கட்ராமன். அதனால் ராஜீவ் காந்தியே அமைச்சரவை அமைக்க உரிமை கோரவில்லை. தனக்கு ஏற்படவிருந்த தர்மசங்கடத்திலிருந்து அன்று அவ்வாறு தப்பித்தார் குடியரசுத் தலைவர். அதே நேரத்தில், பிரதமருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டால், அதை  பத்திரிகை உலகிற்கு கசிய விடாமல் தங்களுக்குள் பேசித் தீர்த்துக் கொள்ளும் மரபை மேற்கொண்டிருந்தார் ஆர்.வெங்ட்ராமன். இவர் காலத்தில்தான் "தேசிய அரசாங்கம்" அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. அதற்கு முன்பு 1987இல் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது "கடுமையான ஷரத்துகளுடன்", "மானநஷ்ட ஈடு வழக்குப் போடும் மசோதா" வைக் கொண்டு வந்தார். பத்திரிகைகள் மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை கிளப்பின. அப்போது "பத்திரிகை அதிபர்கள் மற்றும் அது தொடர்பாக உள்ள மற்றவர்களையும் கலந்தாலோசித்து இந்த மசோதாவைக் கொண்டு வந்தால் நல்லது" என்று ஆலோசனை வழங்கி, அந்த மசோதாவை ஒத்தி வைக்க காரணமாக இருந்தவர் ஆர்.வெங்கட்ராமன்.

இவருக்குப் பிறகு வந்த குடியரசுத் தலைவர் டாக்டர் சங்கர்தயாள் சர்மா, "தேர்தலில் வெற்றி பெறும் தனிப்பெரும் கட்சியை ஆட்சி அமைக்க அழைக்கும்" மரபை ஏற்படுத்தினார். அதனால்தான் 1996இல் பிரதமராக பதவியேற்ற வாஜ்பாய் 13 நாட்களில் பதவியிழக்க வேண்டியதாகியது. ஏனென்றால் அவருக்கு "நிலையான ஆட்சி அமைக்க" மற்ற கட்சிகளின் ஆதரவு கிடைக்கவில்லை.

ஆனால் சர்மாவிற்கு பிறகு குடியரசுத் தலைவராக வந்த கே.ஆர்.நாராயணன் அந்த மரபை மாற்றினார். "தனிப்பெரும் கட்சியாக இருந்தால் மட்டும் போதாது. அந்தக் கட்சிக்கு ஆட்சி அமைக்கத் தேவையான எம்.பி.க்களின் ஆதரவு கடிதமும் இருக்க வேண்டும்" என்ற புதிய மரபை ஏற்படுத்தினார். அதாவது ஆட்சியமைக்க வரும் கட்சி நிலையான ஆட்சியை அமைக்கும் கட்சியாகவோ, அல்லது கூட்டணியாகவோ இருக்க வேண்டும் என்பது அவரது எண்ணம். 1996இலிருந்து 1998இற்குள் மூன்று பிரதமர்கள் (வாஜ்பாய், தேவகவுடா, ஐ.கே.குஜ்ரால்) மாறி மாறி பதவிக்கு வந்தார்கள். அதேபோல் 1996இலிருந்து 1999இற்குள் மூன்று நாடாளுமன்ற தேர்தல்கள் வந்தன. உடனடியாக தேர்தல் நடப்பதையும், அடிக்கடி ஆட்சிகள் கவிழ்வதையும் தடுக்கவே இப்படியொரு மரபைக் கொண்டு வந்தார் கே.ஆர்.நாராயணன். இதுதான் இன்றுவரை மத்தியில் ஆட்சி அமைக்க விரும்பும் கட்சியையோ அல்லது கூட்டணியையோ அழைக்கப் பயன்படுத்தும் அளவுகோலாக இருந்து வருகிறது. அரசியல் சட்டப்பிரிவு 356இன் கீழ் கவர்னரின் அறிக்கையுடன் எதற்கெடுத்தாலும் மாநில அரசை கலைக்க முடியும் என்று இருந்தது ஒருகாலம். அது குடியரசுத் தலைவராக நீலம் சஞ்சீவரெட்டி இருந்தவரையுள்ள காலம். அவருக்கு முன்பு இருந்த பி.டி.ஜாட்டி காலத்தில் மத்தியில் "நெருக்கடி நிலைக்குப் பிறகு" ஆட்சிக்கு வந்த மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா அரசு 9 மாநிலங்களில் இருந்த காங்கிரஸ் அரசுகளை முதலில் கலைத்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், 1980இல் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி அப்போது 9 மாநிலங்களில் இருந்த "காங்கிரஸ் அல்லாத அரசுகளை" கலைத்தது. இது நீலம் சஞ்சீவரெட்டி காலம். அரசியல் சட்டப்பிரிவு 356ஆவது பிரிவில் உள்ள "அதர்வைஸ்" கிளாஸை வைத்து கவர்னரின் அறிக்கை இல்லாமலேயே மாநில அரசைக் கலைக்கலாம் என்று இருந்தது ஒரு காலம். அது ஆர்.வெங்கட்ராமன் குடியரசுத் தலைவராக இருந்த காலம். தமிழகத்தில் இருந்த தி.மு.க. அரசு 1991இல் அவ்வாறு கலைக்கப்பட்டது. ஆனால் கவர்னர் அறிக்கை இருந்தாலும், உச்சநீதிமன்றம் எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் ஆட்சி கலைப்பு கோப்பையே திருப்பி அனுப்பியது கே.ஆர்.நாராயணன் காலம். 1997இல் உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்த கல்யாண்சிங் தலைமையிலான பா.ஜ.க. அரசை கலைக்க விரும்பிய கோப்பையும், 1998இல் ராப்ரி தேவி தலைமையிலான (ராஷ்ட்ரிய ஜனதா தளம்) பீஹார் மாநில அரசை கலைக்க விரும்பிய கோப்பையும் அவ்வாறு திருப்பி அனுப்பி புரட்சி செய்தார் குடியரசுத் தலைவராக இருந்த கே.ஆர்.நாராயணன். அதனால் அவருக்கு இரண்டாவது முறை குடியரசுத் தலைவராகும் வாய்ப்புக்கூட கிடைக்காமல் போனது.

விஞ்ஞானி என்று எதிர்பார்க்கப்பட்ட டாக்டர் அப்துல்கலாம் கூட அரசியல் சட்டப்படி தனக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி பிரதமர் மன்மோகன்சிங்குடன் மோதியிருக்கிறார். "எந்தெந்த பதவிகள் ஆதாயம் இல்லாத பதவிகள்" (சோனியா காந்திக்காக கொண்டு வந்த மசோதா) என்று கொண்டு வரப்பட்ட மசோதாவையே "திரும்பவும் பரிசீலனை செய்க" என்று திருப்பி அனுப்பியவர் அப்துல்கலாம். ஆனால் இவர்களுக்கு எல்லாம் மாறாக, இப்போது விடைபெற்றுள்ள குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டேல் மத்திய அரசுடனோ, பிரதமர் மன்மோகன்சிங்குடனோ எந்தவித மோதல் போக்கையும் கடைப்பிடிக்காமல் அமைதியாகவே தன் பதவிகாலத்தை கழித்து விட்டு விடைபெற்றுள்ளார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் 13ஆவது குடியரசுத் தலைவராக இம்மாதம் 25ஆம் திகதி பதவியேற்கிறார் பிரணாப் முகர்ஜி. அவர் முன் பல சவால்கள் உள்ளன. வருகின்ற 2014 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய இரு முக்கிய தேசிய கட்சிகளுமே மிகக்குறைந்த எம்.பி.சீட்டுகளையே பெறும் என்ற கருத்துக்கள் இப்போதே முன்னிலை வகிக்கின்றன. காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த விரும்புகிறது. பிரணாப் வெற்றி பெற்றதும் அவரை வாழ்த்தப் போன சோனியா காந்தி - ராகுல் காந்தியுடன் சென்றது இங்கே குறிப்பிடத்தக்கது. மத்தியில் கூட்டணி ஆட்சிதான் என்ற நிலைப்பாடு ஏறக்குறைய 23 வருடங்களாக நிலைத்து விட்டது. இன்னும் அதுதான் நிலைமை என்றே தெரிகிறது. ஆகவே எதிர்வரும் தேர்தலுக்குப் பிறகு குடியரசுத் தலைவரின் முக்கிய அதிகாரமான "பிரதமரை ஆட்சியமைக்க அழைக்கும் உரிமை"யை பிரயோகப்படுத்துவதில் சவாலை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் பிரணாப் முகர்ஜி இருக்கிறார். ராஷ்டிரபதி பவனில் நிலுவையில் உள்ள தூக்குத்தண்டனை கைதிகளின் கருணை மனுக்கள் இன்னொரு சவாலாக இருக்கும். ஏனென்றால், இதுவரையிருந்த டாக்டர் அப்துல்கலாமும் சரி, பிரதீபா பாட்டிலும் சரி அந்த மனுக்கள் மீது முடிவு எடுக்காமலேயே விடைபெற்று விட்டார்கள். இப்போது அவை பிரணாப் முகர்ஜியின் முன்பு வைக்கப்படும். அவற்றில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் மனுக்களும், பயங்கரவாதி அப்சல் குருவின் மனுவும் இருக்கிறது. ராஜீவ் கொலையாளிகளுக்கு இரக்கம் காட்டுவீர்களா என்ற கேள்விக்கு, "கருணை மனுக்கள் மீது அரசியல் சட்டப்படி முடிவு எடுப்பேன்" என்று தேர்தல் பிரசாரத்தின் போதே சொல்லியிருக்கிறார் பிரணாப் முகர்ஜி. ஆனாலும், கருணை மனுக்கள் மீது முடிவு எடுப்பது அவர் முன்பு இருக்கும் முக்கிய சவால்களில் ஒன்றாகவே இருக்கும். பிரதமர் மன்மோகன்சிங் ஏற்கனவே ஒருமுறை நிதியமைச்சராக பிரணாப் முகர்ஜி இருந்த போது அவரிடம் பணியாற்றியவர். ஆகவே பிரதீபா பட்டேலுக்கும், பிரதமர் மன்மோகன்சிங்கிற்கும் இடையே இருந்த சீரான உறவு பிரணாப் முகர்ஜியிடம் இருக்குமா என்ற கேள்விக்குறி பல குவார்ட்டர்ஸ்களிலும் எழுந்துள்ளது. அரசின் முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது, கருணை மனுக்கள் மீது முடிவு எடுப்பது, பிரதமரை அப்பாயின்மென்ட் பண்ணுவது, மாநில அரசுகளை கலைப்பது போன்ற குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்தான் அரசுக்கும், குடியரசுத் தலைவருக்கும் இடையே நெருடலை உருவாக்கும் விடயங்கள். புதிய குடியரசுத் தலைவராகப் போகும் பிரணாப் முகர்ஜி, வெறும் "ரப்பர் ஸ்டாம்பு" குடியரசுத் தலைவராக இருப்பதற்கான வாய்ப்புகள் மிகமிகக் குறைவு என்பதே அரசியல் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பு. அதற்கு ஏற்றார்போல், "என் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றுவேன்" என்று பிரதமர் கூறுவது போல், குடியரசுத் தலைவராக வெற்றி பெற்றதும் பிரணாப் முகர்ஜி அறிவித்திருக்கிறார் என்பது மிகவும் உன்னிப்பாக கவனிக்கத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .