2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

ரிஷாத் பதியுதீன் தண்டிக்கப்பட்டால் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா?

A.P.Mathan   / 2012 ஜூலை 30 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 18ஆம் திகதி மன்னாரில் இடம்பெற்ற முஸ்லிம் மீனவர்களின் ஆர்ப்பாட்டமும் அதனைத் தொடர்ந்து மன்னார் நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற குழப்ப நிலையும் இப்போது பாரிய பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் அந்நிகழ்வுகளை அடுத்து கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பெரும் சட்ட சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார். புதிய நிலைமையானது சம்பந்தப்பட்ட மீனவர்களின் பிரச்சினையை மூடி மறைத்துவிடுமா அல்லது திசை திருப்பிவிடுமா என்றும் எண்ணத் தோன்றுகிறது.

அமைச்சர் பதியுதீன் - மன்னார்; நீதிவானை தொலைபேசி மூலம் மிரட்டியதாகக் கூறி இலங்கை சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்கள் சில தினங்களுக்கு முன்னர் கொழும்பில் ஆர்ப்பாட்டம் செய்தனர். அதேவேளை சிரேஷ்ட சட்டத்தரணிகள் சிலர் அமைச்சருக்கு எதிராக வழக்கொன்றையும் தாக்கல் செய்துள்ளனர்.

இதற்கிடையில் அம்பாறை மாவட்டத்தில் சட்டத்தரணிகள் அமைச்சருக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளனர். எடுத்த எடுப்பில் பார்க்கும் போது அவர்கள் இன ரீதியாக பிரச்சினையை அணுகி அமைச்சருக்கு சாதகமாக கருத்து வெளியிட்டு இருப்பதாக தோற்றமளித்தாலும் அவர்கள் மிக முக்கியமானதோர் கருத்தையும் வெளியிட்டு இருந்தனர். இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினர் அமைச்சருக்கு எதிரான குற்றச்சாட்டை மட்டுமே கருத்தில் கொண்டுள்ளனர் என்றும் அமைச்சருடைய கருத்தை கேட்க முற்படவில்லை என்றும் அம்பாறை சட்டத்தரணிகள் கூறியிருந்தனர்.

இவை அனைத்தும் ஏற்கனவே ஊடகங்களில் வெளியானவையாகும். அமைச்சருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஏற்கனவே நீதிமன்றத்துக்குச் சென்றுள்ளதால் இவற்றுக்கு அப்பால் சென்று அக் குற்றச்சாட்டுகளைப் பற்றி அலசுவது பத்திரிகையாளர்களுக்கு பொருத்தமாகாது.

அந்த விடயங்கள் ஆராயப்பட்டு அமைச்சர் சரியா அல்லது சட்டத்தரணிகளின் குற்றச்சாட்டுகள் சரியா என்பதை நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டிய விடயமாகும். உண்மையிலேயே அமைச்சர் - நீதிபதியை மிரட்டியிருந்தால் அது பாரதூரமான குற்றம் என்பதை எவராலும் மறுக்க முடியாது.

ஆனால் அவர் தண்டிக்கப்பட்டாலும் சம்பந்தப்பட்ட மீனவர்களின் பிரச்சினை தீரப் போவதில்லை. அவர்கள் கடந்த 18ஆம் திகதி ஆர்ப்பாட்டம் நடத்திய இடம் சரியா?, பிழையா? என்பதும் அன்று இடம்பெற்ற சம்பவங்களைப் பற்றி எவர் கூறுவது உண்மை என்பதும் சர்ச்சைக்குரியதாக இருந்தாலும் அன்று சிலர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கட்டிடங்களில் சிலவற்றை தாக்கியிருப்பதை எவரும் மறுக்கவில்லை.

அதேபோல் சம்பந்தப்பட்ட மீனவர்கள் உட்பட பலர் 1990ஆம் ஆண்டு தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தினரால் மன்னாரில் அவர்களின் சொந்த இடங்களில் இருந்து விரட்டப்பட்டதும் உண்மையே. அவர்கள் தாம் முன்னர் அனுபவித்த உரிமைகளையே கேட்கின்றார்கள். ஜூலை 19ஆம் திகதி ஆங்கில பத்திரிகை ஒன்றில் வெளியாகியுள்ள செய்தியொன்றின்படி மன்னார் மாஜிஸ்திரேட் நீதிவானும் சில தினங்களுக்கு முன்னர் இந்த முஸ்லிம் மீனவர்களுக்கு சாதகமாகவே பணிப்புரை வழங்கியுள்ளார்.

மன்னாரில் இருந்து மட்டுமல்ல, வட மாகாணத்தில் அனைத்து பிரதேசங்களில் இருந்தும் எவ்வித நியாயமும் இல்லாமல் 1990அம் ஆண்டு புலிகளால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டார்கள். அவர்கள் வெளியேற்றப்பட்டதையோ அல்லது வெளியேற்றப்பட்ட முறையையோ தமிழ் சமூகமும் எற்றுக் கொள்ளவில்லை. புலிகளும் கூட பின்னர் இந்த வெளியேற்றத்தைப் பற்றி கவலை தெரிவித்தனர்.

2002ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் திகதி வட்டக்கச்சியில் நடைபெற்ற புலிகளின் தலைவர் பிரபாகரன் கலந்து கொண்ட பிரசித்திபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதும் முஸ்லிம்களை வடக்கில் இருந்து வெளியேற்றியதையிட்டு புலிகளின் ஆலோசகராகவிருந்த கலாநிதி அன்டன் பாலசிங்கம் கவலை தெரிவித்தார்.

அதற்கு நான்கு நாட்களுக்குப் பின்னர் பிரபாகரனின் அழைப்பின் பேரில் கிளிநொச்சிக்குச் சென்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அப்போதைய துறைமுக கப்பல்துறை அமைச்சருமான ரவூப் ஹக்கீமுடன் புலிகள் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு வெளியிடப்பட்ட கூட்டறிக்கையிலும்; விரட்டப்பட்ட முஸ்லிம்கள் மீள குடியமர்த்தப்படுவர் என கூறப்பட்டிருந்தது. ஆனால் அது நடைபெறவில்லை.

அதுவரை காலமும் வட பகுதி முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்காக அரசாங்கம் புலிகளை குறை கூறிக் கொண்டு இருந்த போதிலும் புலிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையிலான போர் முடிவடைந்து மூனறாண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும்; இன்னமும் அப்பிரச்சினைகள் தீர்ந்த பாடில்லை.

இந்தப் பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதியின் தலையீட்டிலும் அமைச்சர்கள் மட்டத்திலும், அதிகாரிகள் மட்டத்திலும் எத்தனையோ பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. பல சந்தர்ப்பங்களில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பிணக்குகளில் தலையிட வேண்டிய நிலையும் ஏற்பட்டதுண்டு. சிலர் நீதிமன்றத் துணையையும் நாடினர்.

எனவே மன்னாரில் இப்போது எழுந்துள்ள பிரச்சினையானது பாரியதோர் பிரச்சினையின் சிறு வெளிப்பாடு மட்டுமே. எனவே இன்று மன்னார் பிரச்சினையை சமாளித்துவிட்டாலும் அல்லது வேறு பிரச்சினைகள் அதனை மூடி மறைத்துக் கொண்டாலும் அதுபோன்ற பிரச்சினைகள் அடிக்கடி ஆங்காங்கே தலை காட்டும் சாத்தியக்கூறுகள் அதிகம். அந்த அடிப்படை பிரச்சினைக்கு தான் தீர்வு காணப்பட வேண்டும்.

போர் காலத்தில் இடம்பெற்ற இடம்பெயர்வுகளினால் இவ்வாறான பிரச்சினைகளை எதிர்நோக்கியிருப்பது முஸ்லிம்கள் மட்டுமல்ல. வடக்கில் அதி உயர் பாதுகாப்பு வலயங்களுக்காக பாதுகப்புப் படையினரால் சுவீகரிக்கப்பட்ட தமிழர்களுக்கு சொந்தமான காணி;களிலும் பல இன்னமும் அவற்றின் உரிமையாளர்களுக்கு வழங்கப்படவில்லை.

ஆனால் அவர்கள் திரும்பி வரும் விடயத்தில் அவர்களுக்கும் படையினருக்கும் இடையே தான் பிரச்சினைகள் ஏற்பட்டால் ஏற்படுகின்றன. கவலைக்குரிய விடயம் என்னவென்றால் இடம்பெயர்ந்த அல்லது விரட்டப்பட்ட முஸ்லிம்கள் திரும்பி வரும்போது சிலவேளைகளில் தமிழ் மக்களுடன் பிரச்சினைகள் ஏற்படுவதே.

இடம்பெயர்ந்த மக்கள் தமிழர்களாக இருந்தாலும் முஸ்லிம்களாக இருந்தாலும் தத்தமது சொந்த இடங்களுக்குச் செல்வதற்கான அவர்களது உரிமையை எவராலும் மறுக்க முடியாது. அதேவேளை மீள்குடியேற்றத்தின் பின்னர் அவர்கள் அப்பகுதிகளில் ஏற்கனவே வாழும் மக்களுடனேயே வாழ்நாள் முழுதும் வாழ வேண்டும். அவர்களது சந்ததியினரும் அனேகமாக அங்கேயே வாழ்வர். எனவே மீள்குடியேற்றத்தின் போது இன சௌஜனயம் பாதுகாக்கப்படுவதும் முக்கியமாகும்.

  Comments - 0

  • aranejjan Saturday, 04 August 2012 07:54 AM

    நியாயமான கருத்து. இரண்டு சமூகங்களும் இதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் முஸ்லிம் , தமிழ் மக்களுக்கான நிரந்தர விடிவு கிடைக்கும்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .