2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

வடக்கில் தமிழ் கட்சிகளின் வளர்ச்சியானது அரசாங்கத்திற்கே சாதகமானது

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 04 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீண்ட காலத்திற்குப் பின்னர் வடக்கில் கொந்தளிப்பு நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 27 மற்றும் 28ஆம் திகதிகளில் யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் மாணவர்களுக்கும் பாதுகாப்புத் தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட முறுகல் நிலையை அடுத்தே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

நவம்பர் 27 என்பது தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் மாவீரர் தினத்தை அனுஷ்டித்த நாளாகும். இம்முறையும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் அந்த மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க முற்பட்டமையே மோதல் நிலைக்கு காரணமாகியது என்பது தான் உண்மை. சிலர் இதனை மறுக்கலாம். ஆனால் அது தான் உண்மை.

மாணவர்கள் போரின் போது உயிரிழந்த தமது உறவினர்களை நினைவுகூர முற்பட்டார்கள் என்றும் அது தவறில்லை என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியிருந்தார். வேறு சிலர் பாதுகாப்புத் தரப்பினர் கார்த்திகை தீபமேற்ற முற்பட்டவர்களையும் தடுத்ததாக கூறியிருந்தனர். இரண்டும் உண்மையாக இருக்கலாம். ஆனால் நவம்பர் 27ஆம் திகதி என்பது புலிகளுக்குரிய தினமாகும். மாணவர்கள் புலிகளையே நினைவு கூர்ந்தார்கள். அத்தோடு உறவினர்களையும் நினைவு கூர்ந்து இருப்பார்கள்.

நவம்பர் 27ஆம் திகதி என்பது போரின்போது உயிரிழந்த சாதாரண மக்களுக்காகவோ அல்லது தமிழீழ லட்சியத்திற்காக உயிர் தியாகம் செய்த ஏனையவர்களுக்காகவோ குறிக்கப்பட்ட நாள் அல்ல. அது பாதுகாப்புத் தரப்பினரோடு ஏற்பட்ட மோதலின்போது காயமடைந்து, அதனால் பின்னர் உயிரிழந்த முதலாவது புலி உறுப்பினர் ஷங்கரின் நினைவாக புலிகளால் மாவீரர் நாளாக பிரகடனப்படுத்தப்பட்ட நாளாகும்.

தமிழீழ லட்சியத்திற்காக உயிர் தியாகம் செய்த முதலாவது நபர் உரும்பிராய் சிவகுமாரனாகும். ஆனால் ஷங்கர் உயிர் நீத்த நாளையே புலிகள் மாவீரர் நாளாக பிரகடனப் படுத்தினர். எனவே இது பிரதானமாக புலிகளை நினைவு கூரும் நாளாகும். எனவே மக்கள் நவம்பர் 27ஆம் திகதி போரின் போது உயிரிழந்த தமது உறவினர்களையே நினைவு கூர்ந்தார்களேயொழிய புலிகளை நினைவு கூரவில்லை என்று கூற முற்படுவது சரியானதல்ல. மாணவர்கள் மீதான பாதுகாப்புத் துறையினரின் தாக்குதல் நியாயமற்றது என்று கூறுவதற்காகவே சிலர்; அவ்வாறு கூறுகிறார்கள். ஆனால், அதன் மூலம் புலிகளை நினைவு கூருவது பிழையென அவர்களும் ஏற்றுக் கொள்கிறார்கள் போலும்.

அதைவிட ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனின் வாதம் அர்த்தபூர்வமானதாகும். தெற்கில் கிளர்ச்சியில் ஈடுபட்ட மக்கள் விடுதலை முன்னணிக்கு அந்தக் கிளர்ச்சியின்போது உயிரிழந்த தமது சகாக்களை தமது தலைவர் ரோஹண விஜேவீர கொல்லப்பட்ட நவம்பர் 13ஆம் திகதி நினைவு கூர முடியும் என்றால், வடக்கில் கிளர்ச்சியின்போது கொல்லப்பட்ட கிளர்ச்சிக்காரர்களை வட பகுதி மக்கள் நினைவு கூருவதில் என்ன தவறு இருக்கிறது என மனோ கேட்கிறார்.

மக்கள் விடுதலை முன்னணி ஆயுத போராட்டத்தை கைவிட்டுள்ளது என்றும் அவர்களது போராட்ட வடிவம் மட்டுமே பிரச்சினையாக இருந்தது என்றும் அவர்களது லட்சியம் சோஷலிஸம் என்பதால் அது பிரச்சினையாகாது என்றும் ஆனால் புலிகளின் போராட்ட வடிவம் மட்டுமன்றி அவர்களது லட்சியமான தமிழீழமும் பிரச்சினையாக இருப்பதால் அவ்வியக்கத்தின் வளர்ச்சிக்கு ஏதுவாகும் எந்தச் செயற்பாட்டையும் அனுமதிக்க முடியாது என்றும் அரசாங்க தரப்பு கூறலாம். ஆனால், மக்கள் விடுதலை முன்னணியும் எதிர்க்காலத்தில் மீண்டும் ஆயதமேந்தி கிளர்ந்தெழாது என்று எவராலும் உத்தரவாதமளிக்க முடியாது.

எவ்வாறாயினும் எவராவது புலிகளின் மாவீரர் நாளை அனுஷ்டிப்பதை பாதுகாப்புத் துறையினர் பொறுத்துக் கொண்டு இருப்பார்கள் என்று எதிர்ப்பார்ப்பதும் புத்திசாலித்தனமல்ல. நாம் சரியென்றாலும் பிழையென்றாலும் அவர்களின் பதில் அடக்குமுறையாகத் தான் இருக்கும். ஏனெனில் அவர்கள் புலிகளுடன் போரிட்டு மூன்றரை ஆன்டுகள் மட்டுமே கடந்துள்ளன. அதேவேளை அவர்கள் வெலிக்கடை சிறையில் சிங்களக் கைதிகளையே எவ்வாறு நடத்தினார்கள் என்பதும் எல்லோரும் அறிந்த விடயமாகும். எதனையும் பலத்தை பாவித்து அடக்கலாம் என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் இருக்கிறது.

புலிகளின் தலைமைத்துவம் அழிக்கப்பட்டதன் பின்னர் இம்முறையே இவ்வளவு வெளிப்படையாக வடக்கு, கிழக்கில் புலிகளின் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. வடக்கு, கிழக்கு பகுதிகளில் சில இடங்களில் புலிக்கொடி ஏற்றப்பட்டு இருந்ததாக செய்திகள் கூறின. வேறு சில இடங்களில் இத் தினத்தையொட்டி துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு இருந்தன. இலங்கையில் மட்டுமன்றி தமிழகத்திலும் சில இடங்களில் இத்தினம் அனுஷ்டிக்கப்பட்டு இருந்தது. அது தொடர்பாக இந்தியாவிலும் விசாரணையொன்றுக்கு உத்தரவிப்பட்டுள்ளதாகவும் செய்திகள் கூறின.

புலிகளின் தலைமை அழிக்கப்பட்டதன் பின்னர் தமிழ் ஊடகங்களும் இம்முறையே புலிகளின் மாவீரர் நாளுக்காக இவ்வளவு தைரியமாக தமது ஊடகங்களில் கூடுதலான இடத்தையும் நேரத்தையும் ஒதுக்கியிருந்தன. சில பத்திரிகைகளில் 28ஆம் திகதி முன் பக்க தலைப்பு செய்தியே இத் தினத்தைப் பற்றியதாகத் தான் இருந்தது. சில பத்திரிகைகள் அன்று இரண்டு மூன்று பக்கங்களை இந் நாளைய நிகழ்ச்சிகளை அறிக்கையிடுவதற்காக ஒதுக்கியிருந்தன.

புலிகளை போர்க்களத்தில் தோல்வியுறச் செய்தாலும் சித்தாந்த ரீதியாக அவர்கள் மீண்டும் நாட்டுக்குள் பலம் பெற்று வருகிறார்கள் எனக் கூறி புதிய அடக்குமுறை சட்டங்களையும் அடக்குமுறை நடவடிக்கைகளையும் அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் இந்த நிலைமையை பாவிக்கலாம். கடந்த காலங்களிலும் அரசாங்கத்தின் பல தலைவர்கள் இந்த வாதத்தை முன்வைத்தார்கள். வடக்கில் இராணுவ நடவடிக்கைகளை அதிகரிப்பதற்காகவும் இந்த நிலையை அரசாங்கம் உபயோகிக்கலாம்.

கடந்த மூன்றாண்டுகளில் அரசாங்கத்திற்கு எதிரான விமர்சனங்கள் படிப்படியாக அதிகரித்ததன் விளைவாகவே புலிகளுக்கான ஆதரவு இவ்வளவு வெளிப்படையாக காட்டப்பட்டு வருகிறது. அரசாங்கம் மட்டுமன்றி தமிழ் கட்சிகளும் இந்நிலையை விரும்பாமல் இருக்கலாம். ஏனெனில் புலிகளின் காலத்தில் தமிழ் கட்சிகளும் சுதந்திரமாக செயற்ட முடியாமல் இருந்தது.

அரசாங்கத்தின் செயற்பாடுகளே புலிகளின் சித்தாந்தத்தை வளர்க்கும் காரணிகளில் ஒன்றாக இருக்கிறது. குறிப்பாக இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு மற்றும் மனித உரிமைகள் ஆகிய விடயங்களில் அரசாங்கம் நடந்து கொண்ட முறை சர்வதேச ரீதியிலும் விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறது.

போர் நடந்த காலத்தில் இராணுவத் தீர்வு இனப் பிரச்சினைக்கு தீர்வாகாது என்றும் புலிகளை கட்டுப்படுத்துவதற்காகவே இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அத்தோடு அரசியல் தீர்வை தேடுவதற்காக சர்வகட்சி பிரதிநிதிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் ஐ.நா. சபையிடமும் கூறியது. பின்னர் பயங்கரவாதம் இருக்கும்போது அரசியல் தீர்வை செயற்படுத்த முடியாது என்றும் அதனை அழித்துவிட்டு அரசியல் தீர்வை செயற்படுத்தப் போவதாகவும் அரச தலைவர்கள் போரின் இறுதிக் கட்டத்தின்போது கூறினர்.

போர் முடிவடைந்த பின், ஜனாதிபதி தேர்தலில் மக்களிடம் மற்றுமொரு ஆணையை பெற்று அரசியல் தீர்வை செயற்படுத்துவதாக அரசாங்கம் கூறியது. அதற்கிடையே சர்வ கட்சி பிரதிநிதிகள் குழு தமது இறுதி அறிக்கையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்திருந்தது. ஆனால் அது காலக் கிரமத்தில் காணாமற்போய்விட்டது.

அதனை அடுத்து அரசாங்கம் 2010ஆம் ஆண்டு கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்தது. கடந்த வருடம் வெளியிடப்பட்ட அதன் அறிக்கை சர்வதேச ரீதியிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதைப் பற்றி அரசாங்கமும் பெருமையாக பேசுகிறது. ஆனால் அதில் கூறப்பட்ட அரசியல் தீர்வு செயலுருவம் பெறுமா என்பது பெரும் சந்தேகத்திற்குரிய விடயமாகவே இருக்கிறது. தமிழ்த் தேசிய கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தைகளும் உயிர்ப் பெறும் நிலையில் இல்லை. அதற்கிடையே 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தையும் ரத்துச் செய்ய வேண்டும் என பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவும் கூறி வருகின்றனர்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது உண்மை தான். கடந்த மூன்றாண்டுகளில் குறிப்பாக வடக்கில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டு இருப்பதும் உண்மையே. வடக்கு, கிழக்கு பகுதிகளில் மக்களுக்கு அவசரமாக தேவைப்படுவதும் அபிவிருத்தியே. ஆனால், தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்திப் பணிகளால் கேப்பாபிலவு போன்ற பகுதிகளில் நிலவும் நிலைமைகளை மூடி மறைக்கவும் முடியாது. தமிழ் அரசியல் கட்சிகளின் அரசியல் கோரிக்கைகளை புறக்கணிக்கவும் முடியாது.

தமிழ் மக்களுக்கான அரசியல் தலைமைக்காக ஏனைய தமிழ் கட்சிகளோடு புலிகளின் சித்தாந்தமும் போட்டியிட்டுக் கொண்டு இருக்கிறது. புலிகளின் சித்தாந்தம் இன்னமும் செயற்படுகிறது என்று கூறுவதில் அரசாங்கமும் அதனையே கூறுகிறது. அரசியல் தலைமைக்காக மக்கள் தெரிவுசெய்ய வேண்டியது புலிகளின் சித்தாந்தத்தையா அல்லது ஏனைய தமிழ் கட்சிகளையா என்பது அரசாங்கத்தினதும் அந்த அரசியல் கட்சிகளினதும் எதிர்க்கால நடவடிக்கைகளிலேயே தங்கியிருக்கிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X