2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

'நிர்வாண' 'கோவணம்'

Kanagaraj   / 2014 செப்டெம்பர் 22 , பி.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அழகன் கனகராஜ்)

உறுப்பறுந்து போனாலும் உள்ளம் கலங்கேன், செருப்பறுந்து போனதற்கா சிந்தை கலங்குவேன்? என்ற வரிகளுக்கு சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் முன்னிலையில்  கடந்த 16ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையில்  வைத்து, கலாசாரம் மற்றும் கலை அலுவல்கள் அமைச்சர் டி.பீ.ஏக்கநாயக்க,  அர்த்தம் கற்பித்துவிட்டார் என்றுதான் கூறவேண்டும்.

அரசாங்கம், இலங்கையை சீனாவுக்கு தாரைவார்த்து விட்டது என்று எதிரணிகள் குற்றஞ்சுமத்தி கொண்டிருக்கின்ற நிலையில், அமைச்சருக்கு டி.பீ ஏக்கநாயக்கவுக்;கு நிகழ்ந்தது ஒரு தற்செயலான சம்பவமாக இருந்தாலும் நாட்டின் எதிர்கால நிலைமையை அது புடம்போட்டு காட்டுவதாகவே அர்த்தம் கற்பிக்கவேண்டியுள்ளது.

சீனர்களின் ஆதிக்கம் இலங்கையில் இன்றுநேற்றல்ல 1405ஆம் ஆண்டிலிருந்தே இருக்கின்றது என்பது வரலாறாகும்.  சீன கடலோடியான அடமிரல் செங் ஹீ என்பவரே இலங்கைக்கு முதன் முதலாக வருகைதந்துள்ளார். பிரபலமான பட்டுப்பாதைக்கு மாற்றாக மேற்கு பசுபிக் மற்றும் இந்திய சமுத்திரங்கள் இடையே இலங்கைக்கான நேரடி கடற்பாதையை கண்டுபிடித்த முதலாவது கடலோடி இவர் என நம்பப்படுகின்றது.

1411இல் இலங்கைக்கான தனது இரண்டாவது வருகையின் போது செங் தெவிநுவரவிலிருந்த உபுல்வன் தேவாலயத்துக்கு சென்றுள்ளார். அங்கு அவர் 1000 தங்க கட்டிகள், 500 வெள்ளி கட்டிகள் மற்றும் பல வர்ணங்களிலான பட்டுத் துணிச் சுருள்கள், ஆபரணங்கள் பதித்த 4 சோடி பதாகைகள்; அன்பளிப்பு செய்துள்ளார்.

இந்த விஜயத்தின் போது, அவர் காலியில் ஒரு கற்றூனை நிறுவி, அந்தக் காலத்து பயணிகளால் பயன்படுத்தப்பட்ட சீன, தமிழ், பாரசீக மொழிகளில் தகவல்களை பொறித்தார். அவர் 27,800 பேருடன் 317 கப்பல்களில் இலங்கைக்கு வந்தார். இதுவே  உலகில் இதுவரை காணப்பட்ட கப்பல் தொடரணிகளில் ஆகவும் பெரியது என்பதெல்லாம் வரலாற்று சான்றாதாரங்களாகும்.

இவ்வாறான வரிசையில் வந்த சீனத்தேசத்துக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் நாட்டை தாரைவார்க்கப்பட்டுவிட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இங்கு  இடம்பெறுக்கின்ற சம்பவங்களும் அக்குற்றச்சாட்டுகளை அர்த்தப்படுத்துவதாகவே அமைந்துள்ளன.

உதாரணமாக 2012ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இரத்தினக்கற்கள் மற்றும் நகைகள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த 18 இலட்சம் ரூபாய் பெறுமதியான வைரக்கல்லை சீனப்பிரஜை திருடி விழுங்கி சம்பவம் இடம்பெற்றிருந்தது. அவர், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான இரு சரீரப்பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

விளக்கெண்ணெய்யை கண்களில் ஊற்றி விழித்திக்கும் வகையில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இந்த கண்காட்சி நடத்தப்பட்ட நிலையில், பெறுமதிமிக்க வைரக்கல் சீனப்பிரஜையால் திருடி விழுங்கப்பட்டது. இது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதனையே எடுத்துக்காட்டுகின்றது.

இலங்கையில் வடக்கு கடற்பரப்பில் சீனமீனவர்கள் அத்துமீறி நுழைந்து மீன்வளத்தை அழிப்பதாக வடமாகாண மீனவர்கள் குற்றஞ்சுமத்துகின்றனர். நுரைச்சோலை அனல் மின்நிலையத்திலிருந்து நாட்டின் மின்சார தொகுதிக்கு போதியளவான மின்சாரம் இணைக்கப்படுவதில்லை என்றும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

சீன ஜனாதிபதி நாட்டிற்கு வருகைதந்திருந்த நாளன்றே சுமார் 19 இலட்சம் ரூபாய் பெறுமதியான பறவைக்கூடுகளை கடத்துவதற்கு முயன்ற சீனப்பிரஜையொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதேவேளை, சீனாவில் இருந்து கொள்கலன் மூலம் கொழும்பு தேயிலை நிறுவனத்துக்கு  தேநீர்ப்பைக்கான பருத்தி நூல் என்று கொண்டு வரப்பட்ட 20 மில்லியன் ரூபாய் மதிக்கத்தக்க பாதணிகள் மற்றும் அழகுசாதன பொருட்கள் சுங்க அதிகாரிகளினால் அன்றையதினமே கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த சம்பவங்கள் யாவும் இலங்கையின் மீதான சீனாவின் ஆதிகத்தை கொஞ்சம் கொஞ்சமாக படம்பித்து காட்டிக்கொண்டிருக்கிறது. இவையெல்லாவற்றையும் மறைப்பது போல, சீன ஜனாதிபதி முன்னிலையில் நடைபெற்ற ஒப்பந்தங்கள் கைச்சாத்திட்ட வைபவத்தின் போது கலாசாரம் மற்றும் கலை அலுவல்கள் அமைச்சர் டி.பீ.ஏக்கநாயக்க அணிந்திருந்து அடிகள் இல்லாத பாதணி அனைவரின் கவனத்தை ஈர்த்துவிட்டது.

அதுமட்மன்றி அந்த அடிகள் இல்லாத சாப்பாத்து ஜோடியை இங்கிலாந்திலுள்ள நிறுவனமொன்று 1,000 மில்லியன் டொலர்களுக்கு (13,200 கோடி ரூபாய்) கேட்டுள்ளது என்றால் அதற்கு மௌசு அதிகரித்துவிட்டது எனலாம்.

செருப்பு முதலிய காலணிகள் எப்பொழுது மனிதர்கள் முதன் முதலில் அணியத் தொடங்கினர் என அறிவது கடினம். ஆனால், எகிப்தியர்கள் கி.மு. 3700 க்கும் முன்னரே காலணிகள் அணிந்தது தெரிகின்றது. 5,600 ஆண்டுகளுக்கு முன்னர் பயன்படுத்திய தோலால் ஆன காலணிகள் அர்மேனியக் குகையில் 2010இல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பழங்காலத்தில் 2000 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியர்களும், கிரேக்கர்களும் , ரோமானியர்களும் பல்வேறு வகை காலணிகள் அணிந்ததற்கு சிற்பங்களும் பிற தொல்லியல் சான்றுகளும் உள்ளன.

சீனாவில் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே மரம், துணியால் ஆன செருப்பு வகைகளை பயன்படுத்தினர். இத்தாலியில் ரோமானியர்களுக்கு முன்னமே அங்கிருந்த எற்றசுக்கன் மக்கள் கால் விரல் நுனிப்பக்கம் மேல்நோக்கி உயர்ந்து இருக்கும்படியான காலணிகள் அணிந்திருந்தனர். பழங்காலந் தொட்டே கால்களில் காப்பணியாக மட்டும் அணியாமல் ஒரு அழகு அணியாகவும் அணிந்து வந்துள்ளனர்.

மிக அண்மைக்காலம் வரை காலணிகள் விலங்குத் தோலால் செய்யப்பட்டன. ஒருசில மரத்தாலும் ஆனவை. ஆனால் அண்மைக் காலத்தில் தோல் மட்டுமன்றி, தோல் போன்ற பலவகையான செயற்கைப் பொருட்களாலும் பல முரட்டுத் துணிவகைகளாலும், நெகிழி, இறப்பர் போன்றவைகளாலும் செய்யப்படுகின்றன.

ஏழ்மையான நாடுகளில் பலர் எளிமையான காலணிகள் அணிந்தோ அல்லது அணியாமலோ இருந்தாலும், பல நாடுகளில் வாழ்வோருக்கு காலணிகள் இன்றியமையாத ஒரு தேவை ஆகும்.

அமெரிக்காவில் 1980களில் ஆண்டொன்றுக்கு 350 மில்லியன் காலணிகள் உற்பத்தி செய்தனர். இது தவிர ஐரோப்பா, ஜப்பான், இந்தியா, சீனா ஆகிய நாடுகளையும் பகுதிகளையும் எடுத்துக் கொண்டால் உலகில் பில்லியன் கணக்கில் காலணிகள் செய்து விற்கப்படுகின்றன. உலகப் பொருளியலில் (பொருள்முதலியலில்) பல பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புடைய தொழிலாகும்.

பல்வேறு வகைகளில் பாதணிகள் தயாரிக்கப்பட்டாலும் இங்கிலாந்தைச் சேர்ந்த பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இருவர் இணைந்து தானமாகப் பெற்ற தாய்ப்பாலினால் குழந்தைகளுக்கான ஒரு சோடி பாதணிகளை உருவாக்கியுள்ளனர்.

உலக தாய்ப்பால் தான தினத்தன்று தாயொருவரினால் வழங்கப்பட்ட தாய்ப்பாலைக் கொண்டு இங்கிலாந்து கிழக்கு சசெக்ஸ் பல்கலைக்கழக விரிவுரையாளர்களான நிக் கென்ட் மற்றும் டான்யா டீன் ஆகிய இருவரும் இணைந்தே பாலிலான பாதணிகளை உருவாக்கியுள்ளனர்.
ஏற்கெனவே தாய்பால் ஐஸ்கிரீம் மற்றும் தாய்ப்பால் ஆபரணங்கள் தயாரிக்கப்பட்ட நிலையிலேயே இந்த தாய்பால் பாதணிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, கின்னஸ் சாதனை படைக்கவேண்டும் என்பதற்காக சீனா றெபெய் மாகாணத்தைச்சேர்ந்த 51 வயதாக சாங்க் புக்ஸிங் 12 அங்குலம் நீளம் 8 அங்குலம் அகலம் 900 இறாத்தல் நிறையுடைய இரும்பிலான பாதணியை தயாரித்திருந்தார்.

அதனை அணிந்துகொண்டு 20 நிமிடங்கள் மட்டுமே அவரால் தெருவில் நடக்கமுடிகின்றது. இவ்வாறு சாதணைகள் படைக்கப்பட்;டிருந்தாலும் தற்செயலாக அடிகள் கழன்றமையினால் அமைச்சர் டி.பீயின் பாதணை உலக கவனத்தையே ஈர்த்துவிட்டது.

என்னுடைய சப்பாத்து ஜோடியை, இங்கிலாந்திலுள்ள நிறுவனமொன்று 1,000 மில்லியன் டொலர்களுக்கு (13,200 கோடி ரூபாய்) கேட்கிறது. இது தொடர்பில், இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் எனக்கு அறிவித்தது. இருப்பினும், அவற்றை கொடுப்பதா, இல்லையா என்று நான் இன்னமும் தீர்மானிக்கவில்லை. இந்த சப்பாத்தை ஏலத்தில் விட்டால், நல்லதொரு வருமானத்தை ஈட்டலாம் என்றும் அது தொடர்பில் ஆராய்வதற்காக குழுவொன்றை நியமிக்கவுள்ளதாகவும் கலாசார அமைச்சர் டி.பீ.ஏக்கநாயக்க தெரிவித்திருந்தார்.

என்னுடைய சப்பாத்து ஜோடி மிகவும் பழையவை. சீன ஜனாதிபதியை சந்திக்கும் போது நான் அணிந்திருந்த வெள்ளை நிற ஆடைக்கு ஏற்ற வகையில் இந்த வெள்ளை நிற சப்பாத்து ஜோடியை அணிந்து சென்றேன்.

இவற்றை நான் நீண்ட காலமாக அணிந்திருக்கவில்லை. சீன ஜனாதிபதி வந்த போதே அணிந்தேன். அதனால், அவற்றின் அடிகள் கலன்றிருப்பதை நான் அறிந்திருக்கவில்லை. இதனால், அவற்றை அணிந்து சென்றேன். போகும் வழியில் அடிகள் கலன்றுவிட்டன. இருப்பினும், சப்பாத்தை மாற்றிக்கொண்டு செல்வதற்கான நேரம் போதாமையால் அப்படியே சென்றுவிட்டேன்.

ஒரு முறை டட்லி சேனாநாயக்காவுக்கும் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றதாம். அவர் டை, கோட் அணிந்து செல்லும் போது சப்பாத்து ஜோடியின் அடி கலன்றுவிட்டதாம். அவர் அவற்றை கலற்றி வீசிவிட்டுச் சென்றிருந்தாராம். இதெல்லாம் பெரிய விடயமே இல்லை என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

அமைச்சர் டி.பீ.ஏக்கநாயக்க என்ன விளக்கத்தை கொடுத்தாலும். நாங்கள் கிராமத்து மக்கள், மண்ணில் பாதங்களை பதித்து நிற்கின்ற மனிதர்கள். பாதணிகள் இரண்டுக்கும் நடந்ததை பற்றி நான் நினைக்கவில்லை. எனினும், படங்கள் வெளியாகியிருந்தன. எதுவும் நடக்கலாம் என்று கூறியிருப்பதே எதிர்காலத்தில் உண்மையாகபோகின்றது என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அதாவது, சீனாவுக்கு இலங்கைக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்டுள்ள நீண்டகால குத்தகை அடிப்படியிலான ஒப்பந்தங்களினால் சீனர்களின் ஆதிகம் நாட்டை சூறையாடிவிடும் ஆகையால்  நிர்வாண உலகில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன் என்பதை போல இலங்கையர்களான நாமெல்லாம் பாதணிகளில் அடிகள் இன்றி  வெறுகால்களுடன் இருக்கவேண்டிய நிலைமையே ஏற்படும் என்பதையே அமைச்சருடைய அடிகழற்ற பாதணி உணர்த்தியுள்ளது என்றாலும் அதிலும் தவறிருக்காது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X