2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சஜித்தின் போக்கும் தமிழர்களின் நிலையும்

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 28 , மு.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.சஞ்சயன்

எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள் முக்கியத்துவம் மிக்கதாக இருந்தாலும், அதனை பயன்படுத்திக்கொள்ளும் எண்ணம் இரண்டு பிரதான தரப்பினிடமும் இருப்பதாகத் தெரியவில்லை.

தமிழ் மக்களிடமிருந்து தம்மை அந்நியப்படும் கொள்கைகளை, ஆளும் கட்சியும் எதிரணியும் கடைப்பிடிக்க முனைவதாலேயே இந்தச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெற்று, தமிழ் மக்களின் வாக்குகளை கவரும் எண்ணம் இரண்டு பிரதான தரப்புக்களிடமும் இருந்தது. ஆனால், இப்போது பிரசார வியூகம், சிங்களத் தேசியவாத வாக்குகளை மையப்படுத்தியதாக மாறத் தொடங்கியுள்ளது.

தமிழர்களின் வாக்குகள், வெற்றிக்கு முக்கியத்துவமானவையாக இருந்தாலும், அதனை பெற்றுக்கொள்வதால், சிங்களத் தேசியவாத வாக்குகளை சிதறடித்துவிடுமோ என்ற கலக்கம் இரு தரப்புக்கும் ஏற்பட்டுள்ளது.

அது மட்டுமன்றி, இரண்டு தரப்பு பிரதான வேட்பாளர்கள் மத்தியிலும், செல்வாக்குச் செலுத்தும் சிங்களத் தேசியவாத சக்திகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெறுவதோ, தமிழ் மக்களின் வாக்குகளை பெறுவதோ விருப்பத்துக்குரியதொரு விடயமாகத் தெரியவில்லை.

அண்மைய நாட்களாக மீண்டும் விடுதலைப் புலிகள், போர்க்குற்ற விசாரணை, மேற்குலகச் சதி என்று பிரசார யுத்தம் தீவிரம் பெறத் தொடங்கியுள்ளது.

போர் முடிந்து ஐந்தரை வருடங்களாகியும் விடுதலைப் புலிகளை மட்டும் அரசாங்கத்தினாலோ, எதிரணியினாலோ மறக்கமுடியவில்லை. புலிகள் அழிக்கப்பட்டுவிட்டதாக பிரகடனப்படுத்தினாலும், அவர்களின் சாம்பலை வைத்து அரசியல் நடத்தும் போக்கே இன்னமும் நீடிக்கிறது.

லண்டனிலும் மலேசியாவிலும் புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சு நடத்திவிட்டு வந்ததாக ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மீது ஆரம்பத்தில் குற்றஞ்சாட்டியது அரசாங்கம்.

அந்த விவகாரம் பெரிதாக தெற்கில் எடுபடாத நிலையில், பொதுவேட்பாளராக மைத்திரிபால சிறிசேனே அறிவிக்கப்படுவதற்கு முதல் நாள், அல்ஜசீரா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலந்துரையாடல் நிகழ்ச்சியை வைத்து மீண்டும் எதிரணிக்கு புலிச்சாயம் பூச முற்பட்டுள்ளது.

எதிரணி வெற்றி பெற்றால், தமிழீழத்தை பெற்றுத்தருவதாக மேற்குலகுக்கு வாக்குறுதி அளித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவும் ஐ.தே.க. தலைவர்  ரணில் விக்கிரமசிங்கவும்; இரகசிய உடன்பாடு செய்திருப்பதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அரச தலைவர்களையும் படையினரையும் போர்க்குற்ற விசாரணைக்காக சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அரசாங்கம் புதிய பிரசாரத்தை தொடங்கியது.

இந்தச் சந்தர்ப்பத்தில் கடந்த திங்கட்கிழமை நாடாளுன்றத்தில் உரையாற்றிய ஐ.தே.க. பிரதித் தலைவர் சஜித் பிறேமதாச, எதிரணி ஆட்சிக்கு வந்தால், தமது திட்டம் ஈடேறுமென புலிகள் கனவு காணக்கூடாதென்று  எச்சரித்திருந்தார்.

வெளிநாடுகளிலுள்ள எஞ்சிய புலிகளையும் அழிப்போமென்றும் போர்க்குற்ற விசாரணைக்காக எந்தவொரு அரச தலைவரையோ, படையினரையோ சர்வதேச நீதிமன்றத்துக்கு இழுத்துச்செல்ல அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஐ.தே.க. வின் பிரதித் தலைவர் என்ற வகையில், தாம் இந்த வாக்குறுதியை அளிப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

இவ்வாறாக, புலிகள் அழிக்கப்பட்டுவிட்டாலும், அவர்களையும் அவர்களின் இலட்சியத்தையும் நினைவூட்டியே இலங்கையில் அரசியல் நடத்தப்படுகிறது. அதற்கு வெளியே சென்று அரசியல் நடத்த இலங்கையின் பிரதான அரசியல் சக்திகளால் முடியவில்லை என்பதே முக்கியமான விடயம். இரு தரப்புக்கும் இப்போது பிரதானமாகத் தெரிவது சிங்கள பௌத்த வாக்குகள் மட்டுமே. அதனை தக்கவைத்துக்கொண்டாலே,  ஏனைய வாக்குகளை வைத்து வெற்றி பெறலாமென்ற நிலை இருக்கிறது.

சிங்கள பௌத்த வாக்குகளை தக்கவைக்க வேண்டுமானால், மறுதரப்பை விடவும் புலிகள் மீதும் புலிகளின் இலட்சியம் மீதும் புலம்பெயர் தமிழர்கள்; மீதும் தாமே கூடுதல் வன்மம் கொண்டவர் என்று காட்டவேண்டும் என்றே பிரதான கட்சிகள் இரண்டும் நினைக்கின்றன.

அரச தரப்பு இப்போதும் போர் வெற்றியை முன்னிலைப்படுத்தி வெற்றியை எதிர்பார்த்து நிற்பதால், எதிரணியும் அதற்கு ஈடான அணுகுமுறையை கடைப்பிடிக்கவேண்டிய நிலையேற்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் விடயத்தில் ஐ.தே.க. கொண்டுள்ள கருத்து அல்லது சஜித் பிறேமதாச கொண்டுள்ள கருத்து என்பன எதுவாகவும் இருக்கலாம். ஆனால், அந்தக் கருத்து வெளியிடப்பட்ட நேரமும் சூழலும் சிக்கலுக்குரியவை. ஏனென்றால், இன்னும் ஒன்றரை மாதங்களுக்குள் ஜனாதிபதித் தேர்தல் நடக்கப்போகிறது.

இத்தகைய கட்டத்தில், தமிழ் வாக்காளர்களின் அதிருப்தியை சம்பாதித்துக்கொள்ளும் வகையிலேயே சஜித் பிறேமதாசவின் உரை அமைந்திருந்தது.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்த நிலைப்பாட்டையும் இதுவரை எடுக்கவில்லை. தேர்தல் நெருங்கும்போதே,  ஏதாவதொரு முடிவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுப்பதற்கு வாய்ப்புகள் தெரிகின்றன. அந்த முடிவு பெரும்பாலும் தமிழ் மக்கள் சுயமாக வாக்களிக்கலாம் என்பதை வலியுறுத்துவதாகவே இருக்கலாமென்ற கருத்து  வலுவாகவுள்ளது.

எந்தவொரு பிரதான கட்சியுமே தமிழர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் வாக்குறுதிகளை வழங்கத் தயாராக இல்லாத சூழலில், தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணும் அர்ப்பணிப்புடைய வேட்பாளர்கள் எவரும் அமையாத சூழலில், ஒதுங்கி நிற்கும் நிலைப்பாட்டை கூட்டமைப்பு எடுப்பதே மிகவும் வசதியானது.

ஆட்சி மாற்றமொன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்களும் விரும்புகின்றனர் என்பது வெளிப்படையான விடயம். இந்த முறையல்ல, கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலேயே வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் ஆட்சி மாற்றத்தின் அவசியத்தை வெளிப்படுத்தியிருந்தனர். அதற்குப் பின்னர் வடக்கு, கிழக்கில் நடத்தப்பட்ட தேர்தல்களிலும், அரச எதிர்ப்பு அலை வலுவாகவே வீசியது. இத்தகைய சூழலில் தமிழ் மக்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆட்சி மாற்றத்தை விரும்பினாலும், எதிரணியை ஆதரிப்பதற்கான அடிப்படை அம்சங்களை கவனத்திற்கொள்ளும் நிலையுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) ஆட்சி மாற்றத்தை விரும்புகிறது. ஆனால், அதற்காக மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கவில்லை.
இதுபோன்றுதான் ஆட்சிமாற்றத்தை விரும்பினாலும் கூட, எதிரணி வேட்பாளரை ஆதரிக்கமுடியாதொரு சூழல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் உள்ளது அல்லது அதற்கான சூழல் ஏற்படுத்தப்பட்டுவருகிறது என்பதே உண்மை.

இனப்பிரச்சினைத் தீர்வு உள்ளிட்ட எல்லாவற்றையும் ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிட்டு, தமிழ் மக்கள் தனியே ஆட்சிமாற்றத்தை மட்டும் மனதில் கொண்டு வாக்களிக்க முன்வந்தாலும் கூட, இப்போதைய நிலையில் மைத்திரிபால சிறிசேனவுக்கு அவர்கள் ஆதரவு அளிப்பார்களா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

அத்தகைய நிலையை ஏற்படுத்தியுள்ளவர் ஐ.தே.க. பிரதி தலைவர் சஜித் பிறேமதாசவே. 

வெளிநாடுகளில் எஞ்சியிருக்கும் புலிகளையும் அழிப்போமென்றும் போர்க்குற்ற விசாரணைக்காக அரசியல் தலைவர்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு இழுத்துச் செல்ல அனுமதிக்கமாட்டோம் என்றும் புலம்பெயர்ந்தோர் குறித்தும் சஜித் பிறேமதாச வெளியிட்டுள்ள கருத்துகள் சாதாரணமானவை அல்ல. பாரதூரமானவை.

விடுதலைப் புலிகள் இலங்கையில் இல்லை. வெளிநாடுகளில் கூட புலிகள் இயக்கம், ஒரு கட்டமைப்பாக இல்லை. ஆனால், அதையொரு பிரமாண்டமான பூதமாக காட்டி அரசாங்கம் பிழைப்பு நடத்த முயன்றுள்ளதைப்போலவே ஐ.தே.க. வும் செயற்பட முனைந்துள்ளது.
ஆனாலும், விடுதலைப் புலிகள் விவகாரம் என்பது தமிழர்களைப் பொறுத்தவரையில் ஓர் உணர்வுபூர்வமான விடயமாக கருதப்படுகிறது.
தென்னிலங்கையில் சிங்களத் தேசியவாதமும் போர் வெற்றியும் எந்தளவுக்கு சக்திவாய்ந்ததாக விளங்குகின்றதோ, அதுபோன்று தமிழ் மக்களிடம் விடுதலைப் புலிகள் விவகாரம், சக்திமிக்கதொன்று.

விடுதலைப் புலிகளால் எதையும் சாதிக்கமுடியுமா என்பதையெல்லாம் ஒதுக்கிவிட்டு, அதனை ஒடுக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளை தமிழ் மக்கள் தமக்கு எதிரான ஒரு நசுக்கலாகவே பார்க்கிறார்கள்.

அதுபோலவே, புலம்பெயர் தமிழர்களின் கனவு பிரிவினையே என்றும் அது ஒருபோதும் நிறைவேறாது என்றும் சஜித் பிறேமதாச குறிப்பிட்டிருந்தார். ஆனால், புலம்பெயர் சமூகம், இலங்கைத் தமிழர் அரசியலில் காத்திரமான பங்களிப்பை வழங்குகிறது என்பதை மறுக்கமுடியாது. இங்குள்ள வாக்காளர்களின் மீது ஏதோவொரு வகையில் செல்வாக்குச் செலுத்தும் ஆற்றலை புலம்பெயர் தமிழர்கள் கொண்டிருக்கிறார்கள் என்பதை மறுக்கமுடியாது.

புலம்பெயர் தமிழர்கள் - அவர்கள் பிரிவினையை ஆதரிப்போராயினும், எதிர்ப்போராயினும் ஒவ்வொரு தேர்தல்களின்போதும் செல்வாக்குச் செலுத்தி வந்துள்ளனர். இப்படியான நிலையில், ஜனாதிபதித் தேர்தலிலும் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியை அகற்றவேண்டுமென்ற ஒரே நோக்கத்துக்காக புலம்பெயர் தமிழர்களும், வெளிப்படையாக இல்லாவிடினும், மறைமுகமாகவேனும் பொதுவேட்பாளரை ஆதரிக்கும் வாய்ப்பொன்று இருந்தது. ஆனால், சஜித் பிறேமதாச தொடுத்துள்ள போர், அத்தகைய வாய்ப்புகளை இல்லாமல் செய்துவிடும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.

புலம்பெயர் தமிழர்களை அவர் எதிரணியின் பக்கத்திலிருந்து துரத்தும் கைங்கரியத்தைதான் அவர் செய்ய முயன்றுள்ளார். அதுபோலவே, போர்க்குற்றங்கள் விவகாரத்திலும் தமிழ் மக்கள் நியாயமானதொரு விசாரணையை எதிர்பார்க்கின்றனர். குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டுமென்றும் கருதுகின்றனர். ஆனால், படையினரையோ, அரச தலைவர்களையோ போர்க்குற்றங்களுக்காக சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்லவிடப் போவதில்லை என்றும் சஜித் பிறேமதாச கூறியிருக்கிறார். இதன் மூலம், சர்வதேச தலையீடுகளை அவர் நிராகரிக்கிறார் என்று கருதமுடியவில்லை.

போர்க்குற்றங்களை நிராகரிக்கிறார் - அதற்குத் தண்டனை விதிப்பதை எதிர்க்கிறார்- சம்பந்தப்பட்டவர்களை பாதுகாக்க முனைகிறார் என்றே கருதவைக்கிறது.

போர்க்குற்றங்கள் நிகழ்ந்துள்ளதா என்று உள்நாட்டிலேயே விசாரிப்போம், குற்றவாளிகளை தண்டிப்போம் என்று அவர் ஒரு வாக்குறுதியைக் கொடுத்திருந்தால் கூட, அது தமிழ் மக்களுக்கு திருப்தியளிக்குமொன்றாக இருந்திருக்கும்.

ஆனால் சஜித் பிறேமதாசவின் நிலைப்பாடு, மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கும் புதிதாக தாம் அமைக்கவுள்ள அரசாங்கத்துக்கும் இடையில் எந்த வேறுபாடும் இருக்காது என்பதை காட்டுவதாகவே அமைந்துள்ளது.

எந்தவொரு தேர்தலிலும் மக்கள் தமது தேவைகள், எண்ணங்களை பூர்த்திசெய்யும் வேட்பாளரையே ஆதரிக்க முற்படுவர்.
தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், அவர்களின் பிரச்சினையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து, மைத்திரிபால சிறிசேன தன்னை வேறுபட்ட ஒருவராக இதுவரை காட்டியவரில்லை.

பொதுவேட்பாளரான பின்னரும் கூட, அவரால் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டக்கூடிய கருத்துக்களை வெளியிடமுடியவில்லை. இது அவரும் சிங்களப் பெரும்பான்மையின மக்களின் வாக்குகளை நம்பியிருப்பதையே காட்டுகிறது. இனவாதச் சிந்தனையும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு மதிப்பளிக்காத போக்கும் எதிரணி வேட்பாளரின் வெற்றிக்கு, முக்கிய சவாலாக இருக்கும்.

பொதுவாக தமிழ் மக்கள், ஜனாதிபதி தேர்தல்களில் வாக்களிப்பது மிகமிகக் குறைவு. அந்தப் பதவியின் மீதுள்ள வெறுப்பு, தமக்கு சாதகமற்ற  ஒருவரை எதற்காக தெரிவுசெய்ய வேண்டுமென்ற எண்ணம், தமிழர் தரப்புக்கு அது எட்டாக்கனி என்ற கருத்து ஆகியனவே அதற்குக் காரணம்.

இந்தத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ எதிர்ப்பு அலை தான், தமிழ் மக்களின் வாக்குகளை தம்பக்கம் இழுப்பதற்கு எதிரணிக்கு உள்ள ஒரே பக்கபலம்.
ஆனால்,  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை போலவேதான், எதிரணியும் நடந்துகொள்ளும் என்பதை தேர்தலுக்கு முன்னரே நிரூபித்துக்கொண்டால், தமிழ் வாக்காளர்கள் எதற்கு வீண் வம்பு என்று ஒதுங்கிக்கொள்வார்கள்.

2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது, ஜனநாயக கட்சித் தலைவர் சரத் பொன்சேகாவை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரித்திருந்தும் கூட, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் சரத் பொன்சேகாவுக்கும் இடையில் பெரிய வேறுபாட்டை அவர்களால் உணரமுடியவில்லை. அதனால் அரச எதிர்ப்பு அலை இருந்தும், கூட்டமைப்பின் ஆதரவைப் பெற்றிருந்தும், சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக பெருமளவில் வாக்களிக்க  தமிழ் மக்கள் முன்வரவில்லை. அதுபோலவே, இந்த முறையும் மைத்திரியா – மஹிந்தவா என்ற கேள்வி வரும்போது, இருவருமே ஒரே மாதிரியானவர்கள் என்ற வகையில்  ஏற்படுத்தப்படும் கருத்துக்கள் அத்தகைய நிலையொன்றுக்கே இட்டுச்செல்லும்.

தமிழ் மக்கள் எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதி வாக்களிக்க வெளியே வராமல் இருக்க முடிவு செய்துவிட்டால், 2005ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஏற்பட்ட அதே கதி கூட மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஏற்படலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .