2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மைத்திரி; ராஜபக்ஷக்களின் முடிவு(?)

A.P.Mathan   / 2014 நவம்பர் 27 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மைத்திரிபால சிறிசேனவின் புதிய அவதாரம் ராஜபக்ஷ சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சி பற்றிய பேச்சுக்களை ஆரம்பித்து வைத்திருக்கிறது. பெரும்  ஆதரவோடும் ஆரவாரங்களோடும் ஆரம்பித்து கோலொச்சிய சாம்ராஜ்யங்களின்  சோகமான முடிவுகளை உலகம் கண்டிருக்கிறது. இலங்கைக்கும் அப்படியான வரலாற்றுப் பக்கங்கள் உண்டு. அது, ஒவ்வொரு ஆரம்பத்திற்கும் ஒரு முடிவு உண்டு என்ற உலக நியதியின் அடிப்படைகளில் தோற்றம் பெறும் எண்ணம். ராஜபக்ஷ சாம்ராஜ்யத்திற்கும் அந்த நியதி பொருந்தும் என்று பலரும் நம்புகிறார்கள்.
 
உலக நியதி, எதிர்பார்ப்புக்களைத் தாண்டி இலங்கையின் பெரும்பான்மை அரசியல் சூழல் நம்பிக்கைக்கும், நம்பிக்கையீனத்துக்கும் மத்தியில் உழன்றுகொண்டிருக்கிறது. ஏனெனில், ராஜபக்ஷக்களின் மீது நம்பிக்கை கொண்டிருந்தவர்களில் குறிப்பிடத்தக்களவானவர்கள் நம்பிக்கையீனத்தின் பக்கம் சென்று விட்டார்கள். அதுபோல, புதிய அவதார புருஷராக வந்திருக்கும் மைத்திரிபால சிறிசேனவின் மீதும் நம்பிக்கையும், நம்பிக்கையீனமும் சம அளவில் ஏற்பட்டிருக்கிறது.
 
ஆனால், இலங்கையின் தமிழ்- முஸ்லிம் சிறுபான்மைச் சமூகங்கள் தென்னிலங்கையின் அரசியல் பரபரப்புக்களை ரசிக்கும் மனநிலையில் இருந்துதான் பெரும்பாலும் அணுகுகின்றன. ஏனெனில், இலங்கையின் ஆட்சி மாற்றங்களோ, அதிகார கைமாறல்களோ சிறுபான்மை மக்களுக்கான தீர்வினை என்றைக்குமே வழங்கி வந்தவை அல்ல. மாறாக அவை பௌத்த சிங்கள வாதத்தின் பிரதிபலிப்புக்களாக இருந்து அல்லற்படுத்தியே வந்திருக்கின்றன. இந்த புரிதலுடனேயே வரும் ஜனாதிபதித் தேர்தலை சிறுபான்மைச் சமூகங்கள் அணுகின்றன.
 
அதற்காக, ஆட்சி மாற்றம் குறித்த தங்களின் எதிர்பார்ப்பை தமிழ்- முஸ்லிம் மக்கள் கொண்டிருக்கவில்லை என்று அர்த்தமல்ல. ஆட்சி மாற்றம் பற்றிய கனவு தென்னிலங்கை மக்களிடமும், எதிரணிக் கட்சிகளிடம் எவ்வளவுக்கு இருக்கின்றதோ, அதேயளவுக்கு தமிழ்- முஸ்லிம் மக்களிடமும் இருக்கின்றது. அது பெரும்பாலும் பழியுணர்வின் பிரகாரம் தோற்றம் பெற்றிருக்கின்றது.
 
குறிப்பாக, தமிழ் மக்கள் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் மீது கொண்டிருக்கும் எரிச்சலும், பழியுணர்வும் இறுதி மோதலின் வலிகளிலிருந்தும், அதன் பின்னரான அடாவடித்தனங்களினாலும் தொடர்வன. நண்பருடனான உரையாடலொன்றின் போது அவர் குறிப்பிட்டார் “மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக இன்னொரு ராஜபக்ஷவான கோத்தபாயவே கூட போட்டியிட்டாலும், கோத்தபாயவுக்கு வாக்களிக்கும் பெரும் மனநிலையை தமிழ் மக்கள் கொண்டிருக்கிறார்கள். அதுதான், சரத் பொன்சேகாவை ஆதரித்து வாக்களித்த தருணத்திலும் இருந்தது” என்று.  நண்பரின் கூற்றையும் அவ்வளவுக்கு நிராகரிக்க முடியாது.
 
மைத்திரியின் வருகை!
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முக்கிய அமைச்சர், சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளராக 13 ஆண்டுகள் செயற்பட்டவர் என்று மைத்திரிபால சிறிசேனவுக்கான பெரும் அடையாளம் உண்டு. அதுவும், 2009 மே மாதத்தின் நடுப்பகுதியில் போர் வெற்றி பற்றிய அறிவித்தலை விடுப்பதற்காக வெளிநாடு சென்றிருந்த மஹிந்த ராஜபக்ஷ இடைநடுவில் திருப்பிய போது விமான நிலையத்தில் வைத்து அவரின் கரம் பற்றி அழைத்து வந்த முதல் நபர் மைத்திரிபால சிறிசேன.
 
47 ஆண்டுகால சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையோடும், அடிப்படை பௌத்த சிங்கள வாத அரசியல் பின்னணியோடும் புதிய பயணத்தை ஆரம்பித்திருக்கும் மைத்திரிபால சிறிசேனவின் வருகை குறைத்து மதிப்பிடக்கூடிய ஒன்றல்ல. அதுவும், தென்னிலங்கை மக்களிடம் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் மீதான அதிருப்தி பெருமளவில் ஏற்பட்டிருக்கின்ற நிலையில், அது பெரும் மாற்றத்தை ஏற்படுத்த வல்லது. ஆனால், அந்த மாற்றத்தை சாத்தியமாக்கிக் காட்டுவதென்பது ஏழு கடல்களையும், ஏழு மலைகளையும் தாண்டிச் சென்று பெற வேண்டிய ஒன்றுக்கு ஒப்பானது.
 
நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையையும், நிறைவேற்று அதிகாரத்தையும் தன்னிடம் கொண்டிருக்கும் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து போட்டியிடும் மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான எதிரணியையும், சிவில் சமூக அமைப்புக்களையும், பண்டாரநாயக்கா குடும்பத்தின் அபிமானத்தையும், பௌத்த சிங்களவாத குழுக்கள் சிலவற்றின் ஆதரவையும் பெற்றிருக்கின்றார். இந்த ஆதரவை தென்னிலங்கையில் வாக்குகளாக மாற்றுவதற்கு அவருக்கு 45க்கும் குறைவான நாட்களே இருக்கின்றன.
 
“அரச சேவையின் ஊடாக வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை மக்களுக்கு சேவையாற்றுவதற்காகவும், மக்கள் நலன்களுக்காகவும் பயன்படுத்த வேண்டும். செல்வத்தை சேகரிப்பதற்கும், மக்களை ஒடுக்குவதற்கும், ஊழல் மோசடிகளில் ஈடுபடுவதற்கும் அதிகாரங்களை பயன்படுத்தப்படக் கூடாது. அரசாங்க சேவையில் உள்ள சகலரும் மக்கள் சேவைக்காக அர்ப்பணிப்புடனும், தைரியத்துடனும் சேவையாற்றுவதற்கு முன்வர வேண்டும். சுகாதார அமைச்சர் என்ற வகையில் கடந்த ஐந்தரை ஆண்டுகளாக அமைச்சு ஊழியர்களுடன் இணைந்து செயற்பட்ட விதம் குறித்து திருப்தியடைகிறேன். நாட்டு மக்களுக்காக இன்று போல் எதிர்காலத்திலும் இதனைவிட அர்ப்பணிப்புடன் சேவையாற்றுவதற்கு நான் அர்ப்பணிப்புடன் இருக்கிறேன்” என்று கடந்த 21ஆம் திகதி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் சுகாதார அமைச்சராக மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்ட இறுதிக் கூட்டத்தில் வெளியிட்ட கருத்து இது.
 
இந்தக் கருத்தை வெளியிட்டு மூன்று மணித்தியாலங்களின் பின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து எதிரணியின் பொது வேட்பாளராக தான் போட்டியிடவுள்ளதாக மைத்திரிபால சிறிசேன அறித்தார். அந்த அறிவிப்பை வெளியிடும் போது அவரின் வலது பக்கத்தில் முன்னாள் ஜனாதிபதியும், பண்டாரநாயக்க குடும்ப வாரிசுமான சந்திரிக்கா குமாரதுங்க இருந்து புன்னதைத்துக் கொண்டிருந்தார்.
 
மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் மைத்திரிபால சிறிசேனவினால் வெளியிடப்பட்ட பொது வேட்பாளர் அறிவிப்பை தென்னிலங்கையும், கிழக்கிலங்கையும் வெடி கொழுத்திக் கொண்டாடியது. இலங்கை வெற்றிகளையும், வெற்றி அறிவித்தலையும், வெற்றி அறிகுறிகளையும் வெடி கொழுத்திக் கொண்டாடும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றது. அதுவும், ஒருவகை வெற்றி வாதத்தின் மனநிலை. அந்த வாதம் மைத்திரிபால சிறிசேனவின் புதிய பணயத்தின் போதும் வெளிப்பட்டது.
 
மைத்திரி பொன்சேகா அல்ல!
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த வெற்றி நாயகர்களாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்புச்செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, இராணுவத்தளபதி சரத் பொன்சேகா உள்ளிட்ட மூவரையும் இலங்கை கொண்டாடியது. அது பெரும் வெற்றிவாதத்தின் குறியீடுகளாக மூவரையும் நிறுத்தவும் வைத்தது. ஆனால், அந்த வெற்றி பங்களிப்பிலிருந்து சரத் பொன்சேகாவை அவருக்கு ஏற்பட்ட ஜனாதிபதி பதவி மீதான ஆசை இல்லாமற் செய்தது. இன்றைக்கு அவர் நிறைவேற்று அதிகாரத்தினால் எல்லாமும் புடுங்கப்பட்ட பாம்பாக இருக்கின்றார்.
 
சரத் பொன்சேகாவுக்கு ஏற்பட்ட நிலை, வரும் ஏப்ரல் மாதத்தில் எதிரணியின் புதிய பொது வேட்பாளருக்கும் ஏற்படும் என்ற கருத்தை, மைத்திரிபால சிறிசேன தன்னுடைய அறிவிப்பை வெளியிடுவதற்கு சுமார் 4 மணித்தியாலங்களின் முன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் ஊடகவியலாளர் மாநாட்டின் போது இறுதிய முகத்தோடு அமைச்சர் விமல் வீரவங்ஸ வெளியிட்டார்.
 
மைத்திரிபால சிறிசேனவை எந்தவொரு தருணத்திலும் சரத் பொன்சேகாவோடு ஒப்பிட வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில், இராணுவ தரத்திலிருந்து இலங்கை அரசியலின் உண்மையான உள்நெருக்கடிகளை சரியாக கையாளாமல் வந்து நேரடியாக விழுந்து மாட்டிக் கொண்டு விழிபிதுங்கியவர் சரத் பொன்சேகா. ஆனால், மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் நீண்ட வரலாற்றைக் கொண்டது. நெளிவு சுளிவுகளை அறிந்தது. தன்னுடைய பல்லும் பிடுங்கப்படும் வாய்ப்புக்கள் பற்றியும் நிறையவே ஆராய்ந்த பின்னரேயே புதிய பயணத்தினை நம்பிகையோடு ஆரம்பித்திருக்கிறார்.
 
ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன தோற்றாலும், அவரை சரத் பொன்சேகாவைக் கையாண்டது போல ராஜபக்ஷக்களினால் கையாள்வது இயலாத காரியமாக இருக்கும். ஏனெனில், இன்னும் இரண்டு வருடங்களில் வரப்போகும் பாராளுமன்றத் தேர்தலில் அதன் விளைவுகள் பிரதிபலித்துவிடும்.
 
அதுபோக, சரத் பொன்சேகா மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து வெளியே வந்த போது அரசாங்கம்/ராஜபக்ஷக்கள் இருந்த மனநிலை அவ்வளவு சிக்கலானது அல்ல. தன்னுடைய வெற்றி பற்றிய சந்தேகங்களை அது வெளிப்படுத்தியிருக்கவில்லை. ஆனால், மைத்திரிபால சிறிசேனவின் வெளியேற்றம் என்பது மஹிந்த ராஜபக்ஷவையே புலம்ப வைத்திருக்கின்றது. அது என்ன மாதிரியாக என்றால், “முதல்நாள் இரவு என்னோடு முட்டை அப்பம் சாப்பிட்டவர்கள் இன்றைக்கு எதிரணி சென்று சூழ்ச்சி செய்கின்றார்கள். அரசாங்கத்தை விட்டு வெளியேறிவர்களின் ஃபைல்கள் என்னிடத்தில் உள்ளன. ஆனால், அவற்றை நான் பயன்படுத்தப் போவதில்லை” என்று.
 
மைத்திரிபால சிறிசேனவின் முடிவு ராஜபக்ஷக்களை அதிகமாக அச்சப்பட வைத்திருக்கின்றது. அது, பதற்றமான சூழலில் தாம் இருக்கின்றோம் என்று உணர வைத்திருக்கிறது. தெளிவான மனநிலையோடு எதிராளியை எதிர்கொள்வது பற்றிய மனச்சிக்கலை அது தோற்றுவித்திருக்கிறது. அதுதான், இவ்வாறான கருத்துக்களை வெளியிட வைத்திருக்கிறது.
 
இலங்கையில் தன்னுடைய அரசாங்கமே நீதியமான சுதந்திரமான ஆட்சியை வழங்குகின்றது என்று தொடர்ச்சியாக கூறிவரும் மஹிந்த ராஜபக்ஷ, தன்னுடைய அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களாக இருந்தவர்கள் தொடர்பில் ஃபைல்கள் இருப்பதாக தெரிவிப்பது, அரசாங்கம் ஊழல்கள்- மோசடிகள் நிறைந்தது என்பதை ஒப்புக் கொள்வதற்கு சமமானது. பதற்றமான மனநிலையே இவ்வாறான கருத்துக்களை வெளியிட வைக்கும். அதுபோக, அரசாங்கம் தன்னுடைய அச்சுறுத்தலை வெளிப்படையாக முன்வைக்கும் அளவுக்கு நிலைமை படுமோசமாகியிருக்கின்றது என்பது ராஜபக்ஷக்களின் தோல்வி பற்றிய அறிவித்தலை உண்மையிலேயே விடுக்க வைத்திருக்கின்றதோ என்று கொள்ள வேண்டியிருக்கின்றது.
 
சாம்ராஜ்யத்தின் முடிவு!
சாம்ராஜ்யங்களின் முடிவு ஒரு நிகழ்வினாலோ நபரினாலோ தீர்மானிக்கப்படுபவை அல்ல. சாம்ராஜ்யங்கள் தோற்றம் பெறுகின்ற போதே அவற்றின் வீழ்ச்சிக்கான புள்ளிகளும் தன்னுடைய பயணத்தை பல்வேறு தளங்களில் ஆரம்பித்து வருகின்றன. அந்தப் புள்ளிகள் ஒன்றிணையும் புள்ளியே சாம்ராஜ்யங்களின் வீழ்ச்சிக்கான காரணமாக முன்னிறுத்தப்படுகின்றது. ஆனால், சாம்ராஜ்யங்களின் வீழ்ச்சி என்பது அவ்வளவு இலகுவாக சாத்தியமாவதில்லை. அதன் வீழ்ச்சி என்பது பெரும் அழிவுகளையும், மறக்க முடியாத வடுக்களையும் விதைத்துவிடுகின்றன.
 
ராஜபக்ஷ சாம்ராஜ்யத்துக்கு எதிராக ஒன்றினைந்த புள்ளிகளாக எதிர்க்கட்சிகளையும், ரணில் விக்ரமசிங்க, சந்திரிகா குமாரதுங்க, சோபித தேரர், அத்துரலிய ரத்ன தேரர், மங்கள சமரவீர என்ற தனி மனித ஆளுமைகளையும் கொள்ள முடியும். இந்தப் புள்ளிகள் எல்லாம் ஒன்றிணைந்தே ராஜபக்ஷ சாம்ராஜ்யத்துக்குள் உறக்க நிலையில் இருந்த மைத்திரிபால சிறிசேனவை தேடிப்பிடித்து பொது வேட்பாளராக்கியிருக்கின்றன. ‘மைத்திரி’ என்கிற புதிய போர்வாள் ராஜபக்ஷ சாம்ராஜ்யத்துக்கு எதிராக வெற்றியைப் பெறுமானால், அது, ராஜபக்ஷக்களின் அரசியலை இலங்கை வரலாற்றில் இருந்து ஒட்டுமொத்தமாக இல்லாமற் செய்துவிடும்.
 
ஆனால், தங்களுடைய சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சியை உணரும் நபர்கள் அதனைத் தக்க வைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும், ஆற்றலையும் வெளிப்படுத்துவர்கள். அது, அத்துமீறல்கள், அடாவடித்தனங்களாலும் நிறையும் வாய்ப்புக்களை உருவாக்கும். அதற்கான சாட்சிகளே இங்கு அதிகம். அப்படியான சூழலை  நாம் எதிர்கொள்ளப் போகின்றோமோ என்கிற அச்ச உணர்வும் மெல்ல மெல்ல மேலெழுந்து வருகின்றது.
 
இன்னொரு ஆரம்பம்!
தற்போதைய நிலையில் ஜனாதிபதித் தேர்தல் களம் பௌத்த சிங்கள வாக்குகளினால் பிரிந்திருப்பதை உணர முடிகின்றது. ஜனாதிபதி தேர்தலுக்காக மீதமுள்ள நாட்களில் அரசாங்கமும், எதிரணியும் எவ்வாறான அரசியல் முன்னெடுப்புக்களை அல்லது கோஷங்களை வைத்து சிங்கள மக்களை நோக்கி நகரப்போகின்றன என்பதே வெற்றி யாருக்கு என்ற முடிவுரையை எழுதும். ஏனெனில், புலி எதிர்ப்பையும், தமிழ் விரோத மனநிலையையும் இரண்டு தரப்பும் பலமாக முன்னிறுத்த ஆரம்பித்துவிட்டன. இப்படியான நிலையில், சிங்கள மக்களின் அடிப்படைப் பொருளாதார வாழ்வாதார சிக்கல்கள் பற்றி தெளிவூட்டல்களை எதிரணி எவ்வாறு  தமது வாக்குகளாக மாற்றப் போகின்றன என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அதில், வெற்றிபெற முடிந்தால் எதிரணி தன்னுடைய வெற்றிகனவின் இறுதி இலக்கை அடையலாம்.
 
மாறாக, கார்பட் வீதி அபிவிருத்தி, போர் வெற்றிக் கோஷங்களை சிங்கள மக்கள் மீண்டும் ஆதரிக்க ஆரம்பித்தால் பொது எதிரணியின் எழுச்சி வெற்றிக் கனியைத் தவற விடும். அது, எதிர்காலம் குறித்த கனவை சிலவேளை இல்லாமற்கூட செய்துவிடலாம். ஏனெனில், நிறைவேற்று அதிகாரம் என்பது இங்கு எதையும் சாத்தியமாக்கும் வல்லமை கொண்டது.
 
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஜனநாயக அரசியலுக்கு எவ்வளவு விரோதமானது என்பதை சிங்கள மக்களின் அதிகளமானவர்கள் உண்மையிலேயே உணர்ந்திருக்கவில்லை. அப்படியான நிலையில், நிறைவேற்று அதிகாரத்துக்கு எதிரான  நிலைப்பாடு வாக்குகளாக மாறும் என்று அவ்வளவுக்கு நம்ப முடியாது. மாறாக, அரசாங்கத்தின் மீதான மக்களின் அதிருப்தியே எதிரணியின் வாக்குகளாக மாறும் சாத்தியங்களைக் கொண்டிருக்கின்றது.
 
இவற்றையெல்லாம் தாண்டி எதிரணி வெற்றி வெற்று மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானால்? என்ற கேள்விக்குப் பின்னாலும் ஆயிரத்தெட்டுக் கேள்விகள் வருகின்றன. ஏனெனில், நிறைவேற்றுக்கு அதிகாரத்துக்கு எதிரான கோஷத்தோடு அதிகாரமேறிய யாருமே நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்த வரலாறு இல்லை.
 
அப்படியிருக்க, 100 நாட்களுக்குள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்கி, அதிகாரங்களை பாராளுமன்றத்திடம் கையாளிப்பேன் என்கிற மைத்திரிபால சிறிசேனவின் வாக்குகளில் நம்பிக்கை கொள்வது அவ்வளவுக்கு இலகுவானது அல்ல. ஆனால், ஆச்சரியங்கள் நிகழ்ந்து பாராளுமன்றத்திடம் அதிகாரங்கள் செல்லுமானால், நாடு தற்போது எதிர்கொண்டு வரும் சில சிக்கல்களை தீர்த்துக் கொள்ளும் வாய்ப்புக்கள் உருவாகும். ஆனால், அதற்கான ஆரம்பம் அவ்வளவுக்கு இலகுவானது அல்ல என்பதுதானே யதார்த்தம்!

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .