2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

டோவலின் எச்சரிக்கைகள்

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 05 , மு.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.சஞ்சயன்

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தருணத்தில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், கடந்த திங்கட்கிழமை இலங்கைக்கு தனது முதல் பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

இன்னும் ஒரு மாதத்தினுள் இலங்கைத்தீவு, ஜனாதிபதி தேர்தலை சந்திக்கப்போகின்ற சூழல் மற்றும் சீனாவின் இராணுவப் பிரசன்னம் அதிகரித்துள்ளமை குறித்த இந்தியாவின் கரிசனையும் கவலைகளும் அதிகரித்துள்ள சூழலிலேயே அவரது பயணம் இடம்பெற்றுள்ளது. இதனால், அரசியல் ரீதியாகவும் பாதுகாப்பு ரீதியாகவும் அஜித் டோவலின் இலங்கைப் பயணம் முக்கியத்துவமிக்கதாக பார்க்கப்பட்டது.

அவரது இந்தப் பயணத்தின் பிரதான நோக்கமானது காலியில் கடந்த முதலாம், இரண்டாம் திகதிகளில் நடைபெற்ற காலி கலந்துரையாடல் என்ற கடற்படையால் ஆண்டு தோறும் நடத்தப்படும் கடல் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்பதே. ஆனால், தனது இலங்கைக்கான இந்த முதல் பயணத்தை அரசியல் ரீதியான, பாதுகாப்பு ரீதியான இந்தியாவின் கரிசனைகள் குறித்த பேச்சுக்களை நடத்துவதற்கும் அஜித் டோவல் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் என்பதில் ஐயமில்லை.

இதற்கு முன்னர் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களாக பதவி வகித்தவர்களில் ஜே.என்.டிக்சிற், எம்.கே.நாராயணன், சிவ்சங்கர் மேனன் ஆகியோர் இலங்கைக்கு மிகவும் நெருக்கமானவர்களாக இருந்துள்ளனர்.

ஜே.ஆர்.காலத்தில் கொழும்பில் இந்தியத் தூதுவராக பணியாற்றிய காலத்திலிருந்து இலங்கையுடன் தொடர்புடையவராக இருந்தவர் ஜே.என்.டிக்சிற்.

விடுதலைப் புலிகளை அழிப்பதற்கான இலங்கையின் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு, இந்தியாவில் எழும் சவால்களை சமாளிப்பதற்காக அப்போதைய இந்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டிருந்த மூவரணியில் இடம்பெற்றிருந்த ஒருவரே முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன். அந்த வகையில்,  இலங்கை அரசாங்கத்துக்கு அவர் மிகவும் நெருக்கமானவர்.

அதுபோலவே, சிவ்சங்கர் மேனனும் இலங்கையில் போர் இடம்பெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில் இந்திய வெளிவிவகாரச் செயலராகவும் அதற்கு முன்னர், கொழும்பில் இந்தியத் தூதுவராகவும் பணியாற்றியவர். அப்போதிருந்த நெருக்கம், பின்னர் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்ட பின்னரும் தொடர்ந்தது.

இவர்கள் இந்தியாவின் தேசியப் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தவர்களாயினும், இலங்கை அரசுக்கு சாதகமாகவும் நடந்துகொண்டிருந்தனர். அத்துடன், இலங்கையுடன் முரண்பாடுகள் ஏற்படும் விடயங்களில், இவர்கள் நீக்குப்போக்காகவும் செயற்பட்டிருந்தனர்.
ஆனால், இப்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் முன்னெப்போதும் இலங்கை விவகாரங்களுடனோ, இலங்கை அரசாங்கத்துடனோ தொடர்புடையவர் அல்ல. ஐபீ எனப்படும் இந்தியாவின் உள்ளகப் புலனாய்வுப் பிரிவின் தலைவராக பணியாற்றி ஓய்வுபெற்றிருந்தவர். இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியே அவரை மீண்டும் இந்த முக்கிய பொறுப்புக்கு  கொண்டுவந்தார்.

தீவிர ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர் என்று எதிர்க்கட்சிகளால் விமர்சனம் செய்யப்படும் அஜித் டோவல், இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியின் மிக மிக நம்பிக்கைக்குரிய, வலதுகரமாக விளங்குகிறார். இந்தியப் பிரதமரை இயக்கும் பிரதான சக்தி இவரே என்று கூறப்படுகிறது.

இந்திய மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களை விடவும், இந்திய அரசாங்கத்தில் முக்கியத்துவம் மிக்கவராக அஜித் டோவல் விளங்குகிறார். உதாரணத்துக்கு, இலங்கையில் அமைச்சர்களை விடவும் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ எந்தளவுக்கு முக்கியத்துவம் மிக்கவராக இருக்கிறாராரோ, அதுபோலவே இந்தியாவில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் இருக்கிறார்.

சீனாவுடன் நெடுங்காலமாக இருந்துவரும் எல்லைப் பிரச்சினையை தீர்ப்பதற்காக இந்தியப் பிரதமரின் சிறப்புத் தூதராகவும் அஜித் டோவலே  நியமிக்கப்பட்டுள்ளார். சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் பயணத்திட்டம் குறித்த சில சிக்கல்கள் எழுந்தபோது, அவற்றை சுமுகமாக்குவதற்காக அஜித் டோவலையே பீஜிங்குக்கு  அனுப்பிவைத்திருந்தது இந்திய அரசாங்கம்.

நரேந்திரமோடி தலைமையிலான பாரதிய ஜனதாக் கட்சி அரசாங்கம் புதுடெல்லியில் ஆட்சிக்கு வந்த பின்னர், கடந்த ஏழு மாதங்களில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள முதல் இந்திய உயரதிகாரி அஜித் டோவலே.

புதிய அரசாங்கம் ஆட்சி அமைத்த பின்னர் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் அவ்வளவு பெரிய உயர்மட்டப் பயணங்களேதும் இடம்பெறவில்லை.

கடந்த ஒக்டோபர் மாதம் இந்திய பாதுகாப்புச் செயலர் ஆர்.கே.மாத்தூர் தலைமையிலான அதிகாரிகள் குழு,  கொழும்பு வந்திருந்தது. அதையடுத்து, இப்போது அஜித் டோவலின் பயணம் இடம்பெற்றிருக்கிறது. அமைச்சர்கள் மட்டத்திலான எந்தப் பயணமும் இதுவரை கொழும்புக்கு இடம்பெறவில்லை.

எனினும், முக்கியமானதொரு சூழலில், அஜித் டோவலின் பயணம் இடம்பெற்றுள்ளமையும் அவர் இங்கு நடத்திய பேச்சுக்கள் மற்றும் வெளியிட்ட கருத்துக்களும் மிக முக்கியமானவையாக கருதப்படுகின்றன.

பாதுகாப்பு ரீதியாக, அஜித் டோவலின் பயணம் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் இலங்கையின் கொழும்புத் துறைமுகத்தை பயன்படுத்த ஆரம்பித்ததே அதற்குக் காரணம்.

சீன நீர்மூழ்கிகள் கொழும்புத் துறைமுகத்தை பயன்படுத்த ஆரம்பித்திருப்பதை இந்தியா விரும்பவில்லை. ஆனாலும், அதனை முழுமையாக தடுக்கவும் இந்தியாவினால் முடியவில்லை.

முதலாவது சீன நீர்மூழ்கி கொழும்புத் துறைமுகத்துக்கு வந்த பின்னர், பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ புதுடெல்லிக்கு அழைக்கப்பட்டு, அவரிடம் இந்தியாவின் கவலை வெளியிடப்பட்டது.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் நேரடியாகவே, இலங்கையில் வெளிநாட்டு இராணுவத் தலையீடுகளையோ, நீர்மூழ்கிகள் தரிப்பதையோ இந்தியா விரும்பவில்லை என்று எடுத்துக் கூறியிருந்தார்.அதற்குப் பின்னர், மீண்டும் ஒக்டோபர் மாத இறுதியில் சீன நீர்மூழ்கி கொழும்புத் துறைமுகத்துக்கு வந்திருந்தது.

ஆரம்பத்தில் இந்தியா இது பற்றி வெளிப்படையாக பேசத் தயங்கினாலும், கடந்த வாரம் இந்திய நாடாளுமன்றத்தில் வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் சமர்ப்பித்த அறிக்கையொன்றில், சீன நீர்மூழ்கிகள் கொழும்பில் தரித்துநிற்பது குறித்து இலங்கை அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது என்று கூறியிருந்தார். அத்துடன்,  இந்தியாவின் நலன்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளமாட்டோம் என்று இலங்கை அரசாங்கம் உறுதியளித்துள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.

இலங்கை அரசாங்கத்தின் வாக்குறுதியை இந்தியா நம்புகிறதோ, இல்லையோ சீனாவை அது நம்பத் தயாராகவில்லை. சீனாவின் இராணுவப் பிரசன்னம் இந்தியப் பெருங்கடலில் அதிகரித்துவருவதை இந்தியா அவ்வளவு இலகுவாக எடுத்துக்கொள்ளவில்லை. இது இந்திய கடற்படைக்கு மிகப்பெரிய சவால் என்று இந்திய பாதுகாப்பு வல்லுநர்கள் பலரும் கூறுகின்றனர்.

கடந்த புதன்கிழமை இந்திய கடற்படைத்தளபதி அட்மிரல் ரொகான் டோவன் தொலைக்காட்சியொன்றுக்கு அளித்த பேட்டியிலும் இதை  உறுதிப்படுத்தியுள்ளார். ஆனாலும், இலங்கையில் சீனாவின் இராணுவத் தலையீடுகளுக்கு எதிராக இந்தியா வலுவாக குரல் கொடுக்கவில்லை என்ற கருத்து உள்ளது.

இந்தியா அவ்வாறு செயற்படாமைக்கு அதிகம் அழுத்தம் கொடுக்கப்பட்டால், இலங்கை சீனாவின் பக்கம் சார்ந்து விடக்கூடுமென்ற அச்சமே  காரணமென்று கூறப்படுகிறது. இந்திய அரசியல் தலைவர்களே இதனைக் கூறிவருகின்றனர். சீனாவின் இராணுவத் தலையீடுகள் இலங்கையில் அதிகரித்துள்ள சூழலில், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் இலங்கைக்கான தனது முதல் பயணத்தில் எத்தகைய கருத்தை வெளிப்படுத்தப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

அதுவும், சீனாவின் உயர்மட்ட கடற்படை அதிகாரிகளும் பங்கேற்கும் ஒரு மாநாட்டில், இந்தியா தரப்பில் அஜித் டோவல் வெளியிடவுள்ள கருத்து வலுவாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அஜித் டோவல் வெளிப்படையாக எதையும் கூறவில்லை. என்றாலும், மிகவும் ஆணித்தரமாக அவர் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தியப் பெருங்கடலின் மூலம் செழிப்பை எதிர்பார்க்கும் நாடுகள், இந்தியப் பெருங்கடல் அமைதிப் பிராந்தியமாக இருந்தாலே அது சாத்தியமாகுமென்று அஜித் டோவல் எடுத்துக் கூறியிருக்கிறார். இது சீனாவுக்கு அவர் வெளிப்படையாக விடுத்துள்ள செய்தி எனலாம்.

சீனாவே, பிரதானமாக இந்தியப் பெருங்கடலின் வழியான செழிப்பை எதிர்பார்க்கிறது. கடல்வழி பட்டுப்பாதையை உருவாக்கும் முயற்சியில் சீனாவே ஈடுபட்டுள்ளது. இந்தியப் பெருங்கடல் வழியான தனது விநியோகப்பாதையை பாதுகாப்பதற்கு சீனாவே அதிக கவனம் செலுத்திவருகிறது.

இந்தியப் பெருங்கடல் வழியாகவே சீனாவுக்கு பெருமளவு  எண்ணெய் மற்றும் உற்பத்தி மூலப் பொருட்கள் கிடைக்கின்றன. அந்த வழியில் தடங்கல் ஏற்பட்டுவிட்டால், உலகப் பொருளாதார பேரரசாக உருவெடுக்கும் சீனாவின் கனவு அப்படியே பொசுங்கிப்போகும் ஆபத்துள்ளது.

சீனா தனது படை வலிமையைக்கொண்டு இந்தியப் பெருங்கடல் வழி விநியோகப்பாதையை பாதுகாக்க முனைகிறது. அதற்காக, 18 நாடுகளில் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் கடற்படைத்தளங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக  அறிக்கையொன்று வெளியானது.

சீனா, தளங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ள இடங்களில் இலங்கையின் ஹம்பாந்தோட்டையும் ஒன்று எனக் கூறுகிறது அந்த அறிக்கை. ஆனால், அந்த அறிக்கை மிகத் துல்லியமானது அல்ல. அதிகாரபூர்வமற்ற வகையில் இணையத்தில் கசிந்த அந்த அறிக்கை. மிகைப்படுத்தப்பட்டது என்று சீன பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கேணல் ஜெங் யன்செங் கூறியிருந்தார். ஆனாலும், வெளிநாடுகளின் கடற்படைத்தளங்களை அமைக்கும் திட்டத்தை சீனா கொண்டுள்ளதா என்று அவரிடம் கேள்வி எழுப்பியபோது, தற்போது வெளிநாடுகளில் தளங்கள் இல்லையென்று மட்டுமே  அவர் பதில் கூறினார்.

அதாவது, எதிர்காலத்தில் தளங்களை அமைக்கும் திட்டமில்லையென்று கூற சீன பாதுகாப்பு அமைச்சு தயாராகவில்லை.
அதுபோலவே, வெளிநாடுகளில் தளங்களை அமைக்கும் திட்டமொன்றை சீனா கொண்டிருந்ததால்தான், சீன பாதுகாப்பு அமைச்சு கூறுவதுபோல, அந்த அறிக்கையின் மிகைப்படுத்தப்பட்ட ஒரு பிரதி இணையத்தில் கசியநேரிட்டது.

வெளிநாடுகளில் தளங்களை அமைப்பது மட்டுமன்றி, புதிய விமானந்தாங்கி கப்பல்களை கட்டுவதற்கும் சீனா திட்டமிட்டுள்ளது. இவற்றை இந்தியப் பெருங்கடலில் நிறுத்துவதே சீனாவின் திட்டம். அதன் மூலம் இந்தியப் பெருங்கடலின் 3 கடல்வழி விநியோகப்பாதைகளையும் பாதுகாக்க திட்டமிட்டுள்ளது சீனா.இதனை கருத்திற்கொண்டே சீனாவுக்கு மறைமுக எச்சரிக்கையை கொடுத்துள்ளார் அஜித் டோவல்.

இந்தியப் பெருங்கடலின் மூலம் தமது நாட்டை வளப்படுத்திக்கொள்ள நினைக்கும் நாடுகள், இந்தியப் பெருங்கடல் அமைதியாக இருந்தாலே அது சாத்தியமாகும் என்பதை நினைவிற்கொள்ள வேண்டுமென்று அவர் கூறியிருக்கிறார். அதாவது, சீனா தனது இராணுவத் தலையீடுகளை இந்தியப் பெருங்கடலில் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதே அவர் விடுத்த முதல் எச்சரிக்கை. அடுத்து, இரண்டாவதாக, இலங்கை அரசாங்கத்துக்கும் ஓர் எச்சரிக்கையைக் கொடுத்திருந்தார் அஜித் டோவல்.

1971ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள்  பொதுச்சபைக் கூட்டத்தில், இந்தியப் பெருங்கடலை அமைதி வலயமாக பேணவேண்டும் என்றும் வல்லாதிக்க  சக்திகள் இந்தப் பகுதியில் இராணுவத் தலையீடுகளை தவிர்த்துக்கொள்ள வேண்டுமென்றும் கோரி கொண்டுவந்த தீர்மானத்தை சுட்டிக்காட்டியிருந்தார் அஜித் டோவல். அந்த நிலைப்பாடு இன்றைக்கும் பொருந்துமென்று அவர் சுட்டிக்காட்டியது இந்தியப் பெருங்கடலில் சீனாவின் இராணுவத் தலையீட்டுக்கு இலங்கை துணை போகக்கூடாது என்பதையே குறிக்கிறது. அதாவது, இந்தியப் பெருங்கடலில் சீனாவின் இராணுவ விரிவாக்கத்துக்கு இலங்கையும் ஏதோவொரு வகையில் பங்களிக்கிறது என்பதை இந்தியா உறுதிசெய்கிறது.  எனவே, இந்தியப் பெருங்கடலின் அமைதியை குலைப்பதற்கு இலங்கை அரசாங்கம் துணைபோகாமல், தனது ஐ.நா. தீர்மான நிலைப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டுமென்று குறிப்பிட்டிருந்தார் அஜித் டோவல்.

இது இலங்கைக்கு கொடுக்கப்பட்ட ஒரு வலுவான செய்தியே. இந்தச் செய்தியின் உண்மை அர்த்தங்களை இலங்கை அரசாங்கமும் புரிந்துகொண்டிருக்கும். சீனாவும் புரிந்துகொண்டிருக்கும். இதையும் மீறி, இந்தியாவின் பாதுகாப்புக்கும் இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் இரு நாடுகளும் செயற்பட்டால், அதனை இந்தியா பொறுத்துக்கொள்ளாது. இதுவே அஜித் டோவலின் இலங்கைப் பயணத்தின் மூலம் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கைகள் எனலாம்..


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .