2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சூடுபிடித்துள்ள களம்!

Thipaan   / 2014 டிசெம்பர் 11 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்தேவி பின்னணியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மக்களை நோக்கி கைகளை அசைத்துக் கொண்டிருக்கும் படத்தையும், 'வரலாற்று சிறப்புமிக்க இந்த நாள் ஞாபகம் உள்ளதா?'  என்ற கேள்வியையும் இலங்கையின் அனைத்து தமிழ்ப் பத்திரிகைகளும் கடந்த திங்கட்கிழமை (டிசம்பர் 08, 2014) முதற்பக்கம் முழுவதுமாக தாங்கியிருந்தன.

அதேதினம், சிங்கள மற்றும் ஆங்கிலப் பத்திரிகைகள், போர் வெற்றி அறிவித்தலை வெளியிடுவதற்காக தான் மேற்கொண்டிருந்த வெளிநாட்டுப் பயணத்தை இடைநடுவில் கைவிட்டு மே 17, 2009இல் நாடு திரும்பிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மண்ணைத் தொட்டு வணங்;கும் படத்தையும், 'ஒன்றிணைந்த தேசம், பயங்கரவாதிகளிடமிருந்து நாடு மீட்பு, புலிகளின் கடைசி நிலப்பகுதியையும் இராணுவத்தினர் மீட்டனர்' உள்ளிட்ட மாதிரியான மேற்கோள் வாசகங்களையும் முதற்பக்கத்தில் தாங்கியிருந்தன.

இலங்கையின் ஏழாவது ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக் கோரப்பட்ட நாளில், தேசிய மற்றும் பிராந்தியப் பத்திரிகைகள் அனைத்தும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மேற்கண்ட விளம்பரங்களினால் முதற்பக்கத்தை நிறைத்திருந்தன. இப்படித்தான் இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரங்கள் ஜெகஜோதியாய் ஆரம்பித்திருக்கின்றன.

இந்த விளம்பரங்களுக்குப் பின்னாலுள்ள உளவியலைப் புரிந்து கொண்டாலே போதும், இலங்கையின் தேசியத் தேர்தல்கள் எவ்வாறான உணர்வுகளின் மீது கட்டமைக்கப்பட்டு வாக்குகள் பெறப்படுகின்றன என்று தெரிந்துவிடும். இப்படியான தேர்தல் பிரசாரங்களை ஆளும்கட்சி மாத்திரம் செய்யவில்லை. மாறாக எதிர்க்கட்சிகளும் இதையேதான் செய்கின்றன. இதுதான் நாம் கடந்து வந்த வரலாறு. அந்த வரலாறே இம்முறையும் ஜனாதிபதித் தேர்தலில் பிரதிபலிக்க ஆரம்பித்திருக்கின்றது.

போர் வெற்றியும் புலி எதிர்ப்புக் கோஷமும் தமிழர் விரோதப் போக்கும் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான உணர்வும் சிங்கள பௌத்த தேசிய அரசியலில் வாக்குகளை பெற உதவும் கவர்ச்சிகரமான கருவிகளாகின்றன. அதை, வடக்கு மேடைகளில் வந்து இனநல்லிணக்கம், சகோதரத்துவம் என்று முழங்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவோ, தன்னை சமாதான தேவதையாக முன்னிறுத்திய சந்திரிகா குமாரதுங்கவோ அல்லது ரணில் விக்ரமசிங்கவோ கைவிட்டதில்லை.

எனவே, இந்த நிலையைப் புரிந்து கொள்வது அவசியமாகின்றது. அந்தப் புரிதலோடு தமது அரசியல் குறித்த தூரநோக்குள்ள பார்வையை தமிழ் முஸ்லிம் சிறுபான்மை மக்கள் வெளிப்படுத்த வேண்டும். அதுதான், எதிர்கால நலன்களைப் பாதுகாக்கும்.

மறுபுறம், பொது எதிரணியின் முதலாவது உத்தியோகபூர்வ பிரசாரக் கூட்டம் மும்மணிகளின் ஆசிர்வாதத்தோடு கண்டியில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பித்தது. வரலாறு காணாத மக்கள் கூட்டத்தின் மத்தியில் நின்று பொது எதிரணியின் வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன, 'தான் வெற்றி பெற்றால் ஊழல் மோசடிகளை விசாரணை செய்வதற்கான விசேட ஆணைக்குழுவை நியமிப்பேன்' என்று முழங்கியிருக்கின்றார்.

பொது எதிரணி தோற்றம் பெற்ற போது அதன் ஆளுமை பற்றி அனைவருக்கும் சந்தேகம் இருந்தது. அது, மைத்திரிபால சிறிசேனவின் வருகை மற்றும் ஜாதிக ஹெல உறுமயவின் ஆதரவு என்பதோடு முழு வீச்சம் பெற்றிருக்கின்றது. கண்டிப் பிரசாரக் கூட்டத்தில் கூடிய மக்கள், வாகனங்களில் பணம் கொடுத்து அழைத்து வரப்பட்டவர்கள் அல்ல என்று செய்திகள் சொல்கின்றன. மக்கள் அவர்களாகவே இவ்வளவு எதிர்பார்ப்போடு திரண்டிருக்கிறார்கள். அது, எதிரணியின் தலைவர்களை இன்னமும் உற்சாகம் கொள்ள வைத்திருக்கின்றது.

பொது எதிரணியின் பிரதான கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவும் ஜனநாயகக் கட்சியின் பிரதித் தலைவர் ஜயந்த கெட்டகொடவும் கடந்த திங்கட்கிழமை அரசாங்கத்தோடு இணைந்து கொண்டிருந்தாலும், அதன் அதிர்வை பொது எதிரணி பெரிதாக வெளிப்படுத்தவில்லை. மாறாக, கொழும்பில் வாக்குக் கவர்ச்சியுள்ள ஹிருணிக்கா பிரேமச்சந்திரவை இணைத்துக் கொண்டு தன்னுடைய அடுத்த கட்டம் தொடர்பில் பாய்ச்சலோடு சிந்தித்திருக்கின்றது.

கட்சி தாவல்கள் என்கிற இலங்கை அரசியலின் வரலாற்று சோகத்தில் இம்முறை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது அரசாங்கமும் முதற்சுற்றில் தோல்வி கண்ட நிலையில், இரண்டாவது சுற்றில் எப்படியாவது வெற்றிபெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கின்றது.

அதன் ஆரம்பமாகவே திஸ்ஸ அத்தநாயக்கவின் வருகையை கருதியது. அதனையே, வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு வெளியில் வந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  ஊடகங்களிடம் வெளிப்படுத்தினார். அது, தொடர்ச்சியான இழப்புக்களினால் ஏற்பட்டிருந்த அதிர்விலிருந்து தன்னைச் ஆசுவாசப்படுத்திக் கொண்டது மாதிரியான வெளிப்பாடாக இருந்தது.

 ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னமும் முப்பதுக்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில், எதிர்வரும் நாட்களிலும் கட்சித் தாவல் காட்சிகள் அரங்கேறலாம். அது, வரும் நாட்களில் அதிகரித்து ஆர்ப்பரிக்கவுள்ள தேர்தல் பிரசாரக்களங்களை இன்னமும் சுவாரஸ்யமாக்கலாம்.

ஊடகங்களுக்கு பெரும் தீனியாக அமையும். மக்கள் ஒரு கட்டத்தில் என்ன நடக்கின்றது என்ற பேரதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருப்பார்கள் அல்லது சுவாரஸ்யமான இந்தியச் சினிமாவைப் பார்ப்பது போன்ற உணர்ச்சிக்குள் மிதப்பார்கள்.

இன்னொரு புறத்தில் வாக்குக் கவர்ச்சியுள்ளவர்களை உள்வாங்குவது தொடர்பில் தன்னுடைய கவனத்தை அரசாங்கம் வெளிப்படுத்தி வருகின்றது. வடக்கிலும் கிழக்கிலும் அதனை பெரும் முனைப்போடு செய்ய முயற்சிக்கின்றது. அதனொரு கட்டமாக, முஸ்லிம் மக்களை தன்னோடு வைத்துக் கொள்வதற்கு தேவையான அனைத்தையும் அரசாங்கம் செய்வதற்கு தயாராகிவிட்டது.

அது, எவ்வாறாக என்றால், ஜனாதிபதித் தேர்தலில் தன்னுடைய ஆதரவு மஹிந்த ராஜபக்ஷவுக்கே என்று அறிவித்த பௌத்த அடிப்படைவாத அமைப்பான பொது பல சேனாவின் அறிவிப்பை மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தி அவர்களை தூரத்தில் வைத்ததிலிருந்தும், ரிஷாத்; பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ§க்கு தேசியப் பட்டியல் பதவியொன்றை வழங்கியதிலிருந்தும்.

ஆனால், இந்த முயற்சிகளை முறியடிக்கும் முயற்சிகளையும் போகிற போக்கில் ஐக்கிய தேசியக் கட்சி மேற்கொண்டிருக்கின்றது என்று கொள்ள முடியும். அதாவது, திஸ்ஸ அத்தநாயக்க வகித்து வந்த பொதுச்செயலாளர் பதவியை ஹபீர் ஹாசிமுக்கு அளித்துள்ளதன் மூலம் முஸ்லிம்களுக்கான தன்னுடைய அங்கிகாரத்தை அளித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி வெளிப்படுத்தியிருக்கின்றது. இது, ஏற்கனவே அரசாங்கத்தின் மீது அதிருப்தி கொண்டுள்ள முஸ்லிம் மக்களை உள்ளீர்க்கும் உத்திகளில் முக்கியமானது.

தமிழ் மக்கள் மற்றும் அதன் அரசியல் தலைமைகளை தங்களோடு உள்வாங்குவது தொடர்பில் அரசாங்கத்துக்;கும், பொது எதிரணிக்கும் ஆர்வம் இருக்கின்றது. ஆனால், அது, தன்னுடைய சிங்கள பௌத்த தேசிய வாக்கு வங்கியைப் பாதிக்காதவாறு அமைய வேண்டும் என்று கருதுகின்றன. அதன்போக்கில் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பகுதியளவிலானவர்களை உள்வாங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்திருப்பதாக சொல்லப்படுகின்றது.

பொது எதிரணியோ, தேர்தல் நிலைப்பாட்டினை அறிவிக்காமல் அமைதி காக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கோருவதுடன், அதன் போக்கில் தமக்கான ஆதரவை தமிழ் மக்கள் வழங்குவார்கள் என்றும் நம்புகின்றது. அதில், பெருமளவான உண்மை இருக்கத்தான் செய்கின்றது.

இதில் இருக்கும் விசித்திரமான இனவாத உளவியல் என்னவென்றால், முஸ்லிம் கட்சிகளின் வெளிப்படையான ஆதரவைக் கோரும் அரசாங்கமும் பொது எதிரணியும் தமிழ் மக்களின் பிரதான கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெளிப்படையான ஆதரவை எதிர்பார்க்கவில்லை. அது, தமக்கு பெரும் பாதிப்புக்களை வழங்கும் என்று உணர்ந்து வைத்திருக்கின்றன. 

இனப்பிரச்சினைகளுக்கான தீர்வாக சமஷ்டி முறைக்கு எந்தவொரு தருணத்திலும் செல்ல மாட்டேன் என்று மைத்திரிபால சிறிசேன, ஜாதிக ஹெல உறுமயவுடன் ஒப்பந்தமொன்றை செய்திருக்;கின்றார் என்று கடந்த வாரத்தில் தமிழ் ஊடகங்களில் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஆனால், தீர்மானம் மிக்க வாக்குகளாக தமிழ் மக்கள் இருக்கிறார்கள் என்று உணர்ந்த மைத்திரிபால சிறிசேன, அதனை மறுத்துரைத்துள்ளார்.

அப்படியான எந்தவொரு ஒப்பந்தங்களும் செய்யப்படவில்லை என்றிருக்கிறார். அதற்கு மேல் சென்று, தான் வெற்றிபெற்ற பின் தோற்றுவிக்கப்படும் தேசிய அரசாங்கமே தேசிய இனப்பிரச்சினைகளுக்கான தீர்வு பற்றி முன்மொழிவுகளை வைக்கும் என்றிருக்கின்றார். தமிழ் மக்களின் ஆதரவுத் தளத்தை எந்தவொரு தருணத்திலும் இழந்துவிடக் கூடாது என்பதையும், தன்னை சிங்கள பௌத்த தேசியவாத அரசியலின் பிரதிநிதி என்பதை மறுக்காமலும் நூலிழையில் தப்பித்திருக்கின்றார்.

ஆனால், இந்தப் பரபரப்புக்களுக்கு அப்பால் வடக்குக் கிழக்கிலும்- மேற்கிலுமுள்ள தமிழ் மக்களை நோக்கி, பினாமிக் குழுக்கள் அரசியல் செய்ய களமிறக்கப்பட்டுள்ளனவோ என்று அச்சம் கொள்ள வைக்கின்றன.

ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் தமிழ் மக்களை நோக்கி பெருமளவான பினாமிக் குழுக்களை இறக்கிவிட்டு வாக்குகளை பிரித்தாள நினைப்பது சிங்கள பௌத்த தேசியவாத ஆட்சியாளர்களின் நோக்கம். இம்முறையும் அவ்வாறான குழுக்களை கனகச்சிதமாக வடிவமைத்து களமிறக்கியிருக்கிறார்கள் என்று கொள்ள முடியும். அதனையும், தேர்தல் உத்தியாகவே முன்னிறுத்துகின்றார்கள் இவ்வாறான பிரித்தாளும் உத்தியை தமிழ் மக்கள் பெரிதாக அனுமதித்தது இல்லை. ஆனால், அந்த முயற்சிகளை சம்பந்தப்பட்டவர்கள் கைவிடவில்லை.

இவற்றையெல்லாம் தாண்டி தமிழ் மக்களை நோக்கி இன்னொரு பிரசார உத்தி முன்னிறுத்தப்படுகின்றது. அதாவது, தேர்தலை புறக்கணிக்க கோரும் வகையிலானது அது. (அல்லது தமிழர் தரப்பு வேட்பாளரை முன்னிறுத்துவது. அது, வேட்புமனுத் தாக்கல் முடிவுற்ற நிலையில் இனி சாத்தியமில்லாதது என்பதால் அதனை தவிர்த்துவிடலாம்.) தமிழ் மக்களை தேர்தலைப் புறக்கணிக்கக் கோருவது, அரசாங்கத்துக்;கான வெற்றி வாய்ப்புக்களை அதிகரிக்கும் வழிமுறைகளின் ஒன்றாகும். ஏனெனில், தீர்மானம் மிக்க தமிழ் மக்களின் வாக்குகள் அரசாங்கத்துக்கு எதிராக விழும் என்ற நிலையில், அதனைத் தவிர்ப்பது அரசாங்கத்துக்கு முக்கியமானது.

தேர்தலை புறக்கணிக்கக் கோரும் தரப்புக்கள் முன்வைக்கும் விடயங்களில் முக்கியமானது, சிங்கள ஆட்சியாளர்களை தீர்மானிக்கும் தேர்தலை தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்து உலகத்துக்கு செய்தியைச் சொல்ல வேண்டும் என்பது. ஆனால், தமிழ் மக்களின் ஏகோபித்த நிலைப்பாட்டினை எவ்வளவு தரம் சர்வதேசத்துக்கு சொல்வது. விடுதலைப் புலிகளின் ஆதரவு வெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அனைத்துத் தேர்தல்களிலும் பெருவாரியாக ஆதரித்து வருவது அதன் போக்கில் தான். அப்படியிருக்க, மீண்டும் தேர்தலைப் புறக்கணித்துத் தான் அதனை நிரூபிக்க வேண்டியதில்லை. ஏற்கனவே, அவ்வாறான முடிவை எடுத்து இலட்சக்கணக்கான உயிர்களை இழந்திருக்கின்றோம்.

இங்கே தெளிவான விடயமொன்று இருக்கின்றது. இலங்கையில், எதிர்காலத்தில் எந்த ஜனாதிபதி வந்தாலும் அரசாங்கம் அமைந்தாலும் அது சிங்கள பௌத்த தேசியவாதத்தையே முன்னிறுத்தும். அதில், மாற்றுக்கருத்தில்லை. அதனோடு போராடியே சிறுபான்மை சமூகங்கள் உரிமைகளைப் பெற வேண்டியிருக்கும். அவ்வாறான நிலையில், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்கு எதிராக போராடுவதைக் காட்டிலும் நிறைவேற்று அதிகாரமுள்ள நாடாளுமன்றத்துக்கு எதிராக போராடுவது ஓரளவு பலன்களை வழங்கக் கூடியதாக இருக்கும். 

ஏனெனில், நாடாளுமன்றத்தில் அனைத்து தருணங்களிலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை சிங்கள தேசியவாதக் கட்சிகளால் பெற முடியாது. அவ்வாறான நிலையில் சிறுபான்மையினக் கட்சிகள் தங்களது ஆளுமையைச் செலுத்த முடியும். அது, எமது பிரச்சினைகளுக்கான தீர்வுகான வழிகளை சின்னதாகவேனும் திறப்பதற்கான சாத்தியங்களை உருவாக்கும்.

சூடுபிடித்துள்ள தேர்தல் பிரசாரக் களத்தில், தேர்தல் கால உத்திகள் என்கிற போர்வையில் தமிழ், முஸ்லிம் மக்களை நோக்கி வலைகள் பின்னப்படுகின்றன. அந்த வலைகளைக் கடப்பது அவ்வளவு ஒன்றும் சிக்கலானது அல்ல. ஓரளவுக்கு யதார்த்த ரீதியிலான சிந்தனையை வெளிப்படுத்தினாலே, அதனைக் கடந்து விடலாம். மாறாக, தெளிவற்ற பாதையைத் தெரிவு செய்து சிக்கலுக்குள் சிக்கிக் கொண்டு முழிப்பது சிறுபான்மைச் சமூகங்களின் எதிர்காலத்தை இன்னமும் சிக்கலாக்கிவிடும்!


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .