2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மௌனமான நிலைப்பாடு

Thipaan   / 2014 டிசெம்பர் 29 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும் தற்போதைய சுகாதார அமைச்சருமான திஸ்ஸ அத்தநாயக்க, கடந்த 23ஆம் திகதி விசித்திரமானதோர் கண்டுபிடிப்பை வெளியிட்டார். ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவும் இரகசிய ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பதே அந்த கண்டுபிடிப்பாகும்.

அன்றே, அத்தநாயக்கவின் கண்டுபிடிப்பைப் பற்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் தேர்தல் பிரசார கூட்டமொன்றின் போது தெரிவித்தார்.

அவர்கள் கூறும் அந்த ஒப்பந்தத்தின் படி, வடக்கில் நிறுத்தப்பட்டுள்ள படை வீரர்களின் தொகை அரைவாசியால் குறைக்கப்படும். வடக்கில் உயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்படும். போர் குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்படும். அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்று அதிகார பரவலாக்கல் மேற்கொள்ளப்படும்.

எதிர்க்கட்சிகளின் பொது ஜனாதிபதி வேட்பாளர் இது போன்றதோர் ஒப்பந்தத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் செய்து கொண்டிருப்பதாக அத்தநாயக்க கூறினார் என்றால், அது ஓரளவுக்காவது நம்பக்கூடியதாக இருக்கும். ஆனால், அவ்வாறானதோர் ஒப்பந்தத்தை மைத்திரிபால, ரணில் விக்கிரமசிங்கவுடன் ஏன் செய்து கொள்ள வேண்டும்?

அதற்கு அத்தநாயக்கவிடம் பதில் இருக்கிறது. ஜனாதிபதித் தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை பெறுவதற்காகவே அவ்விருவரும் இந்த ஒப்பந்தத்தை செய்து கொண்டிருக்கிறார்கள் என அத்தநாயக்க கூறுகிறார். அது அவர் இதற்கு முன்னர் கூறிய ஒரு விடயத்தோடு பொருந்துவதாக தெரியவில்லை.

டிசெம்பர் மாதம் 7ஆம் திகதி நடைபெற்ற ஐ.தே.க.வின் நிறைவேற்றுக் குழு கூட்டத்தின் போது எதிர்க்கட்சிகளின் பொது ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபாலவை நிறுத்தும் யோசனையை ஆதரித்த அத்தநாயக்க, மறுநாள் அதாவது ஜனாதிபதித் தேர்தலுக்கு வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட தினத்தன்று அரசாங்கத்தில் இணைந்தார்.

அரசாங்கத்தில் தான் இணைவதற்கான காரணத்தை அன்று விளக்கிய அத்தநாயக்க, மைத்திரிபால சிறிசேன, தமிழ்த்; தேசியக் கூட்டமைப்புடன் இரகசிய ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டிருப்பதனாலேயே தான் அரசாங்கத்தில் இணைந்து கொண்டதாக கூறினார். வடக்கில் இருந்து படையினரை வாபஸ் பெறுதல், உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றல் போன்ற விடயங்கள் அந்த ஒப்பந்தத்தில் இருந்ததாக அத்தநாயக்க அன்று கூறியிருந்தால் அது ஓரளவுக்காவது பொருத்தமாக இருந்திருக்கும்.

மைத்திரிபால-ரணில் ஒப்பந்தத்தைப் பற்றிய அவரது 'அம்பலப்படுத்தலை' ஊடகங்கள் எந்தளவுக்கு ஏற்றுக் கொண்டது என்றால் மறுநாள் அரசாங்கத்தின் பிரதான சிங்கள் பத்திரிகையான தினமினவில் அதைப் பற்றி ஒரு வார்த்தையாவது இருக்கவில்லை. நாட்டின் ஏனைய தேசிய பத்திரிகைகளிலும் ஒரு சில பத்திரிகைகள் மட்டுமே அதனை வெளியிட்டு இருந்தன. அவற்றிலும் மூன்று பத்திரிகைகள் மட்டுமே அதனை முன் பக்க செய்தியாக வெளியிட்டு இருந்தன.

அந்த 'ஒப்பந்தத்தின்' பிரதி ஒன்றையும் அத்தநாயக்க ஊடகங்களிடம் காட்டியிருந்தார். அந்த அளவுக்கு 'ஆதாரம்' இருந்தும் ஊடகங்கள் அதனை நம்பியிருந்தால், நிச்சயமாக அது மறுநாள் சகல பத்திரிகைகளிலும் முன் பக்க தலைப்புச் செய்தியாக வெளியிடப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், ஊடகங்கள் அதற்கு அந்தளவு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

அதன் பின்னர் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு நெருக்கமான தேசிய அமைப்புக்களின் ஒன்றியம் என்ற இயக்கம் ஐ.தே.க. தலைமையகமான 'சிறிகொத்த' முன்னிலையில் கடந்த 24ஆம் திகதி பெரும் ஆர்ப்பாட்டம்  நடத்தி, அதுபெரும் அடி தடியாக மாறியது. தாம் நடத்திய அந்த ஆர்ப்பாட்டத்துக்கான காரணத்தை மறந்த வீரவன்ச, மறுநாள் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தைப் பற்றி மைத்திரிபாலவின் நிலைப்பாடு என்ன என்று கேட்டு இருந்தார்.

ஆர்ப்பாட்டம் செய்யுமளவுக்கு அவர் அந்த 'ஒப்பந்தத்தை' நம்பியிருந்தால் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்துக்கு அப்பால் செல்வோம் என்று அதில் கூறப்பட்டும் இருந்தால், 13ஆவது திருத்தத்தைப் பற்றிய மைத்திரிபாலவின் நிலைப்பாடு அவருக்கு ஏற்கெனவே தெரிந்திருக்க வேண்டும்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட அரசியற் கூட்டுக்கள், எப்போதும் ஏதாவது ஒரு சதியைப் பற்றி கூறிக் கொண்டு இருக்கவே விரும்புகின்றன. 2005ஆம் ஆண்டு, அவர்கள் ஐ.தே.க. தலைவர்களுக்கு எதிராக 'அலி-கொட்டி கிவிசும' (யானை-புலி ஒப்பந்தம்) என்ற குற்றச்சாட்டை சுமத்தினர்.

ஆனால், ஒன்பது ஆண்டுகள் சென்றும் இன்னமும் அவர்கள் அந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்கவில்லை.
அன்று யானைக் கட்சியின் பொதுச் செயலாளரும் புலி இயக்கத்தின் பிரபாகரனுக்குப் பின்னர் தலைவராகவிருந்த குமரன் பத்மநாதனும் இன்று அரசாங்கத்துடன் தான் இருக்கிறார்கள். எனவே, அவர்களிடம் அந்த யானை-புலி ஒப்பந்தத்தின் பிரதிகளை பெற்று இன்றாவது அதனை வெளியிடலாமே. அது தற்போதைய தேர்தலில் அவர்களுக்கு நன்றாக பயன்படும்.

அதேவேளை, அந்த 'யானை-புலி ஒப்பந்தம்' செய்தவர்கள் அதைப் பற்றி சுய விமர்சனம் செய்யாத நிலையில் இன்று அரசாங்கத்தில் இணைந்து இருக்கிறார்கள்.

யானை-புலி ஒப்பந்தக் கதையைக் கட்டுவதற்காக ஸ்ரீல.சு.க உள்ளிட்ட கூட்டுக்கள் 2002ஆம் ஆண்டு போர் நிறுத்த உடன்படிக்கையையே பாவித்தார்கள். ஆனால், அந்தப் போர் நிறுத்த உடன்படிக்கையானது 1994ஆம் ஆண்டு ஸ்ரீல.சு.க. தலைமை, புலிகளுடன் செய்து கொண்ட போர் நிறுத்த உடன்படிக்கையின் பிரதியேயன்றி வேறொன்றல்ல. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி என்ற பதம், அந்த ஸ்ரீல.சு.க.- புலி ஒப்பந்தத்தின் மூலமே முதன் முதலாக உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

மஹிந்த ராஜபக்ஷ உட்பட இன்றைய ஸ்ரீல.சு.க. தலைவர்கள் அனைவரும் அந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை முற்றாக ஏற்றுக் கொண்டனர். அதற்காக வாதாடினர். அதன் பின்னர் 2005ஆம் ஆண்டு தாம் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர், மஹிந்த ராஜபக்ஷவும் ரணில்-பிரபாகரன் ஒப்பந்தத்தையும் ஏற்று அதன் கீழ் ஒரு முறையல்ல இரண்டு முறையே புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் தலைமையில் தூதுக் குழுக்களை ஜெனிவாவுக்கு அனுப்பினார்.

அந்த ஒப்பந்தத்தின் கீழ், நோர்வே நாட்டின் மத்தியஸ்த்தம் மஹிந்த ராஜபக்ஷவினாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு, நோர்வே விஷேட தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தொடர்ந்து இலங்கைக்கு விஜயம் செய்தார்.

அந்தப் போர் நிறுத்த உடன் படிக்கையின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட சமாதான பேச்சுவார்த்தைகளின் போது இலங்கைக்கு உதவி வழங்குவதற்காக கூட்டப்பட்ட டோக்கியோ மாநாட்டின் இணைத் தலைவர்களான அமெரிக்கா, நோர்வே, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் தொடர்ந்தும் இணைத் தலைவர்கள் என்ற முறையில் ராஜபக்ஷவுடன் தொடர்பு வைத்திருந்தனர்.

படையினர், 2007ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தை முற்றாக கைப்பற்றிக் கொண்டு வடக்கில் வன்னியிலும் பெரும் பகுதியை கைப்பற்றிக் கொண்ட நிலையில், போர் வெற்றி உறுதியானதன் பின்னர் 2008ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலேயே ராஜபக்ஷ,  ரணில்-பிரபாகரன் போர் நிறுத்த ஒப்பந்தத்தைத இரத்துச் செய்தார். எனவே யானை- புலி ஒப்பந்தத்தை ராஜபக்ஷவும் ஏற்று செயற்பட்டவர் என்பது தெளிவானது.

ஆனால், இனவாதத்தை தூண்டி தெற்கில் வாழும் சிங்கள மக்களின் வாக்குகளை பெறுவதற்காக இது போன்ற சதிக் கதைகள் பரப்பப்படுகின்றன. இது ஸ்ரீல.சு.க உள்ளிட்ட கூட்டணிகள் மட்டும் செய்த விடயம் அல்ல.

ஐ.தே.க.வும் அவ்வாறே செயற்பட்டதை எவரும் மறைக்க முடியாது. தாம் பதவிக்கு வந்தால் முறையான அதிகார பரவலாக்கலை அமுல் செய்வதாக கூறி 1994ஆம் ஆண்டு சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட போது அவரது போஸ்டர்களில் அவரது படத்தின் நெற்றியில் ஐ.தே.க. ஆதரவாளர்கள் 'பொட்டு' வைத்தனர்.

2005ஆம் ஆண்டு ஸ்ரீல.சு.க உள்ளிட்ட பொதுஜன ஐக்கிய முன்னணி, ஒற்றையாட்சி முறையை கைவிட்டு இலங்கை ஒரு பிராந்திய சங்கம் என்ற கருத்தை உள்ளடக்கிய 'பக்கேஜ்' என்று பலரால் அழைக்கப்பட்ட தீர்வுத் திட்டத்தை முன்வைத்தது. தற்போதைய வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸே, கலாநிதி நீலன் திருச்செல்வத்துடன் இணைந்து அதனை வரைந்தார்.

தாம் இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் மூலம் நாட்டை 9 நிர்வாக மாகாணங்களாக பிரித்ததை மறந்த ஐ.தே.க. அந்த 'பக்கேஜ்ஜை' எதிர்த்து இனவாதத்தைத் தூண்டியது.

2000ஆம் ஆண்டு ஸ்ரீ.ல.சு.க. தலைமை சமஷ்டி முறையிலான ஆட்சியைக் கொண்ட புதிய அரசியலமைப்பு நகலை முன்வைத்தது. அதன் பிரதிகளை நாடாளுமன்றத்துக்;குள்ளேயே எரித்த ஐ.தே.க. அப்போதும் இனவாதத்தை தூண்டியது.

தெற்கில் பிரதான கட்சிகள் இவ்வாறு இனவாதத்தை தூண்டுவதனால் இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமது நிலைப்பாட்டை வெளியில் கூற முடியாமல் இருக்கிறது. கூட்டமைப்பு தமது நிலைப்பாட்டை வெளியில் கூறாவிட்டாலும் அது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாகும். கூட்டமைப்பின் எத்தவொரு மட்டத்திலும் உத்தியோகபூர்வமாக முடிவு செய்யாவிட்டாலும் அது ஜனாதிபதித் தேர்தலின் போது மைத்திரிபால சிறிசேனவுக்கே ஆதரவளிக்கும் என்பது தெளிவான விடயமாகும்.

மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீரும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பி இவ்வாறு நினைக்கவில்லை. இது அரச எதிர்ப்பு நிலைப்பாடேயல்லாமல் வேறொன்றுமல்ல. இந்த அரச எதிர்ப்பு நிலைப்பாட்டின் காரணமாகவே 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது புலிகளுக்கு எதிராக போரை வழிநடத்திய இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவையும் கூட்டமைப்பு ஆதரித்தது.

கூட்டமைப்பின் உத்தியோகப்பற்றற்ற முடிவு ஏற்கெனவே தெரியவந்துள்ளது. தமிழ் மக்கள், ஜனாதிபதித் தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும் என்று அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அண்மையில் கூறிய போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனை எதிர்த்ததன் மூலம் அது மேலும் தெளிவாகிறது. இந்தத் தேர்தலை பகிஷ்கரிப்பதானது எதிரிக்கே சாதகமாக அமையும் என கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா கூறியிருந்தார்.

அவர், எதிரி யார் என்று கூறவில்லை. ஆனால், எவரும் அது யார் என்று கேட்கவும் இல்லை. அந்தளவுக்கு அது எல்லோருக்கும் தெரிந்த விடயமாக இருக்கிறது. அதேவேளை, அவரது இந்த கூற்று 2005ஆம் ஆண்டு புலிகள் இயக்கம், ஜனாதிபதித் தேர்தலை பகிஷ்கரிக்குமாறு வடக்கு, கிழக்கு வாழ் மக்களை பணித்ததன் விளைவாக மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றதை ஞாபகப்படுத்துகிறது.

புலிகள் தேர்தலை பகிஷ்கரிக்குமாறு வடக்கு, கிழக்கு வாழ் மக்களை பணித்த போதிலும் கிழக்கில் அந்த பகிஷ்கரிப்பு அவ்வளவு வெற்றிகரமாக இடம்பெறவில்லை. வடக்கில் அது வெற்றகரமாக இடம்பெற்றறது.

அப்போது வடக்கில் சுமார் மூன்று இலட்சம் வாக்காளர்கள் இருந்ததாகவே மதிப்பிடப்பட்டது. பகிஷ்கரிப்புப் பணிப்புரை வராமல் இருந்தால், அவர்கள் அனைவரும் ரணில் விக்கிரமசிங்கவுக்கே வாக்களிப்பார்கள் என்றும் எதிர்ப்பார்க்கப்பட்டது.

பகிஷ்கரிப்பின் காரணமாக அந்த மூன்று இலட்சம் வாக்குகளை விக்கிரமசிங்க இழந்தார். ஒன்றரை இலட்சம் அதிகப்படி வாக்குகளால் அத்தேர்தலில் ராஜபக்ஷ வெற்றி பெற்றார். அதாவது பகிஷ்கரிப்பு நடைபெறாவிட்டால், தமிழ் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்காவிட்டாலும் குறைந்த பட்சம் ஒரு இலட்சம் வாக்குகளால் விக்கிரமசிங்க வெற்றி பெற்றிருப்பார்.

இப்போதும் தமிழ் மக்கள், மைத்திரிபாலவுக்கு வாக்களிக்க தயாராக இருக்கும் நிலையில், அம் மக்கள் வாக்களிப்பை பகிஷ்கரித்தால் நிச்சயமாகவே அதுவும் ராஜபக்ஷவுக்கே சாதகமாக அமையும்.  இதைத் தான் சேனாதிராஜா கூறுகிறார் போலும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, எதிர்க்கட்சியையே ஆதரிக்கிறது என்பது அரசாங்கத்துக்கும் தெரியும். கூட்டமைப்பு அதனை உத்தியோகபூர்வமாக அறிவித்தால் அதை பாவித்து அரசாங்கத்தின் தலைவர்கள் இனவாதத்தை தூண்டி சிறிசேனவுக்கான சிங்கள மக்களின் ஆதரவை குறைக்க முயற்சிப்பார்கள். அதற்காக அவர்கள் காத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, மைத்திரிபாலவுக்கே ஆதரவளிக்கும் என அண்மையில் அமைச்சர் டிலான் பெரேரா கூறியிருந்தார். கூட்டமைப்பு தமது நிலைப்பாட்டை வெளியிடாத நிலையில் அமைச்சர் ஒருவர் தமக்கு தமிழ் மக்களின் ஆதரவு கிடைக்காது என்று ஏன் கூற வேண்டும? தமிழர்களையும் மைத்திரிபாலவையும் முடிச்சுப் போட்டு சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தை தூண்டும் முயற்சியாகவே இதனை பார்க்க வேண்டியுள்ளது.

பொதுவாக இனவாதத்தை எதிர்த்து கருத்து வெளியிட்டு வரும் டிலான் பெரேரா போன்ற ஒருவர் இவ்வாறு நடந்து கொள்வதாக இருந்தால், கூட்டமைப்பு தமது நிலைப்பாட்டை வெளியிட்டால் மஹிந்த ராஜபக்ஷ, விமல் வீரவன்ச போன்றவர்கள் எவ்வாற நடந்து கொள்வார்கள் என்பதை ஊகித்துப் பார்க்க வேண்டும். எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது நிலைப்பாட்டை வெளியிடாமல் இருப்பது தான் அவர்களது நிலைப்பாட்டுக்கு பொருத்தமானதாகும்.
    

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .