2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

நீடிக்கும் இழுபறி

Thipaan   / 2014 டிசெம்பர் 30 , மு.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் மிக முக்கியமான மாநிலமான ஜம்மு காஷ்மீரில் புதிய அரசு அமைவதில் இழுபறி நிலைமை நீடிக்கிறது. நான்கு கட்சிகள் பிரதானமாக களத்தில் நின்றன. இரு தேசிய கட்சிகள். காங்கிரஸ§ம்- பாரதிய ஜனதா கட்சியும் அந்த ரகம். இரு மாநிலக் கட்சிகள். தேசிய மாநாட்டுக் கட்சியும், மக்கள் ஜனநாயகக் கட்சியும் இந்த ரகம். தேர்தல் களத்தில் 'மதவாதம்' போற்றும் கட்சி பா.ஜ.க. என்ற பிரசாரத்தை மற்ற கட்சிகள் செய்தன.

'மதசார்பற்ற தன்மைக்கு நாங்கள்தான் ஜவாப்தாரி' என்று காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற மூன்று கட்சிகளும் பிரசாரம் மேற்கொண்டன. ஏனென்றால் ஜம்மு காஷ்மீருக்கு தனி அந்தஸ்து இந்தியாவில் உண்டு. இந்தியாவில் உள்ள மற்ற மாநில சட்டமன்றங்களுக்கு எல்லாம் ஐந்து வருடம் ஆயுட்காலம்.
ஆனால் ஜம்மு காஷ்மீருக்கு ஆறு வருடம் ஆயுட்காலம். அதே போல் மற்ற மாநிலங்களுக்கு இல்லாத 'சிறப்பு அந்தஸ்து' அரசியல் சட்டப் பிரிவு 370இன் கீழ் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வளவு சிறப்பு மிகுந்த மாநிலத்தில் தேர்தல் முடிவுகள் 'இழுபறி' நிலைமையே ஏற்படுத்தி விட்டன.

காஷ்மீர் பகுதியில் அதிக இடங்களில் வெற்றி பெற்றதால், இருக்கின்ற கட்சிகளுக்குள் 28 சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்று 87 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் ஜனநாயகக் கட்சி முதன்மைக் கட்சியாக வந்திருக்கிறது. அதன் தலைவர் முப்தி முகமது சயீது முதலமைச்சர் வேட்பாளராக இருக்கிறார்.

 பிரதமர் நரேந்திரமோடியின் பிரசார வலிமையால் பா.ஜ.க.வுக்;கு 'ஜம்மு' பகுதியில் அபரிமிதமான செல்வாக்கு கிடைத்துள்ளது. அதன் பலனாக அக்கட்சி 25 சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்று இரண்டாவது பெரிய கட்சியாக, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருக்கிறது.

இது தவிர ஆட்சியிலிருந்த உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சி 15 எம்.எல்.ஏ.க்களை மட்டும் பெற்றிருக்கிறது. காங்கிரஸ் கட்சியோ 12 எம்.எல்.ஏ.க்களைப் பெற்றுள்ளது.

காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியே நேரடியாக முப்தி முகமது சயீதுடன் தொலைபேசியில் பேசி, 'நாங்கள் ஆதரிக்கிறோம்' என்று கூறியிருக்கிறார். அதேபோல முதலில் பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவை டெல்லியில் சந்தித்துப் பேசிய உமர் அப்துல்லா உட்கட்சியில் கிளம்பிய எதிர்ப்பால் 'நானும் மக்கள் ஜனநாயகக் கட்சியை ஆதரிக்கத் தயார்.

அதுவும் எந்தவிதமான நிபந்தனையும் இன்றி ஆதரிக்கத் தயார்' என்று அறிவித்துள்ளார்.

காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சியின் இந்த அறிவிப்பு மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏனென்றால் மக்கள் ஜனநாயகக் கட்சியைப் பொறுத்தமட்டில் தனது பரம எதிரியான தேசிய மாநாட்டுக் கட்சியின் துணையுடன் ஆட்சி அமைப்பதில் தயக்கம் இருக்கிறது. அந்த மாநிலத்தைப் பொறுத்தமட்டில் இரு கட்சிகளும் எலியும் பூனையும் போல் இருக்கும் கட்சிகள்.

அதே நேரத்தில் பா.ஜ.க.வுடன் இணைந்து ஆட்சி அமைக்கலாம் என்பது மக்கள் ஜனநாயகக் கட்சியின் முதல் விருப்பம். ஆனால் பா.ஜ.க. அரசியல் சட்டப் பிரிவு 370 (மற்ற மாநிலங்களை விட காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்து) இரத்து என்பதில் குறியாக இருப்பதும், காஷ்மீரில் உள்ள 'இராணுவத்துக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கம் சட்டம்' வாபஸ் பெற மறுப்பதும் மக்கள் ஜனநாயக கட்சிக்கு பெரும் இடைஞ்சலாக இருக்கிறது.

ஏனென்றால் அந்தக் கட்சியின் சார்பில் இந்தச் சட்டத்தை வாபஸ் பெறுவோம் என்பது தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட முக்கிய வாக்குறுதி.. அதுமட்டுமின்றி, இதுவரை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வரவில்லை. இந்த முறை அப்படி பா.ஜ.க.வும் அதிகாரத்தில் பங்கேற்க அனுமதித்து விட்டால் அதுவே காஷ்மீர் மக்கள் மனதில் மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு பெரும் பழியாக மாறிவிடும்.

ஆகவே மாநில நலன் கருதி, நாட்டின் பாதுகாப்புக் கருதி, மத்தியில் ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க.வுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பதா அல்லது அடிப்படைக் கொள்கைகளை விட்டுக் கொடுக்காமல் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சியுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பதா என்ற இடியாப்பச் சிக்கலில் மக்கள் ஜனநாயகக் கட்சி சிக்கிக் கொண்டு முழிக்கிறது. அதனால்தான் தேர்தல் முடிவுகள் வெளியில் வந்து ஒரு வாரத்துக்கு மேலாகியும் இன்னும் ஆட்சி அமைப்பதில் ஒரு தெளிவு பிறக்கவில்லை.

இதற்கிடையில் வழக்கத்துக்கு மாறாக ஜம்மு அன்ட் காஷ்மீர் ஆளுனர்; வோரா, மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் பாரதிய ஜனதாக் கட்சி இரண்டுக்கும் ஆட்சி அமைப்பது பற்றி விவாதிக்க அழைப்பு விடுத்துள்ளார்.

பிரபல 'எஸ்.ஆர்.பொம்மை' வழக்குக்குப் பிறகும் சரி, அரசியல் சட்ட மரபுகளின் அடிப்படையிலும், அதிக எம்.எல்.ஏ.க்கள் உள்ள கட்சியைத்தான் முதலில் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்.

அந்தக் கட்சியால் முடியவில்லை என்று கூறினால் அடுத்து அதிக எம்.எல்.ஏ.க்கள் உள்ள கட்சியைக் கூப்பிட வேண்டும். ஜம்மு காஷ்மீர் மாநில விஷயத்தில் முதலில் மக்கள் ஜனநாயகக் கட்சியை ஆட்சி அமைக்குமாறு ஆளுனர்; அழைத்திருக்க வேண்டும்.

இந்த மரபின்படிதான் 1990களில் குடியரசுத் தலைவராக இருந்த ஆர்.வெங்கட்ராமன் பிரதமராக சந்திரசேகரை நியமிக்கும் போது கடைப்பிடித்தார். 'மண்டல் கமிஷன் எள ராம் மந்திர்' பிரச்சினையில் அப்போது பிரதமராக இருந்த வி.பி.சிங் பதவியிழக்க நேர்ந்தது.

அப்போது அதிக எம்.பி.க்கள் கொண்ட காங்கிரஸ் கட்சியிடம் முதலிலும், அதற்கு அடுத்த அளவு எண்ணிக்கை கொண்ட
பா.ஜ.க விடம் இரண்டாவதாகவும், அதற்கும் குறைவாக எம்.பி.க்கள் எண்ணிக்கையுள்ள இடது சாரிகளிடம் மூன்றாவதாகவும் 'உங்களால் ஆட்சி அமைக்க முடியுமா' என்று குடியரசுத் தலைவர் கேள்வி எழுப்பினார்.

மூவருமே அதற்கு மறுத்து, காங்கிரஸ் கட்சி மட்டும் 57 எம்.பி.க்களைக் கொண்ட சந்திரசேகரை ஆதரிப்பதாக அதுவும் நாடாளுமன்றத்தின் எஞ்சியிருக்கின்ற ஆயுள் காலம் வரை ஆதரிப்பதாக கடிதம் கொடுத்த பிறகு சந்திரசேகரை ஆட்சி அமைக்க அழைத்தார்.

அப்படித்தான் சந்திரசேகர் பிரதமரானார். ஆனால், அந்த மரபை மீறி இப்போது ஏன் ஜம்மு காஷ்மீர் ஆளுனர்; வோரா எடுத்த எடுப்பிலேயே மக்கள் ஜனநாயகக் கட்சியையும், பாரதிய ஜனதாக் கட்சியையும் ஆட்சி அமைப்பது பற்றி விவாதிக்க அழைத்தார் என்பது புரியாத புதிர். ஒரு வேளை பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவல் போன்ற பிரச்சினைகளால் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் நடைமுறைகளை வித்தியாசமாக கடைப்பிடிக்க வேண்டும் என்று கவர்னர் கருதினாரா என்பது தெரியவில்லை.

ஆட்சி அமைப்பது ஒரு புறமிருக்க ஜம்மு காஷ்மீர் தேர்தல் பல அதிர்ச்சி தரும் வாக்காளர் மனமாற்றங்களைக் கொடுத்திருக்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இங்கு போட்டியிட்ட பா.ஜ.க. 32.65 சதவீத வாக்குகளைப் பெற்றது. அதாவது நரேந்திரமோடி பிரதமராக வேண்டும் என்று அந்த அளவுக்கு வாக்களித்தார்கள்.

ஆனால், இந்த முறை நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 23 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று ஏறக்குறைய 10 சவீத வாக்குகளை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இழந்திருக்கிறது பா.ஜ.க., அதன்படி பார்த்தால் நரேந்திரமோடிக்கு வாக்களித்தவர்கள் அவர் சுட்டிக்காட்டும் முதல்வருக்கு வாக்களிக்கத் தயாராக இல்லை என்பதைக் காட்டுகிறது.

அது மட்டுமின்றி, மோடிக்காக வாக்களித்த தேசிய மாநாட்டுக் கட்சியின் குஜ்ஜார் இன வாக்காளர்கள் இந்த முறை தங்கள் கட்சிக்கே திரும்பிச் சென்று விட்டார்கள் என்று தோன்றுகிறது.

அதனால்தான் சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் 11.22 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்ற தேசிய மாநாட்டுக் கட்சி இந்த முறை சட்டமன்றத் தேர்தலில் 20.8 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. பா.ஜ.க.வின் ஏறக்குறைய 10 சதவீத வாக்கு நஷ்டம் தேசிய மாநாட்டுக் கட்சிக்கு 10 சதவீத வாக்கு இலாபமாக மாறியிருப்பதன் உட்பொருள் இதுவாகத்தான் இருக்க முடியும்.

இதே போல் சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் 20.72 சதவீத வாக்குகளைப் பெற்ற மக்கள் ஜனநாயகக் கட்சி இந்த முறை 22.7 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளதே தவிர பா.ஜ.க. இழந்த பத்து சதவீத வாக்குகள் இந்தக் கட்சிக்கு வரவில்லை.

ஆனால் காங்கிரஸ் கட்சி மேலும் பலவீனப்பட்டுள்ளது. 23.07 சதவீத வாக்குகளை சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற காங்கிரஸ் கட்சி இந்த முறை 18 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றிருக்கிறது.

ஏறக்குறைய 5 சதவீத வாக்குகளை காங்கிரஸ் கட்சி ஜம்மு; காஷ்மீர் மாநிலத்தில் இழந்திருக்கிறது. ஆனால் 2008 சட்டமன்றத் தேர்தலின் முடிவுகளின் அடிப்படையில் 2014 நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களை ஒப்பிட்டுப் பார்த்தால் தேசிய மாநாட்டுக் கட்சி மட்டும்தான் பலவீனமாக இருக்கிறது.

காஷ்மீர் மட்டுமல்ல. தேர்தல் நடைபெற்ற ஜார்கண்ட் மாநிலத்திலும் பா.ஜ.க.விற்கு சறுக்கல். அங்கு சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் 40.71 சதவீத வாக்குகளை நரேந்திரமோடியை முன்னிறுத்திப் பெற்றது பா.ஜ.க. அங்குள்ள மலைவாழ் மக்கள் கணிசமானோர் மோடிக்காக வாக்களித்தார்கள்.

அதனால் மலைவாழ் மக்களின் வாக்குகளை அடிப்படையாக வைத்து விளங்கும் கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.ம்) 9.42 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று படு தோல்வி அடைந்தது.

ஆனால், இந்த சட்டமன்றத் தேர்தலிலோ பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்தாலும் அதன் வாக்கு வங்கி 31.3 சதவீதம்தான். ஏறக்குறைய 9 சதவீத வாக்குகளை இழந்துள்ளது. அதே நேரத்தில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 20.4 சதவீத வாக்குகளைப் பெற்று விட்டது. இதன் மூலம் நரேந்திரமோடி பிரதமராக வேண்டும் என்று வாக்களித்த மலைவாழ் மக்கள் (ஜே.எம்.எம். கட்சியினர்) சட்டமன்றத் தேர்தலில் தங்கள் கட்சிக்கே திரும்பி விட்டனர்.

ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் சேர்ந்து பா.ஜ.க. ஆட்சி அமைக்கப் போகிறதா இல்லையா என்பது தீவிர ஆலோசனையில் இருக்கும் போது, இந்த இரு மாநிலத் தேர்தல்களும் (காஷ்மீர், ஜார்கண்ட்) பாரதிய ஜனதாக் கட்சிக்கு முக்கியச் செய்தியை- இல்லை எச்சரிக்கை மணியை அடித்திருக்கிறது. அதுதான் சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வாக்களித்தவர்கள் இந்த சட்டமன்றத் தேர்தலில் தாங்கள் இருந்த மாநிலக் கட்சிக்கே திரும்பியது.

இது துவக்கம் என்றால் நாடு முழுவதுமே பிரதமர் நரேந்திரமோடிக்காக வாக்களித்த வாக்காளர்கள் இப்போது பா.ஜ.க. கிளப்பும் மத மாற்ற தடை சட்டம், இந்துத்துவாக் கொள்கைகளை தீவிரமாக கையிலெடுக்கும் பா.ஜ.க.வின் துணை அமைப்புகள் எல்லாம் சேர்ந்து பிரதமர் நரேந்திரமோடிக்கு இருந்த 'அனைவருக்கும் பொதுவானவர்.

வளர்ச்சிக்காக பாடுபடப் போகிறவர். நல்லாட்சி தரப் போகிறவர்' என்றுள்ள இமேஜ§க்கு பங்கம் விளைவிக்கின்றனவோ என்ற சந்தேகம் பிறந்துள்ளது.

இந்த இரு மாநிலத் தேர்தல் முடிவுகளும், பிரதமர் மோடியின் இமேஜின் மீது மனமாற்றத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்பதை தெளிவுபடுத்துகிறது. எச்சரிக்கை மணியின் சப்தம் பா.ஜ.க.வின் காதுகளில் விழுகிறதா என்பது போகப் போக அக்கட்சி முன்னெடுத்துச் செல்லப் போகும் நிகழ்ச்சி நிரலில்தான் இருக்கிறது.  

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .