2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

இனப்பிரச்சினை ஆறாத புண்?

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 09 , மு.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.சஞ்சயன்

'இனப்பிரச்சினைக்கு நாளைக்கே வேண்டுமானாலும் தீர்வை தரத் தயாராக இருக்கிறேன். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனை ஏற்றுக்கொள்ளாது' என்று வார இதழ்களின் ஆசிரியர்களுடன் நடத்திய சந்திப்பின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

இந்தப் பத்தி எழுதப்படும்போது, ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு நடந்துகொண்டிருந்தது. இது அச்சிலும் இணையத்திலும் வெளிவரும்போது, ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் ஓரளவுக்கு தெளிவான நிலையை காட்டியிருக்கக்கூடும்.

இந்தத் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றால், அவர் கடந்த வாரம் குறிப்பிட்ட மேற்கூறிய கருத்து மிகவும் முக்கியமானதாக இருக்கும். அதாவது, இனப்பிரச்சினைக்கான தீர்வு அரசாங்கத்தின் கையில்தான் இருக்கிறது என்பதை அவரது கூற்று எடுத்துக்காட்டியிருக்கிறது.

'இனப்பிரச்சினைக்கு அரசிடம் தீர்வை காண அனைவரும் இணைந்து பணியாற்றவேண்டும்.  ஆனால், அதை பெற்றுக்கொள்வதற்கான தேவையோ, அக்கறையோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடையாது.

அமெரிக்கா, இந்தியா அல்லது ஜெனீவா மூலம் தீர்வை பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நினைக்கிறது.  தீர்வு வழங்கப்பட்டுவிட்டால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் அரசியல் செய்யமுடியாது. அதனாலேயே, அவர்கள் தீர்வு காணும் விடயத்தில் ஆர்வமின்றி செயற்படுகின்றனர். தமது அரசியல் தேவைகளுக்குதான் இனப்பிரச்சினைக்கு தீர்வொன்றை காண்பதற்கு முன்வராமல், அதை பிச்சைக்காரன் புண்போல வைத்துக்கொண்டிருக்கின்றனர்.

நாளைக்கே வேண்டுமென்றாலும், எம்மால் தீர்வை தரமுடியும். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.' என்று குறிப்பிட்டிருந்தார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது முதலாவது பதவிக்காலத்தில் எதனைக் கூறினாரோ, அதனை தனது இரண்டாவது பதவிக்காலத்தில் செய்திருக்கவில்லை.

போர் இறுதிக்கட்டத்தை அடைந்திருந்த காலகட்டத்தில்,  'இனப்பிரச்சினைக்கு என்னிடம் ஒரு தீர்வு உள்ளது. விடுதலைப் புலிகளுடனான போரை முடிவுக்கு கொண்டுவந்த பின்னர், தமிழ் மக்களுக்கு அந்த தீர்வை வழங்குவேன்' என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாக்குறுதியளித்திருந்தார். எனினும், போர் முடிவுக்கு வந்த பின்னர், இரண்டாவது பதவிக்காலத்தில் அவரது நிலைப்பாடு தலைகீழாக மாறியிருந்தது.

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தன்னிடம் கிடையாதென்றும் அதனை தீர்மானிக்கவேண்டியது நாடாளுமன்ற தெரிவுக்குழுவே என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துவந்தார்.

தன்னிடமோ, தனது அரசாங்கத்திடமோ இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான எந்தத் திட்டமும் இல்லை. அனைத்துக்கட்சிகளும் இடம்பெறும் நாடாளுமன்ற தெரிவுக்குழுதான்; தீர்வு யோசனையை தயாரிக்கவேண்டும் என்ற பிடிவாதத்திலேயே ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக்காலத்தின் பெரும்பகுதியும் உருண்டோடியது.

இதற்கென நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்றும் அமைக்கப்பட்டது. ஆனால், அதில் அரச தரப்பினரை தவிர வேறெந்தக் கட்சியும் இணைய முன்வராத நிலையில், அந்த தெரிவுக்குழு முடங்கிப்போய்  கிடக்கிறது.

தெரிவுக்குழு மூலமே இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம் தயாரிக்கப்படுமென்ற அரசாங்கத்தின் பிடிவாதத்தின் காரணமாகத்தான், இந்த முடக்கநிலை ஏற்பட்டது. இந்நிலையில், தனது மூன்றாவது பதவிக்காலத்துக்கான தேர்தலை சந்திக்கவிருந்த சூழலில், மீண்டும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாளைக்கே வேண்டுமானாலும், இனப்பிரச்சினைக்கு தீர்வை வழங்கத் தயாரென்று கூறியிருக்கிறார். ஆனால், அதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளாது என்றும் அவர் ஆரூடம் கூறியிருக்கிறார்.

அரசாங்கம் நாளைக்கே ஒரு தீர்வை வழங்கத் தயாரென்றால், அதனிடம் ஒரு தீர்வுத்திட்டம் இருக்கிறது என்றுதான் பொருள் கொள்ளவேண்டும். அவ்வாறாயின், அதனை ஏன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் அரசாங்கம் முன்வைக்கத் தவறியதென்ற கேள்வி இந்தச் சந்தர்ப்பத்தில் எழுகிறது.

அரசாங்கத்துடன் நடத்திய பேச்சுக்களின்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால், அரசியல் தீர்வு குறித்த சில யோசனைகள் முன்வைக்கப்பட்டன. அவற்றை பரிசீலித்துவிட்டு பதில் கூறுவதாக கூறிச் சென்ற அரச தரப்புக்குழுவினர் அதற்குப் பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்திக்கவில்லை. அதுபோலவே, அரச தரப்புடனான பேச்சுக்களின்போது, தீர்வு யோசனையை முன்வைக்குமாறும் அவற்றை தாம் பரிசீலிக்கத் தயாரென்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திரும்பத்திரும்ப வலியுறுத்தியது.
ஆனால், இழுத்தடித்துவந்த அரச தரப்பு, பின்னர் ஒரேயடியாக தீர்வுத்திட்டத்தை தம்மால் முன்வைக்க முடியாதென்றும்
நாடாளுமன்ற தெரிவுக்குழுவே அதனை முன்மொழியவேண்டுமென்றும் கூறிவிட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்தப்பட்ட பேச்சுக்களின்போது, அரசாங்கத் தரப்பு போதிய முன்னாயத்தங்களை மேற்கொள்ளவில்லையென்று, அரச தரப்பின் பேச்சுக்குழுவில் இடம்பெற்றிருந்தவரும்  மைத்திரிபால சிறிசேனவுடன் அரசாங்கத்திலிருந்து வெளியேறியவருமான கலாநிதி ராஜீவ விஜேசிங்க அண்மையில் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். அதாவது, பேச்சுக்குழுவின் செயலராக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தன, அதற்குரிய எந்த ஏற்பாடுகளையும் கவனிக்கவில்லை என்றும் அவர் செயலராக இல்லாமல், பேச்சுக்குழு உறுப்பினராகவே நடந்துகொண்டதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

அதேவேளை,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போதிய தயார் நிலையிலேயே எப்போதும் பேச்சுக்கு வந்ததாகவும் கலாநிதி ராஜீவ விஜேசிங்க குறிப்பிட்டிருந்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே பேச்சுக்களை குழப்பியதாக அரசாங்கம் கூறிவந்தது. ஆனாலும், அது எத்தகைய சூழலில் முடங்கியது என்பது இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

இத்தகைய நிலையில், நாளைக்கே தீர்வு ஒன்றை வழங்கத் தயாரென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கருத்து, நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு அப்பால், ஒரு தீர்வுத்திட்டத்தை முன்வைக்கத் தயார் என்பதையா உணர்த்துகிறது? என்று தெரியவில்லை.
அத்தகையதொரு நிலைப்பாட்டில் அரசாங்கம் இருந்திருந்தால், எதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் அதனை இதுவரை காலமும் முன்வைக்காமல் தட்டிக்கழித்து வந்ததென்ற கேள்வி எழுகிறது.

மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தீர்வு யோசனையை முன்வைக்காமலேயே, அதனை அவர்கள் ஏற்கமாட்டார்கள் என்று அரசாங்கமே முன்கூட்டிய தீர்மானம் எடுத்திருப்பது ஆச்சரியமான விடயம்.

ஐ.நா. விசாரணை தொடர்பாக ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் முன்கூட்டியே தீர்மானித்துவிட்டு செயற்படுவதாக குற்றஞ்சாட்டும் வழக்கத்தைக்கொண்ட அரசாங்கத்துக்கு, தாம் வழங்கும் தீர்வை கூட்டமைப்பு ஏற்காதென்று தாமே கூறுவது முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒரு விடயம் என்பது தெரியாமல் போனது எப்படியென்று தெரியவில்லை.

ஒருவேளை, தம்மிடம் உள்ள தீர்வுத்திட்டம், தமிழ் மக்களின் அபிலாஷைகளை தீர்க்காது என்பதை தெரிந்துகொண்டு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவ்வாறு கூறியிருக்கலாம்.

அரசாங்கம் வழங்க முன்வரும் ஒரு தீர்வுத்திட்டத்தை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பரிசீலனை செய்த பின்னரே அதுபற்றி தீர்மானிக்கமுடியும். அதற்கான சந்தர்ப்பத்தை அவர்கள் கோரியபோதிலும், அரசாங்கமே வழங்காமல் இருந்துவந்தது.

அதேவேளை, இனப்பிரச்சினை என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சினை அல்ல. அது தமிழ் மக்களின் பிரச்சினையேயாகும். தமிழ் மக்களின் உரிமைகள் சார்ந்த அந்தப் பிரச்சினைக்கு உரிய தீர்வை தேட தமிழ் தேசியக் கூட்டமைப்பு முயற்சிக்கிறதே தவிர, அது அவர்கள் மட்டும் சார்ந்த ஒரு பிரச்சினையல்ல.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டு அவர்களுடன் மட்டும் பேச்சு நடத்தமுடியாதென்று கூறிவந்த அரசாங்கத்துக்கு, இந்த விபரம் கூடப் புரியாதென்று கருதமுடியாது.

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கம் முன்வந்தால், அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூடத் தேவையில்லை.
தமிழர்களுக்கு தேவையான உரிமைகளையும் அதிகாரங்களையும் அரசாங்கமே கூட தன்னிச்சையாக பகிர்ந்தளிக்கமுடியும். அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அல்லது வேறெந்த தரப்பினரோ தடைவிதிக்க முடியாது. ஆனால், அரசாங்கம் அதனை செய்வதற்கு ஒருபோதுமே தயாராக இருந்ததில்லை.

அதை விட, தமிழ் மக்களுக்கு ஏற்புடையதொரு தீர்வை அரசாங்கம் வழங்கிவிட்டால், அதனை கூட்டமைப்பு ஆதரிக்காதுபோனாலும், தமிழ் மக்கள் ஆதரிப்பார்கள்.

தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்ற ஒரு தீர்வை வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் அரசியல் செய்யமுடியாது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் வெற்றிகரமாக அரசியல் செய்ய முடியாதுள்ளமைக்கு, நடைமுறைச் சாத்தியமற்ற விடயங்களை முன்வைப்பதே முக்கிய காரணம். அதுபோலத்தான், தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதொரு தீர்வு முன்வைக்கப்பட்டுவிட்டால், அதை எதிர்த்து கூட்டமைப்பினால் அரசியல் செய்யமுடியாது.

எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனப்பிரச்சினையை வைத்து அரசியல் செய்வதாகவும் அது தீர்க்கப்பட்டுவிட்டால், அவர்களால் அரசியல் நடத்தமுடியாது என்றும் அரசாங்கம் கூறும் குற்றச்சாட்டு அர்த்தமுடையதாக தெரியவில்லை. அரசாங்கத்தின் கையில்தான், இனப்பிரச்சினயை தீர்க்கின்ற பொறுப்பும் வல்லமையும் இருக்கின்றன.  அதனை செயற்படுத்தும் துணிவும் முடிவும்தான் அவர்களிடத்தில் இல்லாத நிலை காணப்படுகிறது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பொறுத்தவரையில் தனது இரண்டாவது பதவிக்காலத்தில், மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தையும் கூட நாடாளுமன்றத்தில் கொண்டிருந்தவர். அந்தக் காலகட்டத்தில், அவர் இனப்பிரச்சினைக்கான தீர்வை கண்டிருக்கமுடியும். அதிகாரப்பகிர்வை சட்டமாக்கியிருக்கமுடியும். அதனை செய்திருந்தால், இந்தத் தேர்தலில் தமிழ் மக்களின் ஆதரவை அவரால் சுலபமாக பெற்றிருக்கமுடியும்.

போரினால் ஏற்படுத்தப்பட்ட அழிவுகளுக்கு கொஞ்சமேனும் பிராயச்சித்தம் தேடியிருக்கலாம். ஆனால், தமிழ் மக்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளித்தாலோ, இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வை வழங்கினாலோ, சிங்கள மக்கள் தன்னை நிராகரித்துவிடுவார்களோ என்றுதான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பயந்தார்.

அவர் பெரும்பான்மைச் சிங்கள மக்களின் ஆதரவை தக்கவைப்பதில் கவனம் செலுத்தினாரே தவிர, தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்த்துவைப்பதில் அக்கறை கொண்டிருக்கவில்லை. அதனால்தான், இரண்டு பதவிக்காலங்கள் அவர் ஜனாதிபதியாக இருந்தபோதிலும், தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணமுடியாது போனது.

அதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றால், அவர், தான் கூறியபடி நாளைக்கே தீர்வை வழங்க முன்வந்துவிடுவார் என்று எதிர்பார்க்கமுடியாது. ஏனென்றால், அவர் இதனை கூறியது தேர்தல் காலத்தில்.

தேர்தல் காலத்தில், அரசியல்வாதிகளும், அரசியல் கட்சிகளும் கொடுக்கின்ற வாக்குறுதிகள் எல்லாமே நடைமுறைக்கு வருவதோ, நிறைவேற்றப்படுவதோ இல்லை. அதுபோலத்தான், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் கூட, அவர் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து மீண்டும் பழைய நிலைப்பாட்டுக்கே சென்றுவிடுவார். அல்லது, தனக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இல்லை என்று கூறி நழுவப்பார்க்கலாம்.

நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் உறுதியாக ஆட்சி செலுத்தியபோதே, இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வை காண முயற்சிக்காத ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மீண்டுமொரு பதவிக்காலத்தை ஆளும் வாய்ப்பு கிடைத்தால், அதனை நிறைவேற்றுவார் என்று எதிர்பார்க்கமுடியாது.

இனப்பிரச்சினையை வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் நடத்துகிறதோ, இல்லையோ தென்னிலங்கை அரசியல் சக்திகள் நன்றாகவே அதனை வைத்து அரசியல் நடத்துகின்றன என்பதே உண்மை. இந்தத் தேர்தலில் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள், எழுப்பப்பட்ட சர்ச்சைகள் எல்லாமே, தமிழர் பிரச்சினையுடன் தொடர்புடையவைதான் என்பதை வைத்துப்பார்க்கும்போது, இந்த முடிவுக்கு வரமுடிகிறது.

ஆக, இனப்பிரச்சினையொன்று இல்லாது போய்விட்டால், இலங்கையின் அரசியல் சக்திகள் எல்லாமே வலுவிழந்து போய்விடும்.  அதனாலேயே, இதனை  தீர்க்க அரச தரப்பு தயாரில்லாமல் இருக்கிறது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .