2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

அருண்ஜேட்லி- ஜெயலலிதா சந்திப்பால் திணறி நிற்கும் தமிழக பா.ஜ.க.

Thipaan   / 2015 ஜனவரி 20 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


இந்தியாவின் நிதியமைச்சர் அருண்ஜெட்லி, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அவரது போயஸ் கார்டன் இல்லத்துக்கே சென்று சந்தித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற கணக்காய்வாளர் குருமூர்த்தியின் இல்லத்திருமண விழாவில் பங்கேற்க வந்த நிதியமைச்சர், ஜெயலலிதாவை சந்தித்துப் பேசியுள்ளார்.


 எந்த நேரத்திலும் இல்லாத அளவிற்கு அ.தி.மு.க. தலைமைக் கழகத்தின் சார்பிலேயே இதற்கு பத்திரிக்கை குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 'மரியாதை நிமித்தமாக மத்திய நிதியமைச்சர் சந்தித்தார்' என்று அச்செய்தி குறிப்பில் விளக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இப்படி இரு மத்திய அமைச்சர்கள் முதல்வராக இருந்த ஜெயலலிதாவை வந்து சந்தித்துவிட்டுச் சென்றார்கள்.


ஒருவர் மத்திய சட்ட அமைச்சராக இருந்த ரவிசங்கர் பிரசாத். அவருடைய சந்திப்பு பற்றி இப்படி பத்திரிக்கை குறிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை. அதன் பிறகு நகர்புறவளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கைய்யா நாயுடு வந்து சந்தித்தார்.

அப்போது அரசின் சார்பிலேயே விளக்கமான பத்திரிக்கை செய்தி ஒன்று வெளியிடப்பட்டது. இப்போது ஜெயலலிதா முன்னாள் முதல்வர் என்பதால் அரசின் சார்பில் பத்திரிக்கை செய்தி வெளிவரவில்லை. அதற்குப் பதில் அ.தி.மு.க.வின் சார்பில் வெளிவந்திருக்கிறது.


அருண்ஜெட்லி- ஜெயலலிதா சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் குறிப்பாக தமிழக அரசியலில் பெரிய திருப்பு முனையையும், பரபரப்பையும் உருவாக்கியிருக்கிறது. மத்தியில் பல அவசரச்சட்டங்களை பிறப்பித்துள்ள பா.ஜ.க. அரசு இப்போது அவற்றை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ஆனால் அதற்குரிய பலம் ராஜ்ய சபையில் பா.ஜ.க.விற்கு இல்லை. மற்ற கூட்டணிக் கட்சிகளை நம்பித்தான் இருக்க வேண்டியுள்ளது.

குறிப்பாக அ.தி.மு.க. போன்ற கட்சிகளின் ஆதரவை எதிர்பார்க்க வேண்டிய அவசியம் அக்கட்சிக்கு ஏற்பட்டிருக்கிறது. அதனால்தானோ என்னவோ அருண்ஜெட்லி சந்திப்பிற்கு பிறகு அவர் பத்திரிக்கையாளர்களை சந்திக்க மறுத்து விட்டார்.

ஆனால் நிருபர்களிடம் பேசிய இன்னொரு மத்திய அமைச்சர் ரவிசங்கர்பிரசாத், 'மக்கள் நல சட்டங்களை நிறைவேற்றவிடாமல் காங்கிரஸ் தடுக்கிறது. அதனால் அ.தி.மு.க. உள்ளிட்ட எந்த நட்புக் கட்சிகளின் ஆதரவையும் நாங்கள் பெறத் தயாராக இருக்கிறோம்' என்று அறிவித்துள்ளார்.


அருண்ஜெட்லி சந்திப்பு, ரவிசங்கர் பிரசாத் ஆகியோரின் அறிவிப்பு எல்லாம் தமிழக பா.ஜ.க.வை தடுமாற்றத்தில் விட்டிருக்கிறது. அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் பொறுப்பேற்றதிலிருந்து மாநிலத்தில் ஆளும் அ.தி.மு.க. அரசை எதிர்த்து கடுமையாக பிரசாரம் மேற்கொண்டிருக்கிறார்.


சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று குற்றம் சாட்டுகிறார். பால் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் கூட நடத்தி விட்டார். அவருடைய குரலை எதிரொலிக்கும் பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் ஆங்காங்கே அ.தி.மு.க. எதிர்ப்பு பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். 'திராவிடக் கட்சிகளுக்கு மாற்று நாங்கள்' என்ற முழக்கத்தை முன் வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறது பா.ஜ.க. அது மட்டுமின்றி தமிழ் என்பதை முன் வைத்து திருவள்ளுவரை போற்றிப் பாராட்டும் வேளையை அக்கட்சியின் எம்.பி.யான தருண் விஜய் செய்து கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் கூட தமிழகம் முழுவதும் கன்னியாகுமரியில் தொடங்கி சென்னை வரை அவர் திருவள்ளுவர் யாத்திரை நடத்தி விட்டுச் சென்றிருக்கிறார்.


இந்தப் பிரசாரத்தின் வலிமையினால் விரைவில் நடைபெறவிருக்கின்ற ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் போட்டியிடுவது பற்றி முடிவு எடுப்போம் என்று பா.ஜ.க. தலைவர்கள் பேசுகிறார்கள். கலந்து ஆலோசனை செய்கிறார்கள். கடந்த மாதத்தில் சென்னை வந்த அமித்ஷா 'மிஷன் 122' என்ற செயற்றிட்டத்தை தமிழக பா.ஜ.க.விற்கு அறிவித்து விட்டுச் சென்றுள்ளார்.

அந்த மிஷனை மனதில் வைத்து 'மிஸ்டு கால்' விட்டு உறுப்பினர்களை சேர்க்கும் மிகப்பெரிய பிரசாரத்தில் பா.ஜ.க. ஈடுபட்டிருக்கிறது. இது போன்ற சந்தர்ப்பத்தில் மத்திய அமைச்சர்கள் ஒவ்வொருவராக அ.தி.மு.க.விற்கு பாராட்டுப் பத்திரம் வாசிப்பதும் தமிழக பா.ஜ.க. தலைமையை திணற வைத்துள்ளது.


பா.ஜ.க. மாநிலத் தலைமைக்கு நெருங்கிய வட்டாரங்களில், 'இந்த சந்திப்புகள் எங்களுக்கு முன் கூட்டிக் கூட சொல்லப்படவில்லை. மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி என்ற முழக்கத்தை முன் வைத்து நாம் சென்று கொண்டிருக்கின்ற வேளையில், அ.தி.மு.க.வின் தலைவரை சந்திப்பது தமிழக பா.ஜ.க.வினரை குழப்புகிறது. அதை நம்பி பா.ஜ.க. பின்னால் வர விரும்பும் வாக்காளர்களையும் குழப்புகிறது.


எல்லாவற்றையும் விட இளைஞர்கள் அனைவரும் பா.ஜ.க.வே எதிர்காலம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்ற வேளையில் இப்படி மத்தியில் உள்ள அமைச்சர்கள் அ.தி.மு.க. ஆதரவு மனப்பான்மையுடன் செயல்படுவது தமிழக பா.ஜ.க.வினர் அநாமமைய தொலைபேசி அலைப்பின் மூலம் உறுப்பினர் சேர்க்கும் பிரசாரத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது' என்று பேச்சு அடிபடுகிறது.


தமிழக பா.ஜ.க.விற்குள் இப்படியொரு குழப்பம் நீடிக்க, அ.தி.மு.க.விற்குள் இனம்புரியாத சந்தோஷம் நிலவுகிறது. முன்பு பெங்களூர் சொத்துக் குவிப்பு வழக்கில் கீழ்நீதிமன்றத்தில்; தீர்ப்பு வெளிவரவிருந்த நேரத்தில் மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார்.


அதற்கு அப்போது தி.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதன் பிறகு நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கத்தில் ரவிசங்கர் பிரசாத்திடம் இருந்த சட்ட இலாகா பறிக்கப்பட்டது. அது மட்டுமின்றி அவருக்குப் போட்டியாக பீஹார் மாநில அரசியலில் இருக்கும் ரூடி மத்திய அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார்.

இந்த சூழ்நிலையில் இப்போது முன்னாள் முதல்வரின் மேன்முறையீட்டு வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நேரத்தில் அருண்ஜேட்லி வந்து பார்த்திருக்கிறார் என்று தமிழகத்தில் அடுத்த கட்ட சர்ச்சை துவங்கவிருக்கிறது.


ஏற்கெனவே தி.மு.க.வின் அதிகார பூர்வ நாளிதழான முரசொலி பத்திரிக்கையில் 'அருண் ஜேட்லி- ஜெயலலிதா' சந்திப்பு குறித்து செய்தி வெளியிட்டு, இது பல சந்தேகங்களை கிளப்புவதாக இருக்கிறது என்று சுட்டிக்காட்டியிருக்கிறது. இந்த விவகாரம் மூலம் பா.ஜ.க.விற்கு தமிழகத்தில் உருவாகும் நற்பெயரை உடைக்க பெரும் பிரசாரமே துவங்கும் என்பதில் சந்தேகமில்லை.


அதே நேரத்தில் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற பிறகு பா.ஜ.க. மேலிடத் தலைவர்கள் யாரும் வந்து அவரை சந்திக்கவில்லை. அக்கட்சிக்கும், அ.தி.மு.க.விற்கும் ஏதோ பெரும் முரண்பாடு இருக்கிறது என்ற பிரசாரம் மேலோங்கி நின்றது.


அதைத் தொடர்ந்து அ.தி.மு.க.விற்கு போட்டியாக ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் பா.ஜ.க. தங்கள் வேட்பாளரை நிறுத்தும் என்று கூட செய்திகள் அடிபட்டன. இதற்கு எல்லாம் மேலாக மாநில அரசு நிர்வாகம் முடங்கி விட்டது என்ற இமேஜ§ம், மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் முட்டல் மோதல்தான் நிலவுகிறது என்ற கருத்தும் பரவிக் கொண்டிருந்தது. இது இப்போது அருண்ஜேட்லியின் சந்திப்பால் முறியடிக்கப்பட்டுள்ளது.


அ.தி.மு.க.வும்- பா.ஜ.க.வும் எப்போதும் நட்புக் கட்சிகள்தான் என்ற பெயர் கிடைத்திருக்கிறது. இது 'செயல்படாத அரசு' என்று குற்றம் சாட்டும் எதிர்கட்சிகளின் பிரசாரத்தை மறுக்க பேருதவியாக இருக்கும். அது மட்டுமின்றி, வருகின்ற ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் பா.ஜ.க. போட்டியிடாமல் போவதற்கும் வாய்ப்பு உருவாகும்.

அப்படியே போட்டியிட்டாலும், 'அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் நெருங்கிய கூட்டாளிகள்' என்ற நினைப்பில் ஸ்ரீரங்கம் தொகுதியில் உள்ள பா.ஜ.க. வாக்காளர்கள் அ.தி.மு.க. வேட்பாளருக்கே வாக்களிக்கும் சூழ்நிலை உருவாகும் என்றே தெரிகிறது. அரசியல் ரீதியாகவும் சரி, சட்ட ரீதியாகவும் சரி, இடைத் தேர்தல் ரீதியாகவும் சரி 'அருண்ஜேட்லி- ஜெயலலிதா சந்திப்பு' அ.தி.மு.க.விற்கு ஒரு முக்கியத்துவத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது என்பது மட்டும் மறுக்கமுடியாத உண்மை.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .