2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஜனாதிபதி நினைத்தால் அது தான் சட்டம்

Thipaan   / 2015 பெப்ரவரி 01 , பி.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத் திட்டத்தில் நாட்கள் குறிப்பிடப்படாத 100 வாக்குறுதிகளில் ஒன்றாக ஷிராணி பண்டாரநாயக்க மீண்டும் கடந்த புதன்கிழமை((28) பிரதம நீதியரசர் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.  

ஆனால், நாம் அறியாத ஏதோ காரணத்தினால் மறுநாளே அவர் அப் பதவியியலிருந்து ஓய்வு பெற்றார். அதன் பிரகாரம் ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தினால் குற்றப் பிரேரணையொன்றின் மூலம் பதவிநீக்கம் செய்யப்பட்ட அவரது நற்பெயரை பாதுகாக்கவே அவர் மீண்டும் பிரதம நீதியரசர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

அரசாங்கத்தின் வேலைத் திட்டத்திற்கான 100 நாட்களில் 23 நாட்கள் ஏற்கெனவே சென்றுவிட்டன. அதற்கிடையே அவ் வேலைத் திட்டத்தில் நாட்கள் குறிப்பிடப்படாமல் முன்வைக்கட்டுள்ள பல வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

வற்றுள் எரிபொருட்களின் விலைகளை குறைத்தல், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் தொழில்சார் உரிமைகளை மீண்டும் வழங்கியமை, ஷிராணி பண்டாரநாயக்கவை மீண்டும் அவரது பவிக்கு நியமித்தல், ஆகியனவும் அடங்கும்.

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, வியாழக்கிழமை(29) சமர்ப்பித்த குட்டி வரவு-செலவு திட்டத்தின் முலம் மேலும் பல நாட்கள் குறிப்பிடப்படாத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன. நாட்களை குறிப்பிட்டு முன்வைக்கப்பட்டுள்ள வாக்குறுதிகளில் இன்று வரை மூன்று முக்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டியுள்ள போதிலும் அவற்றில் குட்டி வரவு-செலவு திட்டம் பற்றிய வாக்குறுதி மட்;டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது.

இம் முறை ஜனாதிபதித் தேர்தலின் போது எதிர்க் கட்சிகள் முன்வைத்த பிரதான வாக்குறுதியான நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதற்காக ஜனவரி 19 ஆம் திகதி சட்ட வரைபொன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அது நிகழவில்லை. அதேபோல் தற்போதைய தேர்தல் முறையை மாற்றி அமைப்பதற்கான சர்வக் கட்சி குழுவொன்று ஜனவரி மாதம் 28 ஆம் திகதி நியமிக்கப்பட வேண்டும் அதுவும் நிகழவில்லை.

நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வது தொடர்பான புதிய ஜனநாயக முன்னணி அரசாங்கத்தின் வாக்குறுதி அவ்வாறே நிறைவேற்றப்படப் போவதில்லை என்பது இப்போது தெரிய வந்துள்ளது. இப்போது அரசாங்கம் அம் முறையை இரத்துச் செய்யாது நிறைவேற்று ஜனாதிபதியின் சில அதிகாரங்களை மட்டும் குறைப்பதாக கூறுகிறது.

குறைக்கப்படப் போகும் அதிகாரங்களின் அளவை பொறுத்தே அது நியாயமா இல்லையா என்பதை தீர்மானிக்கலாம். அவ்வாறு அதிகாரங்கள் குறைக்கப்பட்டதன் பின்னரும் தொடர்ந்தும் நாடாளுமன்றத்தை புறக்கணித்து செயற்படக்கூடிய ஜனாதிபதி ஒருவர் இருந்தால் அது நிச்சயமாகவே அரசாங்கம் மக்களுக்கு அளித்த பிரதான வாக்குறுதியை மீறியதாகும்.

முன்னாள் இராணுவத் தளபதியின் தொழில்சார் உரிமைகளை மீண்டும் வழங்க அரசாங்கம் எடுத்த நடவடிக்கையானது ஒரு வரலாற்று தவறை நிவர்த்தி செய்வதாகும். இந்த நாட்டில் பெரும்பாலான மக்கள், போரை முடிவுக்கு கொண்டு வந்ததை விரும்புகிறார்கள். அவ்வாறு போரை முடிவுக்கு கொண்டு வந்தமையின் பெருமையை மஹிந்த ராஜபக்ஷ கைப்பற்றிக் கொண்டிருந்த போதிலும் பொன்சேகா என்ற காரணி இல்லாதிருந்தால் இன்னமும் போர் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.

பலர் கூறுவதைப் போல் போரை முடிவுக்கு கொண்டு வந்ததன் பெருமை மஹிந்த ராஜபக்ஷவுக்குறியதல்ல. அவர் அரசாங்கத்தின் போர் வெற்றிக்கான பிரதான காரணியல்ல. போர் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் போரை நிறுத்துமாறு மேற்குலகில் இருந்து வந்த மா பெரும் நெருக்குதலை அசையாது எதிர்க் கொண்ட பெருமை மட்டும் தான் மஹிந்த ராஜபக்ஷவுக்குறியதாகும். அந்த நெருக்குதல் சாதாரண நெருக்குதலல்ல. ஆனால், போர் வெற்றி உறுதிப்டுத்தப்படுவதற்கு வேறு பல காரணிகளே ஏதுவாகின.

மஹிந்த பதவிக்கு வரு முன்னரே யாழ். குடாநாட்டை படையினர் கைப்பற்றிக் கொண்டமை, ரணில் விக்ரமசிங்கவின் சமாதானத் திட்டத்தினால் புலிகள் அமைப்பு பிளவுபட்டமை, அத் திட்டத்தின் காரணமாக புலிகளின் நம்பகத்தன்மை சர்வதேச ரீதியில் கேள்விக்குறியாகியமை, அதன் காரணமாக சுமார் 30 நாடுகள் புலிகளை தடை செய்தமை, அதன் காரணமாக புலிகளுக்கு நிதி திரட்டவும் ஆயுதங்களை கொண்டு வரவும் தடைகள் ஏற்பட்டமை, பல நாடுகள் புலிகளுக்கு எதிராக புலனாய்வு தகவல்களை வழங்க முன்வந்தமை, சமாதானத் திட்டம் அமுலில் இருந்த காலத்தில் பல புலி உறுப்பினர்கள் திருமணம் செய்து கொண்டதால் போருக்கான அவர்களது தியாக உணர்வு குறைந்தமை, முன்னாள் இராணுவத் தளபதி லயனல் பலகல்லையின் காலத்தில் உருவாக்கப்பட்ட ஆழ ஊடுருவி தாக்கும் படையணி மற்றும் புலிகள், தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களையும் இந்தியாவையும் பகைத்துக் கொண்டமை மற்றம் பொன்சேகா, கோட்டாபய ஆகிய காணிகள் அவற்றுள் அடங்கும்.

அவற்றில் பொன்சேகா மற்றும் கோட்டாபய ஆகிய காரணிகள் அரசாங்கத்தின் போர் வெற்றிக்கு ஆற்றிய பங்கு மிகப் பெரியதாகும். வேறு பல காரணிகள் இல்லாதிருந்தாலும் இந்த இரண்டு காரணிகளால் அவற்றை சமாளித்துக் கொண்டு அரசாங்கம் போரை வெற்றி கொண்டிருக்க முடியும்.

25 ஆண்டுகளாக போரில் வெற்றி பெற முடியாத காரணங்களை சரியாக அடையாளம் கண்டு அவற்றுக்கு பரிகாரம் சிபாரிசு செய்தவர் பொன்சேகாவே. படைப் பலத்தை மும்மடங்காக்கியமை, உளவுத் துறையை வளர்த்தெடுத்தமை, படையினருக்கான சேமநலத் திட்டங்களை உருவாக்கியமை மற்றும் எட்டுப் பேர் கொண்ட விசேட படையணிகள் போன்ற புதிய போர் உத்திகளை கண்டுபிடித்தமை அவரது பரிகாரங்கள்pல் சிலவாகும்.

ஆயினும் பாதுகாப்புச் செயலாளராக கோட்டாபய ராஜபக்ஷ நியமிக்கப்படாவிட்டிருந்தால் பொன்சேகாவுக்கு இந்த தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடியாது போயிருக்கவும் கூடும். கோட்டாபய ஒரு படை வீரர் என்பதாலும் ஜனாதிபதியின் சகோதரர் என்பதனாலும் பொன்சேகாவுக்கு அவர் மூலம் தமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடிந்தது.

உறவினர் என்பதனாலேயே மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபயவை பாதுகாப்புச் செயலாளராக நியமித்தார் என்பது உண்மை. அது அரசியல் நாகரிகமற்றச் செயல் என்பதும் உண்மை. ஆனால் அது பொன்சேகாவுக்கு உதவியது. அதன் மூலம் தமக்கு வேண்டியவற்றை அவர் பெற்றுக் கொள்ள இலகுவாகியது. படை வீரரான கோட்டாபயவும் அந்த கோரிக்கைகளின் அவசியத்தை நன்றாக உணர்ந்தார். ஜனாதிபதி தமது சகோதரர் என்பதால் பொன்சேகாவுக்கு தேவையானவற்றை ஜனாதிபதியை வற்புறுத்தியாவது பெற்றுக் கொடுக்க அவர் நடவடிக்கை எடுத்தார்.

ஆனால், போர் வெற்றியை அடுத்து பொன்சேகா மேலும் படைகளை பலப்படுத்த எடுத்த முயற்சி, ராஜபக்ஷ குடும்பத்தை சந்தேகங் கொள்ளச் செய்தது. அதனால் அவர் பதவி உயர்வு என்ற போர்வையில் இராணுவத் தளபதி பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அப்போது தான் மோதல் உருவாகியது. பொன்சேகாவின் பதவி, பதக்கங்கள், ஓய்வூதியம் பறிக்கப்பட்டு அவரது பெயரும் இராணுவ வரலாற்றிலிருந்து நீக்கப்பட்டது.

ராஜபக்ஷ குடும்பம் இவ்விடயத்தில் தமது பாதுகாப்பைப் பற்றி சிந்தித்து செயற்பட்மை தவறல்ல. ஆனால், போர் வெற்றியின் அதி முக்கிய காரணியான பொன்சேகாவின் பட்டம், பதவி, பதக்கங்களை பறித்து அவரது பெயரை இராணுவ வரலாற்றிலிருந்து நீக்குவதானது அரசாங்கம் என்ற வகையில் ஒரு குற்றச் செயல் என்றே கூற வேண்டும். புதிய அரசாங்கம் அவரது தொழில்சார் உரிமைகளை வழங்கும் போது தமிழ் கட்சிகள் உட்பட எவருமே எதிர்ப்பு தெரிவிக்காததற்கு அதுவே காரணமாகும்.

ஷிராணிபண்டாரநாயக்கவின் கதை அதை விட வித்தியாசமானதாகும். அவரும் இதற்கு முன்னர் இருந்த பல பிரதம நீதியரசர்களைப் போலவே சாதாரரண பிரதம நீதியரசர் தான். இந் நாட்டு ஜனநாயகத்திற்கு பேரடியாக அமைந்த 18ஆவது அரசியலமைப்புத் திருத்தம் ஷிராணியின் காலத்திலேயே உயர் நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது.

கடந்த அரசாங்கம் அவர் மூலம் அந்த திருத்தத்துக்கு சட்ட அங்கிகாரத்iதை பெற்றுக் கொண்டு அவரை பதவியிலிருந்து நீக்கியது. இந்த அரசாங்கம் அவரது பதவியை மீண்டும் அவருக்கு வழங்கி அந்த திருத்தத்தையும் இரத்துச் செய்யப் போகிறது. ஜனநாயகத்தின் பார்வையில் கடந்த அரசாங்கம் செய்தது தவறே. இந்த அரசாங்கம் செய்தது சரியானதாகும்.

ஆனால் இரண்டு அரசாங்கங்களும் ஷிராணி பண்டாரநாயக்க சம்பந்தமாக நடவடிக்கை எடுத்த முறை பல கேள்விகளை எழுப்புகின்றன.

தனிப்பட்ட பிரச்சினையாகவே ராஜபக்ஷ குடும்பத்துக்கும் ஷிராணிக்கும் இடையே பிரச்சினை உருவாகியது. அந்தப் பணிப்போர் 2012 ஆம் ஆண்டு இறுதியில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் அறிமுகப்படுத்திய திவிநெகும சட்டமூலத்தின் காரணமாக வெளிப்படையான போராக மாறியது.

அந்த சட்ட மூலத்துக்கு சகல மாகாண சபைகளினதும் அங்கிகாரத்தை பெற வேண்டும் என பிரதம நீதியரசர் ஷிராணி தீர்ப்பு வழங்கினார். அப்போது வட மாகாண சபை தெரிவு செய்யப்படாதிருந்ததினால் இது தமது சட்ட மூலத்தை முடங்கச் செய்ய வழங்கிய தீர்ப்பாகவே அரசாங்கம் கருதியது. அதுவும் சரியாக இருக்கலாம். ஏனெனில் ஷிராணி 18ஆவது அரசியலமைப்பு திருத்தத்தையும் அங்கீகரித்தவர்.

ஷிராணியின் அந்தத் தீர்ப்புக்கு பலமான ஆதாரங்கள் இருக்கவும் இல்லை. அதேபோல் திவிநெகும சட்டத்துக்காக அரசாங்கம் பிரதம நீதியரசருடன் மோதுமளவுக்கு அதில் எந்த முக்கியத்துவமும் இருக்கவில்லை. இது கௌரவப் பிரச்சினையே. இறுதியில் ஷிராணியின் பதவி பறிக்கப்பட்டது.

அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நாடாளுமன்ற தெரிவுக் குழுவொன்றின் மூலமே விசாரிக்கப்பட்டன. அத் தெரிவுக் குழுவின் பெரும்பான்மையினர் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர்களாக இருந்தனர்.

அவர்களில் சிலர் ஷிராணி பண்டாரநாயக்கவின் தீர்ப்புக்களால் பாதிக்கப்பட்டவர்களாகவும் இருந்தனர். எனவே, இந்த விசாரணை ஷிராணியை குற்றவாளியாக்க வேண்டும் என்பதற்காகவே நியமிக்கப்பட்டது என்பது மிகவும் தெளிவாக இருந்தது. இங்கே ராஜபக்;ஷ குடும்பத்தின் நோக்கமும் உத்திகளும் நாகரிகமற்றதாக இருந்த போதிலும் அந் நடவடிக்கை சட்ட விரோதமாகவில்லை.

ஷிராணிக்கு எதிரான குற்றப் பிரேரணையில் அவர் சில குற்றங்களை இழைத்தார் என்று இருந்ததே தவிர அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருக்க வில்லை. அந்தப் பிரேரணை தான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதிக்கும் அனுப்பப்பட்டது. எனவே, அவர் முறைப்படி பதவி நீக்கம் செய்யப்படவில்லை என்று தற்போதைய அரசாங்கத்தின் தலைவர்கள் கூறுவது சரியே. அந்த அடிப்படையில் தான் அவர் மீண்டும் பதவியில் அமர்த்தப்பட்டார்.

ஆனால், நிறைவேற்றப்பட்ட குற்றப் பிரேரணையில் சிராணியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்படவில்லை என தற்போதைய அரசாங்கத்தின் தலைவர்கள் கூறிய போதிலும் அப் பிரேரணை தெரிவுக் குழுவால் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் தெரிவுக்குழுவின் முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர்களும் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

அதாவது, அவர் தெரிவுக்குழுவால் குற்றவாளியாக காணப்பட்டுள்ளார். தெரிவுக்குழு நாகரிகமற்றதாயினும் அது சட்டபூர்வமானதாகும். அவ்வாறிருக்க சட்ட பூர்வமாக குற்றவாளியாக காணப்பட்ட ஒருவரை நீதியரசராக மீண்டும் பதவியில் எவ்வாறு அமர்த்த முடியும் என்ற கேள்வி எழுகிறது. இது ஜனாதிபதித் தேர்தல் தினத்தில் முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், ஜனாதிபதி மாளிகையில் இருந்தமை அம்பலமானதன் பின்னரும் தொடர்ந்தும் பதவியில் இருந்ததற்கு சமமாகும்.

மொஹான் பீரிஸ் அன்றிரவு ஜனாதிபதி மாளிகையில் இருந்தமை தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. அவரும் ஒருபோதும் அதனை நிராகரிக்கவில்லை. அது மிகவும் மோசமான நாகரிகமற்ற செயலாகும். அது அம்பலமானதன் பின்னராவது அவர் பதவியிலிருந்து விலகியிருக்க வேண்டும். அவர் அவ்வாறு செய்யாததால் அவர் பதவியில் இருக்கும் போதே பழைய குற்றப் பிரேரணையின் குறைப்பாட்டை பாவித்து தற்போதைய அரசாங்கம் ஷிராணியை பிரதம நீதியரசராக வருமாறு மீண்டும் அழைத்து பீரிஸை தாமாக வீட்டுக்குச் செல்ல வைத்தது.

பதவிக்கு நியமிப்பதற்கு முன்னரும் பீரிஸின் நடத்தை சர்ச்சைக்குறியதாக இருந்தது. சட்ட மா அதிபராக இருக்கும் போது அவர் காணாமற்போன ஊடகவியலாளர் பிரதீப் எக்னெலிகொட, பிரான்ஸில் இருப்பதாக கூறியமை உதாரணமாகும்.

சிராணியும் பீரிஸ§ம் ஒரே விதமாகவே பதவி நீக்கம் செய்யப்பட்;டனர். இரண்டு சந்தர்ப்பங்களிலும் நிறைவேற்று ஜனாதிபதி முறையே நிர்ணயகரமான காரணியாக இயங்கியது. இருவரும் நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரத்தினாலேயே நீக்கப்பட்டனர்.

குற்றப் பிரேரணை நிறைவேற்றப்பட்டதன் பின்னரும் தாமே பிரதம நீதியரசர் எனக் கூறிக் கொண்டு ஷிராணி பதவியில் இருக்க முயற்சி செய்தார். அதற்காக பொலிஸாரின் பாதுகாப்பையும் கோரினார்.

ஆனால் குற்றப் பிரேரணயின் மூலம் அவர் பதவி நீக்கம் செய்யப்படாத நிலையிலும் குற்றப்ப பிரேரணையின் அடிப்படையில் என்று கூறி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது அதிகாரத்தை பாவித்து பீரிஸை பிரதம நீதியரசராக நியமித்து நீதிமன்றத்திற்கு அனுப்பினார். வேறு வழியின்றி ஷிராணி வீட்டில் தங்கிவிட்டார்.

அதேபோல் பீரிஸ், தொழில் நாகரிகத்தை மீறினார் என்று கூறி தற்போதைய அரசாங்கம் பீரிஸை பதவி விலகுமாறு உத்தியோகபற்றற்ற முறையில் கோரியது. அவர் கேட்கவில்லை. அப்போது பழைய குற்றப் பிரேரணையிலிருந்த குறைப்பாட்டை பாவித்து அரசாங்கம், ஷிராணியை நீதிமன்றத்துக்கு அனுப்பியது. வேறு வழியின்றி பீரிஸ§ம் வீட்டிலேயே தங்கிவிட்டார்.

ஷிராணி மீண்டும் பதவியில் அமர்த்தப்பட்ட முறையில் பிரச்சினைகள் இருந்த போதிலும் அரசியல் பழிவாங்கலாகவே அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார் என்பதை எவரும் மறுக்க முடியாது. எனவே அவருக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் என்பதையும் எவரும் நிராகரிக்க முடியாது.

வரலாறு வேடிக்கையாகவும் இருக்கிறது. அன்று, ஷிராணியின் பதவியை பறித்த அரசாங்கத்தின் பிரதான கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தவர் அதே கட்சியின் தலைவராகவும் ஜனாதிபதியாகவும் வந்து அவருக்கு மீண்டும் அந்தப் பதவியை வழங்குகிறார். அன்று அவரை பதவி நீக்கம் செய்ய பாவிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முக்கிய உறுப்பினரும் தமது மனைவியின் பதவி உயர்வு விடயத்தில் ஷிராணி வழங்கிய தீர்ப்பொன்றினால் அவரை பழிவாங்க காத்துக் கொண்டிருந்தவருமான  ராஜித்த சேனாரத்ன இன்று அரசாங்கத்தின் பேச்சாளராக அவருக்கு மீண்டும் பதவி வழங்குவதை நியாயப்படுத்துகிறார்.

சட்டம் என்பது சட்டபூர்வமாக்கப்பட்ட ஆளும் வர்க்கத்தின் விருப்பமே என கார்ல் மார்க்ஸ் ஒரு முறை கூறினார். ஆளும் வர்க்கத்தின் என்பதற்கு பதிலாக ஆளும் குழுவின் அல்லது ஆட்சியாளரின் என்று குறிப்பிட்டால் அந்தக் கூற்று இன்றைய நிலைமைக்கும் பொருத்தமாக இருக்கிறது.
 
   

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .