Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Kanagaraj / 2015 பெப்ரவரி 15 , பி.ப. 09:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
வட மாகாண சபையில் கடந்த 10ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிறைவேற்றிய இன ஒழிப்பு தொடர்பான தீர்மானத்தின் மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் அவரது அரசாங்கத்தின் ஏனைய தலைவர்களையும் பெரும் கஷ்டத்திற்குள்ளக்கியுள்ளது என்றே கூற வேண்டும்.
தமக்கு மொத்தமாக வாக்களித்த தமிழ் மக்களைப் பார்த்து இந்த தீர்மானத்தை கண்டிக்கவும் முடியாத அதேவேளை தென் பகுதி மக்களைப் பார்த்தும் நல்லிணக்கத்தின் பார்வையில் அதனை ஆதரிக்கவும் முடியாத நிலைக்கு அரசாங்கத்தின் தலைவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
அதேவேளை இந்த தீர்மானத்தை பாவித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் அரசியல் இலாபம் அடைய எடுக்கும் முயற்சியும் அவர்களுக்கு பெரும் தலையிடியாக உள்ளது.
ஒரு வகையில் கடந்த ஜனவரி 8ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெறாது மஹிந்த ராஜபக்ஷவே தொடர்ந்தும் ஜனாதிபதியாக இருந்திருந்தால் வட மாகாண சபையில் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டிருக்குமா என்பதும் சந்தேகமாகத் தான் இருக்கிறது.
ஏனெனில் அமெரிக்கா இம்முறை ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கை விடயத்தில் கடுமையாக இருக்கப் போவதில்லை என்று தெரியவரவேதான் தமிழர் தரப்பில் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான சர்வதேச விசாரணை பற்றிய அக்கறை மீண்டும் தூண்டப்பட்டது. அதன் விளைவாகவே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அமைச்சர் என்ற வகையில் தமது ஜனநாயக உரிமைகள் மீறப்பட்டதனால் தான் மைத்திரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் இருந்து விலகி ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முன்வந்தார். எனவே, ஜனநாயமும் நல்லாட்சியுமே ஜனாதிபதித் தேர்தலின் போது அவரது பிரதான சுலோகமாகியது. அதன் படி ஜனநாயகத்துக்கும் நல்லாட்சிக்குமான சில குறிப்பிட்ட விடயங்களை தேர்தல் வாக்குறுதிகளாக அவர் வழங்க வேண்டியிருந்தது.
அதேவேளை, அவர் மேற்கத்தேய லிபரல் கொள்கைகளைக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கூட்டு சேரவும் நிர்ப்பந்திக்கப்பட்டார். தனிப்பட்ட முறையில் விக்கிரமசிங்க அவ்வளவு இனவாத கொள்கைகளைக் கொண்டவரல்ல. எனவே மைத்திரிபால, பதவிக்கு வந்ததன் பின்னர் நல்லாட்சியையும் இன நல்லிணக்கத்தையும் நோக்கிய பல நடவடிக்கைகளை எடுத்தார்.
கொழும்பில் வீதித் தடைகள் அகற்றப்பட்டன. இரண்டு தசாப்தங்களுக்கு மேல் வட பகுதியை தனி நாட்டைப் போல் வேறுபடுத்திக் காட்டிக் கொண்டிருந்த ஓமந்தை சோதனைச் சாவடியிலும் பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. வெளிநாட்டு கடவுச் சீட்டு வைத்திருப்போர் வட மாகாணத்துக்குச் செல்வதற்கான கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டன. உயர் பாதுகாப்பு வலயங்களுக்காகவென தமிழ் மக்களிடமிருந்து இராணுவம் கைப்பற்றிக் கொண்டிருந்த வட பகுதி காணிகளில் ஆயிரம் ஏக்கர் மீண்டும் சொந்தக்காரர்களிடம் பகிர்ந்தளிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இராணுவத்தைப் பற்றி, வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களிடம் நல்ல அபிப்பிராயம் இல்லை. நீண்ட காலமாக அப் பகுதிகளில் தமிழ் கிளர்சிக்காரர்களுக்கு எதிராக முப்படைகளும் போர் தொடுத்து வந்த நிலையில் இது ஆச்சரியப்படத்தக்க விடயமும் அல்ல. மக்கள் விடுதலை முன்னணியின்(ஜே.வி.பி) இரு கிளர்ச்சிகளின் போதும் அவற்றின் பின்னர் சில காலம் செல்லும் வரையிலும் தென் பகுதி மக்களிடமும் இராணுவத்தைப் பற்றி நல்ல அபிப்பிராயம் இருக்கவில்லை.
இந்த நிலையில் தான் வட மாகாண ஆளுநராக இராணுவ அதிகாரியை நியமிக்க வேண்டாம் என தமிழ்த் தலைவர்கள் கேட்டார்கள். இது நிறைவேற்ற முடியாத கோரிக்கை அல்ல. ஆனால், அதனை நிறைவேற்றுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வட மாகாண முதல்வர் சி.வி. விக்கினேஸ்வரனுக்கு வாக்குறுதியளித்திருந்தும் அதனை நிறைவேற்றவில்லை.
ஆனால், மைத்திரிபால சிறிசேன பதவிக்கு வந்தவுடன் சகல மாகாணங்கிலும் ஆளுநர்களை மாற்றும் போது வட மாகாணத்துக்கும் கிழக்கு மாகாணத்துக்கும் சிவில் அதிகாரிகளை ஆளுநர்களாக நியமித்தார். அதேபோல் வட மாகாண முதல்வரோடு மோதலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மாகாண செயலாளரையும் இடமாற்றம் செய்தார்.
இந்தச் செயலாளரையும் மாற்றுமாறு விக்னேஸ்வரன், ஜனாதிபதி ராஜபக்ஷவிடம் கேட்டு இருந்தார். ஆனால், நல்லிணக்கத்தை விட மாகாண ஆட்சியை தமது கட்சி கைப்பற்றிக் கொள்ள வேண்டும் என்பதில் மட்டுமே அக்கறையாக இருந்த ராஜபக்ஷ அந்தக் கோரிக்கைiயையும் நிறைவேற்றவில்லை.
இவ்வாறு தமிழ் மக்களும் தலைவர்களும் விரும்பும் பல நடவடிக்கைகளை எடுத்த மைத்திரிபால சிறிசேன இவ் வருட சுதந்திர தின உரையின் போது நல்லிணக்கத்தைப் பற்றி முக்கிய கருத்தொன்றை வெளியிட்டார். அரசாங்கம் போரில் வெற்றி கண்டாலும் தமிழ் மக்களினதும் சிங்கள் மக்களினதும் மனங்களை ஒன்று சேர்க்க தவறிவிட்டது என்பதே அக் கருத்தாகும்.
தேர்தல் கால அவரது கருத்துக்களாலும் ஜனாதிபதியானதன் பின்னரான அவரது நடவடிக்கைகளாலும், தமிழ் தலைவர்களும் கவரப்பட்டார்கள் போலும், எனவே, அரசாங்கத்தின் எந்தவொரு நடவடிக்கையிலும் கலந்து கொள்ளாமல் இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள்; தேர்தல் வாக்குறுதியொன்றை நிறைவேற்றும் வகையில் அரசாங்கம் நியமித்த தேசிய நிறைவேற்று சபையில் அங்கம் வகிக்க முன்வந்தார்கள். 1972ஆம் ஆண்டு முதல், தமிழ்த்; தலைவர்கள் சுதந்திர தின தேசிய வைபவங்களில் கலந்து கொள்ளாத போதிலும் கூட்டமைப்பின் தலைவர்கள் இம் முறை சுதந்திர தின பிரதான வைபவத்தில் கலந்து கொண்டனர்.
ஆனால், அரசாங்கத்தின் இந்த முற்போக்கான செயற்பாடுகளே மறுபுறத்தில் அரசாங்கத்துக்கும் தமிழ் தலைவர்களுக்கும் இடையிலான ஒரு வித மோதலுக்கும் வித்திட்டுள்ளன. அரசாங்கத்தின் மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளும் ஊழல்களை முறியடிப்பதற்கான வாக்குறுதிகளும் காரணமாக மேற்கத்திய நாடுகள் இலங்கை விடயத்தில் தமது கடும் போக்கை ஓரளவு தளர்த்த முற்பட்டிருப்பதாக தெரிகிறது. இம் முறை ஐ.நா மனித உரிமை பேரவையில்; இலங்கை தொடர்பான மனித உரிமை அறிக்கை பின்போடப்படும் எனவும் கூறப்படுகிறது.
எனவே, இலங்கையின் மனித உரிமை தொடர்பான சர்வதேச விசாரணை கைவிடப்படுமா என்று பலர் சந்தேகிக்கின்றனர். இதன் விளைவாகவே வட மாகாண சபையும் மேற்படி தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. கடந்த வருடம் தீர்மானித்ததைப் போல் மனித உரிமை பேரவையானது சர்வதேச விசாரணையை தொடர்வதாக இருந்தால் இந்த தீர்மானம் நிறைவேற்றப்படத் தேவையில்லை.
இந்த தீர்மானத்தில் முக்கிய இரண்டு கருத்துக்கள் கூறப்பட்டு இருக்கின்றன. இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான இன ஒழிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன என்பதும் அவை தொடர்பாக சர்வதேச விசாரணை நடைபெற வேண்டும் என்பதுமே இந்த இரண்டு கருத்துக்களாகும்.
இவை இரண்டும் சர்ச்சைக்குரிய கருத்துக்களாகும். கடந்த வருடம் இதே போல் இன ஒழிப்பு என்ற வார்த்தையுடன் வட மாகாண சபைக்கு இதேபோன்ற தீர்மானம் ஒன்று கொண்டு வரப்பட்ட போது முன்னாள் நீதியரசரான முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அந்த சொற் பிரயோகத்தை விரும்பவில்லை. அதேவேளை வெளியுறவு விடயங்களில் அதிகாரம் இல்லாத மாகாண சபையொன்றினால் சர்வதேச சமூகத்திடம் கோரிக்கைகளை விடுக்க முடியுமா என்ற கேள்வியும் அப்போது எழுந்தது. ஆனால், இம் முறை முதலமைச்சரே இந்தத் தீர்மானத்தை முன்வைத்துள்ளார்.
போரின் போது போரில் ஈடுபட்டிருந்த இரு சாராரினாலும் சாதாரண மக்கள் கொல்லப்பட்டார்கள். சாதாரண மக்களாக இருந்தாலும் சந்தேகிக்கப்பட்ட எல்லோரும் இரு சாராரினாலும் கொல்லப்பட்டனர். போரின் இறுதிக் கட்டத்தில் புலிகள், மக்களை கேடயமாக பாவித்தார்கள். அரச படைகள் அதனை அறிந்தும் தாக்குதல்களை நடத்தினார்கள். இறுதியில் சரணடைந்த புலிகளின் தலைவர்களான எழிலன், யோகி போன்றோர்களும் சாதாரண மக்களும் படையினரால் 16 பஸ்களில் ஏற்றிச் செல்லப்பட்டார்கள் என்றும் அவர்கள் திரும்பி வரவில்லை என்றும் காணாமற்போனோர் தொடர்பான ஆணைக்குழு முன் கூறப்பட்டது.
இது, பிரச்சினையின் ஒரு புறமாகும். மறுபுறத்தில் போரின் போது அதன் கோரத்தன்மையை தாங்காது ஆயிரக் கணக்கான தமிழர்கள் அரசாங்கத்தின் கோட்டையான கொழும்பில் தான் தஞ்சமடைந்தார்கள். இன்னமும் வாழ்கிறார்கள். போர் முடிவடையும் கட்டத்தில் போரில் சிக்குண்ட மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வரவே முயற்சித்தனர். இந்த நிலையில் தான் இன ஒழிப்பு என்ற வாதம் வெகுவாக சர்ச்சைக்குரியதாகிறது.
இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியதன் பின்னர் முதலமைச்சர் விக்னேஷ்வரன், ஜனாதிபதி மைத்திரிபாலவை சந்தித்தார். 'இது உங்களுக்கு எதிரான தீர்மானம் அல்ல, முன்னாள் அரசாங்கத்துக்கு எதிரான தீர்மானம் என்றும் இது தமிழ் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்காகவே நிறைவேற்றப்பட்டது' என்றும் முதலமைச்சர,; ஜனாதிபதியிடம் கூறியதாக ஒரு செய்தி வெளியாகியிருந்தது.
இந்தத் தீர்மானமானது அரசாங்கத்தை சிங்கள் இனவாதிகளின் நெருக்குதலுக்குள்ளாக்கும் நிலையை உருவாக்கியிருக்கிறது. இது நல்லிணக்கத்தைநோக்கி அரசாங்கம் மேலும் நடவடிக்கை எடுப்பதை தடுக்குமா என்ற சந்தேகமும் ஏற்படுகிறது. மைத்திரிபாலவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையே இரகசிய ஒப்பந்தம் ஒன்று இருப்பதாகவும் தேர்தலுக்குப் பின்னர் கூட்டமைப்பு தமது பிரிவினைவாத செயற்பாடுகளை தீவிரப்படுத்தும் என்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச உட்பட சிங்கள் தீவிரவாதிகள் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் கூறினர்.
ஜனாதிபதித் தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மைத்திரிபாலவையே ஆதரித்தது. இப்போது கூட்டமைப்பின் இந்த தீர்மானத்தால் தாம் கூறியது உண்மையாகிவிட்டது என அந்தத் தீவிரவாதிகள் ஊக்கமடைந்திருப்பதாக தெரிகிறது. மைத்திரிபாலவின் நல்லாட்சி பிரிவினைவாதிகளுக்கே சாதகமாக இருக்கிறது என தேசிய சுதந்திர முன்னணியும் பொது பல சேனாவும் கூறியிருக்கிறது. எனவே தான் இந்தத் தீர்மானம் போன்றவை மைத்திரிபாலவை நல்லிணக்கத்துக்காக மேலும் நடவடிக்கை எடுப்பதில் இருந்து தடுக்கலாம் என்று கூறுகிறோம்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது இந்திய விஜயத்துக்கு தயாராக இருக்கும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்;டமைப்பு, மாகாண சபையில் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கும் அதேவேளை இந்தியா அதிகார பரவலாக்கல் விடயத்தில் இலங்கை ஜனாதிபதியின் மீது நெருக்குவாரத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறியிருந்தார். இதுவும் தென் பகுதியில் மைத்திரிபாலவுக்கு கஷ்டமான நிலைமையை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.
இவற்றோடு கூட்டமைப்பின் தலைவர்கள் ஜனாதிபதியை சந்தித்து அவரை சமாளிக்க முயற்சிக்கிறார்கள். தேசிய சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்கிறார்கள். தேசிய நிறைவேற்றுச் சபையில் அங்கம் வகிக்கிறார்கள். இந்த நிலைமை தென் பகுதி தீவிரவாதிகளுக்கு தீனி போடுகிறது.
போர் காலத்தில் இடம் பெற்ற சம்பவங்களுக்கு தமிழ் மக்களோ அல்லது மற்றொரு சமூகமோ நியாயம் கேட்பதில் எவ்விதத் தவறும் இல்லை. கேட்கத் தான் வேண்டும். அதேவேளை நல்லிணக்கத்துக்கு ஓரளவு சாதகமாக உருவாகியிருக்கும் நிலைமையை பாதுகாத்துக் கொள்ளவும் வேண்டும். தென் பகுதியில் இருந்து நெருக்குதல் ஏற்படும் நிலைமையை ஏற்படுத்தி மைத்திரிபாலவையும் மற்றொரு மஹிந்த ராஜபக்ஷவாக மாற்றிவிடாமல் பார்த்துக் கொள்ளவும் வேண்டும். இது தான் இப்போது தமிழ்த்; தலைவர்கள் முன் இருக்கும் சவாலாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .