2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

எப்படி வென்றது இலங்கை அரசு?

Suganthini Ratnam   / 2015 பெப்ரவரி 20 , மு.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.சஞ்சயன்

புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த ஐந்து வாரங்களிலேயே சர்வதேச அரங்கில் முக்கியமான இராஜதந்திர வெற்றிகளில் ஒன்றை ஈட்டியுள்ளதாக அரசாங்கத்தில் உள்ளவர்கள்,  வரும் நாட்களில் தீவிரமான பிரசாரத்தில் ஈடுபடக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.  

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், அடுத்த மாதம் 25ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவிருந்த அறிக்கையை பிற்போடச் செய்வதில் இலங்கை அரசாங்கம் ஈட்டியுள்ள வெற்றியே அது.

சர்வதேச சமூகத்துடன் முரண்பாடுகளை வளர்த்து, இராஜதந்திர ரீதியான நெருக்கடிகளுக்குள் சிக்கவைத்து,  நாட்டை தனிமைப்படுத்தி விட்டதொரு சூழலிலேயே முன்னைய மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் ஆட்சியை விட்டு விலகிச்சென்றிருந்தது.

புதிய அரசாங்கம் பதவியேற்றதும், அதற்கு உள்நாட்டிலிருந்த பிரச்சினைகள் எல்லாவற்றையும் விட, மிக முக்கியமானதொரு பிரச்சினை தலைக்கு மேல் கத்தியாக தொடங்கிக்கொண்டிருந்தது. கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, ஐ.நா. மனித உரிமைகள்  ஆணையாளர் பணியகத்தினால் நடத்தப்பட்ட விசாரணையின் அறிக்கையே அந்தக் கத்தி.

இந்த விசாரணை அறிக்கை அடுத்த மாதம் 2ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 28ஆவது அமர்வில் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென்று   கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தெளிவாக கூறப்பட்டிருந்தது.
அறிக்கையை திட்டமிட்ட காலப்பகுதிக்குள் பேரவையில் சமர்ப்பிப்பதற்கான எல்லா நடவடிக்கைகளையும் ஐ.நா. விசாரணைக்குழு மேற்கொண்டிருந்த நிலையிலேயே இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருந்தது. ஆட்சி மாற்றம், இலங்கையினது உள்நாட்டுச் சூழலை மட்டுமன்றி, இலங்கை குறித்த சர்வதேசப் பார்வையையும் மாற்றிவிட்டுள்ளது.

புதிதாக பதவியேற்ற அரசாங்கம், சர்வதேச சமூகத்துடன் முரண்படாத, அதனுடன் இணைந்து செயற்படும் அணுகுமுறையை  கடைப்பிடிக்கத் தயாராக இருந்த நிலையில், ஐ.நா. விசாரணைக்குழுவின் அறிக்கை அதற்கு முக்கியமானதொரு சவாலாக இருந்தது. இதனாலேயே, வெளிவிவகார அமைச்சராக பதவியேற்ற நாளிலிருந்து அமைச்சர் மங்கள சமரவீர சர்வதேச ஆதரவை திரட்டும் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார். அவர் புதுடெல்லி, இலண்டன், வொஷிங்டன், நியூயோர்க் என்று தொடர் பறப்புகளை மேற்கொண்டே, இந்த அறிக்கையை பிற்போடுவதற்கு சாதகமான முடிவை பெற்றிருக்கிறார். இது புதிய அரசாங்கத்துக்கான சவால் மிக்க விடயமாக இருந்தாலும், முன்னரே எதிர்பார்க்கப்பட்டதொன்று  என்பதும் இந்த விடயத்தில் முன்னைய அரசாங்கம் எதிர்கொண்டளவுக்கு நெருக்கடிகளை எதிர்கொள்ளவில்லை என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

ஜெனீவாவில், கடந்த பல ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கை அரசாங்கத்துக்கு இராஜதந்திர ரீதியானதொரு வெற்றி கிடைத்திருக்கிறது. 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட அடுத்த வாரமே ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அவசரக்கூட்டம் கூட்டப்பட்டது. அந்தக் கூட்டத்தில், சுவீடன் உள்ளிட்ட நாடுகளினால் போரில் இடம்பெற்றதாகக் கூறப்படும்  மீறல்களை கண்டித்தும் அது பற்றி விசாரணை செய்யுமாறு கோரியும் தீர்மானமொன்று முன்வைக்கப்பட்டது. அந்த தீர்மானத்தை இலங்கை தனது இராஜதந்திர நகர்வுகளின் மூலம் தோற்கடித்தது. அது மட்டுமன்றி, போரில் வெற்றியை பெற்ற இலங்கையை பாராட்டும் தீர்மானமொன்றும் அதில் நிறைவேற்றப்பட்டது.

அதற்கு பின்னர், ஜெனீவா என்பது இலங்கை அரசாங்கத்துக்கு சோதனை மிக்கதொரு களமாக இருந்துவந்தது. ஒவ்வொரு முறையும்  ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமர்வு ஆரம்பிக்கப்படும்போதும் பல்வேறு தயார்ப்படுத்தல்களுடன் அமைச்சர்களையும் அதிகாரிகளையும் ஜெனீவாவுக்கு அனுப்பவேண்டிய நிலை அரசாங்கத்துக்கு இருந்தது. ஜெனீவா விடயத்தில் முன்னைய அரசாங்கம் மிகக் கடுமையான அழுத்தங்களை எதிர்கொண்டது.

ஒவ்வொரு ஆறு மாதங்களும்  ஜெனீவாவில் பதிலளிக்கவேண்டிய நிலையில் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் முக்கிய அமைச்சர்களும் பல சந்தர்ப்பங்களில் வெறுப்புடன் கூறியிருக்கின்றனர். அந்தளவுக்கு முன்னைய அரசாங்கத்துக்கு ஒரு கெட்ட சொப்பனமாக ஜெனீவா கூட்டத்தொடர்கள் அமைந்திருந்தன.

இம்முறை ஜெனீவா கூட்டத்தொடரும் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டியது என்பதால், முன்னெப்போதும் இல்லாதளவுக்கு நெருக்கடி மிக்கதாகவே இருந்தாலும், புதிய அரசாங்கத்துக்கு அதை எதிர்கொள்வது ஒன்றும் அவ்வளவு சவாலான விடயமாக இருக்கவில்லை. அதற்கு காரணம், மேற்குலகுக்கு சாதகமாக அமைந்த புதிய அரசாங்கம் தான் என்பதில் சந்தேகமில்லை. புதிய அரசாங்கம் இலங்கையில் அமைந்தவுடனேயே, அமெரிக்கா தலைமையிலான மேற்குலகின் அணுகுமுறைகள், கண்ணோட்டங்களில் பாரிய வேறுபாடுகளை உணரமுடிகிறது.

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் கொடுத்த தலைவலி மேற்குலகை பெரிதும் பொறுமை இழக்க வைத்துவிட்டது. அதனால், தமக்கு சாதகமான புதிய அரசாங்கத்தை காப்பாற்றுவது தமது கடப்பாடு என்றளவுக்கு மேற்குலக கரிசனையும் நிலைப்பாடும் மாறியிருக்கின்றன. இது இலங்கையின் புதிய அரசாங்கத்துக்கு கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பு என்றே கூறலாம். அதுதான், ஜெனீவா களத்தை எதிர்கொள்வதற்கு முன்னரே, ஒரு காலஓய்வை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை இலங்கைக்கு ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது.

மங்கள சமரவீர வெளிவிவகார அமைச்சராக பதவியேற்றதும், வெளிநாடுகளுக்கு பறந்துதிரிந்து இந்த அறிக்கையை பிற்போட செய்தார் என்று கூறமுடியாது. இந்த விடயத்தில், இலங்கை அரசாங்கம் எந்தக் கோரிக்கையையும் விடுக்காமல் இருந்தால் கூட, அறிக்கை பிற்போடப்பட்டே இருக்கும். ஏனென்றால், இது இலங்கையின் கோரிக்கையை ஏற்று எடுக்கப்பட்ட முடிவு அல்ல. இலங்கையின் கோரிக்கை வெறும் சம்பிரதாய பூர்வமானதாகவே இருந்தது.

புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், கடந்த மாத இறுதியில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் நிஷா பிஸ்வால் இலங்கைக்கு வந்திருந்தார். விசாரணை அறிக்கையை பிற்போடும் செய்தியுடன் அவர் கொழும்பு வந்திருந்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை சந்தித்தபோது, அவர் ஐ.நா. விசாரணை அறிக்கையை வெளியிடுவதற்கு இது பொருத்தமான தருணமல்ல என்று வெளிப்படையாக கூறியிருந்தார்.

கடந்த 10ஆம் திகதி வடக்கு மாகாணசபையில் இனப்படுகொலை தீர்மானத்தை கொண்டுவந்து உரையாற்றிய முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இந்த தகவலை வெளியிட்டிருந்தார். இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடனேயே, இந்த விசாரணை அறிக்கையை மார்ச் மாத அமர்வில் வெளியிடுவது பொருத்தமல்ல என்ற முடிவை அமெரிக்கா எடுத்துவிட்டது.
அங்கிருந்து இந்த அறிக்கையை பிற்போடச் செய்யும் நகர்வு ஆரம்பிக்கப்பட்டதே தவிர, கொழும்பிலிருந்து ஆரம்பிக்கப்பட்டிருக்கவில்லை. ஆனால், அமெரிக்கா வெளிப்படையாக எதையும் கூறவில்லை. தனக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை, பிற்போடும் முடிவு, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரிடமே உள்ளது என்று கூறிக்கொண்டது.

நிஷா பிஸ்வாலின் கொழும்பு பயணத்தை அடுத்து இலண்டன் சென்ற வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அறிக்கையை பிற்போட செய்வதற்கு பிரித்தானியாவின் ஆதரவை கோரத் திட்டமிட்டிருந்தார். ஆனாலும், அவரால் அங்கு பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனையோ, வெளிவிவகார அமைச்சரையோ சந்திக்க முடியவில்லை.

ஒரு வாரத்துக்கு முன்னர் கொழும்பு வந்திருந்தபோது, பேச்சுக்களை நடத்திய வெளிவிவகார பணியக மற்றும் கொமன்வெல்த் விவகார இராஜாங்க அமைச்சர் ஹியூகோ ஸ்வயரை மங்கள சமரவீர மீண்டும் சந்தித்தார். சர்வதேச விசாரணை விடயத்தில் உறுதியான போக்கை கொண்டிருந்த பிரித்தானிய அறிக்கையை ஒத்திப்போடும் விடயத்தில் அவ்வளவாக உடன்பாடு கொண்டிருக்கவில்லை.

இன்னும் மூன்று மாதங்களுக்குள் தேர்தலை எதிர்கொள்ளவேண்டிய நிலையில், புலம்பெயர் தமிழர்களின் எதிர்ப்பை சந்திக்க நேரிடும் என்ற கவலையும் பிரித்தானிய அரசாங்கத்துக்கு இருக்கிறது.

மங்கள சமரவீரவின் பிரித்தானியப் பயணம் கைகொடுக்காத நிலையில், அமெரிக்காவுக்கு சென்றிருந்தார் அவர். அமெரிக்காவில் அவருக்கு உற்சாகமூட்டும் வகையில் சந்திப்புகள் அமைந்திருந்தன. அமெரிக்க இராஜாங்க செயலர் ஜோன் கெரி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ் உள்ளிட்டோரை வொஷிங்டனில் சந்தித்துப் பேசியிருந்தார் மங்கள சமரவீர. இதன்போதே, ஐ.நா. விசாரணை அறிக்கையை ஒத்திவைப்பதற்கான பூர்வாங்க நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
அது குறித்து ஜோன் கெரியுடனான சந்திப்பில் விவாதிக்கப்பட்டது என்பதை மங்கள சமரவீர ஒப்புக்கொண்டிருந்தார்.
விசாரணை அறிக்கை பிற்போடப்படும் என்று தாம் உறுதியாக நம்புவதாக வொஷிங்டனில் பிரஸ் கிளப்பில் உரையாற்றியபோது அவர் தெரிவித்திருந்தார்.

அதேவேளை, அதற்கான உத்தரவாதத்தை அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி தரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த விவகாரம் குறித்து, அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள பேச்சாளர் ஜென் பசாகியிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, அறிக்கையை பிற்போடும் தீர்மானத்தை எடுக்கவேண்டியது ஐ.நா. மனித உரிமை ஆணையாளரே என்று பதிலளித்திருந்தார். அதாவது அமெரிக்கா இந்த விடயத்தில் எதுவுமே தெரியாத மாதிரி இருக்கப்பார்த்தது.

இதற்கிடையே, கடந்த 13ஆம் திகதி நியூயோர்க் சென்ற மங்கள சமரவீர, ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூனையும் ஐ.நா. வுக்கான அமெரிக்க தூதுவர் சமந்தா பவரையும் சந்தித்திருந்தார். ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூனை மங்கள சமரவீர சந்திக்க முன்னரே, ஐ.நா. வின் துணைப் பொதுச்செயலரான ஒஸ்கார் பெர்னான்டஸ் தரங்கோவைச் சந்தித்துப் பேசியிருந்தார் அமெரிக்க உதவி இராஜாங்க செயலர் நிஷா பிஸ்வால்.

இந்த சந்திப்பு பங்களாதேஷ் விவகாரம் குறித்து பேசுவதற்கானது என்று குறிப்பிட்டிருந்தாலும், இலங்கை விவகாரம் குறித்தும் பேசப்பட்டது. அப்போது, ஐ.நா. அறிக்கை ஒத்திவைக்கப்பட வேண்டுமென்ற அமெரிக்க நிலைப்பாடு அவரிடம் எடுத்துக்கூறப்பட்டதாகத் தகவல்.

நிஷா பிஸ்வாலை சந்தித்த துணை பொதுச்செயலர் ஒஸ்கார் பெர்னான்டஸ் தரங்கோ, மறுநாள் ஐ.நா. பொதுச்செயலருடன் இணைந்து மங்கள சமரவீரவை சந்தித்தார். அப்போது, அறிக்கையை பிற்போடுமாறு கோரியிருந்தார் மங்கள சமரவீர. ஆனால், அது தனது கையில் இல்லை என்றும் அது ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் வேலை என்றும் அவர் கூறிவிட்டாக  தகவல் வெளியானது. முன்னதாக, இந்த விவகாரம் ஐ.நா. - அமெரிக்கா இடையில் உள்ளக ரீதியாக கலந்துரையாடப்பட்டது.

நியூயோர்க் சென்றிருந்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் இது குறித்து அமெரிக்க அதிகாரிகளுடனும் ஐ.நா. பொதுச்செயலருடனும் ஆலோசனை நடத்தியிருந்தார். மேலும், மங்கள சமரவீரவை சந்தித்த பின்னர், தனது டுவிட்டரில் எழுதியிருந்த சமந்தா பவர் தேர்தலுக்கு பின்னர் இலங்கையின் நிலைமைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

ஆட்சி மாற்றத்தின் பின்னர், இலங்கை குறித்து அமெரிக்க ஜனாதிபதி பராக்; ஒபாமா தொடக்கம் ஜோன் கெரி, சூசன் ரைஸ், நிஷா பிஸ்வால், சமந்தா பவர், ஜென் பசாகி, கீத் ஹாப்பர் உள்ளிட்டவர்கள் வெளியிட்ட கருத்துகள் அனைத்துமே இலங்கை அரசுக்கு சாதகமாக  அமைந்திருந்தன. இத்தகைய பின்னணியிலேயே  அடுத்த என்ன என்ற தீர்மானிக்கும் களம் ஜெனீவாவுக்கு மாறியது.

ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் உள்ளக கலந்தாலோசனைகளின் முடிவில் அறிக்கையை ஒத்திவைக்க கோரினார்.  அதற்கு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையும் ஒப்புதல் அளித்தது. ஆனாலும், இந்த அறிக்கையை ஒத்திவைப்பது ஐ.நா. மட்டத்தில் அவ்வளவாக உடன்பாடு இருக்கவில்லை என்று தெரிகிறது.

தாம் நியாயமற்ற ஒரு காரியத்தை செய்கிறோம் என்பதை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் உணர்ந்திருக்கிறார். அவர் இந்த முடிவுக்கான காரணங்களை விபரித்து அளித்திருந்த விளக்கத்தில் அதனை உணரமுடிகிறது. ஒரேயொரு தடவை மாத்திரம் ஒத்திவைப்பதாகவும் இது பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏமாற்றம் அளிக்குமொன்றாக இருக்கும் என்பதை தான் அறிவேன் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

அமெரிக்காவின் கோரிக்கைகளுக்காக அறிக்கை வெளியிடுவதை பிற்போட்டுள்ளோம் என்று அவரால் காரணம் கூறமுடியாது. அதனாலேயே, இன்னமும் வலுவான அறிக்கையை தயாரிக்க வாய்ப்பு கிடைக்கலாம் என்று அவர் ஒரு நியாயத்தை முன்வைத்திருக்கிறார். அது எந்தளவுக்கு உண்மையானது என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.
இது இலங்கைக்கு ஒரு தற்காலிக வெற்றியே தவிர, நிரந்தரமானது அல்ல. ஆனாலும், இதனை நிரந்தரமான வெற்றியாக்குவதற்கு அரசாங்கம் முயற்சிக்காமல் விடாது. அதற்கு அமெரிக்கா திறந்துள்ள புதிய கதவுகளின் மூலம் இலங்கை அரசாங்கம் முயற்சிக்கலாம். அது வெற்றி அளிக்குமேயானால், பாதிக்கப்பட்டவர்களுக்கும் நீதியை எதிர்பார்க்கின்றவர்களுக்கும் பெருத்த அடியாக இருக்கும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .