2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஒருங்கிணைக்கப்பட வேண்டிய போராட்டங்கள்...!

Gavitha   / 2015 பெப்ரவரி 26 , மு.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மக்களின் அடுத்த கட்ட நகர்வு என்ன என்பது தொடர்பில் உலகம் எப்போதுமே உன்னிப்பாக கவனித்து வந்திருக்கின்றது. அது, இன விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் வெற்றிகரமாக கோலோச்சிய காலத்திலும், அந்த ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்கால் கடற்கரையில் ஒட்டுமொத்தமாக தோற்கடிக்கப்பட்ட பின்னரான இன்றைய காலத்திலும் தொடர்ந்து கவனிக்கப்பட்டே வருகிறது.

ஆயுதப் போராட்டத்தின் முடிவுக்குப் பின்னால் தமிழ் மக்கள் பெரும்பாலும் ஆழ் உறக்க நிலையிலேயே இருக்கின்றார்கள் வைக்கப்பட்டிருக்கின்றார்கள்.  ஆழ் உறக்க நிலையில் இருந்து தண்ணீர் தெளிக்கப்பட்டு தமிழ் மக்கள் எழுப்பப்படும் ஒவ்வொரு தருணத்திலும் ஏதோவொரு முக்கிய நிகழ்வோ, மாற்றமோ ஏற்படுகின்றது. அல்லது இந்தியாவினாலும்  மேற்கு நாடுகளினாலும் ஏற்படுத்தப்படுகின்றது.

கடந்த ஆறு ஆண்டுகளில் தமிழ் மக்கள் அப்படி முக்கியமான மூன்று தருணங்களில் பங்களித்திருக்கின்றார்கள்.

1. இறுதி மோதல்களின் போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தை வலியுறுத்துவதற்கான போராட்டங்களை குறிப்பிட்டளவில் முன்னெடுத்தமை.  அல்லது அதற்காக மேற்கு நாடுகளினால் கையாளப்பட்டமை.
2. இந்தியாவின் விருப்பத்திற்காக இலங்கை அரசாங்கத்தால் தவிர்க்க முடியாமல் நடத்தப்பட்ட வடக்கு மாகாண சபைத் தேர்தலில் பெரும் பங்களிபோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆட்சியில் அமர்த்தியமை.
3. சீனா சார்பு இலங்கை அரசாங்கத்தினை மாற்றி தனக்குச் சார்பான அரசாங்கமொன்றை அமைப்பதற்காக இந்தியா மற்றும்

மேற்கு நாடுகளின் திட்டங்களுக்காக கையாளப்பட்டமை. அல்லது ஒத்திசைந்தமை.

இந்த மூன்று தருணங்களிலும் தமிழ் மக்களுக்கு சில சிறிய நன்மைகள் கிடைத்திருக்கின்றன என்பதை மறுதலிக்க முடியாது. ஆனால், ஒட்டுமொத்தமான நன்மைகள் என்பது தமிழ் மக்களைக் கையாண்ட தரப்புக்களுக்கே கிடைத்தன.

அதனைவிட முதல் இரண்டு தருணங்களும் மூன்றாவது பெரும் தருணத்துக்காக வடிவமைக்கப்பட்டவை. அதாவது, தமக்குச் சார்பான அரசாங்கமொன்றை இலங்கையில் அமைப்பதற்கான திட்டங்களின் போக்கில் இந்தியாவினாலும், மேற்குநாடுகளினால் ஏற்படுத்தப்பட்டவை.

தமிழ் மக்கள் தொடர்ச்சியாக ஆழ் உறக்கத்தில் இருப்பதும், கருவிகளாக கையாளப்படுவதும் விடுதலையையோ, உரிமைகளையோ பெற்றுத்தந்துவிடாது. இதை, நேற்றுப் பிறந்த குழந்தைகூட புரிந்து வைத்திருக்கின்றது. ஆனால், கருவியாக கையாளப்படுவதிலிருந்து விடுவித்துக்கொள்வது என்பதுவும் அவ்வளவு இலகுவானது அல்ல.

அப்படியிருக்கின்ற நிலையில், கையாளப்படுவதன்  போக்கில் மெல்ல நகர்ந்து சந்தர்ப்பங்களைப் பற்றி எமது வலிமையை உறுதி செய்ய வேண்டும்.

தமிழ் மக்களின் மன உறுதி மற்றும் போராட்ட குணம் தோற்கடிக்கப்பட்டுவிட்டதாக இலங்கை அரசாங்கம் உள்ளிட்ட எந்தத் தரப்புமே இறுதியாக நம்பவில்லை. ஆயுதப் போராட்டத்தை மட்டுமே தோற்கடிக்க முடிந்திருக்கின்றது என்ற உண்மையையும் உணர்ந்து வைத்திருக்கின்றன. அப்படியான நிலையில், தமிழ் மக்களை மிகுந்த அவதானமாகவே கையாள அல்லது எதிர்நோக்க வேண்டிய தேவை அந்தத் தரப்புக்களுக்கு உண்டு. அதனால்தான், தமிழ் மக்களாகிய எம்மை ஆழ் உறக்கத்தில் வைத்திருக்க வேண்டிய தேவை இருக்கின்றது. அதனை, இந்தியா, மேற்குநாடுகள் உள்ளிட்ட தரப்புக்கள் செவ்வனே செய்கின்றன.

நாம் எப்படி ஆழ் உறக்கத்திலிருந்து விழித்துக் கொள்வது என்பதுதான் இப்போதுள்ள பெரும் விடயம். ஏனெனில், ஆறு ஆண்டுகள் என்ற பெரும் உறக்க நிலையில் எமக்கு எதிரான மேலும் பல காரியங்கள் ஆற்றப்பட்டுவிட்டன. இது, தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் பட்சத்தில் எமது முடிவுரையை நாமே எழுதிவிட்டு மயானங்களில் போய் படுத்துக்கொள்ள வேண்டிவரும்.

ராஜபக்ஷேக்களின் கடுமையான ஆட்சி மாற்றப்பட்டு கடுமையின் அளவு கொஞ்சமாக குறைக்கப்பட்ட அல்லது அப்படிக் காட்டப்படுகின்ற மைத்திரி ஆட்சிக்காலம் ஏற்பட்டிருக்கின்றது. இந்தக் காலப்பகுதியின் நீட்சியில் அவ்வளவுக்கு நம்பிக்கை கொள்ள முடியாது. ஆனால், கிடைத்திருக்கின்ற கால இடைவெளியை எம்மை சரியான புள்ளியில் ஒருங்கிணைப்பதற்காகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அது, எம்மை வன்முறை ரீதியிலான ஆயுத அரசியல் போராட்டத்தின் பக்கம் தள்ளாமல் வலிமையான ஜனநாயக ரீதியிலான அரசியல் போராட்டத்தின் பக்கம் நகர்த்துவதற்காக இருக்க வேண்டும்.

தமிழ் மக்களின் ஜனநாயக ரீதியிலான அரசியல் மீள் எழுச்சி என்பது இன்றைக்கு தவிர்க்க முடியாத ஒன்று. ஏனெனில், அது, இலங்கையின் சிங்கள பௌத்த தேசியவாத அரசாங்கங்கள், இந்தியா, மேற்குநாடுகள் உள்ளிட்ட தரப்புக்களை எதிர்கொள்வதற்கு மாத்திரமின்றி, எம்மை பிழையான நோக்கங்களுக்காக கையாள முயலும் தமிழ் அரசியல் தலைமைகளையும் சரிப்படுத்துவதற்கு அவசியமாகின்றது.

தமிழ் மக்கள் எழுச்சிகொண்டு ஒருங்கிணைகின்ற ஒவ்வொரு தருணத்திலும் தமிழ் அரசியல் தலைமைகள் தவிர்க்க முடியாமல் இறங்கி வருகின்றன. இல்லாவிட்டால், அக்கறையின்றி தனிப்பட்ட அரசியல் நலன்களின் போக்கில் நடந்து எம்மை சிக்கலுக்குள் தள்ளிவிடுகின்றன. இதனை காலம் காலமாக உணர்ந்து வைத்திருக்கின்றோம். ஆயுதப் போராட்டத்தின் தோல்விக்குப் பின், தமிழ் மக்களின் ஜனநாயக ரீதியிலான போராட்டங்கள் சிறுசிறு குழுக்கள் என்கிற அளவிலேயே முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கின்றன.

1. காணாமற்போனவர்களை மீட்டுத்தரக் கோரும் போராட்டங்கள்
2. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை கோரும் போராட்டங்கள்
3. இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள காணிகளை விடுவிக்கக்கோரும் போராட்டங்கள்
4. இறுதி மோதல்களில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு நீதி கோரும் போராட்டங்கள்.

இந்த போராட்டங்கள் அனைத்திலும் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களே அதிகம் பங்கெடுத்து வந்திருக்கின்றார்கள். நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் என்பது காணாமற்போனவர்களை மீட்கக் கோரும் போராட்டங்களிலும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் போராட்டங்களிலும் உறவினர்களும் காணி மீட்பு போராட்டங்களில் உரிமையாளர்களுமே பங்கெடுத்து வந்திருக்கின்றனர். இறுதி மோதல்களில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு நீதி கோரும் போராட்டங்களிலேயே நேரடியாக பதிக்கப்பட்ட தரப்பிலிருந்து வெளியிலிருந்தும் சில தரப்புக்கள் பங்கெடுத்தன. இதுதான் இந்தப் போராட்டங்களின் வீரியத்தினை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தாமல் சிறுநிகழ்வுகள் என்ற தோற்றப்பாட்டை வழங்கிவிட்டு ஓய்து போயிருக்கின்றன.

இந்த போராட்டங்கள் அனைத்திலும் பாதிக்கப்பட்ட தரப்பு என்கிற ரீதியில் உறவினர்கள், உரிமையாளர்களை மாத்திரம் முன்னிறுத்தாமல் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய தார்மீகக் கடப்பாடு இருக்கின்றது. அந்தக் கடப்பாட்டினை மறுதலிக்கின்ற அல்லது அசண்டையீனமாகக் கையாளுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பமும் எமது இருப்புக்கு நாம் ஆப்பு வைத்துக்கொள்கின்றோம் என்று கருதிக்கொள்ள முடியும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் இந்தப் போராட்டங்களில் தவிர்க்க முடியாமல் சிறு பங்களிப்பை ஆற்றி வந்திருக்கின்றன. ஆனால் அது, அவ்வளவு அர்ப்பணிப்பாக இல்லை. அதுபோல போராட்டங்களின் மீள் எழுச்சி தமக்கே ஆபத்தாக மாறிவிடுமோ என்கிற அச்ச உணர்வோடு அணுகப்பட்டு வந்திருக்கின்றன.

இந்த நிலையில் தான், யாழ் பல்கலைக்கழக சமூகம் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை (பெப் 24, 2015) முன்னெடுத்த 'இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் முன்னெடுத்த விசாரணைகளின் அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும்' என்று வலியுறுத்தும் கவனயீர்ப்புப் போராட்டம் கவனம் பெறுகின்றது.

ஏனெனில், தமிழ் அரசியல் போராட்டங்களின் முக்கிய கட்டங்களில் மாணவர்களும் இளைஞர்களும் பெரும் பங்களித்திருக்கின்றார்கள். அந்த பங்கினை தமிழ் அரசியல் தலைமைகள் பிழையாக கையாண்டிருக்கின்றன என்பது வேறு விடயம். ஆனால், தமிழ் மக்களின் போராட்ட குணம் என்றைக்குமே தோற்கடிக்க முடியாதது என்பதை மாணவர்களும் இளைஞர்களுமே தொடர்ந்தும் நிரூபித்து வந்திருக்கின்றார்கள். அனைத்து வகைப் போராட்டங்களிலும் அவர்களின் அர்ப்பணிப்பும் ஆக்ரோசமும் பெருமளவில் இருந்திருக்கின்றது. இப்போதும் அதுதான் அவசியமாக இருக்கின்றது.

உலக அரசியலின் போக்கினை சரியாக உள்வாங்கி, மக்களை சரியான புள்ளியில் இணைத்து, அரசியல் தலைமைகளை கையாண்டு எமது உரிமைகளுக்கான இலக்குகளை நோக்கி நகர்வதே தமிழ் இளைஞர்களின் முன்னாலுள்ள பெரும் கடமை. அது எந்தவொரு தருணத்திலும் ஜனநாயக அடிப்படைகளிலிருந்து மாறிவிடாமலும் யதார்த்த பார்வைகளிலிருந்து விலகி வில்லங்கங்களை வாங்கிக் கொள்ளும் அளவுக்கும் செல்லாத அளவுக்கு இருக்க வேண்டும்.
யாழ். பல்கலைக்கழக சமூகம், தமிழ் இன விடுதலைப் போராட்டங்களின் தீர்மானம்மிக்க சக்தியாக தொடர்ச்சியாக

செயற்பட்டு வந்திருக்கின்றது. இப்போதும் அவ்வாறான அவசியமொன்றை உணர்ந்துகொண்டு முன்வந்திருக்கின்றது. ஆனால் அது, வடக்குக்கு மாத்திரமானதாக இருக்காமல் வடக்குக்கு வெளியிலுள்ள கிழக்கு மாகாணத்திலும் கொழும்பிலும் கூட அக்கறையை செலுத்தி கூட்டிணைந்து செயற்பாட்டுத் தளத்துக்கு நகர வேண்டிய பொறுப்புணர்வை எடுக்க வேண்டியிருக்கின்றது.

தமிழ் மக்களின் சார்பில் தீர்மானம் மிக்க அரசியல் முடிவுகளை யாழ்ப்பாணமும் கொழும்பும் எடுக்கும் நிலையை மாற்றி கிழக்கு நோக்கியும் அர்ப்பணிப்போடு நகர வேண்டும். அதுதான் தமிழ் மக்களின் மீள் ஒருங்கிணைப்புக்கும் எழுச்சிக்கும் மிகவும் அடிப்படையானது. எந்தவொரு தரப்பும் இன்னொரு தரப்பினை யதார்த்தங்களைப் புரிந்துகொள்ளாமல் கையாளவே கூடாது.

ஜனநாயக அச்சுறுத்தலுள்ள நாட்டுக்குள்ளேயே தொடர்ந்தும் இருக்கின்றோம். ஆட்சி மாற்றமொன்று ஏற்பட்டிருக்கின்றது என்பதற்காக தமிழ் மக்களின் ஒருங்கிணைவையும் அரசியல் மீள் எழுச்சியையும் அனுமதிப்பார்கள் என்று அர்த்தமல்ல.

ஆக, எமக்கு எதிராக வைக்கப்படுகின்ற  பொறிகளையும் சூழ்ச்சித் திட்டங்களையும் விழிப்பாக எதிர்கொண்டு, எந்தவொரு தருணத்திலும் உணர்ச்சி மேலிடுகையில் சிக்கிக் கொள்ளாமல் அரசியல் போராட்டங்களை ஒருங்கிணைத்துக்கொண்டு செல்ல வேண்டியது இளைஞர்களின் கடமையாக இருக்கின்றது. அதுதான், ஆழ் உறக்கத்திலிருந்து தமிழ் மக்களை விடுவித்து, சந்தர்ப்பங்களைக் கையாண்டு எமது நிலைபெறுகைக்கான ஆதாரத்தினைப் பற்றிக்கொள்ள உதவும்!


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .