Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Kanagaraj / 2015 பெப்ரவரி 23 , மு.ப. 06:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
டாக்டர் ராமதாஸின் இந்த அரசியல் வியூகத்துக்கு அச்சாரம் அமைத்துக் கொடுப்பது தி.மு.க , அ.தி.மு.க. தலைவர்கள் மீதுள்ள 'ஊழல் வழக்குகள்' என்றால் சாலப்பொருத்தம். இரு கட்சிகளுக்கும் மாற்று என்ற கோஷத்தை பாட்டாளி மக்கள் கட்சி, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக் கழகம், ம.தி.மு.க. என்று அனைத்துக் கட்சிகளும் கையிலெடுத்து 2016 தேர்தல் களத்துக்கு தயாராக நிற்கின்றன. போதாக்குறைக்கு காங்கிரஸ் கட்சியும் கூட அதே முழக்கத்துடன் முன்னனிக்கு வரத் தயாராக இருக்கிறது.
இவற்றில் பாட்டாளி மக்கள் கட்சியின் 'மாற்று முழக்கத்துக்கு' மவுசு இருக்கிறதா என்பதுதான் இப்போது எழுந்துள்ள கேள்வி. 1989இல் முதன் முதலில் தேர்தலை சந்தித்த பாட்டாளி மக்கள் கட்சி இது வரை தனியாக நின்று நான்கு எம்.எல்.ஏ.க்களுக்கு மேல் வெற்றி பெறவில்லை. கூட்டணியாக நின்ற போது மட்டுமே அக்கட்சியால் 20க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களையும், 5க்கும் மேற்பட்ட எம்.பி.க்களையும் பெற முடிந்திருக்கிறது. 1998இல் அ.தி.மு.க.வுடன் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி.
1999இல் தி.மு.க.வுடன் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி. 2001இல் மீண்டும் அ.தி.மு.க.வுடன் சட்டமன்றத் தேர்தல் கூட்டணி. 2004இல் மறுபடியும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி. 2006 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுடனேயே கூட்டணி. பிறகு 2009 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி. 2011இல் மறுபடியும் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து சட்டமன்றத் தேர்தலை சந்தித்தது. இப்போது 2014 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இல்லாத பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சியுடன் கூட்டணி. இப்படி இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் எல்லாம் கூட்டணியாகவே களத்தில் நின்ற பாட்டாளி மக்கள் கட்சி இந்த முறை தி.மு.க.வுடன் இல்லை. அ.தி.மு.க.வுடனும் இல்லை. நாங்கள் எங்கள் தலைமையில் தனி அணி என்று கச்சை கட்டுகிறது.
இதுவரை கூட்டணி வைத்த காலங்களில் 2004 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு பாட்டாளி மக்கள் கட்சியால் கூட்டணிக்கு தலைமை தாங்கும் அ.தி.மு.க.வுக்;கோ, தி.மு.க.வுக்கு வெற்றிக்கு உதவ முடியவில்லை என்பதுதான் கடந்த கால தேர்தல் வரலாறு. குறிப்பாக விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் துவங்கப்பட்ட பிறகு பா.ம.க.வின் சின்னமான மாம்பழத்தின் மவுசு குறையத் தொடங்கி விட்டது என்பதை தேர்தல் களத்தை நன்கு புரிந்தவர்கள் ஒப்புக் கொள்வார்கள். பாட்டாளி மக்கள் கட்சியால் நமக்கு பலனில்லை என்ற நிலைக்கு தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் வந்த பிறகுதான் 'இவர்கள் இருவருக்கும் மாற்று அணி உருவாக்குகிறேன்' என்று டாக்டர் ராமதாஸ் களத்துக்கு வந்திருக்கிறார்.
2014இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் எட்டு தொகுதிகளைப் பெற்ற பாட்டாளி மக்கள் கட்சி டாக்டர் அன்புமணி போட்டியிட்ட தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதியில் மட்டும்தான் வெற்றி பெற்றது. அதுவும் அங்கு 'இளவரசன்- திவ்யா' காதல் பிரச்சினையால் நிலவிய பதற்றமே டாக்டர் அன்புமணியின் வெற்றிக்கு வித்திட்டது. இந்த எட்டு நாடாளுமன்றத் தொகுதிகளில் உள்ள மொத்தம் 48 சட்டமன்றத் தொகுதிகளில் 4 சட்டமன்றத் தொகுதிகளில் மட்டுமே பாட்டாளி மக்கள் கட்சி அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்களை விட அதிக வாக்குகளைப் பெற முடிந்தது.
அந்த நான்கு சட்டமன்றத் தொகுதிகளும் கூட தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதிக்குள்தான் இருக்கிறது. இந்த அளவுகோளின் படி பார்த்தால் கூட தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் 4 சட்டமன்றத் தொகுதிகளில்தான் பாட்டாளி மக்கள் கட்சி தனியாக நின்றால் கூட வெற்றி பெறும் என்கிற அளவிற்கு வாக்குகளை வாங்கியிருக்கிறது.
ஆகவே 'தனித்துப் போட்டி' 'திராவிடக் கட்சிகளுக்கு மாற்று' என்பதெல்லாம் அலங்காரப் பிரச்சாரத்துக்கு உதவுமுமே தவிர பாட்டாளி மக்கள் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கவோ, சட்டமன்ற உறுப்பினர்கள் அதிக எண்ணிக்கையில் கிடைக்கவோ உதவாது. அதிலும் குறிப்பாக 'திராவிடக் கட்சிகளுக்கு மாற்று' என்ற வியூகத்தை எதுவரை டாக்டர் ராமதாஸ் தூக்கிப் பிடிக்கப் போகிறார் என்பதும் உறுதியாகத் தெரியவில்லை. ஏனென்றால் அ.தி.மு.க.வை விமர்சிக்கும் அதே நேரத்தில் திராவிட முன்னேற்றக் கழக தலைவரை தன் வீட்டுத் திருமணத்துக்கு அழைத்து கௌரவித்தார்.
மின் உற்பத்தி பற்றிய விவகாரத்தில்கூட 'தி.மு.க. ஆட்சியில் துவங்கப்பட்ட மின் திட்டங்களின் மூலம்தான் இப்போது அ.தி.மு.க. ஆட்சியில் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதே தவிர, அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களால் அல்ல' என்று கூறியிருக்கிறார். தி.மு.க.விற்கு இப்படியொரு பாராட்டை அடிக்கடி மின் உற்பத்தி விஷயத்தில் கூறி வருகிறார் டாக்டர் ராமதாஸ்.
டாக்டர் அன்புமணி மீது மருத்துவக்கல்லூரிக்கு அனுமதி கொடுத்த விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த வழக்கின் தீர்ப்பு அன்புமணிக்கு எதிராக வந்தால் இப்போதுள்ள சூழ்நிலைப்படியும், தேர்தல் சட்டங்களின் படியும் அவர் தனது எம்.பி. பதவியை இழக்கும் நிலை ஏற்படலாம். அப்படியொரு சூழ்நிலையிலும் 'முதல்வர் வேட்பாளர்' என்று அன்புமணியை முன்னிறுத்துவாரா, 'திராவிடக் கட்சிகளுக்கு மாற்று பா.ம.க.' என்று கூறி தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவாரா என்பது மில்லியன் டாலர் கேள்வி. ஏனென்றால் கடந்த காலங்களில் தி.மு.க.வுடனும், அ.தி.மு.க.வுடனும் கூட்டணி கண்ட போது டாக்டர் அன்புமணிக்கு ராஜ்ய சபை சீட் வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்ற கட்சிகளுடன்தான் கூட்டணி வைத்தார் என்ற குற்றச்சாட்டு டாக்டர் ராமதாஸ் மீது உண்டு.
'மருத்துவக் கல்லூரி' வடிவத்தில் ஆபத்து வரலாம் என்ற அச்சம் டாக்டர் ராமதாஸ§க்கே இருக்கிறது. அதனால்தான் மாநிலத்தில் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை. மத்தியில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி நீடிக்கிறது என்று கூறியிருக்கிறார்.
இது பா.ம.க.வின் யுக்தியல்ல. முன்பே ஒரு முறை தி.மு.க.வும் இப்படித்தான் செய்தது. 'தமிழக பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தி.மு.க. நீடிக்கிறது' என்று வாஜ்பாய் பிரதமராக இருந்த போதும் தி.மு.க. அறிவித்தது. அதைத்தான் இன்று பா.ம.க.வும் காப்பி அடித்திருக்கிறது. பா.ம.க.வுக்கு தமிழக பா.ஜ.க.வுடன் எந்த வித முரண்பாடும் வரவில்லை. அவர்களுக்கு பிரச்சினையே மத்திய தலைமையுடன்தான். ஆனால் 'டெல்லி பா.ஜ.க.வுடன்' கூட்டணி, 'தமிழக பா.ஜ.க.வுடன்' கூட்டணி இல்லை என்ற வினோத அறிவிப்பை வெளியிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதே 'மருத்துவக் கல்லூரி வழக்கு' தலைக்கு மேல் கத்தியாக தொங்கிக் கொண்டிருப்பதுதான்!
ஆகவே பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அறிவித்துள்ள 'திராவிடக் கட்சிகளுக்கு மாற்று' என்று அரசியல் முழக்கம் அன்புமணியின் மீதான வழக்கு முடிந்த பிறகுதான் முழு வீச்சில் நடக்குமா அல்லது வியூகத்தில் மாற்றம் இருக்குமா என்பது தெரிய வரும். அதுவரை மற்ற கட்சிகள் போலவே பா.ம.க.வும் 'நாங்கள் ஆட்சி அமைப்போம்' என்ற கோஷத்தை முன்னெடுத்துச் செல்லும். அதன் மூலம் தமிழகத்தின் வட மாவட்டங்களில் உள்ள வன்னியர் வாக்கு வங்கியை தன் பக்கம் முழுசாக திருப்பிக் கொள்ள முயற்சிக்கும். அதன் மூலம் தமிழகத்தில் தனிப்பெரும் சக்தியாக உருவெடுக்க முடியும் என்று டாக்டர் ராமதாஸ் கனவு காணுகிறார்.
ஆனால் அவருக்கு உள்ள மிகப்பெரிய பிரச்சினையே, தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களில் உள்ள 60 தொகுதிகள் தவிர மீதியிருக்கின்ற 174 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்கு வங்கி இல்லை. அது மட்டுமல்ல, வடமாவட்டங்களில் உள்ள 60 தொகுதிகளிலுமே வேறு எந்த அரசியல் கட்சிக்கும் இல்லாத அளவுக்கு (விடுதலை சிறுத்தைகள் கட்சி தவிர) 'எதிர்மறை வாக்குகள்' இருப்பதும் பாட்டாளி மக்கள் கட்சிக்கே! அனைத்து சமுதாயத்தினர் மத்தியிலும் வாக்கு வாங்கி ஜெயிக்க வேண்டிய முதலமைச்சர் பதவிக்கு பாட்டாளி மக்கள் கட்சி எப்படி போட்டியிட முடியும் என்பதுதான் இப்போது அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் எழுந்துள்ள சுவாரஸ்யமான கேள்வி. இதற்கு இன்னும் டாக்டர் ராமதாஸ் ஆக்கபூர்வமான பதில் ஒன்றைக் கூறவில்லை என்பதுதான் பா.ம.க.வின் இந்த '2016 அரசியல் வியூகத்தின்' ஒட்டுமொத்த பலவீனம்!
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .