2025 மே 17, சனிக்கிழமை

ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற அடிப்படைவாதத்தால் பாதிக்கப்படுமா இலங்கை?

Thipaan   / 2015 ஜூலை 23 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகலிங்கம் கோபிகிருஷ்ணா

இலங்கையைச் சேர்ந்த ஒருவர், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் இணைந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகளின் காரணமாக, அவ்வமைப்பு இலங்கையிலும் விரிவடையுமா என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. அந்த அச்சம், அடிப்படையற்றதும் அல்ல. ஆனால், அந்த அச்சம் தவறான வழிகளில் பயன்படுத்தப்படுவதற்கான அத்தனை வாய்ப்புகளும் இருக்கின்றன என்பது தான் அதிலிருக்கும் ஆபத்து.

ஈராக், சிரியாவின் இஸ்லாமிய நாடு அல்லது ஈராக், லெவன்ற்-இன் இஸ்லாமிய நாடு அல்லது ஈராக், அஷ்-ஷாம்-இன் இஸ்லாமிய நாடு என்ற பெயருடைய இந்த ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு, இஸ்லாமிய தேசமொன்றுக்காகப் போராடி வருகின்ற போதிலும், ஷியா முஸ்லிம்களுக்கெதிராகவும் மிலேச்சத்தனமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த அமைப்பினது அறிமுகம் எல்லோருக்கும் பழக்கமானது என்ற போதிலும், இலங்கையைப் பொறுத்தவரை இந்த அமைப்பினது நடவடிக்கைகள் அதிகளவில் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.

ஆனால், இலங்கையைச் சேர்ந்த ஒருவர் அந்த அமைப்பில் இணைந்திருக்கிறார், அதன் காரணமாக அவர் இறப்பைச் சந்தித்திருக்கிறார் என்ற செய்தி, இது குறித்தான சமூக, பொருளாதார, அரசியல் ரீதியான பிரச்சினைகள் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த அச்சத்தை இலங்கை எதிர்நோக்கியிருக்கிறது என்ற போதிலும், எமது நாட்டுக்கு முன்னதாக பல நாடுகள், அதுவும் அபிவிருத்தியடைந்த நாடுகள், இந்தப் பிரச்சினையை எதிர்கொண்டிருக்கின்றன என்பது சுயநல ரீதியாக மகிழ்ச்சியளிக்கிறது. அந்த நாடுகளிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ள இலங்கைக்கு வாய்ப்பிருக்கிறது என்பதே அதற்கான காரணமாகும்.

இதில் அவுஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் முக்கியமான நாடுகளாகும். அவுஸ்திரேலியாவைச் 150இக்கும் மேற்பட்டவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ், ஏனைய இஸ்லாமிய போராளிக் குழுக்களோடு இணைந்து போரிடுவதாக அந்நாடு அறிவித்ததோடு, குடியுரிமை சார்ந்த சட்டங்களையும் இறுக்கப்படுத்தியது. அந்நாடு தொடர்ந்தும் இதற்கெதிராகப் போராடிவருகிறது.

மறுபுறத்தில், ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்தவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவில் இணைவது அதிகரிப்பதைத் தொடர்ந்து, குறிப்பாக 3 சகோதரிகளும் அவர்களின் 9 பிள்ளைகளும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் இணைந்திருக்கலாம் என்ற செய்தி வெளியானபோது, அதிர்ச்சியே ஏற்பட்டிருந்தது.

அந்நாட்டின் பிரதமரான டேவிட் கமரோன், புதிய திட்டமொன்றை அறிவிக்க வேண்டிய நிலையேற்பட்ட அளவுக்கு, இங்கிலாந்திலும் இந்த அச்சுறுத்தல் காணப்படுகிறது.

ஆகவே, போராளி அமைப்புக்களில் இணைவதற்கு உலக அறிவும் பொருளாதார வசதிகளும் தடையாக இருக்கின்றன என்ற எண்ணம் தவறானது. அவுஸ்திரேலியாவிலும் இங்கிலாந்திலும் உள்ளவர்களும், இலங்கையில் உள்ளவர்களை விட பொருளாதார ரீதியாக முன்னேற்றமடைந்திருக்கிறார்கள் என்பதோடு, இங்குள்ளவர்களை விட உலகம் தொடர்பாக அதிக அறிவைப் பெற்றிருக்க வாய்ப்புக்களுண்டு.

ஆக, பிரச்சினை எங்கே உருவாகிறது என்ற வினா எழுகிறது.

ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற அமைப்புகளில் இணைபவர்கள் அனைவரும் கொடூரமான சிந்தனை கொண்டவர்களோ கொலைவெறியர்களோ அல்லர். இந்த அமைப்புகளில் இணைந்தோர் தொடர்பாக அவர்களோடு நெருக்கமாக இருந்தோர், நண்பர்கள், ஆசிரியர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள், அவர்கள் ஆரம்பத்திலேயே வன்முறைகளை விரும்புபவர்களாகவோ அல்லது பழிவாங்கலிலோ நம்புவர்களாக இல்லை என்பது உறுதிப்படுத்தப்படுகிறது.

மறுபுறத்தில், அவர்களில் பலர் மிகவும் இனியவர்களாகவே இருந்திருக்கிறார்கள். ஆகவே, 'நான் சார்ந்திருக்கும் சமூகம் ஆபத்தில் இருக்கிறது. எனது சமூகத்துக்கான அர்ப்பணிப்பையோ அல்லது தியாகத்தையோ செய்ய வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது' என்ற எண்ணம் அவர்களுக்கு இருக்கிறது என்ற உணர்வுகளைக் கொண்டவர்களாக அவர்கள் இருக்கிறார்கள்.

அதேபோல, இந்த அமைப்பில் இணைபவர்களில் கிட்டத்தட்ட நூறு சதவீதம் பேர் முஸ்லிம்களாகவோ அல்லது இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்களாகவோ இருக்கும் போது, இந்த போராளிக் குழுக்களுக்கும் இஸ்லாமுக்கும் நேரடித் தொடர்பு இருக்கிறதா? அதற்கான பொறுப்பை இஸ்லாம் ஏற்க வேண்டுமா? என்ற கேள்வி எழலாம்.

ஆனால், ஐ.எஸ்.ஐ.எஸ்-ஆனது இஸ்லாத்தைப் பின்பற்றுகிறதா, அது இஸ்லாத்தின் ஓர் அங்கமா என்பது தனியான ஒரு விவாதம். அந்த விவாதமானது சாதாரணமாக, சமாதானத்தை விரும்பும், இயல்பானவர்களாக இருக்கும் பெரும்பான்மை முஸ்லிம்களைப் பாதிக்கக்கூடாது என்பது முக்கியமானது. ஐ.எஸ்.ஐ.எஸ் மீதான எதிர்ப்பானது, சாதாரண முஸ்லிமொருவரைப் பாதிக்குமாயின், அது, சாதாரண முஸ்லிம்களை ஐ.எஸ்.ஐ.எஸ் மீதான அனுதாபத்தையோ, அபிமானத்தையோ, இல்லாவிடின் ஆகக்குறைந்தது அவ்வமைப்பு மீதான எதிர்ப்பைக் குறைப்பதற்கே வழிவகுக்கும்.

ஏனெனில், அவ்வமைப்பு பயன்படுத்துவது முஸ்லிம்களின் பெயரையும் இஸ்லாத்தையும் தான். சமூகத்தினால் புறக்கணிக்கப்படும்போது, தங்களுக்கான பிரதிநிதிகள் எனக் கூறிக்கொள்ளும் அமைப்பு மீதான அபிமானத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு உண்டு.

அதனால், ஏற்பட்டுள்ள இந்த முதலாவது உயிரிழப்பை சரியான முறையில் அணுக வேண்டிய தேவையுள்ளது. ஒருசில இனவாத அமைப்புகள், முஸ்லிம்களுக்கெதிரான கொள்கைகளையுடையோர், இதை இனவாத நோக்கத்துக்காகப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. அதேபோல், அரசியல்வாதிகள் இதை தங்களுக்கான அரசியல் கோஷமாகப் பயன்படுத்தும் சாத்தியக்கூறுகளும் காணப்படுகின்றன.

தேர்தல் காலங்களில், இந்தச் செய்தியை தங்களது அரசியல் நோக்கத்துக்காக, சில இனவாத சக்திகள் பயன்படுத்துவதற்கு முற்படக்கூடும். ஏற்கனவே, 'இது தொடர்பில் நாங்கள் ஏற்கெனவே எச்சரித்தோம்' என்ற கோஷத்தோடு, பொது பல சேனா அமைப்பு அதை ஆரம்பித்து வைத்திருக்கிறது.

இவ்வாறான அமைப்புகள் மீது, இளைஞர்கள் ஆர்வத்தை வெளிப்படுத்துவதையோ அல்லது அவற்றின் பால் ஈர்ப்பினை வெளிப்படுத்துவதையோ கட்டுப்படுத்துவதற்கான தேவையும் கடமையும் பொறுப்பும், பெற்றோர்களுக்கும் மூத்தவர்களுக்கும் உள்ளது.

எந்தவொரு விடயத்துக்கும் வன்முறை தீர்வாகாது என்பதை எடுத்துச் சொல்வதற்கான தேவை இருக்கிறது. ஐக்கிய இராஜ்ஜியத்தின் பிரதமர் டேவிட் கமரோன், அவருடைய உரையில் தெரிவித்த கருத்தை இளைஞர்களுக்கு ஞாபகமூட்டுவது பொருத்தமானது.

'நீங்களொரு பையனாக இருந்தால், அவர்கள் உங்களை மூளைச்சலவை செய்வார்கள், உங்கள் உடல்களில் குண்டுகளைக் கட்டி, உங்களை வெடிக்க வைப்பார்கள். நீங்கள் பெண்ணாக இருந்தால், அவர்கள் உங்களை அடிமைப்படுத்தி, உங்களை துஸ்பிரயோகம் செய்வார்கள்' மறுபுறத்தில், இதுவரை ஒருவர் தொடர்பான தகவல் மாத்திரமே வெளியாகியுள்ள நிலையில், இவ்விடயத்தைக் கொண்டு முஸ்லிம்களைப் பொதுமைப்படுத்துவதையோ அல்லது ஒதுக்குவதையோ அல்லது சந்தேகத்தை வெளிப்படுத்துவதையோ ஏனைய தரப்பினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

அது அநீதியானது என்பதோடு, அவர்களை விளிம்புநிலையில் உணர வைக்கக்கூடிய ஆபத்து இருக்கிறது.

எனவே, இளைஞர்களை இவ்வாறான அமைப்புகளில் சேரவிடாது தடுப்பதற்கு, போதியளவு அறிவூட்டல் ஏற்படுத்தப்பட வேண்டியிருக்கிறது. ஏனெனில், இவ்வாறான அடிப்படைவாத அமைப்புகள், தங்கள் படைகளுக்குள் நபர்களைச் சேர்ப்பதற்கு, மிகவும் நவீனமான முறைகளைப் பயன்படுத்துகின்றன. அத்தோடு, உணர்வுகளைத் தூண்டுகின்ற ரீதியிலான கருத்துக்கள், அவர்களின் உணர்வுகளைத் தாக்குகின்ற கருத்துக்களைப் பயன்படுத்துவது வழக்கமானது.

அதேபோல், சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்தி, ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு ஆட்சேர்ப்பில் ஈடுபடுவது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதைத் தடுப்பதோ அல்லது கட்டுப்படுத்துவதோ மிகவும் சவாலானது.

ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற அடிப்படைவாதக் குழுக்களால் இலங்கை நேரடியாகப் பாதிக்கப்படுவதை விட, அவற்றின் மூலமாக நேரடியற்ற பாதிப்புகளை இலங்கை எதிர்கொள்வதற்கே வாய்ப்புகளுண்டு. அது, இனங்களுக்கிடையிலான ஒற்றுமைக்குலைவு மூலமாகவே ஏற்படக்கூடும்.

இனங்களுக்கிடையிலான ஒற்றுமைக்குலைவு காரணமாக, பல தசாப்தங்களாக இலங்கை மோசமாகப் பாதிக்கப்பட்டது, அதேபோல், இரு இனங்களுக்கிடையிலான முறுகலாக, கடந்தாண்டு இடம்பெற்ற கலவரங்கள்/மோதல்கள்/ தாக்குதல்கள், இப்போதும் இரு இனங்களுக்கிடையே நம்பிக்கையீனமற்ற நிலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், மீண்டும் அவ்வாறான நிலைமையை ஏற்படுத்துவதற்கு எவருக்கும் இடத்தை வழங்கிவிடக் கூடாது என்பது அவசியமானது.

ஏனெனில், இந்த நாட்டு மக்கள், ஏற்கெனவே போதுமான போர்களையும் இனமுறுகல்களையும் கலவரங்களையும் மோதல்களையும் சந்தித்திருக்கிறார்கள். அவர்கள் சந்தித்தவைகளே போதுமானது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .