Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Thipaan / 2015 ஜூலை 27 , மு.ப. 04:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.கே.அஷோக்பரன்
2015 பொதுத்தேர்தல் களம் வட-கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தவரையில்;, தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் மிக முக்கியமானதொரு முடிவினை தமிழ் மக்கள் எடுக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்குக் காரணம் இந்தத் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போட்டியிடும் பல்வேறுபட்ட தமிழ்த்தரப்புக்கள். வடமாகாணத்தில் இம்முறை பல்முனைப்போட்டியொன்று பலமாக எழுந்திருக்கிறது என்பதே உண்மையாகும்.
இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏறத்தாழ வட மாகாணத்தில் கொண்டிருக்கும் ஏகபோகத்துக்கு சவாலாக எழுந்துள்ளதாகவே இந்நிலையில் பார்க்கப்பட வேண்டும். குறிப்பாக நாங்கள், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சின்னத்தின் கீழ் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் சைக்கிள் சின்னத்தின் கீழ் போட்டியிடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையிலான போட்டியையும். முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, வட மாகாணசபை உறுப்பினர் அங்கஜன் தலைமையில் யாழில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் விஜயகலாவின் முன்னிலையில் யாழில் போட்டியிடும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றுடன், ஊடகவியலாளர் வித்தியாதரன் தலைமையில் புதிதாகத் தோன்றியிருக்கும் ஜனநாயகப் போராளிகள் கட்சியும் இந்தத் தேர்தலில் வட மாகாணத்தில் போட்டியிடும் தரப்புகளுள் குறிப்பிடத்தக்கவையாகும்.
2016க்குள் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக்கொடுப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட வேட்பாளருமான இரா.சம்பந்தன் வாக்குறுதியளித்துள்ளார். இந்நிலையில், தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தொடர்பான தீர்வானது அர்த்தமற்ற வெற்றுத் தீர்வொன்றாக அமையக்கூடாது, அது தமிழ் மக்களின் அடிப்படை அபிலாஷையான திம்புக் கோட்பாடுகளின் அடிப்படையில் ஒரு நாடு, இரு தேசம் என்ற வடிவில் அமைய வேண்டும் என்பது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாடு. மேலோட்டமாகப் பார்ப்பின் இரு தரப்பு நிலைப்பாடுகளுக்குமிடையே பாரியதோர் வேறுபாடொன்று இல்லாதது போலும், வித்தியாசமானது, அணுகுமுறையில் உள்ளது போலுமே தோன்றும். ஆனால், இதற்குப் பின்னாலுள்ள சிந்தாந்த மற்றும் யதார்த்த நிலைகளை ஆராயும் போதே, இரு தரப்பு நிலைப்பாடுக்குமிடையேயுள்ள வேறுபாட்டை எம்மால் புரிந்து கொள்ள முடியும்.
சித்தாந்த ரீதியாகப் பார்த்தால், முதலில் நாம் - தமிழ் மக்களின் அரசியல் தேவை என்ன அல்லது அபிலாஷைகள் என்ன என்பதை தீர்மானிக்க வேண்டும். ஜூலை - ஓகஸ்ட் 1985இல் பூட்டானின் திம்பு நகரில் இடம்பெற்ற சமாதானப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட தமிழ் அமைப்புக்களான ஈ.பி.ஆர்.எல்.எஃப்,ஈரோஸ், எல்.ரீ.ரீ.ஈ, புளொட், டெலோ மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியன தமிழர் இனப்பிரச்சினைக்கு அர்த்தமுள்ள தீர்வொன்றைப் பெற்றுக்கொள்வதற்கு அடிப்படையான நான்கு கோட்பாடுகளை முன்வைத்தன, இவையே திம்புக் கோட்பாடுகளாகும். இலங்கைத் தமிழரை ஒரு தேசமாக அங்கிகரித்தல்;, இலங்கைத் தமிழரின் தாயக பூமியொன்று இருப்பதை அங்கிகரித்தல்;, தமிழ்த் தேசத்தின் சுய நிர்ணய உரிமையை அங்கிகரித்தல்; மற்றும் இலங்கையிலுள்ள தமிழர் யாவரினதும் குடியுரிமையையும் அடிப்படை உரிமைகளையும் அங்கிகரித்தல் என்பவையே திம்புக் கோட்பாடுகளாகும். 1976இல் வட்டுக்கோட்டை தீர்மானத்தில் தனிநாடுதான் தமிழருக்கு தீர்வு என்ற நிலைப்பாட்டிலிருந்து, 1985ஆம் ஆண்டு திம்புக் கோட்பாடுகள் கொஞ்சம் இறங்கியிருக்கின்றன என்பதை நாம் இங்கு அவதானிக்கலாம்.
இதிலே 'தேசம்' என்ற அரசியல்-சட்ட பதத்தின் அர்த்தம் பற்றிப் பலருக்கும் தெளிவில்லாத நிலை இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
தேசம் என்பது, ஒழுங்கமைக்கப்பட்ட, ஒரு குறித்த நிலப்பரப்பைக் குடிமையாகக்கொண்ட, ஒரே மொழியைப் பேசுகின்ற, ஒரே மாதிரியான மரபுகளையுடைய, வரலாற்றுத் தொடர்ச்சியைக் கொண்ட, ஏனைய இதுபோன்ற மக்கட் கூட்டங்களிலிருந்து அவர்தம் இன அடையாளம், தன்மை என்பவற்றினடிப்படையில் பிரித்தறியத்தக்க மக்கட் கூட்டமாகும். இவை கட்டாயமாக ஓர் அரசாங்கத்தின் கீழோ, ஓர் இறைமையின் கீழோ இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. (காண்க: மொன்டோயா எதிர் யு.எஸ்., ஹொன்டூரஸ் குடியரசு எதிர் சொடொ, வேர்செஸ்டர் எதிர் ஜோர்ஜியா)
தமிழ் மக்கள் ஒரு தனித் தேசம் என்றும், அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை உள்ளது என்றும், அவர்களுக்கென தாயக பூமி உள்ளது என்றும் அங்கிகரிக்கப்படத்தக்கதான தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதே தமது கொள்கை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வாதிடுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒற்றையாட்சிக்குள், 13ஆம் திருத்தத்தை அடிப்படையாகக் கொண்ட தீர்வொன்றுக்கே வழிசமைப்பதாக குற்றமும் சாட்டுகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரை அவர்கள் சித்தாந்தரீதியாக இதனைப் பெரிதளவில் மறுப்பதில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களின் அறிக்கைகள், பேச்சுக்கள் பலதும் தமிழ்த் தேசியம், சுயநிர்ணயம் என்பவனவற்றைத் தாங்கியே வருகிறது. ஆனால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினதும் ஏனைய கூட்டமைப்பை விமர்சிப்பவர்கனிளதும் குற்றச்சாட்டானது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொள்கையாக இதனைப் பிரகடனப்படுத்தினாலும் அதனை அடையப் பெறுவதற்கு எவ்வித காத்திரமான எத்தனிப்பையும் செய்யவில்லை என்பதுடன், தென்னிலங்கை அரசியல் சக்திகளினதும் இந்தியா உட்பட்ட சர்வதேச நாடுகளினதும் நிகழ்ச்சிநிரலுக்கேற்ப தமது அரசியலைச் செய்கிறார்கள் என்பதாகும். இந்தக் குற்றச்சாட்டு நெடுங்காலமாகவே முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்த இடத்தில் நாங்கள் யதார்த்தம் சார்ந்த பார்வையையும் ஆராய்வது அவசியம். 30 வருடங்களுக்கு மேலான இலங்கைத் தமிழ்மக்களது ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டு 6 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், சித்தாந்த அடிப்படையில் பேரம் பேசி வெற்றிகாணக் கூடிய சக்தி அல்லது அரசியல் மூலதனம் தமிழ்த் தரப்புக்கு இருக்கிறதா என்பதே பிரதானமான கேள்வி. ஆயுதப் போராட்டத்தின் மௌனிப்புக்குப் பின்பு, எமது அரசியல் அணுகுமுறையில் மாற்றம் அவசியமாகிறது, அதற்கேற்றவகையில் தமிழர்களது அரசியல் இராஜதந்திரமாகக் கையாளப்பட வேண்டும் என ஒரு தரப்பு வாதிடுகிறது.
சர்வதேசங்கள் தமிழர்களுக்கு ஒரு தனித் தேசத்தையோ, முழுமையான சமஷ்டியையோ வழங்க எத்தனிக்கப்போவதில்லை, அப்படி அவை முயன்றாலும் இலங்கை அரசாங்கம் ஒருபோதும் அதனை ஏற்றுக்கொள்ளாது என்பதே யதார்த்தம் என்பது அவர்களுடைய வாதம். இந்நிலையில் சில விடயங்களில் இணங்கிப் போவதனூடாக பெறக்கூடிய அரசியல் நன்மைகளைத் தமிழினம் பெற்றுக்கொள்ள வழிசெய்ய வேண்டும், அதாவது லட்சியத் தீர்வுகளைவிட, சாத்தியமான தீர்வுகளை நோக்கி நகர வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இந்த வாதத்தை மறுக்கிறது. அவர்கள் லட்சிய தீர்வு என்பதே சாத்தியமான தீர்வுதான் என்று வாதிடுகிறார்கள். புநழிழடவைiஉள-ஐ இராஜதந்திரமாகக் கையாள்வதன் மூலம் இதனைச் சாதிக்கலாம் என்பது அவர்களின் கருத்து.
ஆனால், இது ஒரு கற்பனாவாதம், நடைமுறையில் சாத்தியமே அற்றது என்கிறார்கள் இக்கருத்தை எதிர்ப்பவர்கள். இணக்க அரசியல்தான் முறையானது என்றால் அதை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா செய்தபோதோ அல்லது தேசியக் கட்சிகளைச் சார்ந்தவர்கள் செய்தபோதோ ஏற்றிருக்கலாமே? அப்போது அதை எதிர்த்துவிட்டு, அதையொட்டியவொன்றையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்வது நியாயமா? என்பது ஒரு தரப்பு கேள்வி. சாத்தியமான தீர்வொன்றைப் பற்றிய இந்நிலையில் யோசிக்க வேண்டும், இது இணக்க அரசியல் அல்ல, இராஜதந்திரமாக இணங்கிப் போதல் என்கிறது மறுதரப்பு.
இந்நிலையிலே, இன்று தமிழ் மக்கள் முன்னிருக்கும் பெரிய கேள்வி, தமிழ் மக்களாகிய எங்களுக்கு என்ன வேண்டும்? நாங்கள் லட்சியத் தீர்வொன்றை நோக்கி பயணிக்கப் போகிறோமோ? அல்லது லட்சியத் தீர்வை அடிப்படையாகக் கொண்டாலும் தற்போது சாத்தியமான தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ளக் கூடிய பாதையொன்றைத் தேர்ந்தெடுக்கப்போகிறோமா? இந்தத் தேர்தலைப் பொறுத்தவரையில் தமிழ் மக்கள் வழங்கவிருக்கும் தீர்ப்பு இதுதான்.
2010ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 233,190 வாக்குகளை மொத்தமாகப் பெற்றிருந்தது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோ வெறும் 7,544 வாக்குகளையே பெற்றிருந்தது.
இந்தத் தேர்தலில் இக்கட்சிகள் பெறப்போகும் வாக்குகளானது தமிழ் மக்கள் எவ்வகையானதொரு அரசியலை, அணுகுமுறையை எதிர் பார்க்கிறார்கள் என்பது தெரியவரும். அதனைப் பிரதிபலிக்கும் முகமாக தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டியது அவசியமாகிறது.
கட்சி முரண்பாடுகள், தனிமனித சுயநலங்கள் என்பனவற்றைக் கடந்து தமிழர் அரசியல் பயணிக்க வேண்டிய முக்கிய தருணம் இது. இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழ் மக்கள் அளிக்கவிருக்கும் தீர்ப்பு- தமிழ் மக்களினுடைய எதிர்கால அரசியல் போக்கை தீர்மானிப்பதாக அமையும்.
sivaraj Monday, 27 July 2015 09:14 PM
தொடர்ந்தும் காலங்காலமாக தந்திரமாகத்தமிழர்களின் வாக்குகளைவாங்கிவிட்டு பின்பு தாம் நினைத்தமாதிரி எல்லோருடனும் இணங்கிப்போவதற்காக தமிழர் நலனைப்பணயமாக வைத்து கேவலமான அரசியல் புழைப்பு நடத்தும் வயதுமுதிர்ந்தவர்களை தலமையாககொண்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பை முற்றுமுழுதாக ஓரங்கட்டிவிட்டு ஈழத்தமிழரின் விடிவிற்கு உறுதியாகச்செயலாற்றக்கூடிய கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தலமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கு பெருமளவிலான வாக்குகளை வழங்கி அவர்களை வெற்றியடையச்செய்வதன் மூலம் ஒரு மிகப்பெரியமாற்றத்தை ஏற்படுத்துங்கள் தமிழர்களே!!!! அதுதான் நமக்கு முன்னாலுள்ள இப்போதைய அறிவுபூர்வமான கடமையாகும்!!! அவர் கொழும்பைச்சேர்ந்தவர் உயர்தரக்குடும்பத்திலிருந்து வந்தவர் என்றெல்லாம் பார்க்காதீர்கள்!! தற்போது அவரைவிடுத்து வேறுதெரிவு தமிழரிடமில்லை.தொடர்ந்தும் தமிழ்க்கூட்டமைப்பை அரியாசனமேற்றி நீங்கள் கண்ட பயன் என்ன ஒன்றுமேயில்லை!! எனவே ஒரே ஒருமுறை கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும் ஆணையை வழங்கிப்பாருங்கள் நம்பிக்கையோடு பார்க்கலாம் அவரின் செயற்பாட்டையும் பொறுத்திருந்து!!!!!!!!!!!!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
5 hours ago