2025 மே 17, சனிக்கிழமை

தேர்தல் இங்கே, இந்தியா எங்கே?

Thipaan   / 2015 ஜூலை 28 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ப. தெய்வீகன்

இலங்கையின் சகல அரசியல் அதிர்வுகளையும் தனது அரூப கரங்களால் அருளாட்சி செய்யும் இந்தியா, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் என்ன நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது என்பதானது இங்கு தற்போது சூடுபிடித்துள்ள சிக்கலான அரசியல் களத்தில் கவனம் செலுத்த நேரமில்லாத விடயமாக ஓரத்தில் கிடக்கிறது.

ஆட்சிக்கட்டிலிருந்து மஹிந்தவை துரத்தியுதுடன் தனது பொறுப்பு முடிந்துவிட்டது என்று ஓய்வெடுப்பது போல காணப்படும் இந்தியாவின் மஹிந்தவுக்கு பின்னரான இலங்கை நோக்கிய அரசியல் வியூகம், தற்போது எப்படியான செயல்நிலையிலுள்ளது?

அண்டை நாட்டில் வந்து நின்று அக்கப்போர் புரிவதற்கு இரகசிய திட்டங்களுடன், மஹிந்தவோடு கூட்டமைத்த சீனாவை இலங்கையிலிருந்து துரத்துவதற்கு கடந்த ஜனாதிபதித் தேர்தலை மைத்திரிக்கு ஆதரவான கருவியாக இந்தியா பயன்படுத்திக்கொண்டது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.

அப்படியானால், மஹிந்தவின் ஆட்சிக்கவிழ்ப்புடன் இந்தியா தனது இலக்கினை அடைந்ததா? இலங்கை அரசியலில் அதன் விருப்பத்துக்குரிய மாற்றங்கள் தற்போது மலர்கின்றனவா? என்று கேட்டால் இங்குதான் கொஞ்சம் இடிக்கிறது.

சீனாவின் பிரசன்னத்தை இலங்கையிலிருந்து முற்றாக அப்புறப்படுத்துவதற்கு இந்தியா விரும்பினாலும் தற்போது மைத்திரியின் ஆட்சிக்காலத்தில் அதற்குரிய சமிக்ஞைகள் எதுவும் பெரிதாக இடம்பெறுவதாகத் தெரியவில்லை.

சீனாவின் மிகப்பெரிய ஊடுருவலாகக் கருதப்பட்ட கொழும்பு துறைமுக அபிவிருத்தித் திட்டத்தை மீள்பரிசீலனை செய்யப்போவதாகவும் சுற்றுச்சூழலுக்கு பாதகமான வகையில் முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டத்தின் எதிர்காலம் குறித்து யோசிக்கவேண்டியிருப்பதாகவும் ஆட்சிக்கு வந்த கையோடு மைத்திரி அரசு அறிக்கை விட்டது.

ஆனால், இரண்டு மாதத்துக்குப் பிறகு சீனாவுக்குச் சென்ற மைத்திரி, அங்கு கைகுலுக்கி பேசிவிட்டு நாடு திரும்பியதும் கொழும்பு துறைமுகத் திட்ட அபிவிருத்தி வேலைகள் சீனாவின் ஆசியுடன் தொடர்ந்து நடக்கும் என்றார். இடி விழுந்தது போலிருந்தது இந்தியாவுக்கு. திருடனுக்கு தேள் கொட்டிய கதைதான். ஆனால், வெளியே காட்டிக்கொள்ளாமல் மௌனித்துக்கொண்டது டெல்லி.

இது ஒரு மேலெழுந்தவாரியான உதாரணம்தான். ஆனால், இந்தியாவின் நலன் சார்ந்த நகர்வுகளாக எதிர்பார்த்த விடயங்களை ஒவ்வொன்றாகப் பார்த்தால், இந்த ஆட்சி மாற்றம் இந்தியா எதிர்பார்த்த வெற்றியை இந்தியாவுக்கு கொடுக்கவில்லை.

மொத்தத்தில் சீனாவை துரத்துவதற்காக இந்திய அரசு எடுத்த முயற்சியை மஹிந்தவை விரட்டுவதற்கு மட்டும் பயன்படுத்தி மட்டுப்படுத்திக்கொண்ட இலங்கை, மீண்டும் ஒருதடவை இந்திய விவகாரம் தொடர்பான இராஜதந்திர நகர்வில் வெற்றியடைந்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.

இலங்கையின் அரசியல் எனப்படுவது இன்றைய நிலையில் நாட்டின் வெளிவிவகார கொள்கைகளைத் துணிச்சலுடன் முன்னெடுக்கக்கூடிய பலத்தை எவருக்கும் ஏகபோகமாக வழங்கவில்லை. ஜனாதிபதி என்பவர் என்னதான் நிறைவேற்று அதிகாரம் கொண்டவராக இருந்தாலும் கட்சி அரசியலில் சிக்குண்டவராகவும் அதேவேளை பல்வேறு முரண்பட்ட வெளிவிவகாரக் கொள்கைகளை அரசியல் சித்தாந்தங்களாக வரிந்துகட்டிக்கொண்டு நிற்கும் கட்சிகளால் தாங்கிப் பிடிக்கப்பட்டுள்ளவராகவும் காணப்படுகிறார்.

மறுபுறத்தில், நாடாளுமன்றத்திலும் எந்தக் கட்சியும் தனியே அறுதிப் பெரும்பான்மையடையாததாகவோ நாட்டு நலன் கருதி தீர்க்கமான முடிவுகளை மேற்கொள்ளக்கூடியதாகவோ இல்லை.

கடந்த ஆறு மாத காலத்தில், இந்தப் பலமற்ற கூட்டணி அரசினால் எதைச் செய்யமுடிந்தது? எதைச் செய்ய முடியாது போனது என்பதை பல சந்தர்ப்பங்களில் பார்த்துவிட்டோம்.

இப்படியான ஒரு நிலையில், பரிபூரண இந்திய ஆதரவுப்போக்கெனும் இந்தியா விரும்பும் வலையினுள் சிங்கள தேசத்தைக் கொண்டுபோய் விழுத்துவதற்கு மைத்திரி துளியும் விரும்பவில்லை. அவர் மட்டுல்ல ரணில் உட்பட்ட அவர் கூட்டணியில் எவரும் விரும்பவில்லை.

இது கடந்த காலத்தில் அவர்கள் கற்றுக்கொண்ட பாடம். இந்திய நலன்சார்ந்த போக்கெனும் கசப்பான விடயத்தை முண்டு விழுங்கியே ஆகவேண்டும் என்ற நிலையிலிருந்தவரைதான், தமிழர் பிரச்சினை என்பது சிங்கள தேசத்துக்கு நெருக்கடியான விடயமாக இருந்தது. தற்போது, சீனாவின் அரவணைப்பில், தமிழர் தரப்பையும் இந்தியாவையும் ஒரேயடியாக ஒதுக்கும் சக்தியை மஹிந்த பெற்றுக்கொடுத்த பின்னர், மீண்டுமொரு பொறியினுள் மாட்டுவதற்கு சிங்கள தேசம் தயாரில்லை.

இதில் கவலைக்குரிய விடயம் என்ன என்று உற்று நோக்கினால், இது இன்னமும் இந்தியாவுக்கு விளங்க மறுப்பதுதான்.

2009ஆம் ஆண்டு போர் முடிவடைந்த கையோடு இலங்கையில் பிரயோகிக்கக்கூடிய இராஜதந்திர கருவியை இழந்த கையறுநிலைக்கு தள்ளப்பட்ட இந்தியாவுக்கு தற்போது இலங்கைப் பிரச்சினை என்பது அரசியல் பிரச்சினை என்ற தளத்திலிருந்து பொருளாதாரப் பிரச்சினைக்கு பின்தள்ளப்பட்டுவிட்டது.

ஆகவே, தனது பொருளாதார நலன்சார்ந்த பிரச்சினையை சிங்கள தேசத்துடன் மட்டும்தான் பேசவேண்டிய சூழ்நிலையே தனக்கு தானே வலைபோல போட்டுக்கொண்டுள்ள இந்தியா, இனிவரும் காலங்களில் தமிழர் தரப்பு அரசியலை எவ்வாறு தனக்குச் சார்பாக பயன்படுத்திக்கொள்வது என்பதில் மிகுந்த சிரமங்களை சந்தித்துவருகிறது.

தமிழ்த் தேசிய அரசியல் களத்தில் இன்று பாரிய செல்வாக்கெதையும் செலுத்துவதற்கான ஏதுநிலை இந்தியாவுக்கு அறவே இல்லை என்பது கள யதார்த்தம்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து பயணிக்கும் புலம்பெயர்ந்த மக்கள் சக்தியெனப்படுவது விஸ்வரூபமெடுத்துவரும் அரசியல் அலையை தமிழர் தாயகத்தில் உருவாக்கிவரும் நிலைமை ஒரு புறமிருக்க -

வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் அரசியல் செல்நெறியானது இந்தியாவின் விருப்பங்களுக்கும் தேவைகளுக்கும் பாரிய தடைக்கல்லாக இருந்துவருகிறது.

போருக்குப் பின்னரான தமிழ்த் தேசிய அரசியல் களத்தில் இன்று விக்னேஸ்வன் பயணிக்கும் அரசியல் பாதை, தமிழர் தரப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மட்டுமல்லாமல் சிங்கள தரப்புக்கும் இந்திய தரப்புக்கும் ஏன் அமெரிக்காவுக்கும்கூட சவாலாக மாறியிருக்கிறது.

இவர்கள் எவரையும் விக்னேஸ்வரன் சவாலாக பார்க்காவிட்டாலும்கூட, இவர்கள் விக்னேஸ்வரனை தமிழ்த் தேசிய அரசியலில் வில்லங்கமான மனிதராகவே பார்க்கிறார்கள்.

இந்தியாவால் தமிழர்களுக்கு தூக்கிப்போடப்பட்ட தீர்வுத்திட்டமான மாகாணசபையிலேயே இனப்படுகொலை தீர்மானத்தை துணிச்சலாக நிறைவேற்றி, தமிழர்களின் நலன்களுக்காக உறுதியுடன் துணைநின்று உண்மைக்காக உரத்தகுரல் எழுப்பிய விக்னேஸ்வரனின் நகர்வு, இலங்கை விடயத்தில் இந்தியாவை இராஜதந்திர கைதியாக்கியிருக்கிறது.

யாழ்ப்பாணத்துக்கான மோடியின் விஜயத்தின்போதும்கூட விக்னேஸ்வரனின் இந்த உறுதியான போக்கு இந்தியாவுக்கு ஆச்சரியங்களைக் கொடுத்திருந்தது.

விக்னேஸ்வரன் தொடர்பான மறுபக்க விமர்சனத்தை பார்த்தால் -

சிங்கள தேசம் கடும் சீற்றத்திலிருக்கிறது. சிங்கள தேசத்தின் ஆட்சியதிகாரக் கட்டமைப்பில் ஏறினின்று சிங்கள தேசத்துக்கு எதிராகவே தீர்மானம் நிறைவேற்றியமைக்காக மன்னிப்புக்கேட்கவேண்டும் என்று இனவாத காட்சிகள் அறைகூவல்விடுப்பதும் யாழ்ப்பாணம் சென்றபோது விக்னேஸ்வரனுக்கு கைகுலுக்க மறுக்குமளவுக்கு ரணில் சினம்கொண்டிருப்பதையும் பார்க்கும்போது -

சிங்கள தேசம் விக்னேஸ்வரனை போருக்கு பின்னரான பிரபாகரனாக பார்க்க ஆரம்பித்துவிட்டது என்பது தெளிவாகிறது.

இதன் எதிரொலியாக, அண்மையில் அமெரிக்கா சென்ற விக்னேஸ்வரனை அழைத்த அரசுதரப்பு அதிகாரிகள் 'கொஞ்சம் நெகிழ்ச்சியுடன் பயணிக்குமாறு' தங்கள் மொழியில் கூறி அனுப்பியிருக்கிறார்கள்.

இவ்வளவும் ஒரு பக்கம் நடைபெற்றுக்கொண்டிருக்க மறுபுறத்தில் -

தமிழர் நலன்களை முன்னிறுத்திய அரசியலுக்கு முன்னால் எவர் தடையையும் தாண்டுவதற்கு துணிந்துவிட்ட விக்னேஸ்வரனின் பயணம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பெரும் தலையிடியைக் கொடுத்துள்ளது.

மென்போக்கு அரசியல் மிதவாத இராஜதந்திரம் போன்ற அடைமொழிகளுக்குள் சிங்கள தேசத்துடன் இன்னமும் 'நோகாத அரசியல்' செய்யும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் தமிழரசுக் கட்சிக்கும் விக்னேஸ்வரன் திறந்த நெற்றிக்கண் பல காயங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தப் பிரச்சினைகளையெல்லாம் பட்டியல் போட்டு பார்த்தால் - 

தமிழ்த் தேசிய அரசியல் களத்தில் இவ்வளவு சிக்கல்களையும் எதிர்கொண்டால் மாத்திரமே உள்ளே இறங்கலாம் என்ற நிலைதான் இந்தியாவுக்கு. இதில் யாரைத் தன்பக்கம் இழுப்பது என்பதில்தான் தற்போது டெல்லிக்கு மிகப்பெரிய சிக்கல்.

ஆனால், இன்றைய நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தவிர வேறெவரையும் நேரடியாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது என்பதும் இந்தியாவுக்கு தெரியும்.

ஆகவே, இம்முறை தேர்தலில் மதில் மேல் பூனையாக இருந்துகொண்டு களநிலையை அவதானித்து காலம்வரும்போது காலை விடுவதென்று இந்தியா முடிவெடுத்துவிட்டது போலத்தெரிகிறது.

இலங்கையின் முக்கிய விவகாரங்களில் முன்புபோல தனித்து இறங்கி விளையாடும் இந்தியாவின் காலம் காலாவதியாகி, அமெரிக்காவுடன் இணைந்துதான் எதையும் செய்யவேண்டிய காலகட்டத்தை உருவாக்கி வைத்திருப்பதால் இம்முறை தேர்தலில் அவசரப்பட்டு எந்த அழுத்தங்களையும் எந்தத்தரப்புக்கும் வழங்குவதற்கு இந்தியா தயாரில்லை.

தேர்தல் முடிவுகள் வெளிவந்த கையோடு, வெளியாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்ற அறிக்கையில், தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் அமெரிக்காவுடன் சேர்ந்து இந்தியா தனது செல்வாக்கினை செலுத்துவதற்கு முயற்சிக்கலாம். இதுகூட, தங்களின் நலன்சார்பாகவே இருக்குமே தவிர, சாதகமாகவோ பாதகமாகவோ இந்த வல்லரசுகள் மேற்கொள்ளவுள்ள இந்த அறிக்கை மீதான பிரயோகம் தமிழர்கள் நலன் சார்ந்ததாக இருக்காது.

ஆனால், அதை எவ்வாறு தேர்தலில் வெற்றியீட்டவுள்ள தமிழர்தரப்பு கையாளப்போகிறது என்பதில்தான் தமிழர்களின் தலைவிதி தீர்மானிக்கப்படப்போகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .