Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Thipaan / 2015 ஜூலை 29 , பி.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ்த் தேசிய அரசியலும்- ஆயுதப் போராட்டமும் 'ஏக பிரதிநிதிகள்' என்கிற விடயத்தை தொடர்ச்சியாக முன்னிறுத்தி வந்திருக்கின்றன. பல் கட்சி- அமைப்பு அரசியலின் மீது அதீதமாக நம்பிக்கை கொள்வதற்கான வாய்ப்புக்களை பெருமளவில் தவிர்த்து வந்திருக்கிற தமிழ்த் தேசிய அரசியற்சூழல், தன்னுடைய பொது எதிரியாக பௌத்த சிங்கள பேரினவாதத்தை கருதி வந்திருக்கின்றது. அதனையே, பின் வந்த ஆயுதப் போராட்டமும் பிரதிபலிக்க ஆரம்பித்தது.
குறிப்பாக, தமிழர் விடுதலைக் கூட்டணியின் உருவாக்கத்துக்குப் (1972க்கு) பின்னரான காலம் என்பது ஏக பிரதிநிதிகள் என்கிற விடயத்தை தமிழ்த் தேசியப் போராட்டங்களில் பிரதானமாக கொள்ள வைத்தது. அதுதான், ஆயுதப் போராட்டக்களம் உச்சம் பெற்றிருந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளையும், அதன் பின்னர் அவர்களினால் ஒருங்கிணைக்கப்பட்ட அரசியல் சக்தியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் கொள்ள வைத்தது. கடந்த 6 வருடங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு களமாடி தமிழ்த் தேசிய அரசியலில் (ஏக பிரதிநித்துவத்தில்) பங்கு கோரும் அளவுக்கான சக்திகள் எவையும் உருவாகியிருக்கவில்லை. அதனால், தமிழ்த் தேசிய அரசியலுக்குள் பெரும் மோதல்களுக்கான வாய்ப்புக்களும் இருக்கவில்லை.
ஆனால், இந்தப் பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசிய அரசியலுக்குள் தன்னுடைய பங்கை வலியுறுத்தும் முயற்சிகளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்னெடுக்க ஆரம்பித்திருக்கின்றது. இது, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இரண்டு தமிழ்த் தேசியக் கட்சிகள் தமக்கிடையில் பெரும் முட்டலையும் மோதலையும் செய்வதற்கான சாத்தியப்பாடுகளைத் தோற்றுவித்திருக்கின்றது. ஒரு தரப்பு தொடர்ச்சியாக தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்கிற விடயத்தை தக்க வைப்பதற்கான போராட்டத்தையும், இன்னொரு தரப்பு தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதிகள் தாம் தான் என்பதையும் வலியுறுத்துவதற்கான பெரும் முயற்சியையும் மேற்கொள்கின்றன. அது என்றைக்கும் இல்லாதளவுக்கு இம்முறை தேர்தல் பிரசாரக் கூட்டங்களிலும், ஊடக ஊடாடல்களிலும், சமூக ஊடக சண்டைகளிலும் பிரதிபலிக்க ஆரம்பித்திருக்கின்றன.
தமிழ்த் தேசிய அரசியல் தொடர்ச்சியாக யாழ்ப்பாணத்தை மையப்படுத்தியே முன்னகர்த்தப்படுகின்றது. அது, பல நேரங்களில் பிழையான முன்மாதிரிகளை வழங்கியிருந்தாலும், தேசியத்தை ஒருங்கிணைப்பதற்கான உணர்வு பூர்வமான தளமாக அரசியல் - ஆயுதப் போராட்டங்களில் கொள்ளப்பட்டு வந்திருக்கின்றது. இப்போதும், நிலைமை அப்படியேதான் இருக்கின்றது. தமிழ்த் தேசிய அரசியலுக்குள் பங்கு கோரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தன்னுடைய வெற்றியை யாழ்ப்பாணத்தில் பதிவு செய்ய வேண்டும் என்கிற ஒரே நோக்கத்தோடுதான் செயலாற்றுகின்றது. யாழ்ப்பாணத்தில் பெறப்படும் வெற்றி என்பது பெரும் அடையாளமாக கருதப்படும் என்று அந்தக் கட்சியும் நம்புகின்றது. அதுதான், என்றைக்கும் இல்லாதளவுக்கு யாழ். தேர்தல் களம் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கிடையிலான போட்டிக்களமாக மாறக் காரணம்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி- வன்னி, மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை தேர்தல் மாவட்டங்களிலும் போட்டியிட்டாலும், அதன் வெற்றி வாய்ப்புக்கள் தொடர்பில் அந்தக் கட்சிக்கே கூட குறிப்பிட்டளவான நம்பிக்கையில்லை. ஆக, அந்தத் தேர்தல் மாவட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அச்சுறுத்த இல்லை. அங்கு, பௌத்த சிங்கள தேசியக் கட்சிகள் மற்றும் முஸ்லிம் சிறுபான்மைக் கட்சிகளை எதிர்கொள்வதை மாத்திரமே தேர்தலுக்கான இடர்பாடாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருதுகின்றது. அதனை, தமிழ் மக்கள் பெரிய தளம்பல்களின்றி எதிர்கொண்டு தமக்கு வெற்றி பெற்றுத் தருவார்கள் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பிக்கையோடு இருக்கின்றது.
தமிழ் அரசியல்- ஆயுதப் போராட்டங்களில் 'துரோகிகள்' என்கிற வார்த்தையின் பாவனை என்பது அதிக நேரங்களில் எந்தவித அடிப்படையுமின்றி கையாளப்பட்டு வந்திருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகியவற்றுக்கிடையிலான (யாழ்ப்பாணத்துக்கான) களமாடலிலும் துரோகிகள் வாதம் அதிகமாக வைக்கப்படுகின்றது. பல நேரங்களில் கொள்கை- கோட்பாடுகள் பற்றிய உரையாடல்களைத் தாண்டி துரோகிகள் கோசம் சத்தமாக கேட்கிறது. இது ஆரோக்கியமான அரசியலின் போக்கினைக் காட்டவில்லை. மாறாக, எம்மை மீண்டும் மீண்டும் படுகுழியில் வீழ்வதற்கான கோசமாக தெரிகிறது.
தமிழ்த் தேசிய அரசியலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கிடையிலான போட்டி நிலை என்பது யாழ். தேர்தல் மாவட்டத்துக்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டு, அதுவும் வடமராட்சிக்குள் குறுக்கப்பட்டுவிட்டதோ என்று கொள்ள வேண்டியிருக்கின்றது. குறிப்பாக, கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வெற்றி- தோல்வி என்கிற விடயத்துக்குள் சுருக்கப்பட்டுவிட்டதோ என்றும் கருத வேண்டியிருக்கின்றது. ஊடக- சமூக ஊடாடல்களில் அது பெருமளவில் பிரதிபலிக்கவும் ஆரம்பித்திருக்கின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைப் பொறுத்தவரையில் யாழ்ப்பாணத்தில் மொத்தமுள்ள ஏழு ஆசனங்களில் குறைந்தது ஐந்தை வெற்றி கொள்ள வேண்டும் என்கிற முனைப்போடு செயலாற்றுக்கின்றது. அதேவேளை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஓர் ஆசனத்தை வெற்றி கொள்வதையும் அனுமதிப்பதற்கான மனநிலையில் இல்லை.
ஏனெனில், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியோ (ஈபிடிபி), ஐக்கிய தேசியக் கட்சியோ ஒவ்வொரு ஆசனங்களை வெற்றி கொள்வதைக் காட்டிலும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஓர் ஆசனத்தை வெற்றி கொள்வதென்பது தமிழ்த் தேசிய அரசியலில் ஏக பிரதிநிதிகள் என்கிற தம் மீதான அடையாளத்தை சிதைக்கும் என்று கருதுகின்றது. அதனால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வெற்றி என்பது என்றைக்கும் உவப்பில்லாத ஒன்றாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இருக்கப் போகின்றது.
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியையோ, ஐக்கிய தேசியக் கட்சியையே தமிழ்த் தேசிய அடையாள அரசியலின் போக்கில் யாழ். தேர்தல் களத்திலிருந்து அகற்றுவது என்பது அவ்வளவு சிரமமான காரியமல்ல. மாறாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஓர் ஆசனத்தை வெற்றி கொள்வதற்கான வாய்ப்பு என்பது, ஒப்பீட்டளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி கொள்ள வேண்டிய 5 உறுப்பினர்களின் இழப்புக்கு ஒப்பானது.
அது, எதிர்கால அரசியலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மீது தமிழ் மக்கள் நம்பிக்கை கொள்வதற்கான சாத்தியப்பாடுகளை சிலவேளை உருவாக்கி விடலாம் என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு. அதுதான், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அரசியல் வருகையை, குறிப்பாக, தேர்தல் களமாடலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சற்றும் ரசிக்கவில்லை.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தன்னுடைய அரசியலை ஆரம்பித்து 5 வருடங்களைக் கடந்துவிட்டது. ஆனால், மக்களிடம் நம்பிக்கை பெறுவதற்கான வாய்ப்புக்களை பெரிதளவில் உருவாக்கவில்லை. மாறாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சிப்பதோடு காலத்தைக் கடத்தி விட்டது.
இந்தப் பொதுத் தேர்தல் களநிலைவரத்தை நேரடியாக எதிர்கொள்ளும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரோ, அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமோ அதை உணராமல் இல்லை. இது, மாற்றம் பற்றிய கோசத்தோடு களமாடும் தரப்பின் பெரும் பலவீனம். மக்களுக்கான அரசியலை மக்களுக்கு நெருக்கமாக இருந்து ஆற்றவேண்டும். அப்போதுதான், கொள்கை- கோட்பாடு பற்றிய புரிதல்களை மக்கள் கொள்ள ஆரம்பிப்பார்கள். அதுதான், தேர்தல் வெற்றிகளையும் குறிப்பிட்டளவில் பெற்றுத்தரும். இப்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எதிர்கொண்டிருக்கும் நெருக்கடி நிலை என்பது, அவர்களின் எதிர்கால அரசியலுக்கான வாழ்வா- சாவாப் போராட்டம்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இப்போதைய ஒரே இலக்கு யாழ். தேர்தல் மாவட்டத்தில் குறைந்தது 40,000- 45,000 வாக்குகளைப் பெறுவதுதான். அது, அவ்வளவு இலகுவான காரியமல்ல. ஆனால், அந்த வாக்குகளைப் பெற முடியாது போனால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பெரும் தோல்வியாக அமையும்.
சமூக ஊடகங்களின் ஊடாட்டங்களில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வெற்றி பற்றிய நம்பிக்கை கொள்ளும் தரப்பினரையே அது சோர்ந்து போக வைக்கும். அது, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நோக்கி மக்களை ஒருங்கிணைப்பதற்கான வாய்ப்புக்களை எதிர்காலத்தில் இல்லாமற் செய்துவிடும்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுத் தேர்தலுக்கான வருகை என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை என்றைக்கும் இல்லாதளவுக்கு விறுவிறுப்பாக இயங்க வைத்திருக்கின்றது. இது, தமிழ்த் தேசிய அரசியலின் போக்கில் ஆரோக்கியமானதுதான். தன்னுடைய இருப்புக்கான அச்சுறுத்தல் இல்லை என்கிற நிலையில் கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும் அசமந்தப் போக்கில் செயற்பட்டு வந்திருக்கின்றது.
ஆனால், தன்னுடைய பெருமிருப்புக்கான அச்சுறுத்தல் மெல்ல உருவாகிவிட்டதோ என்று கருதிய நிலையில், மக்களோடு மக்களாக(!) அரசியல் செய்வதற்கான சாத்தியப்பாடுகளை உருவாக்கி விட்டிருக்கின்றது. இது, தேர்தல் காலத்தோடு முடிந்துவிடாமல் இருக்க வேண்டும்.
தமிழ்த் தேசிய அரசியல் சூழல் ஊடக பரபரப்புக்களினால்- கருத்து மோதல்களினால்- வசை பாடல்களினால் அதிகம் தீர்மானிக்கப்படுவதில்லை. விடுதலைப் புலிகளின் தொடர்ச்சி என்பதற்கான சில காரணங்கள் தான் தமிழர் அரசியலை தற்போது அதிகமாகத் தீர்மானிக்கின்றன. அதற்காக, அது யதார்த்த சூழலை புறந்தள்ளுமளவுக்கும் இல்லை.
அதுபோல, மாற்றம் பற்றி எதிர்பார்ப்புக்கள் இருந்தாலும், அதனை முன்னிறுத்தும் தரப்புக்களிடம் அவ்வளவு தீர்க்கமான செயற்றிட்டங்கள் இல்லாத நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தொடர்ந்தும் முதன்மை சக்தியாக முன்னிறுத்துவதற்கான வாய்ப்புக்கள் தான் அதிகமாக காணப்படுகின்றன. அதைத்தான் கள யதார்த்தம் உணர்த்துகின்றது!
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago
6 hours ago