2025 மே 17, சனிக்கிழமை

மஹிந்தவும் குற்றமற்றவர்

Thipaan   / 2015 ஜூலை 29 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமது கட்சிக்குள் இருந்து எழுந்த நெருக்குதலுக்கு வளைந்து கொடுத்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த

ராஜபக்ஷவுக்கு ஓகஸ்ட் 17ஆம் திகதி நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் போட்டியிட இடமளித்துவிட்டார். மஹிந்த ராஜபக்ஷ, குருநாகல் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுகிறார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதிக்கு இந்த வாய்ப்பை வழங்கியதோடு, அரசியல் நாகரிகத்தைப் பற்றிய அவர் பெரும் நெருக்கடியை எதிர்நோக்குகிறார் என்பது சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்களைப் பார்க்கும் போது தெளிவாகிறது. ஏனெனில், ராஜபக்ஷவுக்கு இந்த வாய்ப்பை அளித்தமையினால் தாம் எந்த நோக்கத்துக்காக ஜனாதிபதி பதவியை ஏற்றாரோ அதே நோக்கத்துக்கு எதிராக ஜனாதிபதி செயற்படுகிறார்.

ராஜபக்ஷவின் ஆட்சி இனவாத ஆட்சி, ஜனநாயக விரோத ஆட்சி, ஊழல் மலிந்த ஆட்சி என்று கூறியே கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது மைத்திரிபாலவும் அவருக்காக குரல் கொடுத்தவர்களும் அவ்வாட்சியை கவிழ்க்க மக்கள் ஆதரவைக் கோரினர். ஆறு மாதங்கள் செல்லுமுன் மக்கள் வழங்கிய அந்த ஆணைக்கு எதிராக மீண்டும் மஹிந்த ஆட்சிபீடமேற இடமளிக்கும் வகையில் ஜனாதிபதி செயற்பட்டமை அரசியல் நாகரிகத்தையே குழி தோண்டிப் புதைப்பதற்குச் சமமாகும்.

மைத்திரிபாலவை பதவியில் அமர்த்தப் பாடுபட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புக்கள் இப்போது அவரது இந்த முடிவின் நாகரிகத்தன்மையைப் பற்றியும் ஆபத்தை பற்றியும் அவரிடம் கேள்வி எழுப்புகின்றன. வரப்போகும் நாட்களில் ஜனாதிபதித் தேர்தலின் போது மைத்திரிபாலவை ஆதரித்தவர்களே அவருக்கு எதிராக செயற்படும் நிலை உருவாகியிருக்கிறது.

இதனால், இந்தத் தேர்தல் காலத்தில் மஹிந்தவுக்கும் மைத்திரிபாலவுக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. நாட்டின் அரசியல் நிலைமை அவ்வாறானதாகத் தான் இருக்கிறது. இந்த விடயத்தில் சிறிசேனவுக்கு எதிராக எழும் குற்றச்சாட்டுக்களில் இருந்து அவரைப் பாதுகாக்க தாம் தயார் என மஹிந்தவின் ஆதரவாளர்கள் ஏற்கெனவே கூறியிருக்கிறார்கள். அதுவும் இரு தரப்பாரையும் மேலும் நெருங்கச் செய்ய உதவலாம். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்குள் மஹிந்த குழு, மைத்திரி குழு என்று குழுக்கள் இல்லை என மஹிந்தவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை கூறியிருந்தார்.

ஆனால், பொதுத் தேர்தல் முடிவடைந்து ஐ.ம.சு.கூவும் வெற்றி பெற்று மஹிந்தவும் தெரிவாகியிருந்தால் நிலைமை மீண்டும் மாறலாம். அப்போது மஹிந்தவை பிரதமராக்க வேண்டும் என்ற நெருக்குதல் வரும். ஜனாதிபதி அதனை புறக்கணிக்க முடியாமல் போகும். மஹிந்த பிரதமரானால் அவருக்கு ஜனாதிபதியாவதற்கு ஒரு ரவை வீச்சின் தூரம் மட்டுமே இருக்கும் என ஜனாதிபதி மைத்திரிபாலவே கடந்த நாட்களில் கூறியிருந்தார்.

அது ஒரு புறமிருக்க, மஹிந்தவின் ஆட்சிக்கு எதிராக ஊழல் மற்றும் போதைப் போருள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் எழுந்ததன் விளைவாக, ஊழல்கள் மற்றும் போதைப் பொருட்களோடு தொடர்பு இல்லாதவர்கள் மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற கருத்து நாட்டில் பலம்பெற்று வருகிறது. பெப்ரல் என்ற சுருக்கப் பெயரில் அழைக்கப்படும் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாடு என்ற அமைப்பு இந்த நோக்கத்துக்காக தற்போது செயற்பட்டு வருகிறது.

ஊழல்களிலும் ஏனைய சமூக விரோத செயற்களிலும் ஈடுபடாதவர்களை தேர்தல்களின் போது வேட்பாளர்களாக தெரிவு செய்வது தொடர்பாக அரசியல் கட்சிகளின் இணக்கத்தைப் பெற்றுக் கொள்வதற்காக, பெப்ரல் அமைப்பு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த மார்ச் மாதம் 12ஆம் திகதி ஒரு கருத்தரங்கை நடத்தியது. அப்போது தமிழ், முஸ்லிம் கட்சிகள் உட்பட நாட்டில் ஏறத்தாழ சகல கட்சிகளது பிரதிநிதிகளும் தமது இணக்கத்தை தெரிவித்து ஓர் ஆவணத்தில் கையொப்பமிட்டனர். அது இப்போது 'மார்ச் 12 பிரகடனம்' என்று அழைக்கப்படுகிறது.

மார்ச் 12 பிரகடனத்தை செயற்படுத்துவதற்காக அரசியல் கட்சிகளுக்கு கிடைத்த முதலாவது சந்தர்ப்பம் ஓகஸ்ட் 17ஆம் திகதி நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலாகும். ஆயினும், மக்கள் விடுதலை முன்னணி போன்ற ஒரு சில கட்சிகளைத் தவிர எந்தவொரு கட்சியும் தாமே கையெழுத்திட்ட அந்தப் பிரகடனத்தை அவ்வளவு மதிப்பதாக தெரியவில்லை. தற்போது போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களில் மக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளர்கள் எவருக்கும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படவில்லை என முன்னாள் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கூறுகிறார்.

ஏனைய கட்சி வேட்பாளர்களில் ஒருவருக்கு எதிராகவாவது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன என்பதே அதன் அர்த்தமாகும். அவர், தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளையும் கருத்திற் கொண்டு, இக் கருத்தை வெளியிட்டாரா என்பது தெளிவில்லை.

பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நேர்மையாகவே மார்ச் 12 பிரகடனத்தில் கையெழுத்திட்டு இருந்தால், நிச்சயமாக அவர்கள் வேட்பாளர்களை தேடிக் கொள்வதில் பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்கியிருக்க வேண்டும். ஆனால், எந்தவொரு பிரதான கட்சியும் அவ்வாறான பிரச்சினைகளை எதிர்நோக்கவில்லை.

அவர்கள் நேர்மையாகவே இந்த ஆவணத்தில் கையெழுத்திட்டு இருந்தாலும் அதனை அமுல்படுத்துவதில் நடைமுறைப் பிரச்சினைகள் இல்லாமல் இல்லை. அதாவது இவர்கள் தான் ஊழல்பேர்வழிகள் என்று நிர்ணயிப்பதில் பிரச்சினைகள் இருக்கின்றன. குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட ஒரே காரணத்துக்காக ஒருவர் ஊழல்பேர்வழியாவாரா?

அண்மையில் இடம்பெற்ற தெலைக்காட்சி கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்ட ஐ.ம.சு.கூ பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்தவும் இந்தக் கேள்வியை எழுப்பியிருந்தார். சட்டத்தரணியான அவர், சட்ட வாதங்களை முன்வைத்து, ஒருவர் நீதிமன்றத்தால் குற்றவாளியாக காணப்படும் வரை குற்றவாளியல்ல என்றார்.

சட்டப்படி அவரது வாதம் சரியானது தான். ஆனால், அந்த வாதத்தின் படி முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா பெருந்திரளான மக்கள் பார்த்துக் கொண்டு இருக்கையில் அரச ஊழியர் ஒருவரை மரத்தில் கட்டிப் போடுவதை முழு நாடே தொலைக்காட்சி மூலம் கண்ட போதிலும் அவர் குற்றவாளியல்ல. ஏனெனில், அவர் எந்தவொரு நீதிமன்றத்தாலும் குற்றவாளியாக காணப்படவில்லை. அவரையும் வேட்பாளராக அங்கிகரிக்கலாம்.

அவர், குற்றவாளியாக காணப்படுவது ஒரு புறமிருக்க, அவருக்கு எதிராக எவரும் எந்தவொரு நீதிமன்றத்துக்கு செல்லவும் இல்லை. இந்த சம்பவம் தொடர்பாக

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஒழுக்காற்று குழுவினால் நடத்தப்பட்ட விசாரணையிலும் அவர் நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்டது. அப்போது அக் குழுவின் தலைவராக இருந்தவர் வேறோருவர் அல்ல, நல்லாட்சியை நிறுவுவதற்காக ஆட்சிபீடமேறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே. எனவே, அந்த சம்பவத்தை பாவித்து சில்வாவை வேட்பாளராக நியமிக்க முடியாது என்று கூற தற்போதைய ஸ்ரீ.ல.சு.க. தலைவரான மைத்திரிபால சிறிசேனவினால் முடியாது.

அவ்வாறாயின் மக்கள் தொலைக்காட்சியில் கண்டது கனவா? அரசியல்வாதிகள், மார்ச் 12 பிரகடனத்தை எவ்வாறு ஏமாற்றப் போகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள இந்த சம்பவம் சிறந்த உதாரணமாகும்.

தாம் விரும்பியே மரத்தில் கட்டுண்டதாக சம்பந்தப்பட்ட அரச ஊழியர் சத்தியக் கடுதாசி ஒன்றை சமர்ப்பித்தார் என்ற அடிப்படையிலேயே அன்று ஸ்ரீ.ல.சு.க ஒழுக்காற்றுக் குழு, சில்வா நிரபராதி என்று தீர்மானித்தது. ஆனால், அவர் அச்சத்தின் காரணமாகவே அவ்வாறு சத்தியக் கடதாசியை சமர்ப்பித்தார் என்பது உலகமே அறிந்த உண்மை. அவர், நீதிமன்றம் செல்லாததற்கும் அச்சமே காரணமாகியது. அவர் ஒரு முஸ்லிம். அது அச்சத்தை இரட்டிப்பாக்கியிருக்கும்.

அந்த அரச ஊழியர் பின்னர் நாட்டை விட்டே வெளியேறியிருந்தார். அதன் பின்னர் அவர் தமக்கு விடுக்கப்பட்ட மரண அச்சுறுத்தல்களைப் பற்றி ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். ஸ்ரீ.ல.சு.க. தலைவர்கள் நேர்மையாளர்களாக இருந்தால் அப்போதாவது சில்வாவுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

1990ஆம் ஆண்டு 600 பொலிஸாரை கொலை செய்ய உத்தரவிட்டதாக முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு எதிராக ஊடகங்கள் பல முறை குற்றம் சுமத்தியிருந்தன. அவர் அதனை நிராகரித்துள்ளார். அதேவேளை, அவர் எந்தவொரு நீதிமன்றத்தாலும் அதற்காக குற்றவாளியாக காணப்படவில்லை.

நோன்பு காலத்தில் முஸ்லிம்கள் மத்தியில் பகிர்ந்தளிப்பதற்காக முஸ்லிம் நாடுகளால் அனுப்பி வைக்கப்படும் பேரீச்சம் பழத்திலும் ஊழல் இடம்பெறுவதாக சில வருடங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் பேசப்பட்டது.

அரசியல்வாதிகள் ஊழல் என்ற விடயத்தில் நேர்மையாக நடந்து கொள்வதில்லை என்ற புரிந்து கொள்வதற்கு வெலே சுதா என்ற போதைப் பொருள் கடத்தல்காரனின் வாக்குமூலங்களும் உதவும். பாகிஸ்தானிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பின்னர் இலங்கை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்ட வெலே சுதா, ஆயிரம் கிலோ கிராமுக்கு மேல் ஹெரொய்னை நாட்டுக்குள் கடத்தி வந்துள்ளதாக முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்திருந்தார். ஒரு கிலோகிராம் ஹெரொய்ன் ஒரு கோடி ரூபாய் பெறுமதியானது என்றும் அவர் கூறியிருந்தார்.

அந்தளவு பாரிய குற்றமிழைத்த வெலே சுதா தம்மோடு தொடர்புடைய அரசியல்வாதிகளின் பெயர்களை

பொலிஸாரிடம் கூறியிருந்தார். ஆனால், சுசில் பிரேமஜயந்தவின் வாதத்தின் பிரகாரம் அந்த அரசியல்வாதிகளுக்கும் தேர்தலில் போட்டியிட இடமளிக்க முடியும். ஏனெனில், அவர்கள் நீதிமன்றத்தால் குற்றவாளிகளாக காணப்படவில்லை.

இதேபோல் பொதுபல சேனாக்காரர்களுக்கும் தேர்தலில் போட்டியிட தடையேதும் இல்லை. ஏனெனில், அளுத்கமை, பேருவளை மற்றும் வெலிப்பென்ன ஆகிய பகுதிகளில் வன்செயல்களுக்குக் காரணம் அவர்கள் தான் என எந்த நீதிமன்றமும் தீர்ப்பளிக்கவில்லை. மஹிந்த அவர்களுக்கு பக்கப்பலமாக இருந்தார் என்பதும் எந்தவொரு நீதிமன்றமும் தீர்ப்பளிக்கவில்லை.

பொதுவாக தற்போதைய அரசியல்வாதிகள் அனைவரும் சட்டப்படி எவ்வித ஊழலுமற்றவர்கள். எனவேதான் திருட்டுக் குடும்பம் என தாமே வர்ணித்த ராஜபக்ஷ குடும்பத்தில் பலருக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கியிருக்கிறார். இவ்வாறு அரசியல்வாதிகள் தாமே யையெழுத்திட்ட மார்ச் 12 பிரகடனத்தை கேலிக்கூத்தாக்கியுள்ளனர். ரஞ்சன் ராமநாயக்கவும் அதனையே கூறுகிறார்.

நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் மட்டுமே ஒருவர் ஊழல் பேர்வழி என்று முடிவு செய்வதாக இருந்தால் மார்ச் 12 பிரகடனமே அர்த்தமற்றதாகிவிடுகிறது. ஏனெனில், நீதிமன்றத்தால் குற்றவாளியாக காணப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என சட்டத்திலேயே வருகிறது. எனவே, அவ்வாறு குற்றவாளியானவர்களை போட்டியிடுவதிலிருந்து தடுப்பதற்கு மார்ச் 12 பிரகடனம் போன்ற ஆசாரக் கோவைகள் தேவையில்லை.

நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்காவிட்டாலும் அரசியல்வாதிகளிடையே ஊழல்பேர்வழிகள் இல்லையா? மோட்டார் சைக்கிளில் முதன் முதலாக நாடாளுமன்றத்துக்கு வந்த சில சிறுபான்மையின அரசியல்வாதிகள் இன்று கோடீஸ்வரர்களாகி இருக்கிறார்கள். அது எப்படி? முன்னாள் அரசியல்வாதி ஒருவரின் சாரதி இப்போது அரசியல்வாதியாக இருக்கிறார். அவரிடம் யானைகளும் இருக்கின்றன. அது எப்படி? மேலும் சிலர் அரசியலில் ஈடுபட்டதன் பின்னர் விமானங்களையும் விலைக்கு வாங்கியிருக்கின்றனர். அது எப்படி? ஒரு இலட்சம் ரூபாய் சம்பளத்தையாவது பெறாத அரசியல்வாதிகள் எவரும் நினைத்தவுடன் விடுமுறைக்கென்றும் சிகிச்சை பெறுவதற்கென்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு செல்கிறார்கள். அது எப்படி?

ஐ.ம.சு.கூ. தலைவர்கள் போதியளவு சம்பாதித்துக் கொண்டு இருப்பதனால் அவர்கள் மேலும் நாட்டை சுரண்டுவார்கள் என்று அச்சப்படத் தேவையில்லை என்றும் ஆனால், ஐ.தே.க பதவிக்கு வந்தால் அக்கட்சியின் தலைவர்கள் ஆரம்பத்திலிருந்து நாட்டு வளங்களை சுரண்டுவார்கள்; என்றும்- எனவே, ஐ.ம.சு.கூவுக்கே மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியிருந்தார். ஐ.ம.சு.கூ. தலைவர்களின் ஊழல்களுக்கு இதை விட என்ன ஆதாரம் வேண்டும்?

எதிர்க்கட்சிகளின் பொது ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிப்பதற்காக ஐ.ம.சு.கூவை விட்டு வெளியேறும் அரசியல் வாதிகளின் 'பைல்கள்' தம்மிடம் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது கூறினார். தம்மை விட்டுப் பிரிந்தவர்களையும் பிரியவிரும்புபவர்களையும் மிரட்டுவதற்காகவே அவர் அவ்வாறு கூறினார். எல்லோரும் ஊழலற்றவர்களாக இருந்தால் அதுபோன்ற மிரட்டல்களால் அச்சப்படப் போவார் ஒருவரும் இல்லை. ஊழல் பேர்வழிகள் தமது அணியில் இருப்பதனால் தான் அவர் அவ்வாறு மிரட்டினார்.

தாம் பதவியில் இருந்த போது குற்றமிழைத்த அரசில்வாதிகளை தண்டிக்கவில்லை எனவும் ராஜபக்ஷ, ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் வருத்தம் தெரிவித்து இருந்தார். அவ்வாறாயின் ஊழலுக்கு என்ன வேறு ஆதாரம் வேண்டும்? உண்மையான தேவைக்கன்றி அரசியல் தேவைக்காக (ஐ.தே.க.வை பிளவுபடுத்துவதற்காக) ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தாவை சுற்றி வீதிகளை காபட் செய்ததாகவும் அவர் அண்மையில் ஒப்புக் கொண்டார்.

அதற்காக பொது மக்களின் பணமே வீணாக்கப்பட்டது. வீண் விரயத்துக்கு இது எவ்வளவு சிறந்த ஆதாரம்? ஆனால், நீதிமன்றத்தால் இவை குற்றங்களாக தீர்ப்பளிக்கப்படவில்லை. எனவே, ஊழல்பேர்வழிகளை அரசியலில் இருந்து நீக்க அரசியல் கட்சிகளுக்கு தேவையிருந்தால் சட்டத்தை அளவுகோளாகக் கொண்டு அரசியல்வாதிகளை எடைபோட முடியாது.

இதற்கு அரசியல் நாகரிகமே அளவுகோலாக அமைய வேண்டும். அவ்வாறு செய்வதாக இருந்தால் மஹிந்தவும் அவரது ஆட்சிக் காலத்தில் அதிகாரத்தில் இருந்த பலரும் அரசியலைப் பற்றிப் பேசவே அருகதையற்றவர்கள். அரசியல்வாதிகளிடம் அதனை எதிர்ப்பார்க்க முடியாது. மக்கள் தான் அறிவுட்டப்பட வேண்டும். அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .