2025 மே 17, சனிக்கிழமை

அரசியல்வாதிகளுக்கு கல்வியறிவு தேவையா?

Thipaan   / 2015 ஜூலை 30 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகலிங்கம் கோபிகிருஷ்ணா

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருகின்ற நிலையில், தேர்தல் தொடர்பானதும் அரசியல்வாதிகள் தொடர்பானதுமான கலந்துரையாடல்கள் ஆரம்பித்துள்ளன. அதில், அடுத்த தேர்தலில் போட்டியிடக்கூடிய தகுதியுள்ள அரசியல்வாதிகள் யார், அவர்களுக்கான தகுதிகள் என்னவென்ற கேள்விகளும் கலந்துரையாடல்களும் கூட இடம்பெற்றிருந்தன.

இதில், அடிக்கடி எழுப்பப்படும் விடயம், அரசியல்வாதிகளுக்கான அடிப்படைக் கல்வி தொடர்பானது. சாதாரண தரம் கூடக் கற்காதவர்கள், நாட்டின் அமைச்சர்களாகவோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களாகவோ வருவது நாட்டின் சாபக்கேடு என்பது, அரசியலில் ஆர்வமுள்ள இளைஞர்களின் ஒன்றுகூடல்கள் அல்லது குழுக் கலந்துரையாடல்களில் அதிகம் பகிரப்படுகின்ற ஒன்று.

ஆக, தேர்தலில் போட்டியிடுவதற்கான அடிப்படைத் தகுதியாக, குறித்த கல்வியறிவு மட்டத்தைத் தெரிவுசெய்வது அவசியம் என்பது, ஒரு சாராரின் வாதம்.

அடிப்படையான கல்வியறிவு கூட இல்லாதவர்கள், எவ்வாறு நாட்டின் மக்களுக்குப் பயன்தரக்கூடிய சட்டங்களை இயற்றுவதிலோ அல்லது அதில் பங்களிப்புச் செய்வதிலோ பங்கேற்க முடியும்?, எவ்வாறு அவர்களால் நாட்டின் மக்களின் பிரதிநிதிகளாக இருக்க முடியும் என்பது அத்தரப்பினரின் வாதம். இளைஞர்களிடத்தே அல்லது படித்தவர்களிடத்தே, இந்த வாதத்துக்கான ஆதரவு அதிகமாக இருக்கிறது என்ற நிலைமையும் காணக்கூடியதாக உள்ளது.

கல்வியறிவில்லாதவர்களை விட கல்வியறிவுடையவர்கள் சிறந்த அரசியல்வாதிகளாக வர முடியும் அல்லது கல்வியறிவில்லாதோரினால் சிறந்த அரசியல்வாதிகளாக வர முடியாது என்கிற வாதம் பல அனுமானங்களை அடிப்படையாகக் கொண்டது.

கல்வி என்பதும் அறிவு என்பதும் சம்பந்தப்பட்டது. கல்வி கற்றோர் அனைவரும் அறிவுள்ளவர்கள்.

கல்வி கற்றோர் நல்லவர்களாக அல்லது அதிகளவிலான தீய செயல்களில் ஈடுபடுவதில்லை.

கல்வி கற்காதோர், சிறந்த அரசியல்வாதிகளாக வரமுடியாது, மறுபுறத்தில், கல்வி கற்றோர் சிறந்த அரசியல்வாதிகளாக வர முடியும்.

இந்த மூன்று அனுமானங்களும் மிகவும் தவறானவை.

கல்வி என்பதற்கும் அறிவு என்பதற்குமிடையிலான தொடர்பேதும் உறுதியாக இல்லை. அறிவு என்பதை வரையறுப்பது கடினம் என்ற போதிலும், கலாநிதிப் பட்டம் பெற்ற எல்லோரும் ஒட்டுமொத்த அறிவானவர்களாக இருப்பார்களென்றோ, இல்லையெனில்,  உயர்தரத்தில் சித்தியடையாதவர்கள் அறிவற்றவர்களாக இருப்பார்களென்றோ நிரூபித்துவிட முடியாது. மாறாக, கலாநிதிப் பட்டம் பெற்ற ஒருவர், தனது துறையில் அறிவானவராக இருக்கலாம். ஆனால், அதுவே 'அறிவு' என வரையறுத்துவிட முடியுமா என்பது சந்தேகமே. பிரபல எழுத்தாளரான ஒஸ்கார் வில்ட் தெரிவித்த கருத்து, இதனை விளங்கப்படுத்த உதவலாம். 'கல்வியென்பது போற்றத்தக்க ஒன்று. ஆனால், அறிவதற்குப் பொருத்தமான எதுவும் கற்பிக்கப்பட முடியாது என்பதை, நேரத்துக்கு நேரம் ஞாபகம் கொள்வது சிறந்தது'.

அடுத்ததாக, கல்வி கற்றோர் அல்லது படிப்பறிவுமிக்கோர், குற்றச்செயல்களில் ஈடுபடுவது குறைவு அல்லது இல்லை என்ற அனுமானம் தவறானது. இரு தரப்பினரும் ஈடுபடும் குற்றத்தின் மாதிரிகள் வேறுபடலாம். ஆனால், அதற்காக ஒருவரின் குற்றம் இல்லையென்றாகிவிடாது. தனது தேர்தல் தொகுதியில் ஆயுதங்களுடன் நடமாடும் படிப்பறிவற்றவருக்கும் (படிப்பறிவற்றவர் மாத்திரம் தான் இதைச் செய்ய முடியுமென்றில்லை. அது தனியான விவாதம்), நாட்டின் அரச திணைக்களங்களின் பணம் சம்பந்தமான ஒப்பந்தங்களில் பில்லியன்கணக்கான பணத்தை நுட்பமான முறையில் கொள்ளையிடுவதும் வித்தியாசமாகிவிடாது. ஒப்பீட்டளவில், இரண்டாவது குற்றம் அதிகமானோரைப் பாதிக்கக்கூடும். ஆயுதங்களுடன் நடமாடுவதென்பது, எங்களது நேரடி இருப்புக்கு ஆபத்தாக அமையலாம் என்பதால் சாதாரண மனிதர்களான நாம் அதிகமாக வெறுக்கலாம். ஆனால், நாட்டின் பொதுச் சொத்துகளை கொள்ளையிடுவது என்பதும் எங்களை அதிகமாகப் பாதிக்குமென்பது உண்மை.

மூன்றாவதாக, சிறந்த அரசியல்வாதிகளுக்கும் கல்வி, அறிவுக்குமிடையிலான சம்பந்தம் அல்லது சம்பந்தமின்மை. இலங்கையின் முதலாவது பிரதமரான டி.எஸ். சேனநாயக்க, கல்வியில் அதிகளவு சிறந்து விளங்கியவரல்லர். உலகின் முதலாவது பெண் பிரதமரான ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவும் அவரது கல்விப் புலமைகளுக்காக அறியப்பட்டவர்களல்லர்.

அவர்களது அரசியல் நடவடிக்கைகள், அவர்களால் எடுக்கப்பட்ட தவறான முடிவுகள் என்பவற்றைத் தாண்டி, அவர்கள் பலமான ஆளுமைகளாக விளங்கினார்கள் என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய ஒன்று. இவர்களை மிகவும் பொருத்தமான உதாரணம், இந்தியாவின் முதலமைச்சராக விளங்கிய காமராஜர். தனது 11ஆவது வயதில் பாடசாலைக் கல்வியைத் துறந்த காமராஜர், தமிழ்நாட்டில் கல்வி சம்பந்தமான அதிகளவு மாற்றங்களை ஏற்படுத்திய தலைவராக இன்னமும் கருதப்படுகிறார்.

ஆம், காமராஜர் விதிவிலக்கு என்ற வாதம் முன்வைக்கப்படக் கூடும். ஆனால், நன்றாகப் படித்த தலைவர்கள், அவர்களுடைய படிப்பின் காரணமாக சிறந்த தலைவர்களாக இருந்தமைக்கான உதாரணங்கள் உள்ளனவா என்ற கேள்வி எழுகின்றது.

இலங்கையின் அண்மைக்கால அனுபவங்களிலும் கூட, படித்தவர்கள் என்பதற்காக சிறந்த அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டோர் என உதாரணம் காட்டுவதற்கான ஆளுமைகளைத் தேடுவது கடினமானதாகவே உள்ளது.

பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், படித்தவர் என்பதற்காக நிலையான அரசியற் கொள்கையொன்றைக் கொண்டிருந்தவராக இல்லை. இலங்கையில் மிகவும் அறியப்பட்ட எழுத்தாளர்களில் ஒருவரான பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க, தனது கொள்கைகளை அடிக்கடி மாற்றுவதற்காக அறியப்பட்டவர்.

கல்வியாளரான மிலிந்த மொரகொட, பச்சோந்தி அரசியல்வாதி எனப் பெயர்பெற்றவர். ஜனவரி 8ஆம் திகதி பதவிக்கு வந்த நல்லாட்சிக்கான அரசாங்கத்தில், கல்வியாளர்களில் ஒருவரான ரவி கருணாநாயக்க மீது அதிக விமர்சனங்கள் காணப்பட்டிருந்தன. இவ்வாறு, கல்வியறிவு அதிகமாக உள்ளவர்கள் மீதான பட்டியல் தொடர்ந்து நீள்கிறது. சிறப்பான அரசியல்வாதிகளை கல்வியறிவு உருவாக்குமெனில், அதற்கான ஆதாரங்களாக சுட்டிக்காட்டுவதற்கு, சில ஆதாரங்களாவது இருக்க வேண்டுமல்லவா?

ஆகவே, அடிப்படைக் கல்வியறிவு ஒன்றை எல்லையாக நிர்ணயிப்பது, குறித்த ஒரு பிரிவினரை காரணமின்றி ஒதுக்குவதாக அமையும். அத்தோடு, கல்வியறிவு எல்லையாக எதை நிர்ணயிப்பது என்ற கேள்வியும் எழுகிறது.

சாதாரண தரம்? உயர்தரம்? பல்கலைக்கழக அனுமதி? பல்கலைக்கழகப் பட்டம்? முதுகலைமாணிப் பட்டம்? கலாநிதிப் பட்டம்?

ஒன்றுக்கும் மேற்பட்ட கலாநிதிப் பட்டங்களைக் கொண்டிருக்கும் ஒருவருக்கு, வெறுமனே ஓர் இளங்கலைமாணிப் பட்டத்தைக் கொண்டிருப்பவரின் கல்வியறிவு மீது சந்தேகங்கள் எழலாம். அதற்காக, கலாநிதிப் பட்டங்கள் கொண்டவர்கள் மாத்திரம் தான் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற சட்டம் பொருத்தமானதா என்றால், இல்லையென்பதே பெரும்பாலானோரின் பதிலாக இருக்கும். ஆகவே, எந்த மட்டம் சரியான கல்வியறிவு மட்டம் என்பதை எவ்வாறு தீர்மானிப்பது என்பதிலும் குழப்பம் இருக்கிறது.

இவையெல்லாவற்றையும் விட முக்கியமானது, இவ்வாறான அடிப்படைத் தகைமைகளை விதிப்பதன் மூலமாக, ஜனநாயகத்துக்குப் புறம்பான நடவடிக்கையிலேயே நாம் ஈடுபடுகிறோம். ஒருவரது கல்வியறிவை வைத்து ஒருவர் தேர்தலில் போட்டியிடுவது என்ற ஜனநாயக உரிமையைப் பறிப்பதென்பது ஜனநாயகத்துக்கு விரோதமானதே.

மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள் கல்வியறிவோடு இருப்பதென்பது சிறந்த நிலைமை தான். ஆனால், அதை விட முக்கியமானது, அவர்கள் மக்களுக்கான பணிகளை ஆற்றுவதற்கான அறிவையும் விருப்பத்தையும் ஆர்வத்தையும் கொண்டிருப்பது தான்.

இதற்கான இலகுவான முடிவு அல்லது தீர்ப்பென்பது, மக்களிடத்தேயே உள்ளது.

ஒருவர் தேர்தலில் போட்டியிடுகிறார் எனில், அவரது கல்வியற்ற நிலைமை, அவர் அரசியலில் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் இடையூறாக அல்லது பாதிப்பாக அமையுமெனில், அவருக்கு வாக்களிப்பதை மக்கள் தவிர்க்க முடியும். அதேபோல், கல்வியறிவற்ற போதிலும், ஒருவரது அறிவென்பது சிறப்பாக உள்ளது, அவரால் சிறந்த முடிவுகளை எடுக்க முடியென்ற நிலை காணப்பட்டால், அவரை மக்கள் தேர்வு செய்ய முடியும்.

அதேபோல், சிறந்த கல்வியறிவுடைய போதிலும், ஒருவரது முடிவெடுக்கும் திறன் பற்றிய கேள்விகள், சந்தேகங்கள் இருப்பின், அவரை மக்கள் நிராகரிக்க முடியும். இதன் மூலம், மக்களுக்கான சிறந்த பிரதிநிதித்துவத்தை வழங்கக்கூடிய அதிக வாய்ப்புகளைக் கொண்டோரைத் தெரிவு செய்வதற்கான வாய்ப்பு, மக்களுக்கு ஏற்படும்.

அனைத்தும் கணினி மயப்படுத்தப்பட்ட உலகில், 1102ஸ்ரீ3 என்பதை அறிவதற்கு புதிதாக நிரலிகளையெல்லாம் எழுதிக் கொண்டிருப்பதை விட, கைவிரலை மடக்கி எண்ணினால் விடையை இலகுவாகப் பெற்றுக் கொள்ள முடியுமென்பதை மக்கள் புரிந்து கொண்டால் சரியானது, சிறப்பானது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .