Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Thipaan / 2015 ஓகஸ்ட் 03 , மு.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.கே. அஷோக்பரன்
பொதுத் தேர்தல் பற்றி மௌனம் கலைத்துள்ளார் வடமாகாண முதல்வர் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தான் வெளிநாட்டுப் பயணத்தில் இருந்தபோது தேர்தல் அறிவிக்கப்பட்டதாகவும் தான் தற்போதுதான் திரும்பி வந்துள்ளதாகவும் கூறியவர், தேர்தல் பற்றிய தனது நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தியிருந்தார்.
'மக்களுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றுபவர்களை எதிர்வரும் பொதுத்தேர்தலில், எம்நாட்டில் வாழும் எமது மக்கள் தெரிவு செய்ய வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு. தமிழ்ப் பிரதிநிதிகளைப் பொறுத்தவரையில் வள்ளுவன் வாக்குக்கிணங்க, நேர்மையான அரசியல், கொள்கையில் உறுதி, மக்களுக்காக அர்ப்பணிப்புடன்
பணியாற்றக்கூடிய மனோபாவம்,
தூரநோக்குப் பார்வை, எந்தக் கட்டத்திலும் எந்தக் காரணத்துக்காகவும் விலைபோகாத மனோதிடம் கொண்ட அரசியல்வாதிகளே எமக்குத் தேவைப்படுகின்றார்கள்.
அத்துடன், தமிழர்களின் தனித்துவத்தை உறுதிப்படுத்தி, அவர்களின் சுய நிர்ணய உரிமையை உறுதிப்படுத்தி, எமது மக்களுக்கான உரிமையையும் நீதியையும் பெற்றுக் கொள்ளக் கூடியவர்களே எமது மண்ணுக்கும் மக்களுக்குமாக இன்றைய காலத்தில் தேவையாக இருக்கின்றார்கள். அதனை உணர்ந்து அவர்கள் தமக்குள்ள வரலாற்றுப் பொறுப்பை, தார்மிகக் கடமையைச் சரிவரச் செய்வதற்கு நான் துணையாக நிற்பேன்' என முதல்வர் விக்னேஸ்வரன் தான் இலண்டனில் ஆற்றிய உரையிலிருந்து மேற்கோள்காட்டி, தனது நிலைப்பாட்டை எடுத்துரைக்கிறார்.
நேரடியாக தான் சார்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையோ, வேறு கட்சியெதனையுமோ ஆதரிப்பதாகக் கூறாமல், கொள்கையளவிலான நிலைப்பாட்டை அவர் அறிவித்திருப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அபிமானிகளிடத்தே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக கடந்த வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு அமோக வெற்றியீட்டி வட மாகாணசபையின் முதலாவது முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன்.
தென்னிலங்கையில் கல்வி கற்று, யாழ். மண்ணில் நீதிபதியாக பணிபுரிந்திருப்பினும், தனது பிற்கால வாழ்வை தென்னிலங்கையிலேயே கழித்தவர். தமிழ்த் தேசிய அரசியலை சிரமேற்கொண்டு தேர்தலில் போட்டிபோட்ட போதும், அதனைத் தொடர்ந்து அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்பாக பதவியேற்றுக்கொண்ட போதும் அவர் பல விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
குறிப்பாக தமிழ்த் தேசியத்தின் விசுவாசிகளும் அபிமானிகளும் அவரைக் கடுமையாக விமர்சித்திருந்தார்கள். ஆனால், கடந்த இரண்டாண்டுகளில் முதல்வர் விக்னேஸ்வரன் தனது ஸ்திரமான அரசியல் நிலைப்பாடுகளால் அத்தகைய விமர்சனங்களை வெற்றிகொண்டது மட்டுமல்லாது, தனது கொள்கை தவறாத அரசியலையும் அழுத்தத்துக்கு இடங்கொடாத துணிவையும் பல சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தியிருந்தார்.
அவரது நேர்மையான, அதேவேளை நேரடியான கருத்துக்கள் அவர் சார்ந்த கட்சிக்குள்ளேயே பலமுறை அதிருப்தியை ஏற்படுத்தியதை நாம் ஊடக அறிக்கைகள் வாயிலாகவும் செய்திகளூடாகவும் அறிந்து கொண்டோம். நடைமுறை அரசியல் நீரோட்டத்தில் முதல்வரின் சில நடவடிக்கைகள் கட்சிக்கு சார்பற்றதாக இருப்பது கட்சி அரசியல்தரப்பில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கலாம்.
ஆனால், தமிழ் மக்கள் தேர்ந்தெடுத்த முதல்வராக, அந்த மக்களின் அபிலாஷைகளை முன்னிறுத்தும் முதல்வராக அவர் அண்மைக் காலங்களில் வெற்றிபெற்றிருக்கிறார். ஆயினும், அவர் சார்ந்த கட்சியை விட்டுக்கொடுக்காது ஆதரிக்கவேண்டியதும் அக்கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்ற அடிப்படையில் அவரது பொறுப்பல்லவா? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்குகளாலேயே அவர் முதல்வரானார் என்ற வாதங்களும் முன்வைக்கப்படுகின்றன.
இலங்கைத் தேர்தல்களைப் பொறுத்தவரை கட்சிகள் முக்கியம் பெறுகின்றன. இங்கு கட்சி சார்ந்தோ, சுயேட்சைக் குழு சார்ந்தோதான் ஒருவர் தேர்தலில் போட்டியிட முடியும். அவ்வாறிருக்கையில் கட்சிசார்ந்து போட்டியிட்டவர் கட்சியின்பால் இயைந்து ஒழுக வேண்டிய கடப்பாடு உண்டு என்று நிச்சயம் எதிர்பார்க்க முடியும். ஏனெனில், இங்கு தேர்தலில் கட்சிக்கே முதலில் மக்கள் வாக்களிக்கின்றனர். அதன் பின்புதான் தமது விருப்புத் தெரிவை வேட்பாளர்களுக்கு அளிக்கின்றனர்.
வேட்பாளர்களுக்கு வாக்களிக்காது கட்சிக்கு மட்டும் வாக்களிக்க முடியும். ஆனால், கட்சிக்கு வாக்களிக்காது ஒரு தனி வேட்பாளருக்கு மட்டும் வாக்களிப்பது இங்கு சாத்தியமில்லை. அந்தவகையில், தெரிவு செய்யப்படும் எந்த வேட்பாளரும் கட்சியின் வாக்குகளின் படியே தெரிவுசெய்யப்படுகிறார். அப்படித் தெரிவு செய்யப்படுபவர் அந்தக் கட்சியினது கொள்கையை முன்னிறுத்துவதும் கட்சியுடன் இணைந்தியங்குவதும் அவசியமாகிறது என்ற வாதத்தில் நியாயமிருக்கலாம். அப்படி இருக்கவேண்டும் என்ற கட்சியினரினது எதிர்பார்ப்பிலும் தவறில்லை.
முதல்வர் விக்னேஸ்வரன் தன்னுடைய அறிக்கையில் மேலும் இப்படிச் சொல்கிறார். 'சவால்களுக்கு முகம் கொடுக்கும் விதத்தில் உங்களுள் சிறந்த பிரதிநிதிகளை நீங்கள் தேர்ந்தெடுத்து நாடாளுமன்றத்துக்கு அனுப்புவது உங்கள் தலையாய கடமையாக விளங்குகின்றது. தேர்தல் முடிந்ததும் எமது மிகமுக்கிய சவாலான அரசியல் தீர்வுகளுக்காக ஒருமனதுடன் அரசியல் ரீதியாக ஒத்துழைக்கக் கூடிய பிரதிநிதிகளையே நீங்கள் தேர்ந்தெடுத்து அனுப்பவேண்டும்'. அத்தோடு அவர் மிக முக்கியமானதொரு கொள்கை நிலைப்பாட்டையும் குறிப்பிடுகிறார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் இணைந்து அமைச்சர் பதவியைப் பெறுவது பற்றி ஜனவரி மாத ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்பு அதிகம் பேசப்பட்டது. குறிப்பாக ஜனவரி 8இன் பின் உருவான தேசிய அரசாங்கத்தில், ஏற்படுத்தப்பட்ட 'மாற்றத்தின்' பங்குதாரர் என்ற வகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இரண்டு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படுவதாக செய்திகள் வந்தபோது வலுத்த வாதப்-பிரதிவாதங்கள் உண்டாயின.
தமிழ்த் தேசியம், தாயகம், சுயநிர்ணயம் என்ற தமிழ் மக்களின் அபிலாஷைகளுடன், இலங்கையின் அரசாங்கமொன்றில் பதவியேற்றல் என்பது பொருந்தாது. அது இலங்கையிலுள்ள நடைமுறை அரசியலை ஏற்பதாகவும் ஒற்றையாட்சியை ஏற்பதாகவும் அமையும் என்று ஒரு தரப்பும், எமது இலட்சியங்களை நோக்கி நாம் பயணிக்கும் வேளையிலே எமது சமகாலத் தேவைகளை நிறைவு செய்யவும், தமிழ் மக்கள் அபிவிருத்தியின் பயனை அனுபவிக்கவும் அரசாங்கத்தில் பங்குதாரராதல் உதவும், மேலும் அரசாங்கத்தோடு இணங்கிப்போவதனூடாக தீர்வொன்றைப் பெற்றுக்கொள்வதற்கான சாத்தியப்பாடுகளும் அதிகரிக்கும் என்று மறுதரப்பும் வாதிட்டன.
ஈற்றில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவொரு அமைச்சுப் பதவியையும் ஏற்றுக்கொள்ளவில்லை. கொள்கை சார்ந்து இது ஏற்புடைய முடிவே. ஏனெனில், மக்கள் இதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழ்த் தேசியத்தின் அடிப்படையிலேயே ஆதரித்து வருகிறார்கள். அபிவிருத்திக்காக அரசாங்கத்தோடு இணைதல், அமைச்சுப் பதவிகளைப் பெறுதல் என்பதற்கான மக்களாணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை மக்களிடமிருந்து பெறவில்லை. அமைச்சுப் பதவிகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெறுவதில் தமிழ் மக்களுக்கு நிறைய சாதகங்களுள்ளன. அதேவேளை, தீவிர தமிழ்த் தேசியவாதிகள் சுட்டிக் காட்டுவது போல அது எமது இலட்சிய அரசியல் போக்கை மாற்றிவிடவும் கூடும். எல்லா நடவடிக்கைகளும் போலவே இதுவும் சாதகங்களையும் பாதகங்களையும் கொண்டதொரு முடிவாகும். எது எவ்வாறாயினும் அதனைத் தீர்மானிப்பவர்களாக தமிழ் மக்களே இருக்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் பங்குதாரராகி அமைச்சுப் பதவி பெற வேண்டும் என்ற ஆணையை தமிழ் மக்களே வழங்கவேண்டும். அதனைத் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தினூடு வெளிப்படுத்தி மக்களாணையைப் பெறாது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைச்சுப் பதவிகளை ஏற்குமானால் அது தமிழ் மக்கள் வழங்கிய ஆணையை மீறியதாகவே அமையும். ஆகவே, அவ்வாறானதொரு எண்ணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இருக்குமானால் மக்களாணையொன்றை இத்தேர்தலில் பெறுவதே ஏற்புடைய நடைமுறையாகும்.
இந்நிலையில், முதல்வர் விக்னேஸ்வரன் இது பற்றிய தனது கொள்கை நிலைப்பாட்டை இப்படிச் சொல்கிறார். 'அண்மையில் தெற்கத்தைய அரசியல்வாதியொருவர் என்னிடம் கேட்டார், புதிதாக அமைக்கப்படப் போகும் அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மந்திரிப் பதவிகள் கொடுக்க முன்வந்தால் உங்கள் கட்சி அவற்றை ஏற்குமா என்று. அப்போது பிரித்தானிய பிரதமர் கமரூன் அவர்களுக்கு ஜேர்மனியத் தலைவி அன்ஜெலா மேர்கல் கூறியதுதான் என் நினைவுக்கு வந்தது. அரசியல் ரீதியான கூட்டுக்களிலும் கூட்டமைப்புக்களிலும் 'சிறிய கட்சியே எக்காலத்திலும் அடிபட்டுப் போய் விடுகிறது' என்றார் அவர்.
அரசியல் ரீதியான ஒரு நிரந்தரத் தீர்வு எமக்குக் கிடைக்கும் வரையில் எக்காலத்திலும் அமைச்சுப் பதவிகளை எமது பிரதிநிதிகள் ஏற்கக் கூடாது என்பதே எனது கருத்து என்று எனது சிங்கள நண்பருக்கு நான் கூறினேன். இல்லையென்றால் அதாவது அவ்வாறு நாங்கள் ஏற்றுக் கொண்டால் எமது மக்களின் கோரிக்கைகள் காற்றோடு காற்றாய்ப் பறந்துவிடும். எம்மைப் பெரும்பான்மைச் சமூகம் தன்னுள் உள்ளிழுத்துக் கொண்டுவிடும் என்றேன். மேலும் அமைச்சரவைக் கூட்டுப் பொறுப்பு என்ற கொள்கையின் கீழ் எமது அமைச்சர்கள் சுதந்திரம் இழந்து விடுவார்கள். எமது மக்களின் உரித்துக்களையும் எதிர்பார்ப்புக்களையும் அவர்கள் கைவிட வேண்டிய நிலைவரும் என்றேன்'.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வொன்று வரும்வரை மத்திய அரசாங்கத்தில் பங்குதாரராகக் கூடாது, அமைச்சர் பதவிகளைப் பெறக் கூடாது என்பதை சூசகமாக தனது கொள்கை விளக்கமாகச் சொல்லியிருக்கிறார் முதல்வர். இதுவரை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தக் கொள்கையிலேயே இருந்தது. இதுவே இதுவரையான தமிழ் மக்களின் விருப்பமும் ஆணையுமாகும். இதுவே தொடர வேண்டும் என்ற முதல்வரின் எண்ணத்தில் எந்தத் தவறுமிருப்பதாகத் தெரியவில்லை.
மேலும் 'எமது மக்களின் எதிர்பார்ப்புக்களையும் அபிலாஷைகளையும் பூர்த்திசெய்யும் விதத்தில் சர்வதேச சமூகம் எம்முடன் கை கோர்த்துச் செல்லும் என்றும் எதிர்பார்க்கின்றோம்' என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டவர் 'திறமையானவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்' என மக்களிடம் வேண்டுகிறார்.
உண்மையில் முதல்வர் விக்னேஸ்வரனின் அறிக்கை பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அபிமானிகள் கவலையோ, அதிருப்தியோ கொள்ள வேண்டிய தேவை இல்லை. ஏனெனில், அவர் வெளிப்படுத்தியிருக்கும் கொள்கை நிலைப்பாடானது இதுவரையான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டிருந்த கொள்கையிலிருந்தும், நல்லாட்சி கோட்பாடுகளிலிருந்தும் எவ்வகையிலும் மாறுபாடானதொன்றல்ல. இந்நிலையில், வெளிப்படையாக முதல்வர் தான் சார்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு ஏற்புடையதொன்றல்ல. ஏனெனில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இதுவரையான கொள்கைகளை தான் ஆதரிப்பதாகவே அவர் கூறியிருக்கிறார். ஒருவேளை, இந்தக் கொள்கைகளிலிருந்து கூட்டமைப்பு விலகியிருந்தால் அல்லது விலக முயன்றாலன்றி இதுபற்றிக் கவலை கொள்ளவோ, அதிருப்திப்படவோ வேறு காரணமில்லை. தனிநபர்களை பெயர்சொல்லி ஆதரிக்காமல், தான் எத்தகைய வேட்பாளர்களை ஆதரிப்பார் என்று தகைமை சார்ந்து சொல்லியிருக்கிறார் முதல்வர். அந்தத் தகைமை கொண்டவர்களை தேர்ந்தெடுக்கும் பணியை மக்களிடம் விட்டிருக்கிறார். மக்கள் தேர்ந்தெடுப்பவர்கள் யாராயினும், அவரோடு இயைந்து பணி புரிவேன் என்று கூறியிருக்கிறார்.
ஆகவே, கொள்கைகளினூடாகவும் தகைமைகளினூடாகவும் தனது ஆதரவை வெளிப்படுத்தியிருக்கிறார் முதல்வர். தனது கொள்கைகளிலிருந்து த.தே.கூ. விலகாத வரை முதல்வரின் ஆதரவும் த.தே.கூவுகே என்பதே அவர் சொல்லும் செய்தி. முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் நழுவவுமில்லை, நடுநிலை வகிக்கவும் இல்லை. தமிழ் மக்களுக்கும், தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கும், தமிழ்த் தேசியத்துக்கும் நியாயம் செய்திருக்கிறார் என்பதே நிதர்சனம்!
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
5 hours ago