Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Thipaan / 2015 ஓகஸ்ட் 04 , மு.ப. 05:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ப.தெய்வீகன்
தாயத்தில் இடம்பெறும் தேர்தல்கள், புலம்பெயர்ந்த தமிழ் உறவுகளுக்கு எப்போதுமே தீவிர கவனத்தை ஈர்த்துக்கொள்ளும் ஜனவசியம் மிக்கவை. அந்த தேர்தல்களில் தங்களது கூட்டு மனவெளிப்பாட்டை அடிப்படையாக கொண்ட தீர்ப்புக்கள் பதிவு செய்யப்படவேண்டும் என்று அது எப்போதும் விருப்பம் கொள்வது வழக்கம்.
2009 ஆம் ஆண்டுக்கு முன்னர், தமிழர்களின் படைபலத்துக்கான நிதிமூலம் என்ற விடயத்தில் பிரதான அச்சாணியாக செயற்பட்ட புலம்பெயர்ந்த தமிழ்சமூகம், போர் முடிவுடைந்த பின்னர் தீவிர தேசிய நிலைப்பாட்டுக்கு சமாந்தரமான போராட்டம் ஒன்றை தாயகத்தில் பாராதபோது, இயல்பாகவே ஒரு தேசிய வெறுமை கொண்ட குழுமமாக விரக்தி கொண்டுவிடுகிறது. இந்த தொடர்விரக்தி நிலையை தாயகத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு தேர்தல்களிலும் புலம்பெயர்ந்த சமூகம் எடுக்கின்ற நிலைப்பாடுகளிலிருந்து தெளிவாக புரிந்துகொள்ள முடியும்.
தாயகத்தில் நிலவும் யதார்த்தத்தின் ஆணிவேர்களை புரிந்துகொள்ள மறுக்கும் ஒரு கூட்டமாகவும் சிலவேளைகளில், தாயகத்திலுள்ள மக்களின் உண்மையான தேவைகளை புரிந்துகொள்ள மறுக்கும் குழுமமாகவும் இந்த தீவிர உணர்வுடைய புலம்பெயர்சமூகம் தம்மையே தாங்கள் தனிமைப்படுத்திக்கொள்கிறார்கள்.
இவ்வாறு தனிமையடையும் கூட்டங்கள் ஒன்றாக சேர்ந்து தாயகத்தின் யதார்த்த வாழ்நிலைக்கு பொருத்தமற்ற அரசியல் கோட்பாடுகளையும் இராஜதந்திர சித்தாந்தங்களையும் வரிந்துகட்டிக்கொண்டு தங்களை தாயக மக்களுக்கான கவசமென்று சுயமாக ஒரு சுதந்திர பிரகடனம் செய்துகொள்கிறார்கள்.
தாயகத்தின் நடைமுறை வாழ்வியலுடன் எந்த புள்ளியிலும் சந்தித்துக்கொள்ளாத இந்த புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தின் ஒரு குழுமம் மேற்கொள்ளுகின்ற அரசியல் - இராஜதந்திர செல்நெறிகள் இம்முறை தேர்தலுக்கு பின்னர் என்னவிதமான பிறழ்வுகளை ஏற்படுத்தப்போகின்றன என்பதை சுயபரிசோதனை செய்யவேண்டியது மிகவும் அத்தியாவசியமானது.
அத்துடன், இந்த குழுமங்களுக்கு இருக்கின்ற தேசிய அவாவை எங்கு அதிகம் பிரயோகிக்கவேண்டும் என்பதை இனங்கண்டு கொள்வதுதான் இன்றைய காலகட்டத்தில் முக்கியமானதாகும். தங்களுக்கான வரையறைகளை இவை எங்கே தேடப்போகின்றன? இதற்கு பதில் திறப்பதுடன் தொட்டுச்செல்வதுதான் இந்த கட்டுரையின் நோக்கம்.
போருக்கு பின்னரும் தொடர்ந்த மஹிந்தவின் சர்வதிகார ஆட்சி தூக்கியெறிப்பட்டு, கொஞ்சம் மூச்சுவிடும் ஜனநாயக வெளியினுள் நின்று தனது முதலாவது தேர்தலை சந்திக்க தயாராகிறது தமிழர் தாயகம்.
இந்த தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசியம் சார்ந்த அரசியல் கட்சிகளின் தேர்தல்கால மும்முரங்களை எடுத்துநோக்கினால், அவை எல்லாமே தாயகத்தில் மக்களுடன் பேணுகின்ற உறவுகளைவிட புலம்பெயர்ந்த தமிழ் மக்களுடன் பேணுகின்ற உறவுகள்தான் நெருக்கமுடன் உள்ளன போல் தெரிகிறது. ஆனால், அது ஒன்றும் பெரிய குற்றமில்லை. ஏனெனில், பணத்தை அள்ளி இறைக்கும் பேரினவாத கட்சிகளின் தேர்தல் படையெடுப்புகளுக்கு எதிராக தங்களது அரசியல் இருப்பை ஜனவசியம் மிக்கதாக மாற்றுவதற்கான தேர்தல் கால செலவுகளுக்கு புலம்பெயர்ந்த அமைப்புக்களிடம் தங்கியிருப்பது ஒன்றும் வரலாற்று துரோகமும் அல்ல.
ஆனால், கட்சிகளுக்கு அள்ளி வழங்கும் ஆதரவின் ஊடாக அவற்றின் முடிவெடுக்கும் அதிகாரத்தை தாங்கள் பெற்றுக்கொள்ளவேண்டும் என்றும் அந்த முடிவுகளில் தாங்கள் செல்வாக்கு செலுத்தவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் ஆர்வமும் இந்த புலம்பெயர் அமைப்புக்களிடம் அதிகம் காணப்படுவதை உணரமுடிகிறது.
கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டதுபோல, 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் தங்களை உதறிவிட்டுப்போன தீவிர தேசியவாதம் தேர்தல்களுக்காக தம்மிடம் உதவிகோரிவரும் கட்சிகளின் ஊடாக மீள்பிரவேசம் செய்யும்போது அதற்கு வழங்கும் உதவிகளின் ஊடாக மீண்டும் சாதிப்பதற்கு முயற்சி செய்யும் மும்முரத்தை இந்த புலம்பெயர்ந்த சமூகத்திடம் காணக்கூடியதாக உள்ளது.
இந்த ஆபத்தை குறிப்பிட்ட அரசியல் கட்சிகள் உணர்ந்துகொள்கின்றவா இல்லையா என்பதற்கு அப்பால், இந்த கட்சிகளை வழிப்படுத்தவேண்டிய மக்கள் உணர்ந்துகொள்வது இக்கால கட்டத்தில் மிகவும் அவசியமாகிறது.
இந்த விவகாரத்தை ஒரு சர்ச்சைக்குரிய விடயமாக மாற்றுவதோ தேசியத்துக்காக பணிபுரியும் வௌ;வேறு குழுக்களுக்கிடையிலான முரண்பாடுகளை கடைபோட்டு விற்பதோ இங்கு நோக்கமல்ல. தாயகத்தில் தமிழ்த் தேசிய அரசியல்வெளியில் பணிபுரிபவர்களும் புலம்பெயர்ந்த தமிழ் சமூகமும் ஒரு புள்ளியில் சந்திக்கவேண்டியதும் அவை இரண்டும் ஒரே பாதையில் பயணிப்பதும் எவ்வளவு தூரம் முக்கியமானது என்பதையும் இனிவரப்போகும் சில ஆபத்துக்களுக்கு இந்த ஒற்றுமையான பயணம் எவ்வளவு முக்கியம் என்பதையும் ஆராய்வதே இந்த கட்டுரையின் நோக்கம்.
இதற்கு அண்மையில், சிறிலங்கா தரப்பிலிருந்து முன்னெடுக்கப்பட்ட இரண்டு நிகழ்ச்சி நிரல்களை இங்கு பார்க்கலாம்.
முதலாவது, கடந்த ஜூன் மாதம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரமுகர் சுமந்திரன், சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் உலக தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேந்திரன் ஆகியோர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்ட இரகசிய பேச்சுவார்த்தை ஒன்று வெளிநாடொன்றில் நடைபெற்றது.
இது யாரது பின்னணியில் நடைபெற்றது என்பதற்கு அப்பால், இந்த சந்திப்பெனப்படுவது, இலங்கை தொடர்பில் எதிர்வரும் செப்டெம்பரில் வெளிவரவுள்ள ஐ.நாவின் அறிக்கையில் என்ன வகையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை சனல்-4 ஊடகம் கசியவிட்ட அந்த அறிக்கையின் சாராம்சத்திலிருந்து தெரிந்துகொண்டோம்.
போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில், சர்வதேச விசாரணையை மூர்க்கமாக இடித்துரைத்துக்கொண்டிருக்கும் புலம்பெயர்ந்த தமிழர்களின் முன்மொழிவை சமாளித்து, அவர்களின் சக்தியை மலினப்படுத்தும்வகையில், இலங்கைத் தரப்பின் பிரதிநிதியுடனும் தமிழ் கூட்டமைப்பின் பிரதிநிதியுடனும் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்பின் பிரதிநிதி ஒருவரை ஒரே மேசையில் உட்காரவைத்து பேசிவிட்டு அனுப்பிய மேற்குலகம், அந்த ஒட்டுமொத்த சந்திப்பையும் மிகவும் லாவகமாக ஐ.நா.வின் அறிக்கையினுள், புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்களிடமும் பேசி முடிவெடுத்தது போன்ற தோரணையுடன் குற்றம் செய்தவர்களே குற்றத்தை விசாரிக்கக்கோரும் உள்ளக விசாரணை பொறிமுறை எனப்படும் கண்துடைப்புக்குள் கொண்டுவந்துவிட்டது.
இந்த சந்திப்புக்கு ஒப்புக்கொண்டதன் மூலம் அங்கு பேசப்பட்ட விடயங்களுக்கு தலையாட்டியதன் மூலம் புலம்பெயர்ந்த தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் செயற்பாட்டு இயக்கங்களில் ஒன்றான உலக தமிழர் பேரவை தனது இராஜதந்திர வறுமையை வெளிக்காட்டியிருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.
இந்த சந்திப்பில் பேசப்பட்டதாக வெளிவரும் இன்னொரு தகவல், புலம்பெயர்ந்த தமிழ் சமூகம் என்ற பாரிய சக்தியை 'புலம்பெயர்ந்த இலங்கைச் சமூகம்' என்ற கட்டமைப்புக்குள் கொண்டுவருவது பற்றியது.
புலம்பெயர்ந்துவாழும் தமிழ்ச் சமூகம் எனப்படுவது எத்துணை சக்தி மிக்கது என்பதும் அதன் ஆற்றல் என்ன என்பதும் இலங்கை அரசு முதல் சர்வதேச சமூகம்வரை அனைவருக்கும் தெரிந்த விடயம்.
இந்த சக்தியின் செயற்பாட்டு திறனை மலினப்படுத்துவது என்பது மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் முடியாத காரியமாகவும் நடைமுறைக்கு சாத்தியமற்றதாகவும் காணப்பட்டது.
ஆனால், தாயகத்தில் தங்கள் உறவுகளின் பலத்தினால், மஹிந்த ஆட்சி தூக்கி எறியப்பட்ட சுபநேரத்தை புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்துக்கு பூச்சாண்டியாக காண்பித்து அந்த மிகப்பெரிய சக்தியை, தாயகத்தமிழ் மக்களுக்கான கவசத்தை, அலேக்காக இலங்கையின் ஆட்சி இயந்திர கட்டமைப்புக்குள் இணைத்துக்கொள்வதற்கு மிகப்பெரிய திட்டம் ஒன்று தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த விடயம்தான் அடுத்து ஆராயப்படப்போவதாகும்.
அதாவது, ஜே.வி.பி. இம்முறை வெளியிட்டுள்ள தனது முற்போக்கு தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ள மிகமுக்கிய யோசனை, தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும் அரசு, 'புலம்பெயர்ந்த இலங்கை மக்களுக்கான அமைச்சு' ஒன்றை புதிதாக உருவாக்கவேண்டும் என்பதாகும்.
சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் புலம்பெயர்ந்த அந்த நாட்டு மக்களுடன் இப்படியான வழிகளின் ஊடாக பேணுகின்ற நெருக்கமான உறவுகள், அந்த நாடுகளுக்கு பெருந்தொகையான முதலீடுகளை கொண்டுவருகின்றன. இப்படியான முறையை இலங்கைக்கும் கொண்டுவரவேண்டும் .
இந்த அமைச்சின் ஊடாக, வெளிநாட்டில் வாழும் அனைத்து இலங்கை மக்களும் ஒரு குடையின் கீழ் கொண்டுவரப்படலாம் என்றும் ஜே.வி.பி. தனது விஞ்ஞாபனத்தில் யோசனை தெரிவித்துள்ளது.
இந்த யோசனையை பெரிதும் வரவேற்றுள்ள ஐ.தே.க. பிரதி வெளிவிவகார அமைச்சர், தேர்தலில் வெற்றி பெற்றதும் இந்த விடயத்தை நடைமுறைப்படுத்தலாம் என்று கூறியுள்ளார்.
இந்த இரண்டு விடயங்களிலிருந்து புரிந்துகொள்ளவேண்டிய செய்தி மிக மிக எளிது.
தாயகத்திலுள்ள மித வாத அரசியல் தலைவர்களை தமக்குள் உள்வாங்கி தமிழர்களின் தீவிர தேசிய சிந்தனையை நசுக்கிவிடும் நிகழ்ச்சி நிரலின் நீட்சியாக, தற்போது புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களை நோக்கிய திட்டத்தை விரிவுபடுத்தியிருக்கிறது இலங்கை அரசு.
தனியான தேசிய இனமொன்றின் அடிப்படைகளுக்கு சவால் விடுக்கும் இந்த புதிய பொறிமுறை விடயத்தில் தாயகத்திலும் புலத்திலும் இயங்கும் அரசியல் மற்றும் பொது அமைப்புக்கள் ஒருபுள்ளியிலிருந்து தீர்மானங்களை நிறைவேற்றி செயற்படுவதுதான் வலுவான எதிர்ப்புக்கு வழிசமைக்கும்.
இம்முறை தேர்தல் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிரான மிகப்பெரிய அலையை புலம்பெயர்ந்துவாழும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளதிலிருந்து தேர்தலுக்கு பின்னரான தாயக அரசியல் பரப்பு மிகவும் சிக்கல் மிக்கதாகவும் அரசியல் ஏற்படுத்திய வடுக்கள் நிறைந்த பிரிவுகளால் நிறைத்ததாகவும் காணப்படப்போகிறது.
இந்த பிரிவுகளும் பிளவுகளும் எதிர்த்தரப்புக்கு சாதகம் மிக்கதாக அமைவது யதார்த்தம். ஆகவே, தேர்தல் பெறுபேறுகளை ஜனநாயக ஒழுக்கத்துடன் ஏற்றுக்கொண்டு, தமிழினத்தின் மீது ஏவப்படுகின்றன சூழ்ச்சி அம்புகளை எதிர்கொள்வதற்கு தாயக புலம்பெயர் சமூகங்கள் ஆரோக்கியத்துடன் அணிதிரளவேண்டும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago
6 hours ago