2025 மே 17, சனிக்கிழமை

நிலைமைக்கேற்ற தேசப்பற்று

Thipaan   / 2015 ஓகஸ்ட் 05 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஓகஸ்ட் 17ஆம் திகதி நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான தத்தமது விஞ்ஞாபனங்களை அரசியல் கட்சிகள் பல வெளியிட்டுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தின் கீழ் போட்டியிடும் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவற்றுள் அடங்குகின்றன.

அவ்விஞ்ஞாபனங்களில் காணப்படும் பொதுத்தன்மை என்னவென்றால் தேர்தல் பிரசார காலத்தில் அரைவாசி முடிவடைந்ததன் பின்னர் அவை வெளிவந்தமையே. அதாவது பிரசார காலத்தின் ஆரம்பத்திலிருந்தே தமது கொள்கைகளைப் பற்றி மக்களை அறிவூட்ட வேண்டும் என எந்தவொரு பிரதான கட்சியும் சிந்திக்கவில்லை. ஏதோ மரபுக்குப் போல் அரசியல் கட்சிகள் தத்தமது விஞ்ஞாபனங்களை வெளியிட்டுள்ளன.

அவை வெளியிடப்பட்டதன் பின்னராவது மக்களைச் சென்றடைய வேண்டும் என அரசியல் கட்சிகள் சிந்தித்ததாகத் தெரியவில்லை. தாம் விரும்பும் அரசியல் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தையாவது வாக்காளர்களில் எத்தனைப் பேர் கண்டுள்ளார்களோ தெரியாது. அரசியல் ஈடுபாடு உள்ளவர்களைத் தவிர்ந்த சாதாரண வாக்காளர்களில் எத்தனைப் பேர் குறைந்த பட்சம் இரண்டு தேர்தல் விஞ்ஞாபனங்களையாவது ஒப்பிட்டுப் பார்த்திருப்பார்கள் என்றால் எவரும் இல்லை என்றே கூற வேண்டும்.

அது ஒரு புறமிருக்க, தாம் விரும்பும் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை எத்தனைப் பேர் வாசித்து இருப்பார்கள்? மக்கள் - தேர்தல் விஞ்ஞாபனங்களைப் பற்றி அக்கறை கொள்ளவில்லை. ஆனால், தாம் விரும்பாத கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்களை என்றால் ஒரு சிலர்; வாசித்து இருக்கலாம். அது குறை காண்பதற்கே.

பொதுவாக தேர்தல் விஞ்ஞாபனங்கள் தேர்தல் மேடைகளில் ஆராயப்படாவிட்டாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம், தெற்கே அரசியல் மேடைகளில் ஆராயப்படுவதை அவதானிக்க முடிகிறது. அதிலுள்ள சில முக்கிய விடயங்களே அதற்குக் காரணமாகும்.

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணைக்கப்பட வேண்டும், தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமை அங்கிகரிக்கப்பட வேண்டும். வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திப் பணிகளுக்காக நேரடி வெளிநாட்டு நிதி பெறுதலை அங்கிகரிக்க வேண்டும், இலங்கையில் சமஷ்டி ஆட்சி முறை நிறுவப்பட வேண்டும், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் மற்றும் வடக்கிலிருந்து இராணுவம் வாபஸ் பெறப்பட வேண்டும் என்ற கூட்டமைப்பின் விஞ்ஞாபனத்தில் உள்ள விடயங்களே தெற்கில் அரசியல் மேடைகளில் ஆராயப்படுகின்றன.

இந்தக் கோரிக்கைகள் ஐக்கிய இலங்கைக்குள்ளேயே நிறைவேற்றப்பட வேண்டும் என்று கூட்டமைப்பின் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்ட போதிலும், அது தெற்கே மேடைகளில் பேசப்படுவதில்லை. உணர்ச்சிபூர்வமான விடயங்கள் மட்டுமே அங்கு ஆராயப்படுகின்றன.

குறிப்பாக ஐ.ம.சு.கூ.வின் மேடைகளிலேயே கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் ஆராயப்படுகிறது. தேர்தலின் பின்னர் ஆட்சி அமைக்கும் விடயத்தில் கூட்டமைப்பின் ஒத்துழைப்பு அவசியமானால் அந்த ஒத்துழைப்பு தமக்குக் கிடைக்காது ஐ.தே.க.வுக்கே கிடைக்கும் என்று ஐ.ம.சு.கூ.வின் தலைவர்கள் சிந்திப்பதே அதற்குக் காரணமாகும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணத்தை அடுத்து அவ்வமைப்பின் தலைமையை ஏற்று தமிழீழப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முற்படுகையில் கைது செய்யப்பட்ட கே.பி எனப்படும் செல்வராசா பத்மநாதனைப் போல் கூட்;டமைப்பும் ஐ.ம.சு.கூ.வுக்கு நெருக்கமாக இருந்தால் ஐ.ம.சு.கூ தலைவர்கள், கூட்டமைப்பின் விஞ்ஞாபனத்தை பிரச்சினையாக கருதியிருக்க மாட்டார்கள்.

அவ்வாறு கூட்டமைப்பு, ஐ.ம.சு.கூ. வுக்கு நெருக்கமாக இருந்தால் தற்போது ஜாதிக ஹெல உருமயவின் பொதுச் செயலாளர் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவைப் போல்தான் ஐ.ம.சு.கூ தலைவர்களும் அந்த விஞ்ஞாபனம் விடயத்தில் நடந்து கொண்டிருப்பார்கள். கூட்டமைப்பு எதைக் கூறினாலும் நாட்டின் இறைமையை பாதிக்கக்கூடிய எதற்கும் தாம் இடமளிக்கப் போவதில்லை எனக் கூறிவிட்டு அமைச்சர் ரணவக்க மௌனமாக இருக்கிறார்.

ஐ.ம.சு.கூவுக்கு நெருக்கமாக கூட்டமைப்பு இருந்திருந்தால் ஐ.தே.க தலைவர்கள்தான் கூட்;டமைப்பின் விஞ்ஞாபனத்தைப் பற்றிப் பேசுவார்கள். ரணவக்கவும் முன்னரைப் போல் ஐ.ம.சு.கூவுக்கு நெருக்கமாக இருந்திருந்தால்; இந்த விஞ்ஞாபனத்துக்கு எதிராக மிகப் பெரும் போரை அவர் தான் பிரகடனப்படுத்திருப்பார். இந் நாட்டு அரசியல்வாதிகளின் தேசப்பற்றானது அவ்வாறானதாகும்.

ஐ.தே.க.வின் பொதுச் செயலாளராகவிருந்து கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ஐ.ம.சு.கூவோடிணைந்த திஸ்ஸ அத்தநாயக்கவே முதன் முதலில் கூட்டமைப்பின் விஞ்ஞாபனத்தை சாடியிருந்தார். அந்த விஞ்ஞாபனம் நாட்டின் இறைமைக்கு அச்சுறுத்தலாகும் என அவர் கூறியிருந்தார். அவரும் ஐ.தே.க.வில் தொடர்ந்தும் இருந்திருந்தால் நிச்சயமாக இவ்வாறு கூறியிருக்க மாட்டார்.

சம்பிக்க ரணவக்க, ம.வி.மு. தலைவர் அநுரகுமார திஸாநாயக்க மற்றும் ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர், கூட்;டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தைப் பற்றிய தமது நிலைப்பாட்டைக் கூற வேண்டும் என முன்னாள் அமைச்சர் டலஸ் அலகப்பெரும கூறியிருக்கிறார். இந்தக் கூற்றில் பல நோக்கங்கள் இருக்கின்றன. ஐ.தே.க., ம.வி.மு மற்றும் ஹெல உறுமய ஆகிய கட்சிகளை அசௌகரியத்துக்;குள்ளாக்குவது முதலாவது நோக்கமாகும். இரண்டாவதாக ஆட்சி அமைக்கும் விடயத்தில் ஒன்றிணையக்கூடிய ஐ.தே.க மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளை மோதவிட அலகப்பெரும விரும்புகிறார்.

தமிழர்களைப் பற்றி சிங்கள் மக்கள் மத்தியில் பீதியை உருவாக்கி அம்மக்களின் வாக்குகளை கொள்ளையடிப்பது அலகப்பெருமவின் மூன்றாவது நோக்கமாகும். ஜே.ஆர் ஜயவர்தனவின் ஆட்சிக் காலத்தில் முற்போக்கான கருத்துக்களைக் கொண்ட ஊடகவியலாளராகவிருந்த அலகப்பெரும எந்தளவு கேவலமான நிலையை அடைந்திருக்கிறார் என்பது இதன் மூலம் தெரிகிறது.

பிரபாகரனின் மைத்துனரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் - முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடும் குருநாகல் மாவட்டத்திலேயே போட்டியிடுவது மஹிந்தவின் உயிருக்கு அச்சுறுத்தலாகும் என இதற்கு முன்னர் அலகப்பெரும கூறியிருந்தார். அதன் மூலமும் தமிழ் எதிர்ப்பை மூட்டி, அரசியல் இலாபம் அடைவதே அவரது நோக்கமாக இருந்திருக்க வேண்டும்.

சிவாஜிலிங்கத்தைப் பற்றிய அவரது பீதி ஓரிரு நாட்கள் மட்டுமே இருந்தது. உண்மையிலேயே மஹிந்தவுக்கு அவ்வாறாறன அச்சுறுத்தல் இருந்திருப்பின் அலகப்பெரும தொடர்ந்தும் அந்த விடயத்தில் போராடியிருக்க வேண்டும்.

குருநாகலில் சிவாஜிலிங்கம் போட்டியிடுவது தொடர்பாக மற்றொரு கருத்தை ஈ.பி.டி.பி கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா வெளியிட்டு இருந்தார். மஹிந்தவுக்கு எதிரான தமிழ் வாக்குகளை சிதறடிக்கச் செய்து மஹிந்தவுக்கு சாதகமான நிலைமையை உருவாக்குவதற்காகவே சிவாஜிலிங்கம் போட்டியிடுகிறார் என்றும் அதற்காக் மஹிந்தவிடமிருந்து சிவாஜிலிங்கம் பணம் பெற்றிருக்கலாம் என்றும் தேவானந்தா கூறியிருந்தார்.

2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போதும் மஹிந்தவின் எதிரணிக்கு கிடைக்கக் கூடிய தமிழ் வாக்குகளை சிதறடிக்கச் செய்வதற்காக சிவாஜிலிங்கம் அத் தேர்தலில் போட்டியிட்டதாகவும் அதற்காக மஹிந்தவிடமிருந்து மூன்று கோடி ரூபாய் பணம் பெற்றிருந்ததாகவும் தேவானந்தா கூறியிருந்தார். தேவானந்தாவும் கடைசி வரை மஹிந்தவின் அரசாங்கத்தில் அமைச்சராகவிருந்தவர். அவர், மஹிந்தவுக்கு எதிரானவர் என்று கூற முடியாது. அவர் தான் இவ்வாறு கூறுகிறார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திலுள்ள பல விடயங்கள் ஐ.ம.சு.கூ வினால் ஏற்றுக்கொள்ள முடியாதவையாக இருக்கலாம். ஆனால், அவற்றைக் காட்டி அவர்கள் பறைசாற்றப் போகும் அவர்களது தேசப்பற்றைப் பற்றி இங்கு பல கேள்விகள் எழுகின்றன.

ஐ.ம.சு.கூ., வடக்கு மற்றும் கிழக்கு இணைப்பை பயங்கர விடயமாக எடுத்துக் காட்ட முயற்சிக்கிறது. ஆனால், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உப தவிசாளர்களில் ஒருவரான முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், ஐ.ம.சு.கூ ஆட்சியின் கீழ் கிழக்கு மாகாண முதலமைச்சராகவிருந்த பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் ஐ.ம.சு.கூ அரசாங்கத்தில் அமைச்சராகவிருந்த டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் வடக்கு - கிழக்கு இணைப்பைப் பற்றிக் கொண்டிருக்கும் நிலைப்பாட்டை ஐ.ம.சு.கூ தலைவர்களால் சிங்கள மக்கள் முன் எடுத்துக் கூற முடியுமா?

பல்லாயிரக் கணக்கானவர்களை கொலை செய்வதற்கும் அங்கவீனர்களாக்குவதற்கும் புலிகள் அமைப்புக்கு 30 ஆண்டுகளாக ஆயுதங்களை வழங்கி, பிரபாகரன் இறந்ததன் பின்னர் புலிகள் அமைப்பின் தலைமையையும் ஏற்று தமிழீழ போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பையும் அதன் மூலம் ஏற்ற கே.பி சட்டத்தால் தண்டிக்கப்படுவதை தடுத்தவர்கள் ஐ.ம.சு.கூ தலைவர்களே. அவர்கள் தான் புலிகளுக்கும் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக செயற்படுவதே தேசப்பற்றுக்கு அடையாளம் என்பதைப் போல் நடந்து கொள்கிறார்கள்.

கே.பி., புனர்வாழ்வு பெற்றதனால் (சநாயடிடைவையவநன) அவரை சட்டத்தின் முன் நிறுத்தவில்லை என சில மாதங்களுக்கு முன்னர் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கூறியிருந்தார். கைதாகிய மறுகணமே கே.பி., புனர்வாழ்வு பெற்றுவிட்டாரா? அதனால்தான் அவர் சிறை கூடத்துக்கு கொண்டு செல்லப்படாமல் தாய்லாந்திலிருந்து நேரடியாக கோட்டாபயவிடம் அழைத்துச் செல்லப்பட்டாரா? அவ்வாறில்லாவிட்டால் அவர் தண்டிக்கப்படாமல் இருக்க அவரோடு ஐ.ம.சு.கூ தலைவர்கள் வேறு ஏதாவது உடன்பாடு (னநயட) செய்து கொண்டார்களா? 

புலிகள் அமைப்பின் தலைவர்களின் உத்தரவின் பேரில் செயற்பட்ட அவ்வமைப்பின் உறுப்பினர்;களை விடுதலை செய்ய மறுத்த ஐ.ம.சு.கூ தலைவர்கள் அவ்வமைப்பின் தலைவர்கள் விடயத்தில் வேறு விதமாக செயற்படுகிறார்கள். அத்தோடு கூட்டமைப்பின் விஞ்ஞாபனத்தைக் காட்டி, தேசப்பற்றைப் பற்றியும் பேசுவது விந்தையான விடயமாகவே இருக்கிறது.

புலிகளுக்கு சாதகமாகக்கூடிய கருத்துக்களைக் கொண்ட இரண்டு கட்டுரைகளை எழுதினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்துக்கு 20 வருட கடூழியச் சிறை தண்டனையை வழங்க ஐ.ம.சு.கூ தலைவர்கள் நடவடிக்கை எடுத்தனர். ஆனால், புலிகளின் சார்பில் ஊடகங்களில் ஆயிரக் கணக்கான அறிக்கைகளை வெளியிடச் செய்த அவ்வியக்கத்தின் ஊடக பேச்சாளராகவிருந்த தயா மாஸ்டர் -புலிகளுக்காக செயற்பட்டார் என்பதற்கு ஆதாரம் இல்லை என்று கூறிய இரகசிய பொலிஸார் அவருக்கு பிணை வழங்க இடமளித்தனர். அதுவும் ஐ.ம.சு.கூ ஆட்சிக் காலத்திலேயே இடம்பெற்றது.

தயா மாஸ்டர் தண்டிக்கப்பட வேண்டுமா இல்லையா என்பது வேறு விடயம். ஆனால், ஐ.ம.சு.கூ தலைவர்களின் தேசப்பற்றின் அளவுகோளின் படி அவர் விடுதலை செய்யப்பட்டமை எவ்வாறு விவரிக்க முடியும்?

தெற்கின் தலைவர்கள் ஏதோ ஒரு புதிய விடயத்தைக் கண்டு பிடித்ததைப் போல் தான் கூட்டமைப்பின் விஞ்ஞாபனத்தை விமர்சிக்கிறார்கள். ஆனால், அதில் புதிதாக எதுவுமே இல்லை. 2013ஆம் ஆண்டு வட மாகாண சபைத் தேர்தலுக்காக கூட்டமைப்பு வெளியிட்ட விஞ்ஞாபனமும் தற்போதைய விஞ்ஞாபனமும் ஏறத்தாழ ஒன்றே தான். அதேவேளை சமஷ்டி முறை, மாகாண இணைப்பு, சுய நிரணய உரிமை, அரசியல் கைதிகளை விடுதலை செய்தல் போன்ற விடயங்கள் தொடர்பான கூட்டமைப்பின் நிலைப்பாடு நீண்ட காலமாக மாற்றம் இல்லாமல் ஒன்றாகவே இருந்து வந்துள்ளது.

ஆனால், அவர்கள் தேர்தல் காலங்களிலும் கட்சி மாநாடுகளின் போதும் தான் இந்த நிலைப்பாட்டை உத்தியோகபூர்வமாக வெளியிடுகிறார்கள். அப்போதெல்லாம் சில பெரும்பான்மை தலைவர்கள் அதனை

தூக்கிப் பிடித்து இதோ நாட்டைப் பிரிக்கப் போகிறார்கள் என்று சிங்கள் மக்களின் உணர்வுகளை தூண்டும் வகையில் கூக்குரலிடுவார்கள். அதனை தமிழ் மக்களிடம் காட்டி தமிழ் தலைவர்களும் இதோ, இவர்கள் தமிழ் மக்களின் உரிமையை மறுக்கிறார்கள் என்பார்கள். அதனையும் பெரும்பான்மை தலைவர்கள் தமது மக்களிடம் காண்பித்து அரசியல் இலாபம் அடைவார்கள்.

இவ்வாறு அரசிலுக்காக இந்த விடயங்களை பாவித்துவிட்டு தேர்தல்கள் முடிவடைந்ததன் பின்னர் இரு சாராரும் அமைதியாக இருந்துவிடுவார்கள். தமது நோக்கங்களை அடைவதற்கு தமிழ் தலைவர்கள் அதன் பின்னர் எதனையும் செய்யப்போவதுமில்லை. அதற்கு எதிராக சிங்கள தலைவர்கள் பெரிதாக எதனையும் செய்வதும் இல்லை. இவ்வாறு இரு சாராரும் காலத்தை கடத்துகிறார்கள்.

ஒரு வகையில், கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை விமர்சிப்பதன் மூலம் பெரும்பான்மையினத் தலைவர்கள் கூட்டமைப்புக்கே உதவி புரிகிறார்கள். கூட்டமைப்பினர், தமிழீழத்தை அடைய முயற்சிக்கிறார்கள் என்று கூறுவது தமிழ் மக்கள் முன் கூட்;டமைப்புக்கு நற்சான்றிதழ் வழங்குவதற்குச் சமமாகும். அவ்வாறு கூட்;மைப்புக்கு உதவி செய்துவிட்டு சிங்களத் தலைவர்கள் அந்த விமர்சனத்தின் மூலம் தாமும் சிங்கள மக்கள் முன் வீரர்களைப் போல் நடந்து கொள்கிறார்கள்.

இந்தக் கட்டுரையின் கருப்பொருளுக்கு பொருத்தமாக இல்லாவிட்டாலும் முஸ்லிம் அரசியலும் இதைவிட வித்தியாசமானதாக இல்லை என்பதையும் குறிப்பிடத்தான் வேண்டும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .