Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Thipaan / 2015 ஓகஸ்ட் 05 , மு.ப. 06:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொதுத் தேர்தலை முன்னிறுத்திய சதுரங்க ஆட்டத்தில் அதிகமாக வெட்டப்படும் தரப்பாக 'தமிழ்த் தேசிய அரசியல்' இருந்துவிடுமோ என்கிற அச்சம் அதிகரித்திருக்கின்றது. அரசியலுரிமைகளை முன்னிறுத்திய தமிழ் மக்களின் போராட்ட வரலாறு, வெற்றி- தோல்விகளுக்கு அப்பால் இன்னமும் நீள்வதற்கு, தமிழ்த் தேசியத்துக்கான தமிழ் மக்களின் மூர்க்கமான அர்ப்பணிப்பு காரணியாக இருந்து வந்திருக்கின்றது. அதுதான், தமிழ்த் தேசிய அரசியலின் அத்திபாரமாகவும் இருக்கின்றது.
சுதந்திரத்துக்குப்(!) பின்னரான இலங்கையில் ஆட்சியதிகாரங்களை நோக்கி நகர்வதற்கான கருவியாக வாக்கு அரசியல் முன்னிலைப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து இனமான அரசியல் கோலொச்சத் தொடங்கியது. பௌத்த சிங்கள பேரினவாதம் தமிழ்- முஸ்லிம் சமூகங்களை தங்களின் இருப்புக்கான அச்சுறுத்தலாக காண்பித்து வாக்கு அரசியல் செய்ய ஆரம்பித்த தருணம் என்பது, நாட்டின் பேரழிவுக்கும்- வீழ்ச்சிக்கும் பெரும் காரணமாகும். அதுதான், குறிப்பிட்டளவு இணக்கமாக சமூகங்களாக இருந்து வந்தவர்களை இனமான அடையாளங்களை முன்னிறுத்தி தேசிய அரசியலுக்குள் சென்று சேர வைத்தது. இதற்கான, பழி பாவங்களை பௌத்த சிங்கள பேரினவாதத் தலைவர்கள் மாத்திரமல்ல, கடந்த கால தமிழ்- முஸ்லிம் தலைமைகளும் ஏற்றுக் கொள்ள வேண்டிய கடப்பாடு உண்டு. அதனைப் புறந்தள்ள முடியாது. ஆனால், எம்மீது திணிக்கப்பட்ட ஒன்றுக்கெதிராக அதே விடயத்தை எதிர்வினையாக ஆற்றுக்கின்ற புள்ளியே, (அதாவது, முள்ளை முள்ளால் எடுத்தல் எனும் நிலைப்பாடே) தமிழ் மக்களை தமிழ்த் தேசிய அரசியலுக்குள் நகர்த்தியது. அது, அக பிறழ்வுகள் சிலவற்றை உறங்குநிலையில் வைத்து 'தமிழர்கள்' என்கிற அடையாளத்தோடு ஒருங்கிணைவதற்கும் காரணமாக இருந்திருக்கின்றது.
இப்படியான நிலையில், தவிர்க்க முடியாமல் எமது இருத்தலை தக்க வைப்பதற்காக தமிழ்த் தேசிய அடையாளத்தை நாம் கொண்டு சுமக்க வேண்டிய அவசியம் என்பது கேள்விகளுக்கு அப்பாலானது. ஏனெனில், அதுதான், எங்களின் அரசியலுரிமைகளுக்கான போராட்டங்களுக்கு பெரும் உந்துசக்தியாகவும் இருக்கும். ஆனால், தமிழ்த் தேசிய அரசியல் இருப்பினை அச்சுறுத்தலாக உணரும் தரப்புக்கள் அதனை உடைப்பதற்கு காலம் காலமாக முயற்சிகளை மேற்கொண்டு வந்திருக்கின்றார்கள். இன்றைக்கும் அந்த முனைப்புக்கள் பெருமெடுப்பில் மேற்கொள்ளப்படுகின்றன.
தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வந்தால் தமிழ்த் தேசியத்துக்கான இருத்தலை அகற்றிவிடலாம் என்பது பௌத்த சிங்கள பேரினவாதத்தினதும், பிராந்திய சக்திகளினதும் கருதுகோளாக கடந்த காலத்தில் இருந்தது. ஏனெனில், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுத போராட்ட முனைப்பு தமிழ் மக்களை அதீத நம்பிக்கைகளுடனான வெற்றி மனநிலையில் வைத்திருக்கவும், ஒருங்கிணைவதற்கான உந்து சக்தியையும் வழங்கியிருந்தது. ஆக, தமிழ் மக்களிடமிருந்து ஆயுதப் போராட்டத்தை அகற்றுவது தமிழ்த் தேசியத்தினை இலகுவாக அகற்றுவதற்கான வழிமுறைகள் என்று எதிர்த்தரப்பு நம்பியது. அதனையும், பெரும் முனைப்போடு முன்னெடுத்து முள்ளிவாய்க்காலுக்குள் வெற்றிவாதத்தை நிலைநாட்ட எத்தணித்தது. ஆனால், அவர்கள் எதிர்பார்த்தளவுக்கான விடயங்களின் பக்கம் தமிழ் மக்கள் நகரவில்லை. மாறாக, ஆயுதப் போராட்டங்களின் தோல்விகளுக்கான கள யதார்த்தங்களை உள்வாங்கி அஹிம்சை அரசியலின் பக்கம் நகர்ந்து தமிழ்த் தேசியத்தினை இறுகப் பற்றிக் கொண்டிருக்கின்றார்கள். அதுதான், தோல்விகளுக்கும் அப்பாலான வெற்றி மனநிலையில் தமிழ்த் தரப்பினை இருக்க வைத்திருக்கின்றது. (அது, கள யதார்த்தங்களை இன்னும் இன்னும் ஆழகாக உள்வாங்கிய தொடர வேண்டும் என்பது என்னுடைய நிலைப்பாடு.)
தமிழ் மக்களின் அரசியலுரிமைப் போராட்டங்களின் முனைப்பு பல் கோணங்களில் என்றைக்குமே இருக்க வேண்டிய ஒன்று. அது, சில காலத்துக்குள் முடிந்துவிடாது. அதற்கான வாய்ப்புக்களும் பௌத்த சிங்கள பேரினவாத- பிராந்திய அரசியல் கோலோச்சுகைகளின் போக்கில் இல்லை. எனவே, இனிவரும் காலங்களிலும் தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தி எதிராடிக் கொண்டு நிலைத்திருக்க வேண்டிய தேவையிருக்கின்றது. அதற்கான தொடர்ச்சியான தயார்ப்படுத்தல்களை நாம் செய்தாக வேண்டும். எனினும், ஆயுதங்களை மீண்டும் தூக்குவதையோ, தனித் தமிழீழம் கோருவதையோ தற்போதைய கள யதார்த்தம் அனுமதிக்கவில்லை.
தமிழ்த் தேசிய அரசியல் களம் என்பது தனக்குள் பெரும் முரண்பாடுகளோடு பயணிக்க ஆரம்பித்திருக்கின்றது. அது, புலம்- புலம் பெயர் வாழ் தரப்பு, யாழ்- கொழும்பு வாழ் தரப்பு, வடக்கு- கிழக்கு வாழ் தரப்பு என்கிற இடைவெளிகளின் போக்கிலும் உருவாகியிருக்கின்றது. ஆயுதப் போராட்டங்களின் முனைப்பு இடைவெளிகளின் அளவை மிகவும் குறைத்து வைத்திருந்த நிலையில், அதன் முடிவு என்பது இடைவெளிகளின் அளவினை அதிகரித்துவிட்டிருக்கின்றது என்பது அச்சுறுத்தும் உண்மை. இந்த இடைவெளிக்கான காரணிகளில் முக்கியமானது, தமிழ்த் தேசிய அரசியலின் முடிவுகளை அல்லது தீர்மானங்களை யார் எடுக்க வேண்டும் என்பது. அதனை, ஆராய்வுகளுக்கு அப்பால் புறந்தள்ளி செயற்படுவது என்பது தமிழ்த் தேசிய அரசியலுக்கான அச்சுறுத்தல். அந்த அச்சுறுத்தல் என்பது புறக்காரணிகளினால் அன்றி, எமக்குள்ளிருந்தே எழுந்திருப்பவை.
தமிழ்த் தேசியத்துக்கான அல்லது அதனை முன்னிறுத்திய அரசியலுக்கான இருத்தலுக்கு அச்சுறுத்தலேற்படுத்தும் புறக்காரணிகளை மூர்க்கமாக எதிர்ப்பதற்கு, அக அச்சுறுத்தல்களை கழைய வேண்டிய தேவை அவசரமானது. ஆயுத போராட்டத்தின் முடிவுக்குப் பின்னரான நாட்கள் என்பது தமிழ்த் தரப்பினை விரக்தி மனநிலையில் வைத்திருந்த சிறிய காலம் என்பது அரங்காற்றுவதற்கான அனைத்து வாசல்களையும் முடிவிட்டு அமைதியாக இருந்தது. ஆனால், அந்த ஆழ் அமைதியை அகற்றி நாம் அடுத்த கட்டத்துக்கு நகர வேண்டும் என்கிற செய்திகளை இரண்டு விடயங்கள் எமக்கு மீண்டும் உணர்த்தின. அவையாவன, எமது அரசியலுரிமைகளுக்கான போராட்டத்தின் நீட்சியை நாம் கொண்டு சுமக்க வேண்டும் என்கிற பொறுப்புணர்வும்- இறுதி மோதல்களின் போது பலிவாங்கப்பட்ட எமது உறவுகளுப்புக்கான நீதி கோரலுக்கான தார்மீக கடமையுமாகும். இந்த இரண்டு விடயங்களையும் நாம் எமக்குள் வாங்கியதும் அதிக வேகத்தோடு அரங்காற்ற ஆரம்பித்தோம். ஆனால். எமக்கிடையிலான அக இடைவெளிகளின் அளவு தொடர்பில் நாம் கருத்தில் கொள்ளாமல் தவிர்த்துவிட்டோம்.
குறிப்பாக, புலம்- புலம்பெயர் வாழ் தமிழ் மக்களுக்கிடையிலான இடைவெளி என்பது சரியான ஊடாடல்கள் இன்றி வளர்ந்து வந்திருக்கின்றது. 2009க்குப் பின்னரான நகர்வில் புலம்- புலம்பெயர் தமிழ்த் தரப்புக்கள் தமக்குள் பொறுப்புக்களை சரியான புரிதாலோடு பங்கிட்டுக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், விடயங்களை மூர்க்கமாக கையாள வேண்டும் என்கிற முனைப்பு இருந்த வேகத்துக்கு- இரு தரப்பினரிடையேயும் புரிதல் இருந்திருக்கவில்லை. இன்னமும் அதுதான் நிலைமை. அது, கடந்த 6 வருடங்களில் முக்கியமான அனைத்துத் தருணங்களிலும் பிரதிபலித்து வந்திருக்கின்றது.
பொதுத் தேர்தலை முன்னிறுத்திய தமிழ்த் தேசிய அரசியலரங்கிலும் அந்த இடைவெளி பெருமளவு பிரதிபலிக்கின்றது. இந்த நிலைமை எமக்கான அக அச்சுறுத்தல். அந்த அச்சுறுத்தலை புறக்காரணிகள் (எதிரிகள்) கையாள நினைக்கின்றன. குறிப்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கிடையிலான தேர்தல் போட்டிக் களங்களை அவை கையாள முனைகின்றன. பொதுத் தேர்தலை வெற்றி கொள்வது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எனும் இரு தரப்புக்குள் பிரிந்து கொண்டு உணர்ச்சி வசப்பட்டு நாம் இடும் சண்டைகளின் வேகம், புறக்காரணிகளின் அச்சுறுத்தலை உணர்வதை தவிர்க்கவும் வைத்திருக்கின்றது. நாம் உணர்ச்சி வேகத்தின் போக்கில் விடயங்களைக் கையாளுவது தோல்விகளை வழங்கும் என்பது கண்டுணர்ந்தது. ஆனால், அதைப் புரிந்து கொண்டு சுதாகரித்துக் கொள்ளாது எமக்குள் முட்டி மோதிக் கொண்டிருப்பது படுகுழியை நோக்கி நகர்வதற்கான பாதையை தேர்ந்தெடுப்பதற்குச் சமனானது.
பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்பது தனித்த அரசியல் சக்திகளாக களமாடுவதை பற்றி நான் பெரும் குறைகளை இங்கு முன்வைக்கவில்லை. மாறாக, தமிழ்த் தேசியத்துக்கான அரசியல் களமாடுதலில் இந்த இரண்டு தரப்பும் தமக்கான பொறுப்பினை உணர்ந்தும் செயற்பட வேண்டும். அதுதான், தமிழ்த் தேசியத்தினை காப்பாற்றும். மாறாக, வாக்குகளுக்கான அரசியலின் பக்கம் முறையற்று நகர்வது புறக்காரணிகளினதும்- உதிரிகளினதும் வெற்றிகளை எமக்குள் விதைத்துவிடும். அது, சீழ் பிடித்த புண்ணுக்கு ஒப்பானது. ஆக, அறுவைச் சிகிச்சை செய்து புண்ணை குணப்படுத்துவதுடன், எதிர்காலத்தில் காயங்கள் வராதவாறும் பார்த்துக் கொள்வதற்கான வாய்ப்புக்களையும் உருவாக்க வேண்டும்.
கடந்த ஆறு ஆண்டுகளில் தமிழ்த் தேசிய அரசியலரங்கில் என்றைக்கும் இல்லாதளவுக்கான வசைபாடல்கள், தூற்றல்கள், குழிபறிப்புக்கள் (இது என்றைக்கும் இருந்ததுதான்), தனிமனித குரோதங்கள்- விரோதங்கள் உள்ளிட்ட விடயங்கள் மேல்நோக்கி வந்திருக்கின்றன. அது, மிகவும் கேவலமான அடையாளத்தை எம்மீது சுமத்தியிருக்கின்றன. அரசியல் என்பது கருத்தியல்- கொள்கை ரீதியாக முன்வைக்கப்பட வேண்டியது என்கிற அடிப்படைகளைத் தவிர்த்து கேவலமான முன்னிறுத்துகைகளின் மூலம் வெற்றி கொள்ளப்பட வேண்டியது என்ற சிந்தையை தமிழ்த் தரப்பும் பிரதிபலிக்க ஆரம்பித்துவிட்டது. இன்றைய ஊடகப் பரப்பிலும்- சமூக ஊடகங்களின் இயங்கிநிலையிலும் அதுதான் பிரதானமாகிவிட்டது. அது, எமக்கான நியாயமான அரசியலை பெற்றுத் தருமென்று கருத முடியாது.
இன்றைக்கு தமிழ்த் தேசிய அரசியலரங்குக்குள் தமிழீழ விடுதலைப் புலிகளையும், தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனையும் உச்சரித்தல் என்பது எந்த வரைமுறையுமின்றி வாக்குகளுக்காக என்றாகிவிட்டது. அதனை, பிரதானமாக தமிழ்த் தேசியக் கட்சிகள் இரண்டும் கவனத்தில் கொண்டு நகர வேண்டும். கொள்கை- கோட்பாடு ரீதியில் புலிகளைப் பிரதிபலிப்பதென்பது வேறு, வாக்குகளாக அவர்களை முன்னிறுத்துவதென்பது வேறு. ஏனெனில், வாக்குகளுக்காக என்ற நிலை, புலிகளின் பெரும் அர்ப்பணிப்பை விற்பதற்கு ஒப்பானது. அது, அவர்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதி. அதுபோல, பொறுப்புகளைப் புறந்தள்ளிய வாக்குகளுக்கான அரசியல் என்பது தமிழ்த் தேசியத்தின் இருப்புக்கு பெரும் அச்சுறுத்தல். அதை, நாமே முன்னெடுப்பது எமக்கு நாமே படுகுழி தோண்டுவதற்கு ஒப்பானது!
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
6 hours ago