Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Thipaan / 2015 ஓகஸ்ட் 10 , மு.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.கே. அஷோக்பரன்
2015 பொதுத் தேர்தல் களம் மிகச் சூடாகவே இயங்கிக்கொண்டிருக்கிறது. கொட்டாஞ்சேனையில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமே இதுவரை பதிவான தேர்தல்கால வன்முறைகளுள் பாரதூரமானது. அச்சம்பவத்தில் இரு உயிர்கள் பலியாகியிருக்கின்றன.
இதைத் தவிர வழமை போலவே தேர்தல் விதி மீறல்களும், அரச சொத்துக்களின் துஷ்பிரயோகமும் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது. அண்மையில் கந்தளாய் பகுதியில் ஏறத்தாழ 14,000 அளவிலான போலி வாக்குச்சீட்டுக்கள் பிடிபட்டன. இதைவிடவும் பதுளையில் பெருமளவு வாக்காளர் அடையாள அட்டைகள் பிடிபட்டன. ஆகவே, நிச்சயமாக இந்தத் தேர்தல் தேனும் பாலும் ஓடும் தேர்தலல்ல.
இம்முறை தமிழர் பிரதேசங்களில், குறிப்பாக வடமாகாணத்தில் தேர்தல்க் களம் வழமை போலல்லாது பெருமளவு போட்டி நிறைந்த களமாக மாறியிருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஜனநாயகப் போராளிகள் கட்சி (சுயேட்சை), ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு என்பனவே போட்டியில் முக்கியம் பெறுகின்றன.
யாழ். தேர்தல் மாவட்டத்தின் 7 ஆசனங்களுக்கு கடும் போட்டி நிலவுகிறது. இந்தப் போட்டி வெறும் கட்சிகளிடையான போட்டி என்பதற்குள் மட்டுப்படாது வழமைபோலவே விருப்புவாக்குப் போட்டிகளும் கணிசமானளவில் இடம்பெறுகின்றன. ஆனால், இம்முறை தேர்தலைப் பொறுத்தவரையில் கட்சிகளுக்கிடையான போட்டியே முக்கியம் பெறுகிறது.
இதுவரை காலமும் கொள்கையளவில் எச்சவாலுமின்றி வட மாகாணத்தில், குறிப்பாக யாழ். மாவட்டத்தில் போட்டியிட்டு வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இம்முறை தேர்தல் என்பது அவ்வளவு இலகுவானதாக இல்லை என்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ஏனெனில் இத்தனை காலமும் கொள்கையளவில் தமிழர்களின், தமிழர்கள் நேசிக்கும் தமிழ்த் தேசியத்தின் 'ஏக' பிரதிநிதிகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே இருந்தது. அதற்குப் போட்டியாக இருந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியாகவும், இன்னொரு போட்டியாக ஐக்கிய தேசியக் கட்சியுமே இருந்தன. ஆனால், இந்தப் போட்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அசைத்துப் பார்க்கக் கூடிய போட்டியாக இருக்கவில்லை. காரணம் அவ்விரண்டுமே தமிழ்த் தேசியக் கொள்கையை உடையன அல்ல.
கடந்த 2010ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் உருவெடுத்திருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி - மிகச் சொற்ப வாக்குகளை மட்டும் பெற்று தோல்வியடைந்திருந்தது.
இத்தோல்வி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை தமிழ் மக்கள் நிராகரித்துவிட்டதாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அபிமானிகளால் எடுத்துக்கொள்ளப்பட்டது. ஆனால், கடந்த 5 வருட காலப் பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது தம்முடைய தமிழ்த் தேசிய சித்தாந்த ரீதியிலான அரசியலை வட மாகாணத்தின் கல்விச் சமூகத்திடையேயும், பல்கலைக்கழக மாணவர்களிடையேயும் வெகுவாகக் கொண்டு போய்ச் சேர்த்திருக்கிறது.
இதன் விளைவாகவே 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கொள்கை ரீதியிலான போட்டியைத் தோற்றுவித்திருக்கிறது. இதையொத்த கொள்கைரீதியிலான போட்டியொன்றை ஜனநாயகப் போராளிகள் கட்சி எனப்படும் வித்தியாதரன் தலைமையிலான முன்னாள் போராளிகளைக் கொண்ட சுயேட்சைக் குழுவும் கொண்டிருப்பினும், இக்குழுவானது தற்போதைய தேர்தலை ஒட்டியே உருவாக்கப்பட்டிருப்பதும், இன்னும் போதியளவுக்கு மக்கள் மத்தியில் அறிமுகமோ, பிரபல்யமோ அடையாமையும், இம்முறை இக்கட்சியினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் போட்டி எனக் கருதமுடியாமைக்கு காரணமாகும். இது 2010 தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இருந்த நிலைக்கு ஒப்பானதொன்றாகும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மிகக் கடுமையாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விமர்சித்து வந்துள்ளது. குறிப்பாக ஐ.நா. யுத்தக் குற்ற விசாரணைகள் தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகள் தொடர்பிலும், இலங்கையின் பெரும்பான்மைத் தேசியக் கட்சிகளுடனான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணக்கப் போக்குப் பற்றியும் பாரிய விமர்சனங்களைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்வைக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பூகோள அரசியலை தமிழ் மக்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தவில்லை.
அவ்வாறு பயன்படுத்தியிருந்தால் தமிழர்களுக்கான தீர்வைப் பெற்றுக்கொள்ள முடிந்திருக்கும் என்பது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வாதம். இந்தியா மற்றும் மேற்கு நாடுகளைப் பொறுத்தவரையில் சீன-சார்பு நிலைகொண்ட மஹிந்த ராஜபக்ஷவினுடைய ஆட்சியை மாற்ற வேண்டிய தேவை அவைக்கு இருந்ததாகவும், அப்படி ஓர் ஆட்சி மாற்றம் நிகழ தமிழ் மக்களின் வாக்குகள் அத்தியாவசியமானதாக இருந்தது எனவும், தமிழ் மக்களின் வாக்குகளின்றி ஜனவரி 8 மாற்றம் நிகழ்ந்திருக்காது எனவும், இது தமிழ் மக்கள் சர்வதேச சக்திகளுடன் பேரம் பேசுவதற்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு எனவும், இந்தச் சந்தர்ப்பத்தை பேரம் பேசும் வாய்ப்பாகப் பயன்படுத்தி, தமிழ் மக்களுக்கான தீர்வினைப் பெற்றுக்கொள்வதை விடுத்து, எந்த நிபந்தனையுமின்றி மைத்திரிபால சிரிசேனவை ஆதரித்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியமை தமிழ் தேசியக் கூட்டமைப்பு விட்ட பெரும் பிழை என்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வாதிடுகிறது.
ஆனால், ஒருவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறித்த பேரத்தைச் செய்திருப்பின் அது வெற்றிகரமானதொன்றாக இருந்திருக்குமா என்பதை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் கூட உறுதிபடச் சொல்ல முடியாது. மேலும், அப்படி ஒரு பேரத்துக்காக தமிழ் மக்களை வாக்களிக்க விடாமல் தடுக்கக் கூடிய சக்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உண்டா என்பதும் ஐயத்துக்குரியதே.
ஒருவேளை தமிழ் மக்கள் வாக்களிக்காது விட்டு ராஜபக்ஷவின் ஆட்சி தொடர்ந்தால், அதன் பின் சர்வதேசத்தினதோ, எதிர்க்கட்சிகளினதோ ஆதரவை எப்படிப் பெறுவது? சர்வதேச சக்திகள் அத்தகையதொரு பேரத்தை எவ்வளவு தூரம் சாத்தியமாக்கியிருக்கும் என்பனவெல்லாம் நிச்சயமற்றவை. ஆனாலும் இந்த நாட்டின் இனப்பிரச்சினை தொடர்பாகவோ, தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வொன்றை வழங்குவது தொடர்பாகவோ எந்தவித உறுதிமொழியையும் வழங்காத ஒரு ஜனாதிபதி வேட்பாளருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்த வெளிப்படையான நிபந்தனையுமின்றி ஆதரவளித்தது ஏன் என்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கேள்வியில் நியாயமிருக்கலாம். அதற்கானதொரு விளக்கத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்க வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறையும் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் சமஷ்டி ஆட்சியைக் கோருகிறது. ஆனால், மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்புடைய ஐக்கிய தேசியக் கட்சியோ, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்போ சமஷ்டியை ஏற்றுக்கொள்வதாக இல்லை. ஐ.தே.க. தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க ஒற்றையாட்சிக்குள்தான் தீர்வு என்பதை வெளிப்படையாகவே அறிவித்துவிட்டார்.
இந்நிலையில் தம்முடைய சமஷ்டிக் கோரிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்விதம் சாத்தியமாக்கப் போகிறது? அல்லது அது வெறும் தேர்தல் விஞ்ஞாபன வாக்கியமாகவே மறைந்துவிடுமோ? போன்ற கேள்விகள் தமிழ் வாக்காளர்களிடம் இல்லாமல் இல்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ்த் தேசியக் கொள்கை பற்றிப் பேசமட்டுமே செய்கிறது. அதற்கு முரணாகவே நடக்கிறது என்பது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் குற்றச்சாட்டு. 'ஒரு நாடு, இரு தேசம்' என்ற கோசத்துடன் இறங்கியிருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பெருமளவு கொள்கை சார் அரசியலை மட்டும் முன்வைத்தே களம் காண்கிறது.
திம்புக் கோட்பாடுகளின் படியான தீர்வொன்றே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எதிர்பார்ப்பது ஆனால் அது எப்படிச் சாத்தியம் என்பதற்கான நேரடியான பதிலொன்றும் அவர்களிடமும் இல்லை. அவர்கள் சொல்லும் பூகோள அரசியலினூடாக அதனைச் சாத்தியமாக்கலாம் என்பது எவ்வளவு தூரம் சாத்தியமானது, நிச்சயமானது என்பது கேள்விக்குறியே. மேலும், தேசியக் கட்சிகளோடு இணக்கப்பாடு ஏதுமின்றி இலங்கையில் தமிழருக்கு தீர்வொன்றை எவ்வாறு பெற முடியும் என்ற கேள்வியும் அவர்கள் முன் தொக்கு நிற்கிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொள்கையிலிருந்து தவறிவிட்டது என்ற கருத்து முழுமையாக ஏற்புடையதொன்றல்ல. ஏனெனில் இன்றும் தமிழ் மக்களின் பலம் பொருந்திய பிரதிநிதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புதான். ஆனால், அதன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் பொய்யானவை என்றும், உண்மையற்றவை என்றும் சொல்ல முடியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது வைக்கப்படும் விமர்சனங்களில் கணிசமானளவு உண்மையும் நியாயமும் இருக்கிறது. குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருக்கும் தலைவர்கள் சிலரே பலமுறை தம் அதிருப்தியை, விமர்சனங்களை முன்வைத்திருந்ததை நாம் இங்கு கவனத்திற்கொள்ள வேண்டும்.
அந்த விமர்சனங்களை கருத்திற்கொண்டு, அதிலுள்ள நியாயங்களை ஏற்றுக்கொண்டு தன் குறைகளை தான் நிவர்த்தி செய்துகொள்ள வேண்டிய தேவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இருக்கிறது. அதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சிக்கும் காரணத்தினால் மட்டும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரை துரோகிகளாகவோ, எதிரிகளாகவோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கருத வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் இருதரப்பின் ஆதாரக்கொள்கைகளிடையே வேறுபாடுகள் பெரிதுமில்லை. வேறுபாடுகள் அவைதம் கொள்கை நிலைப்பாட்டை முன்னெடுக்க விளையும் அணுகுமுறையில்தான் இருக்கின்றன.
இந்த அணுகுமுறை வேறுபாடு என்பது இருதரப்பினரும் ஒருவரையொருவர் எதிரிகளாகக் காணவேண்டிய நிலையை ஏற்படுத்தக்கூடாது, மாறாக எதிர்காலத்தில் கொள்கையால் பெருமளவு ஒருமித்த இருதரப்பும் ஒன்றிணைந்து செயல்படக் கூடிய நிலைக்கு வரவேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது வரலாற்றுக் காலத்திலிருந்து ஒன்றையொன்று எதிரிகளாக, வைரிகளாகக் கருதிவந்த தமிழ்க்கட்சிகள், தமிழ்த் தேசத்தின் நலன் என்ற ஒன்றை முன்னிறுத்தி, தம்மிடையே ஓர் இணக்கப்பாட்டை உருவாக்கி ஏற்படுத்தியதொரு கூட்டாகும். இந்தக் கூட்டு கலைந்துவிடக்கூடாது என்பதில் தமிழ் மக்கள் எவ்வளவு உறுதியான இருக்கிறார்களோ, அதேயளவு உறுதியாக தமது கொள்கைகளிலும் தமிழ் மக்கள் உறுதியாகவே இருக்கிறார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமிழ் மக்களினுடைய விருப்பிலிருந்து, அபிலாஷைகளிலிருந்து, தமிழ் மக்கள் வழங்கிய ஆணையிலிருந்து விலகிச் செல்லுமாயின் அதனைத் தமிழ் மக்கள் நிராகரிப்பதற்கு நெடுங்காலம் செல்லாது. மேலும் தனிக்கட்சி நலன்கள், தனிநபர் சுயநலங்கள், செல்வாக்குக் குழுக்களின் ஆதிக்கம் என்பற்றைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தூக்கி எறிய வேண்டிய காலமும் உதித்திருக்கிறது. இதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டடைப்பு ஒரு கட்சியாகப் பதிவுசெய்யப்படுதல் என்பதும் அத்தியாவசியமானதொன்று.
மேலும் தமிழ்க் கட்சிகளிடையேயான தேர்தல் பிரசாரமானது இம்முறை கொள்கைசார், அறிவுசார் வாதம் என்பதைத் தாண்டி தனிமனிதத் தாக்குதல்கள், இழிவுபடுத்தல்கள் என மிகக் கேவலமானதொரு நிலையை எட்டியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. குறிப்பாக சமூக ஊடக வெளியில் இந்த மூன்றாந்தரப் பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது வெட்கத்தை மட்டுமல்ல, கவலையையும் தருகிறது. கடந்த ஐந்தாறு தசாப்தங்களாக துயரத்தையே அனுபவித்த ஓர் இனத்தின் பிரதிநிதிகளாகப் போகிறவர்கள் இத்தகைய இழிவான பிரசாரத்தை செய்துதான் அவ்வினத்தை பிரதிநிதித்துவப்படுத்தப் போகிறார்கள் என்றால் அது அந்த இனத்துக்கே இழுக்காகும்.
இந்தப் பொதுத் தேர்தலைப் பொறுத்தவரை தமிழ் மக்கள் வழங்கவுள்ள தீர்ப்பானது இலங்கையரசுக்கும், சர்வதேசத்துக்கும் மட்டுமல்ல தமிழ்க் கட்சிகளுக்கும் தமிழ் மக்கள் வழங்கும் தீர்ப்பாக அமையப் போகிறது. தமிழ்க் கட்சிகள் மட்டுமல்ல சகல அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுதல் அவசியமாகிறது.
ஒரு தேர்தலின் வெற்றி என்பது அதிகபட்சமாக 5 வருடகாலமே உயிர்வாழும். மக்களை ஏமாற்ற, ஏமாற்ற உங்களுடைய பலம் வீழ்ந்துகொண்டே இருக்கும். அடுத்த தேர்தலிலே நீங்கள் தோல்வியடையாவிடினும், நீங்கள் முன்னர் கொண்டிருந்த பலத்தின் வலு குறையத்தொடங்கியிருக்கும். அது தொடர்ந்து குறைந்துகொண்டுமிருக்கும். ஏனென்றால் 'எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது' - ஏப்ரஹாம் லிங்கனின் இந்தப் பொன் மொழி உங்கள் இதயங்களில் ஒலித்துக் கொண்டே இருக்கட்டும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
5 hours ago