2025 மே 17, சனிக்கிழமை

ஐ.ம.சு.கூ முஸ்லிம்களின் திரிசங்கு நிலை

Thipaan   / 2015 ஓகஸ்ட் 11 , பி.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலின் போது வாக்களிப்பது தொடர்பாக, சில சிறுபான்மையினர் மத்தியில் குழப்பம் நிலவுவதாக தெரிகிறது. அவர்கள் விரும்பும் கட்சிகள் அல்லது வேட்பாளர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிடுவதே அதற்குக் காரணமாகும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்தாலும் இம்முறை அவர்கள், தத்தமது பிரதேசத்திலுள்ள சில வேட்பாளர்களுக்கு வாக்களிக்கவும் ஆசைப்படுகிறார்கள். ஆனால், அந்த வேட்பாளர்கள் ஐ.ம.சு.கூவின் கீழ் போட்டியிடுவதனால், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராகிவிடுவாரோ என்ற அச்சமும் அவர்களிடம் இருக்கிறது. இது ஐ.ம.சு.கூவின் கீழ் போட்டியிடும் சில சிறுபான்மையின வேட்பாளர்களையும் விடையில்லா கேள்விகளை எதிர்நோக்கச் செய்துள்ளது.

உதாரணமாக, தமக்கு அளிக்கும் வாக்கு, மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்க அளிக்கும் வாக்கு என சிலர் பிரசாரம் செய்து வருவதாகவும் ஆனால், மஹிந்த பிரதமராவார் என்பதற்கு அவ்வாறானதோர் உத்தரவாதம் இல்லை என்றும் மஹிந்தவின் ஆட்சியில் உள்ளூராட்சி அமைச்சராகவிருந்த தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் சில நாட்களுக்கு முன்னர் கூறியிருந்தார்.

தாம் போட்டியிடும் கூட்டமைப்பின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே இருக்கிறார் என்றும் தமது நிலைப்பாட்டை நியாயப்படுத்துவதற்காக அவர் கூறியிருந்தார். இதேபோன்று, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலும் ஐ.ம.சு.கூவிலும் இருக்கும் முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர், முன்னாள் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் போன்றோரும் முன்னாள் அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவருமான ஆறுமுகன் தொண்டமானும் தாம் ஐ.ம.சு.கூவில் இருப்பதை நியாயப்படுத்தி, தாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இயங்குவதாகவும் கருத்து வெளியிட்டிருந்தனர்.

தமக்கு அளிக்கும் வாக்கு மஹிந்தவை பிரதமராக்குவதற்காக அளிக்கப்படும் வாக்கல்ல என்று அவர்கள் முன் வைக்கும் வாதம் பல கேள்விகளை எழுப்புகிறது. முதலாவதாக எழும் கேள்வி மஹிந்த பிரதமராக நியமிக்கப்பட்டால் இவர்கள் அதனை விரும்புவார்களா? இல்லையா என்பதே. அவர்கள் தமது இப்போது கூறும் தமது நிலைப்பாட்டை சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் நடைபெறும் ஐ.ம.சு.கூவின் கூட்டங்களிலும் கூறுவார்களா என்பது அடுத்த கேள்வியாகும்.

அதேவேளை, ஐ.ம.சு.கூ., இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றால் மஹிந்தவை பிரதமராக்க வேண்டும் என்ற கோஷம் பலமாக எழும். அப்போது இந்த தமிழ், முஸ்லிம் தலைவர்கள் அதனை எதிர்ப்பார்களா? அல்லது அதனை ஆதரிப்பார்களா என்பதும் இங்கு எழும் ஒரு முக்கிய கேள்வியாகும்.

சிலவேளை, இவர்களும் இப்போது மஹிந்த பிரதமராவதை உண்மையிலேயே விரும்பவில்லை என்று வைத்துக் கொண்டாலும் மக்களில் பலர் அதனை நம்ப மாட்டார்கள். ஏனெனில், ஏழு மாதங்களுக்கு முன்னர்;, மஹிந்தவை ஜனாதிபதியாவதையே விரும்பி இவர்கள் அதற்காக உழைத்தவர்கள். அந்தத் தேர்;தலில் சிறுபான்மை மக்கள், அதிலும் குறிப்பாக முஸ்லிம்கள் ஏறத்தாழ ஒட்டு மொத்தமாக மஹிந்தவை எதிர்த்தே வாக்களித்தனர். அந்த நிலை இன்னமும் மாறியதாக தெரியவில்லை.

எனவே தான், இந்த சிறுபான்மை தலைவர்கள் தாம் மஹிந்தவின் ஆதரவாளர்கள் அல்ல, மைத்திரியின் ஆதரவாளர்கள் என்று கூற முயற்சிக்கிறார்கள். அது உண்மையாக இருந்தாலும் ஐ.ம.சு.கூவில் மஹிந்தவின் நிலை இப்போது பலமாக இருப்பதையும் எவரும் மறுக்க முடியாது. ஐ.ம.சு.கூவுக்குள் மஹிந்தவின் கையொங்கியிருக்கிறதா அல்லது மைத்திரியின் கையோங்கியிருக்கிறதா என்பதை தேர்தலின் பின்னர் தான் பார்க்க முடியும்.

சிறுபான்மையினர், அதிலும் குறிப்பாக முஸ்லிம்கள் மஹிந்தவை வெறுத்தமை ஆதாரமற்ற நிலைமையொன்றல்ல. கடந்த ஜனவரி மாதம் 9ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலின் முடிவு வெளிவரும் வரை ஏறத்தாழ மூன்றாண்டுகளாக முஸ்லிம்கள் பெரும் பதற்றத்துடனும் நிம்மதியற்றதுமான வாழ்க்கையை நடத்தினார்கள். பொலிஸ் பாதுகாப்புடன் வாழும் அரசியல்வாதிகள் இந்த பீதியை உணர்ந்திருக்க மாட்டார்கள். ஆனால், முஸ்லிம்கள் அவமானப்படும் போதும் இஸ்லாமும் திருக்குர்ஆனும் அவமானப்படுத்தப்படும் போதும் இகழப்படும் போதும் பொதுவாக முஸ்லிம்கள் உணர்ந்த வேதனையை இந்தத் தலைவர்களும் அனுபவித்திருக்க வேண்டும்.

நிம்மதியற்ற அந்த மூன்றாண்டுகளில் தமக்கு நியாயம் வழங்க அரசாங்கம் முன்வரவில்லை என்றே முஸ்லிம்கள் கருதுகிறார்கள். நியாயம் வழங்குவது ஒரு புறமிருக்க, அரசாங்கத்தின் முக்கிய புள்ளிகள் தான் அந்த பதற்றத்தை தூண்டுகிறார்களா என்றும் சில வேளைகளில் முஸ்லிம்கள் கருதினார்கள். அவ்வாறு தான் அக்கால கட்டத்தில் சம்பவங்கள் இடம்பெற்றன.

முஸ்லிம்கள் ஏன் தம்மை வெறுக்கிறார்கள் என்பதை மஹிந்த தற்போது உணர்ந்திருக்கிறார் என்பது தெளிவாகிறது. தமது ஆட்சிக் காலத்தில் சிலர் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்டார்கள் என்றும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தாம் முன்வந்த போது அமைச்சர் சம்பிக்க ரணவக்க போன்றவர்கள் அதற்கு இடமளிக்கவில்லை என்றும் அவர் தற்போது கூறுகிறார்.

முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்டவர்கள், வெளிநாட்டு சதியொன்றின் விளைவாகவே அவ்வாறு செய்தார்கள் என்றும் அவ்வாறு முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்டவர்கள் நோர்வே நாட்டுக்கு சென்று அங்கு சிலரது ஆதரவுடனேயே இந்தச் செயற்பாடுகளில் ஈடுபட்டார்கள் என்றும் அவர்கள் பின்னர் அமெரிக்காவுக்கும் சென்றார்கள் என்றும் அவர் மேலும் கூறியிருந்தார்.

மஹிந்த யாரை குறிப்பிடுகிறார் என்பது தெளிவாகிறது, 2012ஆம் ஆண்டு கலபொடஅத்தே ஞானசார தேர் மற்றும் கலாநிதி டிலந்த வித்தானகே உட்பட எட்டுப் பேர் நோர்வேக்குச் சென்று வந்ததன் பின்னரே அதே குழுவினரால் பொதுபல சேனா அமைப்பு உருவாக்கப்பட்டது. அந்தக் குழு இலங்கைக்கு வந்ததன் பின்னர் இலங்கையில் இன ஐக்கியத்தை கட்டி எழுப்புவதற்காக அவர்களுக்கு பணம் வழங்கியதாக நோர்வே தூரகமும் அறிக்கையொன்றில் கூறியிருந்தது. அவர்கள் எவ்வாறு இன ஐக்கியத்தை கட்டி எழுப்பினார்கள் என்பது வேறு விடயம்.

மஹிந்த கூறுவதைப் போல் முஸ்லிம்களுக்கு எதிரான செயல்கள் மற்றும் பிரசாரம் வெளிநாட்டு சதியாக இருந்தால் அந்த சதியின் நோக்கம் என்வாக இருக்க வேண்டும்? பொது பல சேனா மூலம் முஸ்லிம்களுக்கு எதிராக நாட்டில் குழப்பத்தை உருவாக்குதல், அதன் மூலம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் மஹிந்தவுக்கு எதிராக வாக்களிக்கச் செய்து மஹிந்தவின் ஆட்சியை கவிழ்ப்பது என்பதாகத் தான் அந்தத் திட்டம் அமைந்திருக்க வேண்டும்.

அதுவே உண்மையில் இடம்பெற்றது. எனவே அது சதியாகவும் இருக்கலாம். தமிழ் மக்கள் எப்போதும் ஐ.ம.சு.கூவை விரும்பவில்லை. முஸ்லிம்கள் தான் புதிதாக மஹிந்தவை வெறுத்தவர்கள். அதற்கு பொது பல சேனாவின் செயற்பாடுகளே பிரதானமாக காரணமாகியது. அதாவது பொது பல சேனா முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் போது மஹிந்தவின் அரசாங்கம் அதனை தடுக்காது என்பதை அந்த வெளிநாட்டு சதிகாரர்கள் முன்கூட்டியே அறிந்து வைத்திருக்கிறார்கள்.

ஆனால், மஹிந்த இதனை இப்போது கூறுவது காலங் கடந்த ஞானம். அதேவேளை, அவர் இந்த விடயத்தில் நேர்மையானவரா என்பது இன்னமும் சந்தேகமாகவே இருக்கிறது. ஏனெனில், பொது பல சேனாக் காரர்கள் நோர்வேக்குச் சென்று வந்ததன் பின்னர் தான் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட ஆரம்பித்தார்கள் என்பதை மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன போன்றோர்கள் தொலைக்காட்சி விவாதங்களின் போதும் ஏனைய ஊடகங்கள் மூலமும் ஆரம்பத்திலேயே அம்பலப்படுத்தியிருந்தார்கள். அப்போது ஏன் மஹிந்த அதனை உணரவில்லை?

இந்த நாட்டில் உளவுப் பிரிவொன்று இருக்கிறது. அது மஹிந்தவின் தம்பியான பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் கட்டுப்பாட்டிலேயே இயங்கியது. அந்த உளவுப் பிரிவு இந்தச் சதியை உணரவில்லையா? அதே கோட்டாபய பொது பல சேனாவை கட்டுப்படுத்தினாரா அதற்கு உதவி செய்தாரா என்பது நாடறிந்த விடயம். அவ்வாறாயின் இது சதி தான் என்பதை மஹிந்தவும் கோட்டாவும் ஏற்றுக் கொள்ளவில்லை. அல்லது ஏற்றுக் கொண்டாலும் அதனை விட முஸ்லிம்களை இம்சிப்பதில் அவர்கள் இன்பங் கண்டிருந்தார்கள் என்றே விளங்கிக் கொள்ள வேண்டியுள்ளது.

அந்தக் குழு இந்தக் குழு இன்கிறாரே தவிர, மஹிந்த இப்போதும் பொது பல சேனாவை பெயர் குறிப்பிட்டு குற்றஞ்சாட்டவில்லை. அதேவேளை, தாம் அக் குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது குற்றம என அவர் கூறவும் இல்லை. அதேவேளை, அவர் தாம் பொது பல சேனா போன்ற அமைப்புக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முற்பட்ட போது அமைச்சர் சமபிக்க அதனை தடுத்தார் என்று மஹிந்த கூறுகிறார். இது ஒரு முன்னாள் ஜனாதிபதி பேசும் பேச்சா?

முப்பதாண்டு கால போரினால் பாதிக்கப்பட்ட ஒரு நாட்டில் இன ஒற்றுமை பாதிக்கப்படும் போது, ஓர் அமைச்சர் விரும்வில்லை என்பதற்காக ஜனாதிபதி ஒருவர் அதற்கு எதிராக செயற்படாதிருப்பதாக இருந்தால் அவர் ஜனாதிபதி பதவிக்கு தகுந்தவராக இருக்க முடியாது. நாளை ஐ.ம.சு.கூ. பதவிக்கு வந்ததன் பின்னர் மீண்டும் ஏதோ ஒரு குழு, சிறுபான்மையினருக்கு எதிராக செயற்படும் போதும் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடாது என அமைச்சரொருவர் கூறினால் மஹிந்த கேட்க மாட்டாரா என்ற கேள்வி இங்கு எழுகிறது.

அக் காலத்தில், ஓர் அரசாங்கம் என்ற முறையில் முஸ்லிம்களுக்கு எதிரான சில பிரச்சினைகளை மிக எளிதாக தீர்திருக்கலாம். உதாரணமாக ஹலால் பிரச்சினையை எடுத்துக் கொள்ளலாம். இது ஓர் இலட்சினையைப் பற்றிய பிரச்சினை. ஒன்றில் அரசாங்கம் அந்த இலட்சினையை பாவிப்பதை அனுமதித்து தமது நிலைப்பாட்டை வெளியிட்டு இருக்க வேண்டும். அல்லது தகுந்த காரணம் இருந்தால் அதனை தடை செய்திருக்க வேண்டும். அப்போதும் முஸ்லிம்கள் இதேபோல் தான் மஹிந்தவை வெறுத்திருப்பார்கள். மஹிந்தவின் அரசாங்கம் இரண்டையும் செய்யாது பதற்றத்தை நீடிக்கச் செய்தது.

இந்த இலட்சினை சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. ஐரோப்பிய நாடுகள் மற்றுமன்றி தாய்லாந்து போன்ற பௌத்த நாடுகளிலும் அது அனுமதிக்கப்பட்டுள்ளது. அது முஸ்லிம் அல்லாதோருக்கு ஒரு வியாபார உத்தியாகும். இதனை விளங்கிக் கொள்ளாவிட்டால் அவர்கள் நாட்டை ஆள தகுதியற்றவர்கள்.

மாட்டிறைச்சி பற்றிய பிரச்சினையும் அதேபோலத் தான். இது பொளத்த நாடு என்று மஹிந்த கூறுவாரேயானால் அவர் சகல இறைச்சி வகைகளையும் தடை செய்து இருக்க வேண்டும். அல்லது ஏன் நடைமுறையில் அதனை தடை செய்ய முடியாது என்பதை பௌத்தர்களுக்கு விளக்கி அதற்கு எதிரான பிரசாரத்தை தடுத்திருக்க வேண்டும். சூதாட்டத்தை சட்டமாக்கி அதனை நியாயப்படுத்த மஹிந்த பௌத்த பிக்குகளையே பாவித்தார் என்றால் இது அவ்வளவு கஷ்டமாக இருந்திருக்காது. இரண்டையும் செய்யாது அவர் பதற்றம் நீடிக்க இடமளித்தார்.

முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரங்களுக்கு அசாத் சாலி பதிலளித்த போது அவர் இனவாதத்தை தூண்டுகிறார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார். ஆனால், ஆரம்பத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக பிரசாரம் செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இவற்றுக்கெல்லாம் நோர்வேயை காரணம் என்று கூற முடியாது. 

சம்பிக்க ரணவக்கவைப் பற்றி மஹிந்த கூறுவது உண்மையே. முஸ்லிம்கள் என்ன நடக்குமோ என்று பதற்றத்தில் உயிரை கையில் பிடித்துக் கொண்டு இருந்த அந்த மூன்றான்டு காலத்தில் சம்பிக்கவும் முஸ்லிம்களுக்கு எதிராகவே செயற்பட்டார். ஒரு படித்த புத்திஜீவியாக இருந்தும் அவர் ஹலால் பிரச்சினையின் போது ஏனைய நாடுகளைப் பற்றித் தெரியாதவரைப் போல் ஹலால் இலட்சினையை எதிர்த்தார்.

பொது பல சேனா, ராவணா பலய மற்றும் சிஹல ராவய போன்ற தீவிரவாத கும்பல்களை அமைச்சரவைக்குள்ளும் நியாயப்படுத்திப் பாதுகாத்தார்.  ஆனால், அவர் இந்த முறை ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றாலும் பிரதமாகப் போதில்லை. பிரதமராக வரக்கூடிய ரணில் விக்கிரமசிங்க இவர்களைவிட இனவாதச் சிந்தனையில குறைந்தவர்.

சிலவேளை சிறுபான்மையினர் விடயத்தில் தாம் சரியாக நடந்து கொள்ளவில்லை என்று இப்போது சூசகமாக மஹிந்த கூறுவது நேர்மையான கருத்தாகவும் இருக்கலாம். ஏனெனில், அவர் அந்த விடயத்தால் மறக்க முடியாத பாடம் ஒன்றை கற்றுக் கொண்டிருக்கிறார். ஆனால், அது நேர்மையான கருத்து என்பதை சிறுபான்மையினர் புரிந்து கொள்ள நீண்ட காலம் எடுக்கும். ஏனெனில், எதிர்க்கட்சியில் இருக்கும் போது எதனையும் கூறலாம். பதவிக்கு வந்தால் என்ன நடக்கும் என்று எவருக்கும் தெரியாது.

எனவே முஸ்லிம்களிடையே இந்த நியாயமான அச்சம் இருக்கும் வரை ஐ.ம.சு.கூவில் உள்ள தமிழ் முஸ்லிம் அரசியல்வாதிகளின் சோதனைக் காலம் நீடிக்கும். ஆனால், ஹிஸ்புல்லாஹ், அதாவுல்லாஹ் போன்றோர்களுக்கு தனிப்பட்ட வாக்கு வங்கியொன்று இருக்கிறது. அது அவர்களை பாதுகாக்கும் என்றும் ஊகிக்லாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .