2025 மே 17, சனிக்கிழமை

கண்ணியமானவர்களை தெரிவு செய்யுங்கள்

Thipaan   / 2015 ஓகஸ்ட் 14 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் கல்வி பிரதியமைச்சரான மோகன் லால் கிரேரோ, இம்முறை பொதுத் தேர்தலில், ஐ.ம.சு.கூ சார்பாகக் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுகிறார். டெய்லிமிரருக்கு வழங்கிய பேட்டியில், ஐ.ம.சு.கூ-க்கு மாறியமை, நாட்டின் கல்வித் திட்டத்தை முன்னேற்றுவதற்கான அவரது பங்களிப்புக் குறித்து, அவர் விவரித்தார். அதன் சுருக்கமான வடிவம் இங்கே வழங்கப்படுகிறது.

கே:  ஐ.தே.கவிலிருந்து ஐ.ம.சு.கூ-க்கு நீங்கள் மாறியமைக்கான காரணம் என்ன? ஒரு கட்சியிலிருந்து இன்னொரு கட்சிக்கு அரசியல்வாதிகள் மாறுவது ஏற்றுக் கொள்ளக்கூடியதென நினைக்கிறீர்களா?

ஒரே ஒரு நோக்கத்தை மனதில் கொண்டே, 2004ஆம் ஆண்டில் நான் அரசியலுக்கு வந்தேன். கல்வி அமைச்சராக வந்து, கல்வித் திட்டத்தை மாற்றியமைத்து, இந்நாட்டிலுள்ள குழந்தைகளுக்கு சிறந்த கல்வி வாய்ப்புகளை வழங்க விரும்பினேன்.

எட்டு வருடங்கள் ஐ.தே.கவில் இருந்ததைத் தொடர்ந்து, எனது இலக்குகளை அடைவதில் நான் தோல்வியடைந்துவிட்டேன் என்பதை உணர்ந்தேன். அத்தோடு, நாட்டின் பொதுவான கல்வித் திட்டம் பற்றிய சில மிக முக்கியமான முடிவுகள், ஐ.ம.சு.கூ அரசாங்கத்தால் எடுக்கப்பட்டது என்பதையும் நான் உணர்ந்தேன். உதாரணமாக, 1,000 பாடசாலைகள் செயற்றிட்டம், முன்னைய அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்ட அவ்வாறான முன்னேடுப்புகளில் ஒன்றாகும். எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு விமர்ச்சிக்கப்படுவதை விட, பொதுக் கல்வித் திட்டத்துக்குப் பங்களிக்கக்கூடிய ஏதாவதொன்றைச் செய்ய வேண்டுமென எதிர்பார்த்தேன். அதன் காரணமாக ஐ.ம.சு.கூக்கு மாறினேன்.

அங்கு இணைந்ததைப் பற்றி நான் வருத்தமடையவில்லை, ஏனெனில், அக்கட்சியில் இணைந்த பின்னர் ஏராளமாகப் பங்களிக்க முடிந்தது. பல்கலைக் கழகக் கல்லூரிகள் என அறியப்பட்ட மிகப்பெரிய வேலைத்திட்டத்தைத் தொடங்கினோம். அவ்வாறான 25 கல்லூரிகளை விருத்தி செய்ய ஆரம்பித்தோம். யாழ்ப்பாணம், அம்பாறை, குளியாப்பிட்டிய, மாத்தறை, இரத்மலானை, அநுராதபுரம் ஆகிய இடங்களில் 6 பல்கலைக் கழகக் கல்லூரிகளை நிர்மாணித்து முடித்துள்ளோம்.

கே: ஐ.ம.சு.கூ.இன் தேர்தல் விஞ்ஞாபனத்தோடு ஒப்பிடும் போது, ஜே.வி.பி வழங்கியுள்ள விஞ்ஞாபனத்தில், கல்விக்கு மொத்தத் தேசிய உற்பத்தியில் 6 சதவீதம் ஒதுக்கப்படுவது குறித்துத் தெளிவான பார்வை காணப்படுகிறது. அது குறித்து நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

அரசாங்கத்தின் வருமானத்தை உயர்த்தாமல், 6 சதவீதத்தை கல்விக்காக ஒதுக்குவதென்பது எந்தவொரு அரசாங்கத்துக்கும் நடைமுறைச் சாத்தியமற்றது. முன்னைய அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட நிதி நிச்சயமாகப் போதாது தான். சாத்தியமான ஒதுக்கீடாக, 3 சதவீதம் என்ற ஆரம்பம் காணப்படுவதோடு, அதைக் கட்டம் கட்டமாக அதிகரித்தால், ஐந்து அல்லது ஆறு வருடங்களுக்குள் 6 சதவீதத்தை அடைய முடியும். சடுதியாக 6 சதவீதமாக அதிகரித்தால், எமக்கு ஐந்தாயிரம் பில்லியன் ரூபாய்களுக்கு மேல் தேவைப்படும். ஒரு வருடத்துக்குள் அவ்வளவு பணத்தினையும் செலவு செய்வதற்கு, அதற்கான தாங்குதிறனோ அல்லது மனித வளங்களோ எம்மிடம் இல்லை.

கே: ஐ.ம.சு.கூ நாடாளுமன்றமானது, எதனோல்காரர்களையும் போதைப் பொருள் கடத்தல்காரர்களையும் குறைந்த கல்வியறிவு கொண்டவர்களையும் தன்னகத்தே கொண்டது என சில விமர்சகர்களின் விமர்சனத்தைச் சந்தித்திருந்தது. இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையானவையா?

தர்க்கரீதியாக நிரூபிக்கப்படும்வரை, முடிவுகளுக்கு வர முடியாது என்பது இவ்விடயத்தில் எனது நிலைப்பாடாகும். என்னுடைய அறிவுக்கெட்டியவரை, குற்றச்சாட்டுகள் மாத்திரமே உள்ள, எவையும் நிரூபிக்கப்பட்டிருக்கவில்லை. மறுகையில், புதிய அரசாங்கத்தின் மீதும் பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகள் உள்ளன. எதனோல் விடயத்தை உதாரணமாகக் கருத்திலெடுத்தால், 2014ஆம் ஆண்டில் ஐ.ம.சு.கூ அரசாங்கமானது 13 மில்லியன் லீற்றர்கள் எதனோலை மாத்திரம் இறக்குமதி செய்துள்ளது, ஆனால் புதிய அரசாங்கமானது, ஆறு மாதகாலத்துக்குள் 10 மில்லியன் லீற்றர்களுக்கு மேற்பட்ட எதனோலை இறக்குமதி செய்துள்ளது. எதனோலை இறக்குமதி செய்யப்படுவதற்கு முன்னைய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உரிமங்களின் எண்ணிக்கை 6, ஆனால் புதிய அரசாங்கம் இதை 20 உரிமங்கள் வரை அதிகரித்துள்ளது. மறுபுறத்தில், பிணை மோசடி தொடர்பாகக் காணப்படும் குற்றச்சாட்டுகள் என்னவாறு? பழைய அரசாங்கம் மாத்திரமன்றி, புதிய அரசாங்கமும் பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளது.

கே:  இலவசக் கல்வி பற்றி நாம் கதைக்கின்ற போதிலும், சில சந்தர்ப்பங்களில் அது இலவசமாகக் கிடைப்பதில்லை. பாடசாலை அனுமதியிலிருந்து பல்கலைக் கழக அனுமதி வரை, மாணவர்களிடமிருந்து நேரடியாகவோ மறைமுகமாகவோ கட்டணங்கள் அறவிடப்படுகின்றன. இது ஏன் இடம்பெறுகிறது?

மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வரிகளைச் செலுத்துகிறார்கள், அது, இலவசக் கல்விக்காகப் பயன்படுத்தப்படுகிறது. இலவசக் கல்வியின் பெறுமதியைப் பலர் உணர்வதில்லை. சிவில் யுத்தம் காரணமாகவும், அதன் பின்னர் பல்வேறுபட்ட செலவுகள் காரணமாகவும், கல்விக்காக ஒதுக்கப்பட்ட பணம் போதுமானதாக இருந்திருக்கவில்லை. பொதுத் தேசிய உற்பத்தியின் 12 சதவீதம் மாத்திரமே அரசாங்க வருமானமாக இருக்கின்ற நிலையில், பொ.தே.உற்பத்தியின் 6 சதவீதத்தை கல்விக்காக ஒதுக்குவது இப்போதைக்குச் சாத்தியப்படாது.

கே:  'மதிப்புமிக்க பாடசாலைகள்' என அழைக்கப்படும் பாடசாலைகளிலிருந்து கல்வியைப் பெறுவதற்கான அணுக்கம், ஏன் எல்லோருக்கும் சமமாகக் கிடைப்பதில்லை?

எங்கள் நாட்டில் 10,000 பாடசாலைகள் இருக்கின்றன, அவற்றில் 56 மாத்திரமே மிகவும் பிரபலமாக இருக்கின்றன. எல்லா வசதிகளையும் கொண்டிருப்பதாலும் அவைகளின் கடந்த கால வரலாறு காரணமாகவும் அவற்றைப் பிரபலமான பாடசாலைகள் என்றழைக்கிறோம். கல்வி பிரதி அமைச்சராக நான் இருந்த போது, 1,000 இரண்டாம்நிலைப் பாடசாலைகள், 5,000 ஆரம்பப் பாடசாலைகள் என்றழைக்கப்பட்ட திட்டத்தை ஆரம்பித்தோம். ஒவ்வொரு இரண்டாம்நிலைப் பாடசாலையும், 5 ஆரம்பப் பாடசாலைகளோடு இணைக்கப்பட்டுள்ளன. இந்த 5 பாடசாலைகளிலிலுமுள்ள மாணவர்கள், அவர்களது ஐந்தாமாண்டுப் புலமைப்பரிசில் பரீட்சை முடிவு எவ்வாறிருந்தாலும், அந்த இரண்டாம்தரப் பாடசாலையில் சேர்க்கப்படுவர்.

கே:  வாக்களிக்கும் மக்களுக்கு, எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பான உங்கள் செய்தி என்ன?

கண்ணியமும் நேர்மையும் கொண்டவர்களையும் நாட்டின் அபிவிருத்தி நோக்கிப் பங்களித்தவர்களையுமே நாடாளுமன்றத்துக்கு அனுப்புவதை மக்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

(நன்றி: டெய்லிமிரர்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .