Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Thipaan / 2015 ஓகஸ்ட் 19 , மு.ப. 07:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதினைந்தாவது நாடாளுமன்றத்துக்காக நேற்று முன்தினம் திங்கட்கிழமை நடைபெற்ற தேர்தல், இதற்கு முன்னர் நடைபெற்ற பொதுத் தேர்தல்களை விட முக்கியமானதாக இந் நாட்டு சிறுபான்மையினர் கருதியதாகவே கூற முடியும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ -பிரதமராவதன் மூலம் மீண்டும் அதிகாரத்துக்குவர மேற்கொண்ட முயற்சியே அதற்குக் காரணமாகும். மஹிந்தவைப் பிரதமராக்குவதே தேர்தல் பிரசார நாட்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதான சுலோகமாக இருந்தது.
இதற்கு முன்னர் இருந்த ஜனாதிபதிகளை விடவும் பிரதமர்களை விடவும் சிறுபான்மை மக்கள், மஹிந்தவை வெறுத்தனர். அது கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது மிகத் தெளிவாக தெரியவந்தது. அந்த நிலையில் தான் மஹிந்த இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். எனவே, தான் சிறுபான்மையினரின் அக்கறை அதிகரித்தது.
இதற்கு முன்னர் இடம்பெற்ற பல பொதுத் தேர்தல்களின் போது சிறுபான்மையினர் பெரும்பாலும் தாம் வாக்களிக்கும் சிறுபான்மைக் கட்சிகள் வெற்றி பெற்றால் போதும் என்ற நிலையில் இருந்தனர். ஆனால், மஹிந்தவின் அரசியல் மீள்பிரவேசத்தால் தேசிய அளவிலான வெற்றி சிறுபான்மையினருக்கு முன்னரை விட முக்கியமானதாகியுள்ளது.
இம்முறையும் மஹிந்த ராஜபக்ஷ உட்பட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு இனவாதத்தையே தமது துருப்புச் சீட்டாக பாவித்தனர். ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தால் நாடு பிரியும் என்றும் தமிழர்களின் கையோங்கும் என்றும் புலிகள் அமைப்பு பலம்பெற்று வருகிறது என்றும் சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் பீதியை முடுக்கி விடுவதே அவர்களது பிரதான உத்தியாக இருந்தது.
ஆனால், சிங்கள மக்கள் அதனை நம்பியதாக தேர்தல் முடிவுகள் மூலம் தெரியவில்லை. சிங்கள மக்கள் செறிவாக வாழும் தேர்தல் தொகுதிகளிலேயே ஐ.ம.சு.கூ முன்னணியில் இருக்கிறது. ஆனால், அந்த தொகுதிகளிலும் ஐ.ம.சு.கூ தமது வாக்கு வங்கியைப் பெருமளவில் பெருக்கிக் கொள்ளவில்லை. மாறாக பல இடங்களில் அக் கூட்டமைப்பின் வாக்குகள் குறைந்துள்ளன.
ஐ.ம.சு.கூ இனவாதத்தை தூண்டியும் சிங்கள மக்கள் அதனை மதிக்கவில்லை என்றே இதன் மூலம் தெரிகிறது. புலிப் பூச்சாண்டி இனி அவ்வளவு எடுபடாது என்பதைத் தான் இது எடுத்துக் காட்டுகிறது. இது நிரந்தரமானதொரு நிலைமை என்று உறுதியாக கூற முடியாது தான். ஆனால், தற்போதுள்ள நிலைமை வரவேற்கத்தக்கதாகும்.
ஐ.ம.சு.கூ பிரதானமாக சிங்கள மக்களை இலக்காகக் கொண்டே தமது தேர்தல் பிரசாரத்தை முடுக்கிவிட்டு இருந்தது. அதனால், அக் கட்சிக்கு சிங்கள மக்களை பெருமளவில் ஈர்த்துக் கொள்ள முடியாது போனது போலவே அக் கட்சி சிறுபான்மை மக்களையும் மேலும் அந்நியப்படுத்திக் கொண்டது.
ஆனால், மஹிந்தவோ அல்லது வேறு அரசியல்வாதிகளோ இதனால் பாடமொன்றை கற்றுக்கொண்டு, எதிர்காலத்தில் இனவாதத்தை தூண்ட மாட்டார்கள் என்பதற்கு இது உத்தரவாதமல்ல. இனவாத்தை தூண்டுவது மட்டுமே ஒரு சில அரசியல்வாதிகளுக்குத் தெரியும். எனவே, எதிர்காலத்தில் இடம்பெறும் தேர்தல்களின் போதும் பலர் இனவாதத்தை
தூண்டுவார்கள்.
இனவாதத்தை பொறுத்தவரை மற்றொரு முக்கிய விடயத்தையும் இந்தத் தேர்தலின் போது காணக்கூடியதாக இருக்கிறது. கடந்த மூன்றாண்டுகளாக நாட்டில் இனவாதத்தை தூண்டி பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய பொது பல சேனா அமைப்புக்குக் கிடைத்த படுதோல்வியே அந்த முக்கிய விடயமாகும்.
இந்திய ஆளும் கட்சியான பாரதிய ஜனதாக் கட்சியின் ஆங்கில சுருக்கப் பெயரான பிஜேபி என்பதை அவ்வாறே தொனிக்கும் வகையில் பொது பல சேனா அமைப்பினர், தமது பெயரை பொது ஜன பெரமுண (பிஜேபி) என்று மாற்றிக் கொண்டே இம்முறை தேர்தலில் குதித்தனர். அதேவேளை, தீவிரவாத கருத்துக்களைக் கொண்ட சிங்களவர்களை ஆக்குரோஷமாக
தூண்டும் வகையில் தமது தேர்;தல் சின்னமாக நாக பாம்பையும் தெரிவு செய்தனர்.
ஆனால், அவர்கள் சிங்கள பௌத்த மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளனர். கடந்த வருடம் அவ்வமைப்பு முஸ்லிம்களுக்கு எதிராக பெரும் இனக் கலவரத்தைத் தூண்டிவிட்ட பெருவளையில் மட்டும் இன உணர்வுகளின் தீவிரத்தன்மையின் காரணமாக அவ்வமைப்பு சுமார் 2 சத வீத வாக்குகளை பெற்றுள்ளது.
ஐ.ம.சு.கூவின் இனவாதக் கொள்கை இலங்கை தொழிலாளர் காங்கிரஸையும் மோசமாக பாதித்துள்ளது. மலையகத்தில் தமிழ் மக்கள் செறிவாக வாழும் தொகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சியே வெற்றி பெற்றுள்ளது. இ.தொ.காவின் ஆதரவுடன் போட்டியிட்ட ஐ.ம.சு.கூ அவ்விடங்களில் தோல்வியடைந்துள்ளது. கடந்த ஊவா மாகாண சபைத் தேர்தலின் போது இந்திய வம்சாவளி மக்கள் செறிவாக வாழும் பகுதியான பசறை தொகுதியில் ஐ.ம.சு.கூ வெற்றி பெற்றியிருந்தது. ஆனால், இம் முறை ஐ.ம.சு.கூ அத் தொகுதியையும் பறிகொடுத்துள்ளது. இம் முறை சிறுபான்மை மக்கள் எந்தளவு ஐ.ம.சு.கூவை புறக்கணித்துள்ளார்கள் என்பதற்கு ஹப்புத்தளை தொகுதி சிறந்த உதாரணமாக இருக்கிறது. அத்தொகுதியானது இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் செறிவாக வாழும் தொகுதியாகும். அங்கு தோட்டங்களில் இ.தொ.காவே பிரதான தொழிற்சங்கமாக இருக்கிறது. ஆயினும் அங்கு ஐ.ம.சு.கூவை ஆதரிக்கும் இ.தொ.கா 3,000 வாக்குகளுக்கும் குறைவாகவே பெற்றுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணி இம்முறை பெருமளவில் ஆசனங்களை பெற்றுக் கொள்ளும் என பலர் கருதினர். அக் கட்சி இம் முறை பெருமளவில் சிறுபான்மை மக்களின், குறிப்பாக முஸ்லிம்களின் வாக்குகளை பெற்றுக் கொள்ளும் என்றும் பலர் கருத்து வெளியிட்டிருந்தனர். ஆனால், அக் கட்சி அவ்வளவாக சோபிக்கவில்லை.
இதற்கும் காரணம் மஹிந்த என்றே ஊகிக்கலாம். இம்முறை பொதுத் தேர்தலை மஹிந்தவின் மீள் வருகையைப் பற்றிய ஒரு கருத்துக் கணிப்பாகவும் கருத முடிகிறது. எனவே பெரும்பாலான மக்கள் கட்சிகளின் கொள்கைகளைப் பற்றிப் பாராது மஹிந்த வேண்டுமா இல்லையா என்று சிந்தித்தே வாக்களித்துள்ளனர்.
ஐ.ம.சு.கூவை எதிர்த்தவர்களே மக்கள் விடுதலை முன்னணிக்கு வாக்களிக் விரும்பினர.; கடந்த காலங்களில் மக்கள் விடுதலை முன்னணி பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை மக்களின் நன்மதிப்பை பெற்றக் கொண்ட போதிலும் வாக்காளர்களில் பலருக்கு அக்கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்ற தேவையிருந்த போதிலும் அவர்களுக்கு அதை விட முக்கியமான இலக்கொன்று இருந்தது.
ஐ.ம.சு.கூவை தோற்கடித்து மஹிந்த பதவிக்கு வருவதை தடுப்பதே அவர்களது முதன்மையான நோக்கமாக இருந்தது. ம.வி.முவுக்கு வாக்களித்து அந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியாது என்பது சிறு பிள்ளைகளுக்கும் தெரிந்த விடயம். எனவே தான் ம.வி.முவுக்கு இக் கதி நேர்ந்தது. வேறு வார்த்தைகளில் கூறுவதாக இருந்தால் ம.வி.முவின் உழைப்பால் ஐ.தே.கவே பயனடைந்துள்ளது.
ஆனால், ம.வி.முவின் வீழ்ச்சி நாட்டுக்கு நல்லதல்ல. மக்கள் விடுதலை முன்னணியானது எப்போதும் சமூகத்தில் அபிப்பிராயங்களை உருவாக்குவதில் பெரும் பங்காற்றியுள்ளது. அன்மைக் காலத்தில் ஐ.ம.சு.கூ இனவாதத்தைத் தூண்டும் போதும் ம.வி.மு அதற்கு எதிராக குரல் கொடுத்தது. கடந்த காலங்களில் பொது பல சேனாக்காரர்கள், நாட்டைக் குழப்பும் போதும் அக் கட்சி பகிரங்கமாகவே சிங்கள மக்கள் மத்தியில் அதற்கு எதிராக குரல் எழுப்பியது.
ஒரு காலத்தில் போரின் போது இராணுவம் மனித உரிமைகளை மீறவில்லை என்று கூறிய மக்கள் விடுதலை முன்னணி அண்மைக் காலமாக அந்த நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு போரின் போது சாதாரண பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் என்றும் அதற்காக தமிழர்களுக்கு நியாயம் வழங்க வேண்டும் என்றும் கூறி வருகிறது. எனவே, அவ்வாறானதோர் குரல் அடங்கிப் போவது நல்லதல்ல.
முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சிக்கு நேர்ந்த கதியும் யாழ்ப்பாணத்தில் போட்டியிட்ட முன்னாள் புலிகள் அமைப்பின் ஜனநாயகப் போராளிகள் குழுவுக்கும் நேர்ந்த கதியும் ஒன்றே. போரின் போது உண்மையிலேயே போராடியவர்கள் புலிப் போராளிகளும் இராணுவமுமே. ஆனால், மஹிந்த போன்றோர்களே போர் வெற்றியின் அரசியல் இலாபத்தை அடைந்தனர். போரை முன்னடத்தி அதனை வெற்றியை நோக்கி இட்டுச் சென்ற பொன்சேகாவை சிங்கள மக்கள் தேர்தலின் போது மதிக்கவில்லை. அதேபோல் புலிகளின் பெயரைக் கூறி வாக்குக் கேட்ட கட்சிகளை மதித்த தமிழ் மக்கள் புலிகளின் உண்மையான போராளிகளை தேர்தலின் போது மதிக்கவில்லை. இது தேசப்பற்று என்றால் என்ன என்ற கேள்வியை எம் முன் நிறுத்துகிறது.
வடக்கிலோ தெற்கிலோ போரைக் காட்டி வாக்குகளைப் பெறமுடியாது என்றும் சிலர் இதனை விவரிக்கலாம். அது சிலவேளை சிலரை கடுமையான சீற்றத்துக்கும் ஆளாக்கலாம். ஆனால், அது தான் தெற்கிலும் வடக்கிலும் உண்மையான நிலைமை.
ஐ.ம.சு.கூ இம் முறை பெற்ற வாக்குகள் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது அக் கட்சி பெற்ற வாக்குகளை விட பல இடங்களில் குறைந்துள்ளதை அவதானிக்க முடிகிறது. அதேவேளை, ஐ.தே.க ஏறத்தாழ சகல இடங்களிலும் தமது வாக்கு வங்கியை அதிகரித்துக் கொண்டுள்ளது. இம்முறை அரசாங்கத்தை அமைக்க அக் கட்சிக்கு முடியாது போகும் பட்சத்தில் நிச்சயமாக ஐ.ம.சு.கூவுக்கான மக்கள் ஆதரவு மேலும் சரியும்.
ஜனாதிபதித் தேர்தலின் போது போலவே இம் முறையும் தேர்தல் முடிவுகளை சிறுபான்மை மக்களே தீர்மானித்துள்ளார்கள். இல்லாவிட்டால் ஐ.ம.சு.கூவே ஆட்சியை அமைத்திருக்கும்.
தேர்தலின் பின்னர் புதிய அரசாங்கத்தை நிறுவுவதிலும் மஹிந்த கருத்திற்கொள்ளப்படும் முக்கிய காரணியாக இருப்பார். இறுதி தேர்தல் முடிவுகளின் படி எந்தவொரு கட்சியும் தனியாக நிலையான அரசாங்கத்தை உருவாக்க முடியாது என்பது தெளிவாக தெரியவிருக்கிறது. அறுதிப் பெரும்பான்மையை பெற்றோ பெறாமலோ நிலையான அரசாங்கத்தை உருவாக்குவதாயின் இரு பிரதான கட்சிகளில் ஒன்று மக்கள் விடுதலை முன்னணியினதோ அல்லது தமிழரசுக் கட்சியினதோ ஆதரவைப் பெற வேண்டும். அவ்விரண்டும் அரசாங்கத்தில் பங்கு கொள்வதில்லை என்று ஏற்கெனவே கூறியுள்ளன.
ஆனால், மஹிந்த, ஐ.தே.க எம்.பிக்களை விலை கொடுதது வாங்கி அரசாங்கம் ஒன்றை நிறுவ முயற்சிக்கக் கூடும். தமிழரசுக் கட்சியோ மக்கள் விடுதலை முன்னணியோ அதற்கு இடமளிக்கும் என்று கருத முடியாது. அந்த நிலையில் அக் கட்சிகள் ஐ.தே.கவின் உதவிக்கு வரலாம்.
இது அக் கட்சிகளின் பேரம் பேசும் சக்தியை அதிகரிக்கும். ஆனால், அக் கட்சிகளில் உள்ள தீவிரவாதிகளையும் அது தூண்டிவிடலாம். அவர்கள் நிலைமையை பாவித்து வேறு நோக்கங்களை அடையவும் முயற்சிக்கக் கூடும். அவ்வாறாயின் விரைவில் மஹிந்தவும் ஐ.ம.சு.கூவுமே அதனால் பயனடைவர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago
6 hours ago