Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Thipaan / 2015 ஓகஸ்ட் 21 , மு.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹமட் பாதுஷா
வெளியாகியுள்ள பொதுத் தேர்தலின் முடிவுகள் பெரிய ஆச்சரியங்களைக் கொண்டு வரவில்லை. 2010ஆம் ஆண்டு 144 ஆசனங்களைப் பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இம்முறை 95 ஆசனங்களையும், அப்போது 60 ஆசனங்களைப் பெற்றுத் தோல்வி கண்டிருந்த ஐ.தே.க. இப்போது 106 ஆசனங்களையும் பெற்று வெற்றியீட்டியுள்ள போதிலும் கூட, புத்தியுள்ள மக்களின் அனுமானங்கள் பிழைக்கவில்லை என்பதால் அவர்கள் ஆச்சரியங்களுக்கு ஆட்படவில்லை.
விகிதாசாரத் தேர்தல் முறைமையின் அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 93 ஆசனங்களும் 13 தேசியப் பட்டியல் உறுப்புரிமைகளும் கிடைத்திருக்கின்றன. ஐ.ம.சு.கூ.வுக்கு 83 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் 12 தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைத்திருக்கின்றன.
14 உறுப்பினர்களை வெற்றி பெற்று வைத்திருக்கும் தமிழரசுக் கட்சிக்கும், 4 உறுப்பினர்களைப் பெற்றுள்ள மக்கள் விடுதலை முன்னணிக்கும் தலா 2 தேசியப் பட்டியல்கள் கிடைக்கப் பெற்றிருக்கின்றன. மரச்சின்னத்தில் போட்டியிட்டு ஒரு எம்.பி.யை மட்டும் பெற்றதால் முஸ்லிம் காங்கிரஸுக்கு தேசியப் பட்டியல் ஆசனம் கிடைக்கவில்லை. வீணைச் சின்னத்தில் போட்டியிட்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் இதே நிலைமைதான் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ - குருணாகல் மாவட்டத்தில் 4 இலட்சத்துக்கு அதிகமான வாக்குகளைப் பெற்றிருப்பினும் தேசிய அரசியலில் அவரது பிரதமர் கனவு தோல்வி கண்டிருப்பதை அவரே ஒத்துக் கொண்டிருக்கின்றார்.
இவ்வாறான ஒரு சூழலில் அரசாங்கத்தை அமைப்பதற்கான பலத்தை ஐ.தே.கவினால் பெற்றுக்கொள்ள முடியும். ஒற்றையாட்சியை நிறுவுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அழைப்பு விடுக்கலாம். ஆனால், அக்கட்சி பெரும்பாலும் தேசிய அரசாங்கத்துக்கு வெளியில் இருந்து ஆதரவு வழங்கவே விரும்பும். அதேவேளை, ஐ.தே.க பெற்றுள்ள 106 ஆசனங்களுடன் ஜே.வி.பி.யின் 6 ஆசனங்கள் மற்றும் மு.கா.வின் 1 ஆசனம் ஆகியவற்றை இணைத்துக் கொண்டு ஒற்றையாட்சி அமைக்கலாம். அல்லது ஐ.ம.சு.கூ.வில் போட்டியிட்டு வெற்றியீட்டிய நிலையில் ஐ.தே.க. பக்கம் வருவதற்காக அலரி மாளிகை வாசலில் தவம் கிடக்கும் சிலரை இணைத்துக் கொண்டோ அரசாங்கத்தை அமைக்கலாம்.
எது எவ்வாறிருப்பினும் இவையெல்லாம் இரண்டாவது தெரிவாகவே இருக்கும். ஏனெனில், தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதே ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்பார்ப்பாகவும் இருந்து வருகின்றது. அவ்வாறான தேசிய அரசாங்கம் அமையும் பட்சத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதான எதிர்க்கட்சி பாத்திரத்தை ஏற்றாலும் ஆச்சரியப்பட முடியாது.
தேசிய அரசியல் நிலைவரங்கள் இவ்வாறிருக்கின்ற நிலையில், சிறுபான்மைக் கட்சிகள் நிச்சயமாக இதில் எந்த வகையிலேனும் தாக்கம் செலுத்தவே போகின்றன. தமிழ், முஸ்லிம் கட்சிகள் தேர்தலில் பெற்றுக்கொண்ட வெற்றிகளும் தோல்விகளும் இந்தத் தாக்கத்தின் அளவையும் கனதியையும் நிர்ணயிப்பனவாக இருக்குமென்று கூறலாம்.
இம்முறை இடம்பெற்ற தேர்தலில் தமிழ் மக்கள் ஒரு புதிய பாடத்தைத் தீர்க்கமாக புகட்டியிருக்கின்றார்கள். குறிப்பாக வடக்கு, கிழக்கில் இருக்கும் தமிழர்களில் பெருமளவானோர் - எந்த அமைச்சுப் பதவியையும் ஒருபோதும் வகிக்காத தமிழரசுக் கட்சிக்கே வாக்களித்திருக்கின்றனர். தங்களுடைய அரசியல் உரிமையைப் பெறுவதில் அவர்களுக்கிருந்த மன உறுதிப்பாடு, தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்புரிமையை இம்முறை நாடாளுமன்றத்தில் 2 இனால் அதிகரிக்கச் செய்திருக்கின்றது. அவ்வாறே கொழும்பு, மலையக தமிழர்களும் நல்லாட்சியை உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.
ஆனால், இரண்டாவது சிறுபான்மை இனமான முஸ்லிம் அரசியல்வாதிகளிடையே ஏற்பட்டிருக்கும் தலைமைத்துவப் போட்டியும் பதவி ஆசையும் பகைமை பாராட்டுதலும் இன்று முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தியிருக்கின்றது. முஸ்லிம் கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து நாடெங்கும் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கையை புறந்தள்ளியமையால் சில முஸ்லிம் அரசியல்வாதிகள் தோல்வியடைந்திருப்பது மட்டுமன்றி பல பிரதேசங்களின் முஸ்லிம் வாக்குகள் வீணாகி இருக்கின்றது.
இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் தோற்றவர்களுள் இருவர் முக்கியமானவர்கள். ஒருவர் முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் என்ற கட்சியின் தலைவருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா மற்றவர் முன்னாள் பிரதியமைச்சரான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ். இவர்கள் இருவரும் வௌ;வேறு மாவட்டங்களில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியில் தோற்கடிக்கப்பட்டிருக்கின்றார்கள். இவர்கள் இருவரும் மிகச் சிறந்த செயல் வீரர்கள். கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி அரசியலில் மிக முக்கியமானவர்கள் எனவும் இவர்களைக் குறிப்பிடலாம். தமக்கு சிறியதொரு பதவி கிடைத்தாலும் எங்கிருந்தாவது பெருந்தொகை பணத்தைக் கொண்டு வந்து பாரிய அபிவிருத்திகளைச் செய்யக் கூடியவர்கள். இதனை முஸ்லிம் காங்கிரஸினால் செய்ய முடியவில்லை. மர்ஹூம் அஷ்ர‡புக்கு, உரிமை அரசியலில் பிரகாசிப்பது போல அபிவிருத்தி அரசியலில் மு.கா.வினால் பிறகு ஜொலிக்க முடியவில்லை.
இவ்வாறிருந்த போதிலும் கூட ஹிஸ்புல்லாவும் அதாவுல்லாவும் தோல்வி கண்டிருக்கின்றனர். அம்பாறை (திகாமடுல்ல) மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்ட முதன்மை வேட்பாளரான அதாவுல்லாவும் சரி அதே கட்சி சார்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் களமிறங்கிய ஹிஸ்புல்லாவும் சரி 16,000க்கு சற்றுக் கூடுதலான வாக்குகளை மாத்திரமே பெற்று தோல்வியடைந்துள்ளனர்.
ஹிஸ்புல்லா போட்டியிட்ட ஐ.ம.சு.கூ.வுக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையில் வெறும் 127 வாக்குகள் மாத்திரமே வித்தியாசம் காணப்பட்டதால் அவர் தோல்வியடைந்தார். திகாமடுல்லையில் ஐ.ம.சு.கூ. சார்பில் இருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். தெரிவு வாக்கு வரிசைப்படுத்தலில் அதாவுல்லா ஐந்தாம் இடத்தில் இருக்கின்றார்.
இவர்கள் போன்றவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று எண்ணி அவர்களுக்கு வாக்களிக்காத மக்கள் அவர்களுடைய வெற்றிடத்தை உணரும் நேரம் வரலாம் என்பது ஒருபுறமிருக்க, இவர்களது தோல்வி எதனால் நேர்ந்தது என்பதையும் சிந்திக்க வேண்டியுள்ளது.
பிரதானமாக ஹிஸ்புல்லாஹ்வின் தோல்விக்கு நல்லாட்சிக்கான மக்கள் முன்னணியின் வேட்;பாளர் ஒருவர் அதே பிரதேசத்தில் களமிறக்கப்பட்டதைச் சொல்ல முடியும். அதேபோல் அதாவுல்லாவின் தோல்விக்கு மக்கள் காங்கிரஸின் வருகையும், (மு.கா. ஊடான) ஐக்கிய தேசிய கட்சியின் ஆதிக்கமும் காரணமென குறிப்பிடலாம். ஆனால், இவர்கள் இருவரும் மேற்சொன்ன காரணத்தினால் மட்டுமே தோற்கவில்லை.
ஆனால், அவை என்னவென்று அவர்களுக்கும் தெரியும் மக்களுக்கும் தெரியும் என்பதால் அக்காரணங்களைப் பட்டியலிட்டுச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. சுருக்கமாகக் கூறினால் - மக்களின் மனங்களில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னராவது விளங்கிக் கொள்ளாத அதிமேதாவித்தனம் என்று சொல்ல முடியும்.
இதேவேளை, தம்முடைய வியூகங்கள் வெற்றி பெற்றுவிட்டதாக முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் தலைமைகள் தம்பட்டம் அடித்துக் கொள்வதை காணமுடிகின்றது. இது, தேர்தலுக்குப் பின்னர் மக்களை களிப்பூட்டும் கற்பிதங்களாகும். எனவே, உண்மையில் என்ன நடந்திருக்கின்றது என்பதை சிந்திக்க வேண்டியிருக்கின்றது.
அம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் வியூகம் முழுமையாக வெற்றியடைந்துள்ளது. வேட்பாளராக நிறுத்தப்பட்ட நான்கு பேரில் மூவர் வெற்றியடைந்திருக்கின்றார்கள். ஐக்கிய தேசியக் கட்சியில் அதிக விருப்பு வாக்குகளை பெற்ற தயாகமகேக்கு சிறுபான்மை மக்கள் விருப்பு வாக்குகளை அளித்து அவரை எம்.பி.யாக்கி இருக்கின்றார்கள். தான் எம்.பி.யாக வேண்டும் என்று தயாகமகே ஐக்கிய தேசியக் கட்சிக்காக சேகரித்த வாக்குகளே மு.கா.வுக்கு மூன்றாவது எம்.பி.யைப் பெற்றுக் கொடுத்திருக்கின்றது. அளிக்கப்பட்ட சிங்கள வாக்குகளால் ஐ.தே.க.வுக்கான மொத்த வாக்கு 151,000 ஆக அதிகரிக்கவில்லை என்றால் சம்மாந்துறை மன்சூர் தோல்வியடைந்திருப்பார். எனவே மு.கா.வின் வெற்றியில் ஐ.தே.க. ஆதரவு சிங்களவர்களுக்கும் முக்கிய பங்கிருக்கின்றது.
இம் மாவட்டத்தில் பெரிய எதிர்பார்ப்புக்களோடு போட்டியிட்ட மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு 33,000 வாக்குகள் கிடைத்த நிலையில் ஒரு எம்.பி.யையேனும் பெறாமல் தோல்வியடைந்திருக்கின்றது. இன்னும் மூவாயிரத்துக்கு சற்றுக் கூடுதலான வாக்குகளை அதிகமாக பெற்றிருந்தால் அக்கட்சிக்கு ஒரு எம்.பி. கிடைத்திருக்கும். ஆனால், மாவட்டத்தில் எழுந்த அலையை நம்பியிருந்தமையாலும் முக்கிய வேட்பாளர்களைத் தவிர போடுகாய்களாக போடப்பட்ட வேட்பாளர்கள் சரியாகப் பிரசாரம் செய்யாமையாலும், கட்சியின் எம்.பி. கனவு நனவாகவில்லை. இவ்வாக்குகள் வேறொரு முஸ்லிம் வேட்பாளருக்கு இடப்பட்டிருந்தால் அவர் தெரிவாகியிருப்பார். ஆனால், இப்போது என்ன நடந்திருக்கின்றது? மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் வாக்குகளை உடைத்து அதனை வீணாக்கியதே மீதமாகியிருக்கின்றது.
மட்டக்களப்பில் மு.கா.வின் வியூகம் முழுமையாக வெற்றியடையவில்லை. மக்கள் காங்கிரஸ் அதில் வெற்றி கண்டிருக்கின்றது. அக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி வெற்றிபெற்றுள்ளார். கடந்த ஆட்சிக்காலத்தின் இறுதிக்கட்டத்தில் மஹிந்தவிடம் எம்.பி.பதவியை பெற்றுக் கொண்டு சில நாட்களுக்குள் 'பல்டி' அடித்த இவரை எம்.பி.யாக்கியது முஸ்லிம் காங்கிரஸ் தலைமமையின் வியூகம் என்றும் சொல்லலாம்.
எவ்வாறெனில், கணிசமான முஸ்லிம் வாக்குகளைக் கொண்ட கல்குடா தொகுதியில் மு.கா. பலமிக்க ஒரு செயற்பாட்டாளரை நிறுத்தவில்லை. அதேபோல் 'எதிரியை (அமீர் அலியை) தோற்கடிப்பதும் நமது இலக்கே' என்று மு.கா. தலைவர் செயற்பட்டதால் அக் கட்சிக்கான வாக்குகள் குறைவடைந்திருக்க இடமுள்ளது. கல்குடா - பேத்தாளை பகுதியில் மாநாடு ஒன்றை மு.கா. நடாத்திய போதும் அமீரலியை தோற்கடிக்கவோ, 2 உறுப்பினர்களைப் பெறவோ முடியாமல் போய்விட்டது.
திருகோணமலை மாவட்டத்திலும் மு.கா.வின் வியூகம் வெற்றிபெறவில்லை. இம்மாவட்டத்தில் முன்னர் தமது கட்சிக்கு இருந்த ஓர் ஆசனத்தைக் கூட மு.கா.வினால் பெற முடியாமல் போய்விட்டது. யானைச் சின்னத்தில் போட்டியிட்ட மஹ்ரூப்; அப்துல்லா வெற்றி பெற்றுள்ளார். அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சிக்காரரான இவரைத் தமது வேட்பாளராகக் காட்டிக் கொள்வதன் மூலம், தமது வியூகம் வெற்றி பெற்றுவிட்டதாக மு.கா. தலைவர் மார்தட்டிக் கொள்கின்றார். ஆக மொத்தத்தில், அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் வியூகமும் அம்பாறைக்கு வெளியேயுள்ள அனைத்து பிரதேசங்களிலும் மக்கள் காங்கிரஸின் வியூகமும் வெற்றி அடைந்திருக்கின்றன. எல்லைகள் குறுகலாகிப் போன மற்றைய காங்கிரஸின் வியூகம் முழுமையான தோல்வியைப் பெற்றுக் கொடுத்திருக்கின்றது.
இந்த அடிப்படையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆசனங்களது எண்ணிக்கை குறைவடைந்திருப்பதுடன் மக்கள்
காங்கிரஸின் ஆசனங்களின் தொகை அதிகரித்துள்ளது. இதற்கு மேலதிகமாக, தேசியக் கட்சிகளில் நேரடியாக போட்டியிட்ட மேலும் ஆறு முஸ்லிம் அரசியல்வாதிகளும் சில தேசியப் பட்டியல் எம்.பி.க்களும் இம்முறை நாடாளுமன்றத்துக்குச் செல்லப் போகின்றார்கள். இதனால் முஸ்லிம்களின் நாடாளுமன்ற ஆசன சமநிலை சரிப்படுத்தப்படும் எனலாம்.
'காங்கிரஸ்களின்' தலைமைகள் வகுத்த திட்டங்கள், வியூகங்கள் பூரணமாக வெற்றி பெறாமல் போயிருப்பதன் மூலம் - உரிமை அரசியலும், அபிவிருத்தி அரசியலும் சமாந்திரமாக தமக்கு தேவை என்பதை மக்கள் இன்னுமொரு தடவை உணர்த்தியிருக்கின்றார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago
6 hours ago