Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Thipaan / 2015 ஓகஸ்ட் 24 , மு.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
'அநாகரிகப் பேச்சு' தமிழக அரசியலை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. தேர்தல் பிரசாரத்தின் போது எழும்; 'வெறுப்புப் பேச்சுக்கள்' இப்போது தேர்தலுக்கு முன்பே 'அவதூறு பேச்சுக்களாக' புறப்பட்டு இருக்கிறன. ஆட்சியிலிருக்கும் அ.தி.மு.க.வும், கட்சியில் பிளவு பட்டு தனித்து நின்று கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இந்த 'அவதூறுப் பேச்சு' ஒரு மகாபாரத யுத்தம் போல் மாறியிருக்கிறது.
இந்தப் பெரும் யுத்தத்துக்கு என்ன காரணம்? தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 'இந்திய பிரதமர் மோடி- தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா' குறித்து வெளியிட்ட கருத்துக்கள் அநாகரிகமானது என்பதுதான் அ.தி.மு.க.வின் குற்றச்சாட்டு.
இதனால் அக்கட்சி நிர்வாகிகள் அதிரடியாக போராட்டத்தில் குதித்து விட்டார்கள். 'இளங்கோவனின் உருவப் பொம்மைகளை' ஊர்வலமாக எடுத்துச் சென்று செருப்பால் அடிப்பது, துடைப்பத்தால் அடிப்பது, பிறகு தீ வைத்துக் கொளுத்துவது என்று உச்சகட்டப் பதட்டத்துக்கு தமிழக அரசியலை கொண்டு சென்றார்கள்.
இந்தப் போராட்டத்துக்குப் பிள்ளையார் சுழி போட்டது அ.தி.மு.க. தமிழக அரசின் அட்வகேட் ஜெனராலாக இருந்து, தமிழ்நாடு தேர்வுப் பணியாளர் வாரியத் தலைவராக பொறுப்பேற்று இப்போது ராஜ்ய சபை எம்.பி.யாக இருக்கும் நவநீதகிருஷ்ணன். அவர்தான் தன் தலைமையில் அ.தி.மு.க.வினரை அழைத்துச் சென்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகம் இருக்கும் சத்திய மூர்த்தி பவனைத் தாக்கினார். பிறகு போராட்டம் தமிழகம் முழுவதும் வெடித்தது.
இந்த போராட்டத்துக்கு முன்பு வரை 'தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும்' என்ற போராட்டம் உக்கிரமாக நடைபெற்றது. அதற்காகப் போராடிய காந்தியவாதி சசிபெருமாள் மரணம், மாணவர்களை எழுச்சியடைய வைத்தது. சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அதற்காக முதலில் போராடி, அடி வாங்கி, இன்னும் ஜாமினில் வெளிவரமுடியாமல் சிறையில் உள்ளார்கள். தொடர்ந்து ஆங்காங்கே போராட்டங்கள்.
இளங்கோவன் பேச்சுக்கு எதிரான அ.தி.மு.க.வின் போராட்டங்கள் 'மதுவிலக்குப் போராட்டத்தை' மழுங்கடித்து விட்டது. அதனால்தான் இப் போராட்டம் பற்றிக் கருத்துத் தெரிவித்த அரசியல் கட்சித் தலைவர்கள், 'மதுவிலக்குப் போராட்டத்தைத் திசை திருப்ப மேற்கொள்ளப்படும் முயற்சி' என்று காட்டமாகவே அறிக்கை விட்டார்கள்.
அ.தி.மு.க. ஆட்சி நடைபெறுகின்ற நேரத்தில் அ.தி.மு.க. அமைச்சர்களையே, முதலமைச்சரையோ விமர்சனம் செய்வோர் மீது அவதூறு வழக்குகள் பதிவு செய்யப்படும். சுமார் 150க்கும் மேற்பட்ட அவதூறு வழக்குகள் அப்படிப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது தேசிய முற்போக்குத் திராவிடக் கழகத் தலைவர் விஜயகாந்த். அவர் மீதுதான் நிறைய அவதூறு வழக்குகள்.
அதனால்தான் அவர் உச்சநீதிமன்றத்தை நாடி தன் மீதான அவதூறு வழக்குகளுக்கு தடை பெற்றுள்ளார். 'அவதூறு வழக்குகள் சரியா தவறா?' என்பது பற்றி டாக்டர் சுப்ரமணியம் சுவாமி தாக்கல் செய்துள்ள வழக்கில் இந்திய உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தியது. 'முதலமைச்சர் மீது ஊழல் புகார் கூறுகிறார்கள்' என்ற ரீதியில் தமிழக அரசின் வழக்கறிஞர் வாதாடினார். 'அவதூறு வழக்குகள் பதிவு செய்யும் சட்டப்பிரிவு இந்திய தண்டனைச் சட்டத்தில் இருக்க வேண்டும்' என்றார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் கருத்துச் சுதந்திரத்துக்காக குரல் கொடுத்த பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு ஆச்சர்யப்படும் வகையில் தமிழக அரசின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்தது. 'அவதூறு வழக்குகள் பதிவு செய்யும் சட்டப் பிரிவு இருக்க வேண்டும்' என்று மத்திய அரசும் உச்சநீதிமன்றத்தில் கூறியது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் விரைவில் தீர்ப்பு வழங்கவிருக்கிறது. ஆரோக்கியமான கருத்துச் சுதந்திரத்துக்கு இந்திய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வழி வகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துச் சுதந்திரம் என்பது இந்திய ஜனநாயகத்தின் இரண்டு கண்கள் போல் இருக்கிறது. அந்தக் கண்களுக்கு எந்தவிதமான பார்வை கிடைக்கப் போகிறது என்பது உச்சநீதிமன்றம் அளிக்கப் போகும் 'அவதூறு வழக்குகள்' குறித்த தீர்ப்பில் தெரியப் போகிறது. இந்நிலையில் தமிழகத்தில் 'அவதூறாக கருத்துச் சொன்னதை' அடிப்படையாக வைத்து அ.தி.மு.க. தரப்பில் போராட்டம் நடத்தப்படுகிறது.
ஆட்சியிலிருக்கும் கட்சியே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், பொலிஸாருக்கு நடவடிக்கை எடுப்பதில் 'கஷ்ட காலம்' ஏற்பட்டுள்ளது. அதை விட 'தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகங்களுக்கு எல்லாம் பாதுகாப்பு கொடுங்கள்' என்று சென்னை உயர்நீதிமன்றமே உத்தரவிடும் சூழ்நிலை உருவாகி விட்டது.
அ.தி.மு.க. தவிர மற்ற அரசியல் கட்சிகள் ஆளுங்கட்சியினரின் இந்தப் போராட்டத்தைக் கண்டித்துள்ளன. குறிப்பாக 'அவதூறு பேச்சுக்காக இளங்கோவன் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்ட பின்னர்' ஏன் இந்தப் போராட்டங்கள், உருவப் பொம்மை எரிப்புகள், காங்கிரஸ் அலுவலகங்கள் மீது தாக்குதல் எல்லாம் நடக்கிறது என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் அனைத்துமே கிளப்பியுள்ளன. ஆனாலும் இதுவரை அ.தி.மு.க. தரப்பிலிருந்து தங்கள் தலைவியை விமர்சித்த இளங்கோவனுக்கு எதிரான போராட்டத்தைக் கைவிடும் மனப்பான்மையில் இல்லை.
காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவன் தாக்கப்பட்டது. திருச்சியில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் தாக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் உள்ள தன் சொந்த வீட்டுக்கே போகமுடியாத அளவுக்கு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு எதிராகப் போராட்டத்தை நடத்தி வருகிறது அ.தி.மு.க. ஆகவே, இளங்கோவன் அவதூறுப் பேச்சை இருவிதமாக அ.தி.மு.க. கையாள்கிறது.
ஒன்று அவதூறு வழக்குப் பதிவு செய்து விட்டது. இன்னொன்று அவருக்கு எதிராக மாநிலம் முழுவதும் போராட்டத்தை நடத்துகிறது. ஏற்கெனவே உச்சத்தில் போய்க் கொண்டிருந்த மதுவிலக்கு வேண்டும் என்பதற்கான போராட்டத்தை இந்த இளங்கோவனுக்கு எதிரான போராட்டம் பின்னுக்குத் தள்ளியிருக்கிறது.
ஆனால், இதில் முக்கிய பிரச்சினை ஒரு பக்கம் 'கருத்துச் சுதந்திரம்', இன்னொரு பக்கம் அவதூறு பேச்சு. இந்த இரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்து போக முடியாது என்பதையே அவதூறுப் பேச்சுக்கு எதிராக தமிழகத்தில் நடைபெறும் போராட்டம் எடுத்துரைக்கிறது.
அவதூறுப் பேச்சுகள் தமிழக அரசியலுக்குப் புதிதல்ல. அதற்கு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களும் விதிவிலக்கல்ல. இன்றைக்கு அ.தி.மு.க. இப்படியொரு பெரும் போராட்டத்தை நடத்தினாலும், அக்கட்சியின் அதிகார பூர்வ நாளேடான 'நமது எம்.ஜி.ஆர்.' பத்திரிகையில் வரும் 'பெட்டிச் செய்திகளில்' உள்ள 'அவதூறு' அளவிட முடியாது.
அந்த அளவுக்கு மற்றைய கட்சித் தலைவர்கள் மீது அவதூறாக எழுதுவதை ஆளுங்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க.வின் பத்திரிகையே கொண்டிருக்கிறது. ஆனாலும் ஒரு நாட்டின் பிரதமரும், தமிழக முதலமைச்சரும் சந்தித்துக் கொண்டதை காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் பேசிய விதம் யாருக்கும் பிடிபடாத புதிராக இருக்கிறது.
அதிலும் குறிப்பாக சமூக சீர்திருத்த வாதியாகவும், பெண்ணுரிமைப் போராளியாகவும் திகழ்ந்த பெரியாரின் வாரிசாக இருக்கும் இளங்கோவன், பெண் முதலமைச்சர் பற்றி தெரிவித்த கருத்தை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால்தானோ என்னவோ அவர் சார்ந்திருக்கும் காங்கிரஸ் கட்சியில் இருக்கும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம், 'இளங்கோவன் எல்லை மீறிப் பேசியிருக்கிறார்' என்றும், காங்கிரஸிலிருந்து பிரிந்து சென்று புதிய கட்சி தொடங்கியுள்ள ஜி.கே.வாசன், 'அரசியல் தலைவர்கள் நாகரிகமாக பேச வேண்டும்' என்றும் கூறியிருக்கிறார்கள்.
தமிழக காங்கிரஸ் கட்சியில் உள்ள வேறு தலைவர்கள் யாரும் இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவிக்க முன்வரவில்லை. அதை விட அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சார்பில் கூட இதுவரை எதுவும் கூற முன்வரவில்லை. அந்த வகையில் முதலமைச்சர் ஜெயலலிதா - பிரதமர் சந்திப்புக் குறித்து இளங்கோவன் தெரிவித்த கருத்துக்கள் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே இளங்கோவனைத் தனிமைப் படுத்தியிருக்கிறது.
அதே நேரத்தில் 2011இல் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னரும் சரி, குறிப்பாக 2014இல் பா.ஜ.க. தலைமையிலான அரசு மத்தியில் ஆட்சி பொறுப்பேற்ற பிறகும் சரி முதல் முறையாக அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் ஒரே விடயத்தில் இணைந்து போராடியிருக்கின்றன என்றால், அது இளங்கோவனின் அவதூறு பேச்சுக்கு எதிரான போராட்டம்தான். ஏனென்றால், இளங்கோவன் பேசியது பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோரின் அரசியல் சந்திப்புப் பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்திரராஜன்- அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கே கடிதம் எழுதி, 'இளங்கோவனை மன்னிப்புக் கேட்கச் சொல்லுங்கள்' என்று கேட்டுக் கொள்ளும் அளவுக்கு வந்திருக்கிறார். அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு எதிர் எதிர் திசையில் இருந்த அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் இப்போது காங்கிரஸுக்கு எதிராக மாநிலத்தில் ஒரே திசையை நோக்கிப் போராடுகின்றன. தேசிய கட்சியான பா.ஜ.க., அ.தி.மு.க.வின் போராட்டத்தையே நியாயப்படுத்தும் அளவுக்கு வந்திருக்கிறது என்பதும் அ.தி.மு.க.- பா.ஜ.க. உறவில் ஏற்பட்டுள்ள புதிய பரிணாம வளர்ச்சி.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago
6 hours ago