Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Menaka Mookandi / 2016 மே 10 , பி.ப. 07:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மேனகா மூக்காண்டி
பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகும் மாணவர்களிடையே உள்ள கூச்ச சுபாவத்தைப் போக்குவதற்காகவும் மாணவர்களிடையே காணப்படும் ஏற்றத்தாழ்வினைப் போக்கி, அவர்களிடையே ஒரு சுமூகமான நெருக்கத்தை ஏற்படுத்துவதற்கும், பொறாமை போன்ற அற்ப உளப் பிரச்சினைகளைப் போக்குவதற்குமே, அந்தக் காலத்தில் பல்கலைக்கழகங்களில் 'ராக்கிங்' என்ற செயற்பாடு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.
வறிய மாணவனொருவன், பல்கலைக்கழகத்துக்குள் செல்லும் போது, அங்கிருக்கும் வசதி படைத்த மாணவர்கள் முன்னால் 'காதல் கொண்டேன்' தனுஷ் ஸ்டைலில் கூனிக்குறுகி நிற்பான். அவன் மனதில், தான் வறுமையானவன் என்ற எண்ணமும் தயக்கமும் ஊடுறுவி இருக்கும். இவ்வாறான ஏற்றத்தாழ்வினைப் போக்கி, அனைத்து மாணவர்களும் சரிசமம் என்ற நிலையை மாணவர்கள் மனங்களில் புகுத்தப்பட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தான் இந்தப் பகிடிவதை உருவானதாகக் கூறப்படுகிறது. இவ்வாறான, நல்ல எண்ணத்தில் உருவாக்கப்பட்ட ஒரு விடயம், இன்று எவ்வாறு எம்மாணவர்களை நாசமாக்குகிறது என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
1997ஆம் ஆண்டில், பேராதனை பல்கலைகழகத்துக்குத் தெரிவான மாணவனொருவன், தனது கல்வி நடவடிக்கைகளுக்காக அங்கு சென்றபோது, பகிடிவதைக்கு உள்ளான நிலையில் உயிரிழந்தான். இது உலகளவில் பேசப்பட்ட ஒரு சம்பவம். இச்சம்பவத்தில், செல்வநாயகம் வரப்பிரகாஷ் என்ற மாணவனே உயிரிழந்தான். பேராதனை பல்கலைக்கழகத்தின் முதலாம் வருட பொறியியல் பீட மாணவனாக இணைந்த இம்மாணவன், அங்கிருந்த சிரேஷ்ட மாணவர்களால் ஆயிரம் முறை தோப்புக்கரணம் போட வைக்கப்பட்டான். இதனால், அவனது சிறுநீரகங்கள் சிதைக்கப்பட்ட நிலையிலேயே உயிரிழந்தான். செயற்கைச் சிறுநீரகம் பொருத்தி இயங்கவைக்க எடுக்கப்பட்ட முயற்சிகளெல்லாம் தோல்வியில் முடிந்தன.
பகிடிவதையால் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வரப்பிரகாஷ், 'நான் இனி பல்கலைக்கழகம் போகாமல் இருந்துவிடுகிறேன். அவர்களை தண்டிக்க வேண்டாம். மன்னித்து விட்டுவிடுங்கள்' என்று கோரியிருந்தான். தன்னுடலுக்கு இன்னல்களை ஏற்படுத்தியவர்களுக்கு மன்னிப்பளித்த அந்த வரப்பிரகாஷ், இன்னுயிரை இழந்தான். 'எனது மகனின் மரணச் சடங்கில் எந்தவொரு மாணவனும் பங்குபற்றக்கூடாது' என்று,
வரப்பிரகாஷின் தந்தை அப்போது அறிவித்திருந்தார். அந்தத் தந்தை, அப்படியொரு வார்த்தையைச் சொல்லியிருக்கிறார் என்றால், அவரது மனதில் எந்தளவுக்கு காயம் ஏற்பட்டிருக்கும். அந்த வரப்பிரகாஷின் உயிரைப் பறிக்கவும் இந்தப் பகிடிவதையே காரணமாக அமைந்தது.
இது இவ்வாறிருக்க, வரப்பிரகாஷுக்கு பகிடிவதையை வழங்கிய மாணவன், பொலிஸாரால் இனங்காணப்பட்ட நிலையில், அவனுக்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு, கண்டி மேல் நீதிமன்றத்தினால், 2014 ஆண்டு ஜூலை மாதம் 4ஆம் திகதி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. இதன்போது, குற்றவாளியாக இனங்காணப்பட்ட பாலேந்திரன் பிரசாத் சதீஷ்கரன் என்பவருக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டது. இருப்பினும், வழக்கு விசாரணைகளுக்காக சந்தேகநபர், நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கவில்லை. அச்சந்தேகநபர் வெளிநாட்டுக்குத் தப்பிச்சென்றுவிட்டதாகப் பொலிஸார் அறிவித்தனர். இதனால், அவருக்கு எதிராக பகிரங்க பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும், இதுவரையில் அவர் சிக்கியதாகத் தெரியவில்லை.
பகிடிவதை என்பது, சிரேஷ்ட மாணவர்களால் புதிய மாணவர்கள் மீது திணிக்கப்படும் உடல், உள ரீதியான துன்புறுத்தலாகும். ஆரம்ப காலத்தில், புதியவர்களுடன் நட்பை ஏற்படுத்திக்கொள்ளும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பகிடிவதை, பிற்காலத்தில் வன்முறைச் செயல்களுக்கும் குற்றங்களுக்கும் வித்திட்டது. பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கிலாந்திலேயே ஆரம்பிக்கப்பட்டு, பெருமளவில் பரவியிருந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், தற்போது இந்தியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளிலேயே பெருமளவில் பின்பற்றப்பட்டு வருகின்றது எனலாம். இதனால், சில மாணவர்கள் தற்கொலை வரை செல்கின்ற நிலைமையும் உண்டு. உடல் ரீதியான துன்புறுத்தல்களால் இலங்கையில் நாம் வரப்பிரகாஷை இழந்தது போல, இந்தியாவில் நாவரசு என்ற மாணவனும் உயிரிழந்தான்.
பல வருடங்கள் சிரமப்பட்டு வளர்த்து, படிக்கவைத்து, படாத பாடுபட்டு பல்கலைக்கழகங்களுக்கு தங்களது பிள்ளைகளைப் பெற்றோர் அனுப்புவது, மற்றையவர்களிடமிருந்து சித்திரவதைகளை அனுபவிப்பதற்காகவும், உயிர்களைப் போக்கிக்கொள்வதற்காகவும் அல்ல. தாம் எவ்வாறு, எப்பாடுபட்டு பல்கலைக்கழகத்துக்குத் தெரிவானோமோ, அவ்வாறே தான், இன்னுமொரு மாணவனும் தெரிவாகியுள்ளான் என்பதைப் புரிந்துகொள்ளாமல் செய்யும் செயல்கள், இறுதியில் தலைமறைவாகவும், நாடு கடந்தும் அல்லது சிறைக்கூடங்களிலும் வாழ்க்கையைக் கடத்தவேண்டிய நிலைமைக்குத் தள்ளிவிடுகிறது. இவ்வாறாகத்தான், கடந்த வாரத்திலும் பகிடிவதை மேற்கொண்டதான குற்றச்சாட்டுக்கு இலக்காகிய மாணவர்கள் சிலர், இப்போது சிறைக்கூடத்தின் கம்பிகளை எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.
களனி பல்கலைக்கழகத்தில் முதலாம் வருடத்தில் இணைந்துகொண்ட மாணவிகளை, நீள்காற்சட்டை (டெனிம்) அணிந்துவர வேண்டாம் என்று அங்குள்ள சிரேஷ்ட மாணவர்கள் சிலர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பல்கலைக்கழக நிர்வாகத்தைப் பொறுத்தவரையில், புதிய மாணவிகள், ஒருவருட காலத்துக்கு நீள்காற்சட்டை அணியக்கூடாது என்ற விதிமுறை உள்ளதெனக் கூறியே, அவர்கள் அந்தத் தடையை விதித்துள்ளனர். அவர்களது உத்தரவையும் மீறி, டெனிம் அணிந்து வந்த மாணவியொருவருக்கு பகிடிவதை செய்துள்ள மாணவர்களுக்கு எதிராக, மேற்படி மாணவியால் கிரிபத்கொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று செய்யப்பட்ட அதேவேளை, அம்மாணவியையும் அவரது பெற்றோர் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு மாணவிகள் உட்பட 7 மாணவர்களைக் கைதுசெய்த
பொலிஸார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, எதிர்வரும் 17ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு தீர்ப்பளித்தார். இம்மாணவர்கள், குறித்த மாணவியை, தொடர்ந்தும் தகாத வார்த்தைகளால் ஏசியுள்ளனர் என்று விசாரணைகளில் தெரியவந்திருந்தது. அதுமாத்திரமன்றி, தொலைபேசி மூலம் மேற்படி மாணவிக்கு அழைப்பை ஏற்படுத்தியும் அவர்கள் ஏசியுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது, கைதுசெய்யப்பட்ட மாணவர்கள் சார்பாக மன்றில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி, 'பகிடிவதை தடைச் சட்டத்தின் கீழ் மேற்படி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ள போதிலும், நீள்காற்சட்டைக்குத் தடை விதிப்பதென்பது, கைதுசெய்யப்படும் அளவுக்கான பாரிய குற்றமல்ல. நிரூபிக்கக்கூடிய பாலியல் தொந்தரவோ அல்லது வைத்தியசாலையில் அனுமதிக்குமளவுக்கான தாக்குதலைத் தவிர, வேறு காரணங்களுக்காகக் கைதுசெய்ய முடியாது' என்று எடுத்துக் கூறியிருந்தார்.
இருப்பினும், பகிடிவதைத் தடைச் சட்டமானது 1998ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட சட்டமாகும் எனத் தெரிவித்த நீதவான், அந்தச் சட்டத்தை வாசித்திருந்தால், இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றிருக்க வாய்ப்பிருக்காது என்றும் இந்த விடயத்தில், சந்தேகநபர்களுக்குப் பிணை வழங்க முடியாது என்றும் வேண்டுமாயின், மேல் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து பிணை பெற்றுக்கொள்ளுமாறும் அறிவித்தார். அத்துடன், மாணவர்கள் எழுவரையும், 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிட்டார். சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து மாணவர்களும், அவரவரது வீடுகளில் இருந்த போதே பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர். பிட்டபெத்தர, ஊருபொக்க, ருவன்வெல்ல, நிட்டம்புவ மற்றும் நாரங்வல ஆகிய பிரதேசங்களிலுள்ள அவர்களது வீடுகளில் இருக்கும் போது, அந்தந்த பிரதேச பொலிஸ் நிலையப் பொலிஸாராலேயே கைது செய்யப்பட்ட நிலையில், கிரிபத்கொடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்த நிலையிலேயே, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.
இந்த விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்ட அகில இலங்கை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் லஹிரு வீரசேகர, 'உண்மையிலேயே பகிடிவதையொன்று மேற்கொள்ளப்பட்டிருப்பின், அதனை தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. இருப்பினும், இவ்விடயத்தில் மாணவர்களை வேட்டையாடும் நிகழ்வே அரங்கேறியுள்ளது. பகிடிவதையென்பது நீண்ட காலமாகவே பல்கலைக்கழகங்களுக்குள் அரங்கேற்றப்படும் நடவடிக்கையொன்றாகும். அதனை இல்லாமல் செய்வதற்கும் புதிய மாணவர்கள், ஏனையோருடன் சகஜமாகப் பழகுவதற்கு ஏற்பாடு செய்யும் வகையிலான நிகழ்வொன்றும் மாணவர் ஒன்றியத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது' என்றார். அத்துடன், பகிடிவதை செய்தார்கள் என்ற குற்றச்சாட்டில், மாணவர்களை சிறைக்கு அனுப்புவதால், இந்தப் பகிடிவதையையோ அதனால் ஏற்படும் பிரச்சினையையே நிறுத்த முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், பல்கலைக்கழகங்களுக்குள் அரங்கேற்றப்படும் பகிடிவதைக்கு சட்ட ரீதியில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தை மீறுவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்று உயர்க்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல கூறியுள்ளார். இதேவேளை, இலங்கைச் சட்டத்தின் பிரகாரம், பகிடிவதைக்குத் தடை செய்யப்பட்டுள்ளதால், அவ்வாறான பகிடிவதைக் குற்றச்சாட்டுக்களுக்கு இலக்காகுபவர்களுக்கு பத்து வருட சிறைத் தண்டனை விதிக்க முடியும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது. இப்பிரச்சினை தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகமோ அல்லது பொலிஸாரோ தலையிட்டு நடவடிக்கை எடுக்காவிடின், தங்களால் இவ்வாறான விடயங்களில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க முடியும் என ஆணைக்குழுவின் ஆணையாளர் சட்டத்தரணி சாலிய பீரிஸ் குறிப்பிட்டார்.
இந்தப் பகிடிவதையானது பெரும்பாலும், இலங்கை மற்றும் இந்தியாவிலுள்ள பல்கலைக்கழகங்களிலேயே அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ்விரு நாடுகளிலும் இடம்பெறுமளவுக்கு, மேற்கத்தேய நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்களில் பகிடிவதைகள் இடம்பெறுவதில்லை. அந்நாடுகளில், கொடுமைப்படுத்தல் அல்லது ராக்கிங்கள் மேற்கொள்ளப்படுமாயில், அதற்கேற்ற சட்ட நடைமுறைகள் அங்கு பின்பற்றப்படும். உயர்க்கல்வி அமைச்சின் தகவல்கள் பிரகாரம், பகிடிவதை காரணமாக 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 27 ஆயிரம் பேர், பல்கலைக்கழகக் கல்வியைத் தொடராமல் வெளியேறிச் சென்றுள்ளனர்.
உண்மையிலேயே, இந்த பகிடிவதையை மேற்கொள்ள வேண்டும் என்ற தீர்மானத்துக்கு மாணவர்கள் வரக் காரணம் என்ன? நிபுணர்கள் சிலர் மேற்கொண்ட ஆய்வுகளின் பிரகாரம், பகிடிவதை செய்யும் மாணவர்களிடையே பொதுவான அறிகுறிகள் சில காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதில் முதலாவது, தாழ்வு மனப்பான்மையாகும். இது, ஜாதி, வறுமை, சமூக அந்தஸ்து குறைவடைதல், உடற்றகுதி குறைதல் போன்றவற்றால் ஏற்படக்கூடும். இந்த நிலைமையை Body dysmorphic conditions என்று கூறலாம். அடுத்ததாக, சமூகவிரோத ஆளுமை அல்லது வரம்புநிலை மனவளரிச்சியைக் குறிப்பிடலாம்.
இவை தவிர, சிறு வயதிலேயே தாய்வழி அல்லது தந்தைவழிப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்திருத்தல், ஏழ்மையான சுயமரியாதை, ஏனையோர் மத்தியில் தன்னை பிரபல்யப்படுத்த எண்ணுதல், தன் மீதான சுய வெறுப்பும் சமூகம் மீதான வைராக்கியமும், சமூகத்திலிருந்து ஒதுக்கப்படலும் அதனை மூடி மறைக்க எண்ணுதலும், எதிர்முனைகளையுடைய சிந்தனைகள், பச்சாத்தாப பற்றாக்குறை மற்றும் வலியேற்படுத்தல் மூலம் இன்பம் காணுதல் போன்ற பொதுவான குணாதிசயங்கள், பகிடிவதை மேற்கொள்ளும் மாணவர்களிடத்தில் உள்ளதாக ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறான பிரச்சினைகள் உள்ளவர்களே, பகிடிவதைகளில் பெரும் ஆர்வம் செலுத்துகின்றனர் எனவும் ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தப் பகிடிவதை தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள, இயல்பியலாளரும் எழுத்தாளருமான பேராசிரியர் சந்திம கோமஸ், 'கடந்த மூன்று தசாப்த காலங்களில், ஐரோப்பா மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளிலுள்ள உயர் பல்கலைக்கழகங்களுக்கும் ஆபிரிக்கா மற்றும் பங்களாதேஷ் நாடுகளிலுள்ள மிகவும் ஏழ்மையான பல்கலைக்கழகங்களுக்கும் சென்றுள்ளேன். ஆனால், இலங்கையில் காணப்படும் சித்திரவதையில் இன்பம் காணும் கொடூர மனப்பான்மையை, அந்நாடுகளில் நான் காணவில்லை. இலங்கை பல்கலைக்கழகங்களில் காணப்படும் இந்த பகிடிவதையின் பின்புலத்தையும் அதற்கு அடிமையானவர்களின் மனோநிலையையும் ஆய்வுக்கு உட்படுத்தினால், சமூக விஞ்ஞானம் மற்றும் உளவியல் ஆராய்ச்சிக் கட்டுரைகள் நான்கினை எழுதக்கூடிய தரவுகள் கிட்டும்' என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில், கடந்த 1998ஆம் ஆண்டில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட இல 20 - 1998 பிரிவு 2இல் ஆன பகிடிவதை தடைச் சட்டமானது, கல்வி நிறுவனங்களில் முன்னெடுக்கப்படும் பகிடிவதை மற்றும் வேறு வடிவிலான வன்முறைகளைத் தடை செய்வதாகக் குறிப்பிடுகின்றது. கல்வி நிறுவனம் ஒன்றின் உள்ளே அல்லது வெளியே, பகிடிவதை செய்தவர் அல்லது அதில் பங்குபற்றியவர், இந்தச் சட்டத்தின்படி குற்றம் புரிந்தவராவார். நீதிபதியொருவர் முன்னாள் சுருக்கமான விளக்கம் செய்யப்பட்டு, குற்றவாளியாக இனங்காணப்படுமிடத்து, குற்றவாளிக்கு இரண்டு வருடத்துக்குக் கூடாத கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்படுவதுடன் பாதிப்புக்குள்ளானவருக்கு நீதிமன்ற தீர்மானத்துக்கமைய நட்டஈடும் செலுத்தப்பட வேண்டும்.
ஒரு கல்வி நிறுவனத்தில், எந்தவொரு மாணவருக்கோ அல்லது ஆசிரிய குழாம் அங்கத்தவருக்கோ பாலியல் ரீதியிலான துன்பம் விளைவித்தவர் அல்லது, பெரும் நோவு ஏற்படுத்தியவர், இச்சட்டத்தின்படி குற்றம் புரிந்தவராவார். இவர், ஒரு நீதவான் முன்னிலையில் சுருக்க விளக்கத்துக்கு உட்படுத்தப்பட்டு குற்றவாளியாக இனங்காணப்படுவாராயின், பத்து வருடங்களுக்கு மேற்படாத சிறைத் தண்டனைக்கு ஆளாக்கப்படுவதுடன் பாதிக்கப்பட்டவருக்கு நீதிமன்றத்தின் திர்மானத்துக்கமைய நட்டஈட்டுப் பணத்தைச் செலுத்தவும் வேண்டும் எனவும் பணிக்கப்படுவார். இதுவே, இந்தப் பகிடிவதைத் தடைச் சட்டம் கூறுகிறது.
பெற்றோர்கள், தங்களது பிள்ளைகளை எப்பாடுபட்டு வளர்த்தெடுக்கிறார்கள். படிக்கவைக்கிறார்கள். அவர்களை ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டுவருவதற்காக அவர்கள் என்னென்ன கனவுகளைக் காண்கிறார்கள். தமது பிள்ளைகள் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவானதும், அந்தப் பெற்றோரின் கனவு பெரும்பாலும் நிறைவேறிவிட்டதாகவே உணர்கிறார்கள். தங்கள் குழந்தைகளை கரைசேர்த்துவிட்டோம், இனி எமது தயவின்றி நாங்கள் இல்லாத காலத்தில் வாழ்வார்கள் என்று, தமது வாழ்க்கையின் திருப்தியினை உணர்கிறார்கள். ஆனால், அந்தப் பிள்ளைகளோ, தமது எதிர்காலத்தையும், இலட்சியத்தினையும் மறந்தவர்களாக, சில நிமிடங்களுக்கு மாத்திரமே நிலைத்திருக்கக்கூடிய அற்ப ஆசைகளுக்குள் சிக்கி பலியாகிவிடுகிறார்கள். இது இவர்களுக்குக் கிடைத்த தண்டனை என்பதை விட, அவர்களது பெற்றோருக்குக் கிடைத்த சாபம் என்றே கூறவேண்டும்.
சுருக்குகள் வைத்து அழகாக வடிவமைக்கப்பட்ட வெள்ளைநிறச் சீருடைச் சட்டையை கசங்க விடாமல் 13 வருடங்களாக பள்ளிக்குச் சென்று படித்தவள், வாழ்க்கையின் எதிர்கால இலட்சியத்தை அடைவதற்காக பல்கலைக்கழகத்துக்குச் சென்ற போது, சட்டை அணிவது எப்படி என்று கேட்டுப் படித்து, அது வைத்தியசாலை வரை அவளை கொண்டுசென்று விடுகின்றது என்றால், நிலைமை எந்தளவுக்கு மோசமாகியிருக்கிறது என்று பாருங்கள். வேறு நாடுகளிலும், பல்கலைக்கழகத்துக்குச் சென்றவர்கள் தான் நிலாவுக்கும் செல்கிறார்கள். இந்த உலகத்துக்கு எது தேவை என்பதைப் பற்றி சிந்திப்பதை விட்டுவிட்டு, ஓர் உயிரை நிந்திப்பதால் கிடைக்கும் சந்தோஷத்தின் இலாபம் என்ன? இதனால், எமது பெற்றோர் உள்ளிட்ட உறவுகளையே துன்பக் கடலில் தள்ளுகிறோம் எனும் உண்மையை எமது மாணவர்கள் என்று சிந்திக்கப்போகிறார்களோ தெரியவில்லை. படித்துப் பட்டம் பெற்றவர்களே எமக்குத் தேவை. பகிடிவதையால் பண்பினை இழந்தவர்கள் தேவையில்லை.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago