Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Editorial / 2020 மார்ச் 01 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-விரான்ஸ்கி
உலகெங்கும் பரவியுள்ள ஆட்கொல்லி கொரோனா வைரஸ் தொற்று நோய், எல்லா நாடுகளின் எல்லைகளையும் கிழித்துக்கொண்டு, உள்ளே நுழைந்திருக்கிறது.
இந்தத் தொற்றுநோய் ஏற்படுத்தி இருக்கின்ற மருத்துவ - சுகாதார தாக்கங்களுக்கு அப்பால், பொருளாதார தாக்கம் எனப்படுவது, ஒரு யுகத்தையே புரட்டிப்போட்டது போன்ற அதிர்ச்சியை, சகல நாடுகளிலும் ஏற்படுத்தி இருக்கிறது.
தங்களின் சக்திக்கு உட்பட்ட வளங்களுடன் ஓடிக்கொண்டிருந்த எல்லா நாடுகளினதும் பொருண்மிய வாகனங்கள், வீதியோரங்களில் பழுதடைந்து நிற்கின்றன.
வளர்ச்சியடைந்த நாடுகள், இந்த அதிர்ச்சிமிக்க பொருளாதாரத் தாக்கத்திலிருந்து சுதாரித்து எழுந்துகொள்ள முயற்சி செய்கின்றன. ஆனால், ஏனைய நாடுகள் படுமோசமான பேரிடியைச் சந்தித்து இருக்கின்றன.
உலக பொருளாதாரத்தில், கிட்டத்தட்ட மூன்று இலட்சம் கோடி அமெரிக்க டொலர் அழிவை, கொரோனா வைரஸ் இதுவரை ஏற்படுத்தி இருப்பதாக, பொருளாதார ஆய்வாளர்கள் கணிப்பிட்டு, தலையை பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள்; நாட்டுத் தலைவர்கள் ஒப்பாரி வைக்கிறார்கள்.
மிக முக்கியமாக, நாடுகளின் நுழைவாயில்களான விமான நிலையங்கள் இழுத்து மூடப்பட்ட காரணத்தால் நினைத்துப் பார்க்க முடியாதளவு எண்ணிக்கையான தொழிலாளர்கள், எல்லா நாடுகளிலும் வேலைகளை இழந்திருக்கின்றனர்.
அதேவேளை, ஒன்றை ஒன்று சார்ந்த தொழிற்றுறைகள் படிப்படியாக இழுத்து மூடப்பட்டு, உலகமே உறைநிலைக்குச் சென்றிருப்பதால், பல்லாயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொரு நாட்டிலும், தொழில் சடலங்களாகி இருக்கின்றனர்.
உலகம் முழுவதற்கும் இப்படியானதொரு நிலைமை ஏற்பட்டிருக்கின்றபோதும், இந்த அழிவிலிருந்து தேசங்களை த்தூக்கியெடுக்கும் மீட்பர்களாகத் தங்களை முன்னிறுத்துகின்ற நாடுகளின் தலைவர்களுக்கு, இந்தக் காலப்பகுதி மிகப்பெரியதோர் அரசியல் வெளியைக் கொடுத்திருக்கிறது.
இந்தமாதிரியானதொரு காலப்பகுதியில், அரசியலை முன்னிறுத்திப் பேசுவது, பொருத்தமாக இல்லை என்பதற்கு அப்பால், சமகாலத்தில் ஏற்படுத்தி இருக்கும் எல்லாத் தாக்கங்களையும் மதிப்பீட்டுக்கு உட்படுத்தவேண்டும் என்ற நிலையில், அரசியல் சூழ்நிலைகளை, அளவிடுதல்களுக்கு உள்ளாக்குவது தவறில்லை.
மிக மோசமான தலைவர்களாக மக்களால் விமர்சிக்கப்பட்ட தலைவர்களுக்கு, இந்தக் கொரோனா வைரஸ் காலப்பகுதி, மிகப்பெரியதொரு வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது. அதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டுள்ள அவர்கள், தற்போதைய பேரிடர் களத்தில், தங்களுக்குரிய அரசியல் வெளியாகவே பயன்படுத்திக் கொண்டு முன் நகர்கிறார்கள். குறிப்பாக, ஸ்ரீ லங்காவை எடுத்துக்கொண்டால், கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர், நாட்டில் இராணுவ ஆட்சி மீண்டும் வந்துவிட்டதாகப் பல தரப்பிலும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
அவரது ஆட்சியின் கீழ், நியமிக்கப்பட்ட பலரும் இராணுவப் பின்புலத்துடன் காணப்பட்டதால், இது குறித்த விமர்சனங்கள் பன்னாட்டு சமூகத்திடமிருந்தும் கிளம்பியிருந்தன.
போர்க்குற்றங்களில் ஈடுபட்டார்கள் என்று கூறப்பட்ட, முன்னாள் இராணுவ உயரதிகாரிகளைக் கோட்டாபய, நாட்டின் சிவில் நிர்வாகத்தில் நியமிக்கின்றார் என்ற கண்டனங்கள், பெரியளவில் முன்வைக்கப்பட்டன.
ஆனால், தற்போது எழுந்துள்ள கொரோனா வைரஸ் பேரிடர் காலத்தில், நாட்டின் நிர்வாகத்தை இராணுவ சூழ்நிலையொன்றில் வைத்திருந்தால் மாத்திரமே, அதை இறுக்கமாகக் கையாளமுடியும் என்ற தீர்மானத்துக்குப் பல நாடுகளும் வந்திருக்கின்றன.
அநேக நாடுகளின் மக்கள் பாதுகாப்பு இன்று, இராணுவத்திடம் சென்றிருக்கிறது. அரசாங்கத்தின் நடவடிக்கைளைக் களத்தில் நடைமுறைப்படுத்த வேண்டியவர்களாக, இராணுவத்தினர் மாறியிருக்கின்றனர்.
இவையெல்லாம், இன்று கோட்டாபய அரசாங்கத்துக்கு தங்கத் தாம்பாளத்தில் வைத்துக் கொடுத்த மிகப்பெரியதொரு வாய்ப்பாக அமைந்துள்ளது.
அதை அவரது அரசாங்கத்தரப்பு, மிகச்சாதுரியமாகப் பயன்படுத்துகின்றது என்றுதான் கூறவேண்டும். பாரதுரமான போர்க் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான ஷவேந்திர டி சில்வாவைத் தற்போதைய பேரிடர் முகாமைத்துவத்துக்கு பொறுப்பானவராக நியமித்துள்ளதன் மூலம், அவர் மீதான போர்க்கால அழுக்குகளை, முற்றுமுழுதாகவே கழுவிக் கொள்வதற்கு இந்தக் காலப்பகுதியை, கோட்டாபய இலாவகமாகப் பயன்படுத்தி இருக்கிறார்.
அதேபோல, பேரிடர் காலத்தில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக, அனைத்து மொழிகளிலும் சமூக வலைத்தளங்களின் வழியாகப் பிரசாரம் செய்துகொள்வதிலும் உள்நாட்டில் மக்கள் மத்தியில் தகவல்களை கொண்டுபோய் சேர்ப்பதிலும், மிகவும் கூர்மையாகத் திட்டமிட்டுச் செயற்படுகிறார் கோட்டாபய.
இந்த மாதிரியான காலப்பகுதியில், நாட்டின் ஒட்டுமொத்த மக்களுக்கும் அரசாங்கம்தான் ஒற்றை அபயம். பாதுகாப்பு முதற்கொண்டு, பொருளாதார நலன்கள் வரைக்கும், நாட்டின் ஆட்சிபீடத்திடம்தான் கையேந்தி நிற்கவேண்டும்.
இந்தக்காலப் பகுதியில், ஆட்சியிலிருக்கும் அரசாங்கத்தை மக்கள் தலைமுறை தலைமுறையாக மறக்கப்போவதில்லை. உலகெங்கிலும் தற்போது ஆட்சியிலுள்ள அரசாங்கங்களுக்குக் கிடைத்துள்ள வரலாற்று வாய்ப்பு இது. இந்த இலவச வாய்ப்பு, சிங்களத் தலைவருக்கு எப்படி அமைந்ததோ, அதேபோல தமிழர் தரப்பிலும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, அமோக வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.இதைத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, மிகச்சாதுரியமாக, தனக்கு ஏற்றவாறு, பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறது.
அதாவது, கொரோனா தொற்றால் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவு, எல்லா இடங்களையும் போல, தமிழர் பகுதிகளையும் கொடூரமாக முடக்கி இருக்கிறது. மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு, ஏதாவது உதவி செய்தாக வேண்டிய சூழ்நிலையில்தான், தமிழர் பகுதிகளில் பல குடும்பங்கள் ஏற்கெனவே அல்லாடிக் கொண்டிருந்தன. இப்போது, அந்த மக்களை, இந்த ஆட்கொல்லி நோய் இன்னமும் ஆழத்தில் கொண்டுபோய் எறிந்திருக்கிறது.
இந்தச் சூழலை, உடனடியாகத் தனக்கு ஏற்ற அரசியல் வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு, களத்தில் இறங்கிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, உள்ளூராட்சி சபைகளின் ஊடாகப் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு, உதவி செய்யப்போவதாக அறிவிப்பு விடுத்துள்ளது.
இது உண்மையில், சட்டத்துக்கு முரணான விடயமாக உள்ளபோதும், தற்போதைய இக்கட்டானதொரு காலகட்டத்தில், மிக நுணுக்கமாகச் சிந்தித்து, மக்களைத் தன்னை நோக்கி இழுத்திருக்கிறது கூட்டமைப்பு.
அதாவது, உள்ளூராட்சி சபைகளுக்குக் கீழுள்ள மாநகர சபைகள், நகர சபைகள், பிரதேச சபைகள் ஆகிவற்றின் ஊடாக, பல்வேறு திட்டங்களுக்கு ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட நிதியை எடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யப்போவதாக அறிவித்திருக்கிறது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு.
இது உண்மையில், அபாண்டமானதொரு நடவடிக்கை. உள்ளூராட்சி சபையின் ஊடாக, அடையாளம் காணப்பட்ட பணிகளுக்கென ஒதுக்கப்பட்ட நிதி எனப்படுவது, சபைகளின் நிதி. அது சபையின் ஊடாக, அந்தந்தத் திட்டங்களுக்கென்று ஒதுக்கப்பட்டது. அந்த நிதியை, வேறொரு காரணத்துக்காகப் பயன்படுத்த வேண்டுமானால், சபை கூட்டப்பட்டு, வாக்கெடுப்புக்கு விடப்பட்டு, அனுமதி பெறப்பட வேண்டும்; ஆளுநரின் அனுமதி பெறவேண்டும்; ஏகப்பட்ட முறைகள் இருக்கின்றன.
இந்தப் பேரிடர் காலத்தில், உண்மையிலேயே பொருளாதாரப் பேரிடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, உதவி செய்யவேண்டுமென்றால், பேரிடர் முகாமைத்துவ ஆணையாளர்தான், யாருக்கு எவ்வளவு எப்படி கொடுக்கவேண்டும் என்று முடிவெடுப்பார். அவரின் ஊடாக, மத்திய அரசாங்கத்தின் நிதியைப் பெற்றுக்கொள்வதுதான், இந்த இடத்தில் சரியான அணுகுமுறையாக இருக்கும்.
ஆனால், அதற்கிடையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, வழித் தேங்காயை எடுத்து, தெருப் பிள்ளையாருக்கு அடித்ததது போல, காதும் காதும் வைத்த மாதிரி, காரியத்தை முடித்திருக்கிறது. இந்த நடவடிக்கையை, அவர்கள் வெறுமனே எழுந்தமானதாக எடுக்கவில்லை என்று, தெளிவாகத் தெரிகிறது.
ஆக, கோட்டாபயவுக்குச் சிங்கள மக்கள் மத்தியில் உதவிசெய்த கொரோனா வைரஸ், தமிழர் பிரதேசங்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குப் பிரகாசமானதொரு வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது.
தேர்தல் பிரசாரத்துக்காக, மிகப்பெரிய விளம்பர முதலீடுகளின் மூலம், செய்யவேண்டிய காரியத்தை, அரசாங்கப் பணத்தில் மிக இலகுவாகச் செய்யத் தலைப்பட்டிருக்கிறது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு. பரவிக்கொண்டிருக்கும் கொரேனா வைரஸ், அரசியல் அதிகாரத்திலும் ஆட்சி அதிகாரத்திலும் இருந்து கொண்டிருக்கும் தரப்புகளுக்கு, மக்கள் மத்தியில் ஆழமாக ஊடுருவிக் கொள்வதற்கு மிகப்பெரியதொரு வரப்பிரசாதத்தை அளித்திருக்கிறது.
தமிழ் மக்கள் இப்போதிருக்கின்ற நிலையில், யார் குற்றினாலும் அரிசியானால் சரி என்பதுதான் உண்மை.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago