Thipaan / 2016 மார்ச் 01 , மு.ப. 04:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
ப.தெய்வீகன்
பூகோள அரசியல் மாற்றங்களின் பிரகாரம், ஒவ்வொரு நாடும் தமது உள்நாட்டு விவகாரங்களைக் கவனமாகக் கையாளுவதென்பது, நடப்பு உலக ஒழுங்கில் மிகவும் அத்தியாவசியமான படிமுறையாகும். இராஜதந்திரம் எனப்படுகின்ற நிழல்சக்தியின் அச்சாணியே, இந்த அனைத்துலக மாற்றங்களின் மாந்திரிக விளைவுகளின் அடிப்படையில்தான், தனது அனைத்துப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.
அந்தவகையில், இந்த ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல், உலக அரங்கில் என்ன விதமான அதிர்வுகளை ஏற்படுத்தப்போகிறது என்பது, உலக நாடுகள் அனைத்தும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் மிக முக்கிய விடயமாகும். அதற்கு இலங்கை மட்டும் விதிவிலக்கானதும் அல்ல என்பது, சிறுபிள்ளையும் புரிந்துகொள்ளக்கூடியது.
இலங்கையில், மைத்திரி தலைமையிலான நல்லாட்சி மாற்றம் ஏற்பட்ட நாள் முதல் இந்த நாடு, மேற்குலகுக்கு நெருக்கமாகிவிட்டது என்பதும், அதுவரை இலங்கையைப் பீடித்திருந்த சீனாவின் அழுத்தம் படிப்படியாக அகற்றப்பட்டுவிட்டது என்பதும், கடந்த 14 மாதங்களில் கண்டுகொண்ட விடயங்கள். இலங்கையின் இந்த, அமெரிக்கா நோக்கிய மாற்றம் இதுவரை இலங்கைக்கு என்ன வகையில் உதவியாக இருந்திருக்கிறது என்று நோக்கினால், அவை பல பரிமாணங்களில் முக்கியம் பெறுகின்றன.
முக்கியமாக, மஹிந்த தலைமையில் மேற்கொள்ளப்பட்ட பெரும்போரினால் தமிழ்மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் என்ற விடயத்தில், இலங்கை இன்று மூச்சுவிடக்கூடியளவு தனது படைகளை காப்பாற்றியிருக்கிறது. சர்வதேச அளவில் தனது இருப்பை கொஞ்சமாவது தக்கவைத்திருக்கிறது. அதற்கு மைத்திரி அரசின் மேற்குலக ஆதரவுப்போக்கும், அதன் அடிப்படையில் தனது வெளிவிவகார கொள்கைகளை முழுமையாக சீரமைத்துக்கொண்டதும்தான் காரணம். வேறெதுவுமாக இருக்கமுடியாது.
இந்த நெருக்கத்தின் அடிப்படையில், அண்மையில் ஜெனீவாத் தீர்மானத்தை நிறைவேற்றுவதில், அமெரிக்கா இணைப்பங்காளியாக சேர்ந்துகொண்டமையும் அதன் ஊடாக, இலங்கையை அணைத்துச்சென்று போர்க்குற்ற விவகாரத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் வகையில் வியூகங்களை அமைத்ததும் இரண்டு நாடுகளும் பரஸ்பரம் பெருவெற்றியை ஈட்டிக்கொண்ட வரலாற்று நிகழ்வாகும்.
புதிய நல்லாட்சி அரசு கடைப்பிடித்த மேற்குலக ஆதரவுப்போக்கினால் பெற்றுக்கொண்ட உடனடி நன்மையும் மிகவும் உயரிய நன்மையும் இதுவென்று கூறலாம்.
இந்த மாற்றத்துக்கு பக்கபலமாக இடம்பெற்ற இன்னொரு விடயமாக, இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து, மோடி அரசு ஆட்சி பீடமேறியதையும் கூறலாம். அமெரிக்காவுடன் ஒட்டியும் ஒட்டமாலும் தனது உறவினை பேணிவந்த காங்கிரஸ் ஆட்சிபீடத்திலிருந்து அகன்று, மோடி அரசு ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து இந்தியாவுக்கும் அமெரிக்காவும் இடையில் ஏற்பட்ட அந்நியோன்யம் இலங்கைவுக்கும் அதேவேளை, அமெரிக்காவுக்கு தென்னாசியாவிலும் பல தடைகளை நீக்கிவிட்டது.
அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியின் ஆட்சியுடனும் அதன் வெளிவிவகார கொள்கைகளுடன் மிகவும் ஒத்துப்போகக்கூடிய வகையில், இந்திய - இலங்கை உறவுகள் ஒரே வட்டத்தில் பயணிக்க ஆரம்பித்து அது வெற்றிகரமாக செயற்பட்டுவருகின்றன.
ஈராக் மற்றும் ஆப்கான் யுத்தங்களுக்குப் பின்னர், தென்னாசியாவில் தனது முழுமையான கவனத்தைத் திருப்பும் வகையில் வெளிவிவகார கொள்கைகளைச் சீர்திருத்தி, ஒபாமாவின் ஆட்சியின் கீழ், அமெரிக்கா எனும் வல்லரசு புதிய பாதையில் பயணிப்பதற்கும், இலங்கையை சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் பிரச்சினைக்குரிய நாடு போல மாற்றிய மஹிந்தவை போல அமெரிக்காவை கிட்டத்தட்ட குற்றங்களின் கூடாரமாகவும் வெறுப்புக்குரிய நாடாகவும் மாற்றிவிட்டு சென்ற ஜோர்ஜ் புஸ்ஸினால் ஏற்பட்ட கறைகளை கழுவிய பெருமை, ஒபாமாவின் அரசாங்கத்தில் இராஜாங்க செயலராக பதவி வகித்தவரும் தற்போது ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுபவருமான ஹிலாரி கிளிண்டனையே சாரும்.
தற்போது தென்னாசிய நாடுகளுடன் அமெரிக்கா கடைப்பிடிக்கும் புதிய அதேவேளை, முன்பிலும் மேம்பட்ட வெளிவிவகார கொள்கையின் உருவாக்கத்துக்கு ஹிலாரியே காரணம் ஆகும்.
இப்போது கேள்வி என்னவென்றால், எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்கா ஜனாதிபதித் தேர்தல் அந்நாட்டின் தெற்காசிய கொள்கைகள் மீது தாக்கம் செலுத்தப்போகிறதா, முக்கியமாக இலங்கையின் நிலை என்ன?
2009 ஆம் ஆண்டு, போர் உச்சமடைந்திருந்தபோது, தமிழக தேர்தல் முடிவுகளை ஈழத்தமிழர்கள் எதிர்பார்த்திருந்தது போல, தற்போதைய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் இலங்கையின் உள்நாட்டு அரசியலில் தாக்கம் செலுத்துமா, தமிழர்களுக்கான தீர்வு விவகாரத்தில் கொழும்பு இழுத்தடிப்புக்களை செய்துவருவது இதற்குத்தானா?
இந்த அடுக்கடுக்கான கேள்விகள் அனைத்துக்கும் திட்டவட்டமாக ஒரு முடிவை இப்போது சொல்லமுடியாவிட்டாலும் அரசுகளுக்கு இடையிலான இராஜதந்திரக் கணக்குககளின் பிரகாரம், நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் குறித்த மேலோட்டமான எதிர்வுகூறலை ஓரளவுக்கு முன்வைக்கலாம்.
அதாவது, மைத்திரி - ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம், மஹிந்த மேற்கொண்டது போன்ற தடாலடி வெளிவிவகார கொள்கைகளில் நம்பிக்கையற்றது. அதேவேளை, பூகோள அரசியல் காரணிகள் இலங்கையின் மாற்றங்களில் கைமீறிய தாக்கங்களை செலுத்தும் வல்லமை கொண்டவை என்ற யதார்த்தத்தை நம்புபவர்கள். ஆகவே, நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலும் அதனால் ஏற்படக்கூடிய மாற்றமும் இலங்கைவிலும் அதிர்வுகளை ஏற்படுத்தும் என்று அவர்கள் நன்றாகவே அறிவர்.
தற்போது, ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக தெரிவுசெய்யப்படுவதற்கு நடைபெற்றுவரும் தேர்தல்களில், ஹிலாரி கிளிண்டனும் பேர்னி சாண்டர்ஸும் மோதுகின்றனர். இவர்களில் ஒருவர்தான் குடியரசுக்கட்சி பிரதிநிதியுடன் ஜனாதிபதித் தேர்தலில் மோதவுள்ளார்.
ஹிலாரி கிளிண்டன் தெரிவு செய்யப்பட்டு ஜனாதிபதித் தேர்தலிலும் அவர் வெற்றிபெற்றால், அமெரிக்காவின் தற்போதைய வெளிவிவகார கொள்கையில் பாரியளவு மாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. தென்னாசிய நாடுகளுடனான நெருக்கம் மேலும் இறுக்கமாகும் வாய்ப்புக்களே அதிகமிருக்கும். அந்தமாதிரியான ஒரு நிலை, இலங்கைவுக்கு நிச்சயம் உவப்பாக இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில்,இலங்கையின் கடந்த கால நடவடிக்கைகள் மற்றும் போரில் கடைப்பிடித்த போக்குகள் குறித்து ஹிலாரி மிகுந்த விமர்சனங்களை கொண்டிருந்தார். அவற்றின் அடிப்படையிலான நேரடித் தாக்கங்களை இப்போது அவர் கடைப்பிடிக்காது விட்டாலும், சிங்கள தேசத்தின் விருப்பத்துக்கு ஏற்றவாறு அவர் எதிர்காலத்தில் செயற்படுவார் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால், அவரது கட்சியில் போட்டியிடும் பேர்னி சாண்டர்ஸோ
அல்லது எதிர்க்கட்சியான குடியரசுக்கட்சியிலிருந்து போட்டியிடப்போகும் எவருமே தென்னாசிய அரசியல் விவகாரங்களில் பெரிதாக நம்பிக்கையற்றவர்கள். அனுபவமற்றவர்கள். இன்னும் குறிப்பாக சொல்லப்போனால், அமெரிக்க நலன்களும் அதன் தேவையும் மத்திய கிழக்கை சூழ்ந்து கிடப்பவை என்றும் அவற்றை மையமாக கொண்ட ஏகாதிபத்திய பயணம்தான் எதிர்கால அமெரிக்காவுக்கு ஆரோக்கியமாக அமையும் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டவர்கள்.
ஆகவே, இவர்களில் யார் ஜனாதிபதியாக வந்தாலும் அது தென்னாசிய பிராந்தியத்தில் உள்ள அரசுத்தலைவர்கள் எதேட்சதிகார போக்கில் செயற்படுவதற்கு அல்லது கட்டுப்பாடுகள் இல்லாத தங்கள் அரசியல் பயணங்களை வகுத்துக்கொள்ள விரும்புபவர்களுக்கு அது சாதகமாக அமையும். குறிப்பாக, இலங்கைக்கு அது மிகவும் நன்மை பயக்கும் விடயமாக அமையலாம்.
அந்த மாதிரியான சூழ்நிலையில், இலங்கை என்ன மாதிரியான இராஜதந்திர சூத்திரத்துக்குள் அகப்படப்போகிறது?
அமெரிக்காவின் இறுக்கமான கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு மீண்டும் இந்திய - சீன எதிரிகளின் மைதானமாக மாறப்போகிறதா அல்லது அவ்வாறான சூழ்நிலையிலிருந்து நாட்டை முன்னகர்த்தும் வல்லமை மைத்திரி - ரணில் கூட்டணிக்கு இருக்கிறதா என்பதெல்லாம் மீண்டும் நாட்டின் எதிர்காலத்தை கேள்விக்கணைகளின் மீது தொங்கவிட்டிருக்கின்றன.
இவற்றின் அடிப்படையில் பார்க்கின்றபோது, இலங்கையின் உள்நாட்டு விவகாரங்கள் தற்போது தொடர்ந்தும் தேக்கநிலையில் காணப்படுவதற்கு எதிர்வரும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலும் ஒரு முக்கிய காரணம் எனலாம். ஏனெனில், இலங்கைவுக்கு எதிராக ஏற்பட்டிருக்கும் போர்க்குற்றம் மற்றும் சர்வதேச அழுத்தங்களை களைவதற்கு மைத்திரி - ரணில் அரசு சகல வாய்ப்புக்களையும் நிச்சயம் பயன்படுத்தும்.
தற்போதைய அரசு மிகவும் நிதானமானது. தங்களது பௌத்த மேலாதிக்கமானது, எதிர்காலத்திலாவது சிக்கலின்றி பயணிக்கவேண்டும் என்பதிலும் அதற்குரிய பணிகளையாவது தாங்கள் இப்போது பூர்த்திசெய்யவேண்டும் என்பதிலும் கரிசனையுடன் செயற்படுகிறது.
இந்த சர்வதேச நகர்வுகள் மற்றும் பயணங்களின் முன்னிலையிலும் அனுபவங்களிலிருந்தும் தமிழர் தரப்பு தம்மை எவ்வாறு நலன்சார் பயணத்திற்கு தயார்படுத்தப்போகிறது என்பதில்தான் தமிழர் தரப்பு வெற்றி பொதிந்திருக்கிறது.
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago