Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
கே. சஞ்சயன் / 2017 மே 29 , மு.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த 2015 ஓகஸ்ட் மாதம் நடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர், ஐ.தே.கவும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து, அமைத்த கூட்டு அரசாங்கத்தின் அமைச்சரவை முதல்முறையாக மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது.
அமைச்சரவை மாற்றம், இந்த வாரம், அடுத்த வாரம் என்று கடந்த பல மாதங்களாகவே செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன.
ஜனாதிபதியும் பிரதமரும் கூட அமைச்சரவையில் மாற்றங்களைச் செய்வதற்கு பலமுறை முயற்சிகளை மேற்கொண்டிருந்த போதிலும், அவை வெற்றி பெறவில்லை.
அமைச்சரவை மாற்றம் ஒன்றுக்காக இலங்கையின் ஜனாதிபதி ஒருவர் இந்தளவுக்கு நெருக்கடிகளைச் சந்தித்தமை இதுவே முதல் முறை.
அமைச்சரவையை மாற்றியமைப்பதற்கே ஜனாதிபதி அஞ்சுகிறார். அந்தளவுக்கு இரட்டை அதிகார நிலை உள்ளது. இது நாட்டுக்கு நல்லதல்ல என்று மஹிந்த ராஜபக்ஷ கிண்டலடித்திருந்தார்.
ஆனால், மஹிந்த ராஜபக்ஷ கூறியது போல, அமைச்சரவை மாற்றம் ஒன்றும் இப்போதைய ஜனாதிபதியைப் பொறுத்தவரையில் இலகுவான விடயமல்ல.
18 ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம், தனது அதிகாரங்களை ஒன்று குவித்து வைத்துக் கொண்டிருந்தவர் மஹிந்த ராஜபக்ஷ. அவரால் நினைத்த நேரத்தில் அமைச்சர்களை நியமிக்கவும் நீக்கவும் முடிந்தது.
ஆனால், 19 ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் நிறைவேற்று அதிகாரங்களில் கணிசமானவற்றை நாடாளுமன்றத்துக்கும் பிரதமருக்கும் கொடுத்து விட்டு இருப்பவர், இப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.
19 ஆவது திருத்தச்சட்டத்தின்படி, அமைச்சர்களை நியமிப்பது, அவர்களுக்கான துறைகளை ஒதுக்குவது தொடர்பாகப் பிரதமருடன் கலந்தாலோசித்தே ஜனாதிபதியால் முடிவெடுக்க முடியும்.
பிரதமர், ஐ.தே.கவைச் சேர்ந்தவர் என்பதால், அந்தக் கட்சியின் அமைச்சர்களின் விருப்பு வெறுப்புகளுக்கேற்பவே அவர் ஜனாதிபதிக்கு ஒத்துழைக்கத் தயாராக இருந்தார். ஜனாதிபதியோ ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால், அந்தக் கட்சியின் அமைச்சர்களின் கருத்துகளைத் தட்டிக் கழிக்க முடியாமல் இருந்தார்.
இதனால்தான், இந்த இரண்டு பேருமே, அமைச்சரவை மாற்றம் தொடர்பாக ஒருமித்த முடிவை எட்டுவதற்கு கடுமையான போராட்டங்களை நடத்த வேண்டியிருந்தது.
நீண்ட முயற்சிகள், பேச்சுகளின் முடிவில் கடந்த திங்கட்கிழமை ஒருவழியாக அமைச்சர்கள் சிலரின் பதவிகள் மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றன.
பொதுவாக அமைச்சரவை மாற்றம் என்பது, அமைச்சர்களின் வினைத்திறனைக் கவனத்தில் கொண்டே மேற்கொள்ளப்படுவதுண்டு. சரியாக வினைத்திறன் ஆற்றாதவர்களை நீக்கி விட்டு, அல்லது அவர்களுக்கு வேறு பொருத்தமான துறைகளைக் கொடுத்துவிட்டு, பொருத்தமானவர்களை நியமிப்பதுதான் அமைச்சரவை மாற்றத்தின்போது கையாளப்படும் பொதுவான நடைமுறை.
ஆனால், இப்போது நடந்துள்ள அமைச்சரவை மாற்றத்தை, அத்தகையதொன்றாகக் கருத முடியவில்லை.
குறிப்பாக, வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர, அந்தப் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு, நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
நிதி அமைச்சராக இருந்த ரவி கருணாநாயகவுக்கு, வெளிவிவகார அமைச்சுடன், முன்னர் நிதியமைச்சின் கீழ் இருந்த சில திணைக்களங்களும், சபைகளும் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
துறைமுகங்கள் கப்பல்துறை அமைச்சராக இருந்த அர்ஜுன ரணதுங்க, பெற்றோலிய வளங்கள் அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார். திறன் விருத்தி , தொழிற்பயிற்சி அமைச்சராக இருந்த மஹிந்த சமரசிங்கவுக்கு, துறைமுகங்கள், கப்பல்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
பெற்றோலியத்துறை அமைச்சராக இருந்த சந்திம வீரக்கொடிக்கு, திறன்விருத்தி, தொழிற்பயிற்சி அமைச்சு ஒதுக்கப்பட்டுள்ளது.
ஊடகத்துறை அமைச்சராக இருந்த கயந்த கருணாதிலகவுக்கு காணி அமைச்சு ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜோன் செனிவிரத்னவுக்கு சப்ரகமுவ மாகாண அபிவிருத்தி அமைச்சு மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளது. எஸ்.பி.திசநாயகவுக்கு கண்டிய மரபுரிமைகள் அமைச்சு மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளது.
புதிதாக, அபிவிருத்தி பணிகள் அமைச்சராக திலக் மாரப்பன நியமிக்கப்பட்டிருக்கிறார். கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக மேலதிக பதவி வழங்கப்பட்டுள்ளது.
திலக் மாரப்பனவைச் சேர்த்துக் கொண்டதன் மூலம் இப்போது அமைச்சரவையின் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்திருக்கிறது. இது தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வருவதற்கு முன்னர் அளித்த வாக்குறுதி மற்றும் 19 ஆவது திருத்தச்சட்டத்தில் அமைச்சர்கள் தொடர்பாகக் கூறப்பட்டுள்ள வரையறைகளுக்கு முற்றிலும் முரணானது.
தேவையான ஒரு சூழலில், தேவையான காரணிகளை முன்னிறுத்தி இந்த அமைச்சரவை மாற்றம் இடம்பெற்றதா? அல்லது எப்படியாவது அமைச்சரவை மாற்றம் ஒன்றை நிகழ்த்தியாக வேண்டும் என்பதற்காக இந்த மாற்றங்கள் செய்யப்பட்டனவா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீரவைப் பொறுத்தவரையில், தனது பணியை முற்றிலும் நிறைவாகச் செய்து கொண்டிருந்த ஒருவர் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அரசாங்கம் பதவிக்கு வந்தபோது, சர்வதேச அளவில் இருந்த பாரிய நெருக்கடிகளைச் சமாளித்து, இலங்கை அரசாங்கத்துக்குச் சாதகமான நிலையை ஏற்படுத்தியவர்.
அதுமாத்திரமன்றி அவர் மீது எந்தக் குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படவுமில்லை. இவர், வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை சிவில் சமூகத்தினருக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏற்கெனவே மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் 2005 தொடக்கம் 2007 வரை வெளிநாட்டலுவல்கள் அமைச்சராகப் பதவியில் இருந்தவர். அப்போதும் சரி, இப்போதும் சரி, அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கையை கையாள்வதில் சரியாகவே செயற்பட்டவர்.
நிச்சயமாக மங்கள சமரவீர இந்தப் பதவியில் இருந்து மாற்றப்பட்டமைக்கு, அவரது திறமைக் குறைபாடு காரணமாக இருந்திருக்க முடியாது. அவ்வாறாயின், ரவி கருணாநாயக்கவுக்காக இவர் பதவியை விட்டுக் கொடுக்கும் நிலை ஏற்பட்டதா என்ற கேள்வி எழுகிறது.
நிதியமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்கவுக்கே வெளிநாட்டலுவல்கள் அமைச்சு வழங்கப்பட்டுள்ளது. ரவி கருணாநாயக்க பொருளாதாரத்துறையில் அனுபவம் பெற்றவராக இருந்தாலும், வெளிநாட்டலுவல்கள் அமைச்சு அவருக்குப் புதியது. அவரிடம் இருந்து வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் ஊடாக ஜனாதிபதியோ, பிரதமரோ இதைவிடப் பெரிய அடைவுகளாக எதனை எதிர்பார்க்கின்றனர் என்று தெரியவில்லை.
நிதியமைச்சராக இருந்த போது, ரவி கருணாநாயக்கவுக்கு ஆசிய பசுபிக்கின் சிறந்த நிதியமைச்சர் என்ற சர்வதேச விருது வழங்கப்பட்டது. அவர் இலங்கையின் பொருளாதார நெருக்கடியைத் திறமையாகக் கையாள்வதாக ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்ற சர்வதேச அமைப்புகள் பாராட்டுத் தெரிவித்திருந்தன.
எனினும், இந்த இரண்டு ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தை நிமிர்த்துவதில், அவர் பெரிய வெற்றி எதையும் பெறவில்லை. அதைவிடச் சில குற்றச்சாட்டுகள், வழக்கு விசாரணைகள் போன்றவற்றை அவர் எதிர்கொள்ள நேரிட்டது.
ஐ.தே.கவின் பொருளாதாரக் கொள்கையை ஏற்றுக் கொள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மறுத்து வந்தது. அவ்வாறு ஏற்காவிடின், நாடாளுமன்றில் தனிக் குழுவாக அமர்வோம் என்று அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த எச்சரித்திருந்தார்.
ரவி கருணாநாயக்க நிதியமைச்சராக இருக்கும் வரையில், ஐ.தே.கவின் பொருளாதாரக் கொள்கையே பின்பற்றப்படும் என்பதால் தான், அவரிடம் இருந்து அந்தப் பதவி மாற்றப்பட்டிருக்கலாம். அவ்வாறாயின், ரவி கருணாநாயக்கவுக்கு, நிதியமைச்சர் பதவிக்கு ஈடான பதவி வழங்க வேண்டும். வெளிவிவகார அமைச்சை விட வேறு இணையானபதவி கிடையாது.
அதைவிட நிதியமைச்சராக மங்கள சமரவீரவை நியமித்தால், அவர் ஐ.தே.கவில் இப்போது இருந்தாலும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பாரம்பரியத்தில் இருந்து வந்தவர் என்பதால், நிலைமையை சமாளித்துக் கொள்ளலாம் என்று ஜனாதிபதி திட்டமிட்டிருக்கலாம்.
ரவி கருணாநாயக்க, நிதியமைச்சர் பதவியை இலகுவாக விட்டுக் கொடுக்கவில்லை. அதற்காகப் பேரம் பேசப்பட்டுள்ளது. அதனால்தான் நிதித்துறை சார்ந்த மேலதிக பொறுப்புகளும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன.
அதுபோலவே, வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட மங்கள சமரவீரவுக்கு, மேலதிகமாக ஊடகத்துறை அமைச்சு வழங்கப்பட்டிருக்கிறது.
துறைமுகங்கள் கப்பல் துறை அமைச்சராக இருந்த அர்ஜுன ரணதுங்கவுக்குப் பதிலாக மஹிந்த சமரவீர நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த அமைச்சு ஐ.தே.கவிடம் இருந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு மாறியிருக்கிறது.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கும் விடயத்தில் கடும் போக்கைக் கடைப்பிடித்தவர் அர்ஜுன ரணதுங்க. திரும்பத் திரும்ப பிரச்சினைகளை கிளப்பியதால் இந்த உடன்பாடு இன்னமும் கையெழுத்திடப்படாத நிலை காணப்படுகிறது.
அர்ஜுன ரணதுங்கவின் பதவி மாற்றத்துக்கு ஹம்பாந்தோட்டை விவகாரமும் சீனாவின் பின்புலமும் காரணமாக இருந்திருக்கலாம்.
பெற்றோலியத்துறை அமைச்சராக இருந்த சந்திம வீரக்கொடி, சீனக்குடா எண்ணெய்க் குதங்களை இந்தியாவுக்கு வழங்குவதற்கு ஆரம்பத்தில் எதிர்ப்புத் தெரிவித்து வந்தவர்.
அண்மையில், அவர் அந்தத் திட்டத்துக்கு இணங்கியிருந்தாலும், சீனக்குடா விடயத்தில் அவரது அணுகுமுறை அரசாங்கத்துக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தது.
இந்த விவகாரம், அவரது அமைச்சுப் பதவி அர்ஜுன ரணதுங்கவிடம் கைமாறக் காரணமாக இருந்திருக்கலாம். ‘அவன்கார்ட்’ நிறுவனத்துக்கு சார்பாக செயற்படுகிறார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகி, கடந்த 2015 நொவம்பரில் பதவி விலகிய திலக் மாரப்பனவை மீண்டும் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்வதற்காகவும் இந்த மாற்றம் இடம்பெற்றிருக்கலாம். மொத்தத்தில், ஐ.தே.கவுக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான அதிகார இழுபறியாலும், இந்தியா, சீனா போன்றவற்றுடனான உடன்பாடுகளைச் செய்து கொள்வதில் காணப்பட்ட இழுபறிகளைச் சமாளிக்கவும், தான் இந்த அமைச்சரவை மாற்றம் நடந்திருக்கிறதே தவிர, திறமை மற்றும் திறமையின்மை இதில் தாக்கத்தை செலுத்தியதாகத் தெரியவில்லை.
எவ்வாறாயினும், இந்த அமைச்சரவை மாற்றத்தின் மூலம் ஒன்றைப் புரிந்து கொள்ள முடிகிறது, அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டம் இப்போதுள்ளது போலவே இருக்கும் வகையில், அடிக்கடி அமைச்சரவை மாற்றங்கள் சாத்தியமாகப் போவதில்லை
என்பதே அது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
29 minute ago
1 hours ago
1 hours ago